Published:Updated:

உயிர் நண்பர்... பெண் சபலம்... பறிபோன ரூ.10 லட்சம்! நிம்மதியை மீட்டெடுக்க என்ன வழி..?

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு - 22

பிரீமியம் ஸ்டோரி

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சிக்கலான நேரத்தில் கடன் கேட்கும் போது நிஜமாகவே நம்மால் தவிர்க்க முடியாது. நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் நம்மிடம் உள்ள செல்வாக்கையோ, சொத்துகளையோ பயன்படுத்தி ஏற்பாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறருக்கு இருக்கும் பட்சத்தில் உதவி கேட்கவே செய்வார்கள். அந்த நேரத்தில் தட்டிக் கழித்துவிட்டுப் போக முடியாது. ஆனால், உதவி செய்யும்போது சில விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிட்டால், பிறகு நாம்தான் நெருக்கடியில் சிக்கிக்கொள்ள நேரிடும். அப்படித்தான் காஞ்சி புரத்தைச் சேர்ந்த கதிர்வேலன் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) சிக்கித் தவிக்கிறார். அவரே பிரச்னையை விவரிக்கிறார்...

உயிர் நண்பர்... பெண் சபலம்...
பறிபோன ரூ.10 லட்சம்! நிம்மதியை மீட்டெடுக்க என்ன வழி..?

“எனக்கு 47 வயது. எனக்கு 25 ஆண்டுக்கால நண்பர் சங்கர். சென்னை புறநகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சொந்தமாக வீடு வாங்கி 10 ஆண்டுகளாக அங்குதான் வசித்து வந்தார். பல பிசினஸ்களைச் செய்து நன்றாகச் சம்பாதித்தார். நான் தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40,000 சம்பளம் வாங்கு கிறேன். சொந்தமாக வீடு உள்ளது. எனக்கு பண நெருக்கடி வரும்போதெல்லாம் கைமாத்துக் கொடுத்து உதவுவார் சங்கர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய பிசினஸில் ஏதோ சிக்கல். நான் பெரிதாக அவரிடம் அது குறித்து கேட்கவில்லை.

ஓராண்டுக்கு முன் ஒருநாள் என்னை அழைத்து, அவசரமாகத் தனக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவ தாகச் சொன்னார். ‘பணம் கிடைக்கா விட்டால் வாழ்வதிலேயே அர்த்த மில்லை’ என்று அழ ஆரம்பித்து விட்டார். அவர் சொன்னதைக் கேட்டபோது எனக்குப் பரிதாபமாக இருந்தது. என்னால் என்ன செய்ய முடியும் என யோசித்தேன். அவரே யோசனையையும் சொன்னார். அவர் தனது வீட்டை அடமானம் வைத்து, ரூ.10 லட்சம் புரட்ட உள்ளதாகவும், அதேபோல் என் வீட்டை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் புரட்டித் தருமாறும் கூறினார்.

நானும் மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டேன். பணம் அவசரம் என்பதால், வீட்டுப் பத்திரத்தை தனியார் ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றில் அடமானம் வைத்து ரூ.10 லட்சம் வாங்கித் தந்தேன். இந்த விஷயத்தை நான் என் குடும்பத்தினருக்குச் சொல்லவில்லை. ஐந்து மாதங்களாக என் நண்பர் சரியாக இ.எம்.ஐ தொகையை எனக்கு அனுப்பி வந்தார். திடீரென வட்டிப் பணம் வராமல் போகவே, போன் செய்தேன். அவர் கிடைக்கவில்லை. பலமுறை முயற்சி செய்துவிட்டு பிறகு நேரில் அவர் வீட்டுக்குச் சென்றேன்.

அவருடைய குடும்பத்தினர் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். என் நண்பர் தவறான பெண் தொடர்பில் சிக்கி, அந்தப் பெண்ணுக்காகத்தான் பணத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளார்; பிசினஸ் லாபங்களையும் அந்தப் பெண் தொடர்பில்தான் இழந்துள்ளார்; விஷயம் பெண்ணுடைய குடும்பத்துக்குத் தெரிந்து பிரச்னை பெரிதாகும் நிலையில் என் நண்பர் தலைமறைவாகிவிட்டார் என்பதையும் தெரிந்துகொண்டபோது நான் அதிர்ந்துபோனேன்.

என் நண்பரின் மனைவியும் குழந்தை களும் அதிர்ச்சியில் இருந்தார்கள். என்னிடம் பணம் வாங்கிய விஷயத்தைச் சொன்னேன். ஆனால் ‘அவர் வந்தால் தான் திரும்ப தந்தால்தான் உண்டு. எங்கள் நிலையே மோசமாக உள்ளது’ என்று சொல்லிவிட்டார்கள்.

என் சொற்ப வருமானத்தில் இ.எம்.ஐ செலுத்த முடியவில்லை. ஃபைனான்ஸ் கம்பெனிக்காரர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்க, என் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்து, என் வீட்டில் பிரச்னை யாக இருக்கிறது. நண்பர் தலைமறைவாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், எனக்கு நம்பிக்கை போய்விட்டது. கடன் சுமை மனதை அழுத்துகிறது. ரூ.10,000-க்கு மேல் கடன் வாங்கி பழக்கப்படாத எனக்கு ரூ.10 லட்சம் என்பது மிகப் பெரிய கடன் சுமை. பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகளின் எதிர்காலத்துக்கும் என் ஓய்வுக் காலத்துக்குமே பணம் சேர்த்து வைக்கவில்லை. ரூ.20 லட்சம் மதிப்புள்ள என் வீடும், பி.எஃப் பில் இருக்கும் ரூ.5 லட்சம் பணமும் தவிர, வேறு சொத்துகள் இல்லை. வீட்டை விற்றுக் கடனை அடைக்கலாமா என்றும் தோன்று கிறது. நான் எப்படி இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு வருவது..?”

கடன் சிக்கலில்...
கடன் சிக்கலில்...

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“கடன் வாங்கி, கடன் கொடுப்பது மகா தவறு. சம்பள தாரர்கள் தங்களின் வரம்பு அறிந்து செயல்பட வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் உயிர் நண்பருக்கு உதவ கடன் வாங்கிக் கடன் கொடுப்பது இயல்பு வாழ்க்கையில் தவிர்க்க முடியாததுதான். ஆனால், நெருங்கிய நண்பர் திடீரென கேட்ட மிகப்பெரிய தொகைக்கு எந்தவிதமான காரணங்களையும் உங்களிடம் சொல்லவில்லை. அவர் சொல்லாமல் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், நீங்கள் என்ன காரணம் என ஒரு கேள்வியைக்கூட கேட்காமல் விட்டதுதான் வியப்பாக உள்ளது. நிஜமான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ளாமல் அவருக்குப் பெரிய தொகையை, அதுவும் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்துக் கொடுத்துள்ளீர்கள் எனில், நீங்கள் பண நிர்வாகத்தில் எந்த அளவுக்கு உள்ளீர்கள் என நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினரிடம் கலந்து பேசியிருந்தால் நிச்சயம் உங்கள் வீட்டார் சம்மதம் சொல்லியிருக்க மாட்டார்கள். அதனால்தான் உண்மையை அவர்களிடம் மறைத்துள்ளீர்கள்.

தற்போது உங்கள் நண்பர் தலைமறைவான சூழ்நிலையில் நிர்கதியாக நிற்கும் அவருடைய குடும்பத்தினர் பணத்தைத் திரும்பக் கொடுப்பது என்பது இயலாத காரியம். இனி கடன் சுமையை நீங்கள் ஏற்றுத்தான், அதிலிருந்து மீண்டுவரும் வழியைப் பார்க்க வேண்டும். நீங்கள் செலவழிக்காத, தவறு இழைக்காத நிலையில் தெண்ட மாகக் கடன் சுமையை ஏற்றுச் சுமக்க கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்.

சிறுக சிறுக சேமித்துவரும் உங்களைப் போன்ற நடுத்தர வருமானக்காரர்களுக்கும், மாதச் சம்பளதாரர்களுக்கும் உண்ணாமல் உடுத்தாமல் இந்த அளவுக்கு பெரிய தொகையை அடைத்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவது மிகவும் கசப்பான விஷயமே. நடந்தது நடந்துவிட்டது. அடுத்து என்ன எனப் பார்ப்போம்.

குடியிருக்கும் வீட்டை இழக்காமல் கடனைக் கட்டி முடிக்கத் திட்டமிடுவதே இப்போதைய சூழலில் புத்தி சாலித்தனம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, அதிக வட்டிக்கு வாங்கிய கடனைக் குறைந்தபட்ச வட்டிக் கடனாக மாற்றுவதுதான். ஃபைனான்ஸ் கம்பெனியில் 15 - 18% வட்டியில் வாங்கியிருப்பீர்கள் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி யிலோ, உங்களுக்கு ஏதுவான வங்கியிலோ பேசி வீட்டு அடமானக் கடனை வங்கிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். சுமார் 8% வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏறக்குறைய வட்டி பாதியாகக் குறைந்துவிடும். 8% என வைத்துக் கொண்டால் ரூ.10 லட்சத்துக்கு 10 ஆண்டுகள் செலுத்தும் வகையில் கணக்கிட்டால், ரூ.12,133 இ.எம்.ஐ செலுத்த வேண்டி யிருக்கும். உங்கள் சம்பளத்தில் மீதமுள்ள 28,000 ரூபாயில் குடும்பச் செலவுகளைச் சுருக்கிச் செய்து கொள்ளுங்கள். அடுத்து, வீட்டை உங்கள் பயன்பாட்டுக்குத் தேவையான அளவுக்கு சுருக்கமாகப் பயன்படுத்திக்கொண்டு, இன்னொரு போர்ஷனைப் பிரித்து வாடகைக்கு விடும் வாய்ப்புகளை ஆராயுங்கள். ரூ.4,000 - 5,000 கிடைத்தால் செலவுகளைச் சமாளிக்க உதவும்.

ஒருவேளை உங்கள் நண்பர் திரும்ப வந்து உங்களிடம் வாங்கிய தொகையைக் தந்துவிட்டால் உங்கள் பிரச்னை சுலபமாக முடிய வாய்ப்பு உண்டு. ஆனால் இது நடக்கும் என நினைக்காமல், நடந்த நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டபடி கடனைச் செலுத்தி வரவும்.’’

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. கடன் வாங்கி, கடன் கொடுக்கக் கூடாது.

2. குடும்பத்தினருக்குத் தெரியாமல் நிதி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது.

3. கடன் கொடுப்பதற்கு முன் ஏன், எதற்கு எனக் கேட்டு, சரியான பதிலை அறிய முயல வேண்டும்.

4. அவசரப்பட்டு அதிக வட்டியில் கடன் வாங்கக் கூடாது.

5. வருமானத்துக்கு மீறிய செயல்பாடுகளில்போது ஆழமான ஆய்வும், ஆலோசனையும் மிக அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு