Published:Updated:

வறுமையை ஒழிக்க குறுங்கடன்... ஆந்திராவில் நடந்த அரிய முயற்சி!

குறுங்கடன்...
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கடன்...

மைக்ரோ ஃபைனான்ஸ்

வறுமையை ஒழிக்க குறுங்கடன்... ஆந்திராவில் நடந்த அரிய முயற்சி!

மைக்ரோ ஃபைனான்ஸ்

Published:Updated:
குறுங்கடன்...
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கடன்...

வறுமையை ஒழிக்கப் பல திட்டங்களை ஆண்டாண்டுக் காலமாக அரசுகள் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வந்தாலும் அது இன்னும் முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை. வங்கிக் கடன் உதவி கிடைத்தால், வறுமையிலிருந்து மக்கள் தப்பி வந்துவிடுவார்கள்தாம். ஆனால், வங்கிகளால் அனைவருக்கும் கடன் தரமுடியாத நிலை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்தவைதான் குறுநிதி நிறுவனங்கள் எனப்படும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள். இந்தியாவில் எத்தனையோ குறு நிதி நிறுவனங்கள் உண்டு என்றாலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் தொடங்கப்பட்ட எஸ்.கே.எஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் (SKS Microfinance) குறிப்பிட்டத் தகுந்தது.

விக்ரம் அகுளா
விக்ரம் அகுளா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் அகுளா, அமெரிக்காவில் படித்து முடித்த பின், 1998-ம் ஆண்டு ஆரம்பித்த குறுநிதிக் கடன் வழங்கும் நிறுவனம் தான் இந்த எஸ்.கே.எஸ் மைக்ரோ ஃபைனான்ஸ். இந்த நிறுவனம் எப்படி உருவானது என்பது பற்றி விக்ரம் அகுளா `எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் ரைஸ் (A Fistful of Rice)’ என்கிற புத்தகத்தின்மூலம் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.

விக்ரம் அகுளா, அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது, ஆந்திராவில் இருக்கும் தனது ஊருக்கு அவ்வப்போது வந்துசெல்வாராம். 1995-ம் ஆண்டு விடுமுறைக்கு வந்தபோது `டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி (DDS)’ என்கிற குறுநிதி அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார். கிராமப்புறங்களில் மிகவும் வறுமையான நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் குறைவான தொகையைக் கடனாகக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்வதுதான் இந்த நிறுவனத்தின் வேலை.

இவர் ஹைதராபாத்தில் தன் அத்தை வீட்டில் இருக்கும்போது பாத்திரம் விற்பதற்காக ஒரு பெண்ணும் சிறு பையனும் வந்தார்கள். அப்போது அந்தப் பெண் விற்ற ஒரு பாத்திரத்தை வாங்கி, அதற்குப் பதிலாக அரிசியைக் கொடுத்தார். அரிசியை அவர் வாங்கும்போது சில அரிசி மணிகள் கீழே சிந்த, அவற்றை ஒன்றுவிடாமல் பொறுக்கி எடுத்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

வறுமையை ஒழிக்க குறுங்கடன்...
ஆந்திராவில் நடந்த அரிய முயற்சி!

அமெரிக்காவிலேயே வாழ்ந்து வந்த விக்ரமுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. 10, 15 அரிசி மணிகள்கூட பசியோடு இருப்பவர்களின் பிணியைப் போக்கும் என நினைத்தார். வறுமையை ஒழிக்க நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 1997-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த விக்ரம் `ஸ்வயம் க்ரிஷி சங்கம் (Swayam Krishi Sangam - SKS)’ என்கிற பெயரில் குறுநிதி நிறுவனத்தை ஆரம்பித்து, சுமார் ரூ.2,000 முதல் ரூ.12,000 வரை கிராமப்புறத்தில் வசிக்கும் நலிவடைந்த மக்களுக்குக் கடனாகக் கொடுக்க ஆரம்பித்தார்.

இந்த நிறுவனத்தை இவர் ஆரம்பிக்க முக்கியமான காரணமாக இருந்தவர் பங்களாதேஷைச் சேர்ந்த முகமது யூனுஸ். 1983-ம் ஆண்டு கிராமின் வங்கி என்கிற பெயரில் குறுநிதி வழங்கும் வங்கியை ஆரம்பித்த யூனுஸ், 2006-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். 1997-ம் ஆண்டு விக்ரம் பங்களா தேஷுக்குச் சென்று கிராமின் வங்கி நடத்திய இரண்டு வார கால பயிற்சி முகாமில் கலந்துகொண்டு அதன் செயல்பாடுகளை நன்கு அறிந்துகொண்டார். ஆனால், முகமது யூனுஸ் தன்னுடைய கிராமின் வங்கியை லாப நோக்கமில்லாமல் செயல்படுத்தினார். விக்ரம், தனது நிறுவனத்தை லாப நோக்கத்துடன் நடத்தினார்.

எஸ்.கே.எஸ்ஸின் செயல்பாடுகள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சார்ந்தே இயங்கி வந்தது. மகளிருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்பட்டது. ஐந்து பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு கடன் தொகை வழங்கப் பட்டது. குழுவில் கடன் வாங்கிய ஒருவர் வாரத் தவணையைச் செலுத்தத் தவறினால் மீதியுள்ள நான்கு பேர் அதைத் தர வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் ஐவருக்குள் ஒரு நல்ல ஒற்றுமையும் அனைவரும் வாங்கிய கடனை எந்த நோக்கத்துக்காக வாங்கினார்களோ, அதற்கென்று செலவழித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடனைத் திரும்பச் செலுத்த வேண்டுமென்கிற பொறுப்புணர்வும் ஏற்பட்டது. குழுவில் இருக்கும் ஒருவர் பணம் செலுத்தவில்லை என்றாலும், குழுவில் இருக்கும் நான்கு பேருக்கும் பாதிப்பு உண்டாகும் என்கிற சிந்தனையும் அவர்களிடையே இருந்தது.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

1998-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்த சமயத்தில், 165 பேருக்கு மட்டுமே கடன் தரப்பட்டது. ஆனால், இன்றைக்கு 23 மாநிலங்களில் 1.33 லட்சம் கிராமங்களில், 2,100-க்கும் அதிகமான கிளை அலுவலகங்களைக் கொண்டு சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஒரு பெரும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. கிராமத்தில் இருப்பவர்களுக்கு இவர்கள் குறைந்த வட்டியில் பணம் கொடுப்பதை விரும்பாத அந்தப் பகுதியைச் சேர்ந்த `கந்துவட்டி கந்தசாமி’களின் மிரட்டல்களைத் துணிவுடன் விக்ரமும் அவரின் பணியாளர்களும் எதிர்கொண்டனர்.

இப்படியாக வளர்ச்சி ஒரு புறமிருக்க, 2010-ம் ஆண்டு இந்த நிறுவனம் மற்றும் வேறுசில குறுநிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வர, ஆந்திர அரசு இந்த நிறுவனத்துக்கு கட்டுப் பாடுகளை விதிக்கத் தொடங்கியது. 2016-ம் ஆண்டு எஸ்.கே.எஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமானது, பாரத் ஃபைனான்ஷியல் இன்குளூசன் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் 2019-ம் ஆண்டு இண்டஸ்இண்ட் வங்கியோடு இணைந்து துணை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

எஸ்.கேஎ.ஸ் நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கியவர்களில் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் களின் சதவிகிதம் கிட்டத்தட்ட 98% ஆகும். அத்துடன், வறுமைக் கோட்டிலிருந்து மேலே வந்தவர் களின் எண்ணிக்கையும் அதிகம். இந்த அரிய முயற்சியிலிருந்து பொதுத்துறை வங்கிகள் தங்களுக்குத் தேவையான பாடம் கற்றுக்கொண்டால் வாராக் கடன் என்கிற சுமையிலிருந்து ஓரளவுக்கு வெளிவரலாம்.

இந்தியாவில் முழுவதுமாக வறுமை நீங்க வேண்டும் எனில், இன்னும் பல குறுங்கடன் நிறுவனங்கள் தோன்றி, நியாயமான வட்டியில் கடன் தந்தால், அனைவரின் நிலையும் வறுமைக்கோட்டிலிருந்து உயரும் என்பதில் சந்தேகம் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism