Published:Updated:

“பணத்தின் பின்னால் நாம் ஓடக்கூடாது. பணம்தான் நம்மைத் தேடி வர வேண்டும்!

வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

ஆயிரம் முதல் லட்சம் வரை - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

“பணத்தின் பின்னால் நாம் ஓடக்கூடாது. பணம்தான் நம்மைத் தேடி வர வேண்டும்!

ஆயிரம் முதல் லட்சம் வரை - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

Published:Updated:
வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

"கைநிறையப் பணம் சம்பாதிக்கணும்... சொந்தமா வீடு வாங்கணும், பிடிச்ச கார் வாங்கணும்ங்கிறதுதான் எல்லோருடைய கனவா இருக்கும். எனக்கும் அப்படித்தான். விருதாச்சலத்துக்குப் பக்கத்துல உள்ள முதனை என்கிற கிராமத்துல சாதாரணக் குடும்பத்துல பிறந்தவன் நான். நல்ல சட்டை, நல்ல செருப்புன்னு சின்னச் சின்ன விஷயத்துக்கும் ஏங்கியிருக்கேன். வசதியா நல்லபடியா வாழ்றவங்களைப் பார்க்கும்போதெல்லாம், ‘நாமளும் ஒருநாள் இப்படி ஆகணும்’னு எனக்குள் எழுந்த ஏக்கமும் அதற்கு நான் கொடுத்த உழைப்பும்தான் என்னை இந்த இடத்துல நிறுத்தியிருக்கு” - உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் பின்னணிப் பாடகர் வேல்முருகன்.

`மதுர குலுங்க… குலுங்க…’, `ஒத்த சொல்லால…’ போன்ற பாடல்களின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான வேல்முருகன் இதுவரை 350-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தைத் தவிர வேறெதுவும் இல்லாமல் சென்னைக்கு வந்தவர், தான் விரும்பிய பெயரையும் புகழையும் சம்பாதித்ததுடன் பொருளாதார ரீதியாகவும் செட்டில் ஆகியிருக்கிறார்.

``என்னுடைய அப்பா என்.எல்.சி-யில் வேலைபார்த்தார். வீட்டுக்காரர்தான் கவர்மென்ட் வேலைக்குப் போறாரே நமக்கென்னன்னு எங்க அம்மா வீட்ல சும்மா இருக்க மாட்டாங்க. கிடைக்கிற வயக்காட்டு வேலைக்கெல்லாம் போவாங்க. ஏன்னா, அப்பாவுக்கு மத்திய அரசு வேலைன்னாலும் பெரிய போஸ்ட்டிங்லாம் இல்லை. சாதாரண வேலைதான். அதுமட்டுமல்லாம அப்பா, சம்பாதிக்கிற பணத்தை முறையா சேமிக்க மாட்டார். அதனால, அவரை மட்டுமே நம்பியிருக்கக் கூடாதுங்கிற எண்ணம் அம்மாவுக்கு இருந்தது.

தாயைப் போலதான் பிள்ளைன்னு சொல்லுவாங்கள்ல... நானும் அப்படித்தான். ஒருத்தரை சார்ந்தே வாழக் கூடாதுங்கிற எண்ணம் அம்மாகிட்டேயிருந்து எனக்கு சின்ன வயசுலயே ஒட்டிக்கிச்சு.

பள்ளி வார விடுமுறை நாள்கள்ல எங்க வீட்ல இருக்கிற ஆடு, மாடுகளை மேய்க்கப் போயிருவேன். எங்க வீட்டு ஆடு, மாடு மட்டுமல்லாம, பக்கத்து வீடுகளுடையதையும் மேய்ப்பேன். ஒரு ஆட்டுக்கு நாலணாவோ, பத்து பைசாவோ கொடுப்பாங்க. அதுதான் என் முதல் சம்பாத்தியம். அந்தக் காசுல எனக்குப் பிடிச்சதை வாங்கி சாப்பிடும்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு ஈடு எதுவும் கிடையாது.” பால்யகால சம்பாத்தியத்தின் பரவசம் வேல்முருகனின் முகத்தில் தவழ்கிறது.

வேல்முருகன்
வேல்முருகன்

``அதுமட்டுமல்ல, கோடை விடுமுறை நாள்கள்ல அம்மா கூட சேர்ந்து பக்கத்து ஊருகளுக்கு வேர்க்கடலை பறிக்கப் போறது, முந்திரிப் பழம் பறிக்கப் போறதுன்னு விவசாய வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு ஆறு ரூபா, ஏழு ரூபா கொடுப்பாங்க. ஒரு வாரம், ரெண்டு வாரம்னு அந்த ஊர்லயே தங்கி வேலை செய்வோம்.

சொந்த ஊரைவிட்டு கோயம்புத்தூருக்குப் போய் ஐ.டி.ஐ படிக்கும்போதும், நான் சும்மா இல்ல. பொட்டுக்கடலை ஃபேக்டரி, இரும்புக்கடைன்னு நிறைய இடங்களுக்கு பார்ட் டைம் வேலைகளுக்குப் போயிருக்கேன். ஒருநாளைக்கு 50 ரூபா கிடைக்கும். இப்படி சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் சேர்த்து வெச்சு என் படிப்புக்கும் வீட்டுக்குத் தேவைக்குமான பொருள்கள் வாங்கவும் பயன்படுத்துவேன். அதுல கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க பெருமிதமா இருக்கும்.

கோவையில ஐ.டி.ஐ முடிச்சுட்டு விருத்தாசலத்துல தங்கி நான் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது கிடைக்கிற ஃப்ரீ டைம்ல ஒருத்தருக்கு சைக்கிள் டிரைவரா வேலை பார்த்தேன். சைக்கிளுக்கு டிரைவரான்னு ஆச்சர்யப்படாதீங்க. அந்தக் காலத்துல அப்படியெல்லாம்கூட இருந்துச்சு. அவர் கூப்பிடுற இடத்துக்கெல்லாம் சைக்கிள் மிதிச்சுகிட்டுப் போனா, ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா தருவார். அந்த அஞ்சு ரூபாய்ல என் சாப்பாட்டுச் செலவைப் பார்த்துப்பேன். ஒருநாள் அந்த நபர் அன்னைக்கு கொடுக்க வேண்டிய அஞ்சு ரூபாயைக் கொடுக்காம போயிட்டார். நானும் கேட்க மறந்துட்டேன். நைட்டு சாப்பிடுறதுக்கு கையில காசு இல்லை. பசி உசுரைக் கொல்லுது. கண்ணுல தண்ணி கொட்டுது.

அப்பதான் பணத்தோட அருமையை நான் முழுசா உணர்ந்தேன். இனிமேல் இப்படி ஒரு நிலைமை நமக்கு வரவே கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிட்டே அன்னைக்கி ராத்திரி தூங்கினேன். மறுநாள் காலையில ஒரு இடத்துல உட்கார்ந்து, எனக்குப் பிடிச்ச பாடல்களை யெல்லாம் பாடிக்கிட்டிருந்தேன். என் பாடல்களைக் கேட்டு மெய்சிலிர்த்துப்போன ஒருத்தர், ‘நீ ரொம்ப நல்லா பாடுறே’ன்னு சொல்லி 100 ரூபாயைக் கொடுத்தார். பாடுறதுக்காக எனக்கு முதன் முதல்ல கிடைச்ச பரிசுன்னா அந்த நூறு ரூபாய்தான்.

இதற்கிடையில என் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. வாழ்க்கையில அடுத்து என்ன பண்ணப்போறோம்னு தெரியாத ஒரு நிலைமையில, இசைத் துறையில நாம ஏதாச்சும் சாதிச்சிரலாம்ங்கிற நம்பிக்கையில சென்னைக்கு வந்தேன். ஏன்னா, சின்ன வயசுல இருந்து நான் போற வர்ற இடங்களில் எல்லாம் பாடுறது தான் என்னுடைய பொழுது போக்கு. ‘உன் குரல் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு பலரும் கொடுத்த உற்சாகம்தான் என்னை இசைக் கல்லூரியைத் தேடி வர வெச்சது.

சென்னை அடையாறுல இருக்கிற தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில சேர்ந்து குரலிசை படிச்சுக்கிட்டே சினிமாவுல வாய்ப்பு தேடலாம்னு வந்தேன். சென்னை வந்தப்ப என் கையில 200 ரூபாய்தான் இருந்துச்சு. அட்மிஷனுக்கு பணம் பத்தாதுங்கிறதால தாம்பரத் துலயே இறங்கி கிண்டி வரை நடந்தே வந்தேன்.

வேல்முருகன்
வேல்முருகன்

சென்னை வந்ததும் ஒரு பத்திரிகை அலுவலகத்துல ஆபீஸ் பாயா பார்ட் டைம் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 25 ரூபாய் கொடுத்தாங்க. அடுத்து, தூர்தர்ஷன்ல மாசம் 800 ரூபாய் சம்பளத்துல ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை கிடைச்சது. அதற்குப் பிறகு, இசைக்கல்லூரி மாணவன்ங்கிற அடையாளத்தோட ஒரு இசைக் குழுவுல சேர்ந்து இரவு நேரங்கள்ல கச்சேரிகள்ல பாட ஆரம்பிச்சேன். ஒருநாளைக்கு 200 ரூபாய் கிடைச்சது. அப்படி, இப்படின்னு மாசம் 1,000, 2,500 ரூபாய் சம்பாதிச்சுருவேன். சம்பாதிக்கிற பணத்தை வீணா செலவழிக்கிற பழக்கமே எனக்குக் கிடையாது. தெளிவா சேமிப்பேன்.

அப்படி நான் சிறுகச் சிறுக 60,000 ரூபாய் சேர்த்த பணம்தான் என் திருமணத்துக்கு உதவியது. இசைக் கல்லூரியில பரதநாட்டியம் படித்த கலாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். கச்சேரிகள் அதிகமாகக் கிடைக்க ஆரம்பித்தது. என் மனைவியும் பரத நாட்டியம் சொல்லிக் கொடுத்து, சம்பாதிக்க ஆரம்பித்தார். மாதம் ஆயிரம் ரூபாய் வாடகையில் வீடு எடுக்கும் அளவுக்கு என் பொருளாதாரம் உயர்ந்தது. இன்னொரு பக்கம், சினிமாவுக்கும் முயற்சி பண்ணிக் கிட்டே இருந்தேன்.

2007-ம் ஆண்டு விஜய் டிவி-யில ஒரு நிகழ்ச்சியில் கலந்துகிட்டு பாடினேன். அந்தப் பாட்டைத் தற்செயலா கேட்ட இயக்குநர் சசிகுமார், ‘இந்தக் குரல் நல்லா இருக்கே’ன்னு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சார்கிட்ட சொல்ல, எனக்கான வாசல் திறந்தது. அப்படித்தான் சுப்பிர மணியபுரத்துல ‘மதுரை குலுங்க’ பாடல் பாடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.

அந்தப் பாட்டு சினிமாவுல வருமா, வராதான்னெல்லாம் எனக்குத் தெரியாது. பாடி முடிச்சதும் என்னைப் பாராட்டி 500 ரூபாய் கொடுத்தாங்க. அந்த 500 ரூபாயை வாங்கும்போது எனக்குள்ள ஓர் இனம்புரியாத பரவசம். அந்தப் பாட்டு வெளியாகி எதிர்பார்க்காத அளவுக்கு ஹிட் அடிச்சிருச்சு. அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ஒரு பாட்டுக்கு 25,000 ரூபாய், 30,000 ரூபாய்னு படத்தோட பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல தந்தாங்க.

சினிமாவுல கிடைச்ச புகழ், வெளிநாடுகள்ல கச்சேரி பண்றதுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துச்சு. பல நாடுகளுக்கு கச்சேரிக்குப் போக ஆரம்பிச்சேன். லட்சங்கள்ல சம்பாதிச்சதுன்னா அது வெளிநாடுகளுக்கு கச்சேரிக்குப் போகும்போதுதான். எத்தனை நாள் கச்சேரியோ அதைப் பொறுத்து வருமானம் கிடைக்கும். எதுவுமே இல்லாம சென்னைக்கு வந்த எனக்கு இன்னைக்கு சென்னையில சொந்த வீடு இருக்கு. பி.எம்.டபிள்யூ கார் இருக்கு. எல்லாத்துக்கும் மேல, ஏராளமான மக்களோட அன்பு கிடைச்சிருக்கு. என்னால முடிஞ்ச உதவியை நாலு பேருக்கு செய்யறேன். நான் பொருளாதார ரீதியா இந்த நிலைக்கு வந்ததுக்குக் காரணம், நான் சம்பாதிச்சது மட்டுமில்லை. சம்பாதிச்சதை முறையா சேமிச்சதும்தான்.

வாழ்க்கையில பணம் ரொம்ப முக்கியம். அதுக்காக பணத்தின் பின்னால நாம் ஓடக் கூடாது. பணம்தான் நம்மைத் தேடி வர வேண்டும்” பன்ச்சாக முடிக்கிறார் வேல்முருகன். அவர் பாடும் பாட்டு போலவே, அவர் பேச்சும் கலகலப்பாகவே இருந்தது!