Published:Updated:

வயது 32, கடன் 2.3 கோடி... கரைசேரும் வழி என்ன..? மஞ்சள் கடுதாசிதான் தீர்வா..?

மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

S O L U T I O N

வயது 32, கடன் 2.3 கோடி... கரைசேரும் வழி என்ன..? மஞ்சள் கடுதாசிதான் தீர்வா..?

S O L U T I O N

Published:Updated:
மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

பலருக்கு வாழ்க்கையில் மிகச் சிறிய வயதிலேயே பெரிய அளவுக்கு வளர வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும். இது தவறு இல்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளன, அதற்கான ரிஸ்க்கை எடுக்கும்போது ஏதாவது சிக்கல் வந்தால் சமாளிக்கக்கூடிய திறன் உள்ளதா என்றெல்லாம் ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும். இவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் அகலக் கால் வைப்பது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடக்கூடும். அப்படித் தான் மதுரையைச் சேர்ந்த சங்கர் ராஜன் (ஊர், பெயர் மாற்றப்பட்டு உள்ளது) சிக்கித் தவிக்கிறார். அவருடைய நிலையை அவரே எடுத்துச் சொல்கிறார்...

மாடல் படம்
மாடல் படம்

“நான் தொழில் காரணமாக கோயம்புத்தூரில் வசிக்கிறேன். என்னுடைய வயது 32. என் பரம்பரையிலே தொழில்நுட்பம் படித்த முதல் மாணவன் நான். எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் நூல் தொழில் செய்து வந்தேன். வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்ற ஆசையால் தொழிலைப் பிரமாண்ட மாகச் செய்ய ஆரம்பித்தேன். பெரிய அளவில் தொழிலை விரிவுபடுத்தினேன். வேகம் இருந்த அளவுக்கு நான் விவேகமாகச் செயல்படவில்லை என்பதைப் பிறகுதான் நான் உணர்ந்தேன். எனது அறிவின்மையால் எனது தொழில் மிகவும் நஷ்டம் அடைந்து நான் இப்போது கடனாளி ஆகிவிட்டேன்.

எனது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். நான் எனது தொழில் காரணமாக கோவையில் வசித்து வருகிறேன், எனது கடனின் மதிப்பு ரூ.2.40 கோடி. இந்தியா முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் மூலப்பொருள்கள் வாங்கியதில் நிலுவையில் உள்ள தொகைதான் இது.

எனது சொத்தின் மதிப்பு ரூ.36 லட்சம். எங்க சொந்த ஊரில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.33 லட்சம். கோவையில் என் மனைவியின் பெயரில் உள்ள நிலத்தின் மதிப்பு ரூ.3 லட்சம். அதில் இல்லாமல் நான்கு நண்பர்களிடம் இருந்து எனக்கு ரூ.6 லட்சம் தொகை வர வேண்டியுள்ளது. இந்த ரூ.42 லட்சம் தவிர, எனக்கு வேறு சொத்து எதுவும் இல்லை.

எனது கடன் சுமையால் நான் மற்றும் மனைவி, குழந்தை மூவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தோம். ஆனால், என் குழந்தையை நினைத்து முடிவை மாற்றிக்கொண்டோம். தற்போதும் நான் மனஉளைச்சலில் நிம்மதியற்றுதான் இருக்கிறேன். குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே கடன் வாங்க வேண்டிய நிலையில்தான் உள்ளேன். எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“இளம் வயதில் பெரிய தொழில் அதிபராக வளர வேண்டும் என்ற உங்கள் வேட்கை பாராட்டக்கூடியதுதான். அதே நேரத்தில், அதற்காக நீங்கள் எந்தவிதமான தெளிவான திட்டமோ, வியூகமோ வகுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க்கையில் நம்பிக்கை மிக அவசியமானதுதான். ஆனால், அதீதமான நம்பிக்கை என்பது எல்லா நேரங்களிலும் கைகொடுக்காது. நம்பிக்கையுடன் சேர்ந்த திடமான திட்டமிடல் இருந்தால் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

எந்தவிதமான பிசினஸ் என்றாலும் நாம் செய்யக்கூடிய முதலீடு எவ்வளவு, பிசினஸுக்காக எவ்வளவு கடன் வாங்க வேண்டும், பிசினஸில் எத்தனை ஆண்டுகளில் எவ்வளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது, கடனைச் செலுத்தி முடிக்க என்ன திட்டம் உள்ளது என்றெல்லாம் யோசித்து செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். தடாலடியாக மனம்போன போக்கில் பிசினஸை ஆரம்பித்து நடத்திவந்த காரணத்தால்தான் இன்று தடுமாறி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளீர்கள்.

தொழில் அனுபவத்துடன் கூடிய வளர்ச்சியை நோக்கி நீங்கள் பயணித்திருந்தால், பெரிய சறுக்கல் ஏற்பட்டிருக்காது. அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்லும்போது கூடவே நீங்கள் பெற்ற அனுபவங்கள் உங்களைச் சரியான பாதையில் வழிநடத்திச் சென்றிருக்கும்.

சரி, போனது போகட்டும். தவறு செய்வது மனித இயல்பு. நாம் தவறு செய்யும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேற என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான் சரியான விஷயமே அன்றி, தவறான எண்ணங்களுக்கு மனதில் இடம் தரக்கூடாது.

எல்லாவிதமான சிக்கல் களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு உண்டு என்பதைப்புரிந்துகொண்டு செயல் படுவது தான் புத்திசாலித்தனம். நெருக்கடியான நேரத்தில் எப்போதுமே துணிச்சலான முடிவுகள்தான் நம்மைக் காப்பதாக இருக்கும். எனவே, தவறான சிந்தனைகளுக்கு மனதில் இடம்தராமல் தைரியமாகச் செயல்படுங்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கும் கம்பெனிகளே ஏதாவது ஒரு சூழ்நிலையில் திவால் ஆவதைப் பார்க்கிறோம். எனவே, உங்களுக் கான சறுக்கலைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் சட்டரீதியான பாதுகாப்பைத் தேடிக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.

உங்கள் சூழ்நிலைக்கு நீங்கள் எடுத்த தனிப்பட்ட முடிவுகள் காரணமா, கொரோனா பிரச்னையால் தொழிலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமா என்று புரிந்துகொள்ள முடிய வில்லை. கொரோனா காரண மாகத் தொழில் முடக்கம் ஏற்பட்டிருப்பின் அதையே கடன்தாரர்களிடம் காரணமாகச் சொல்லி உங்கள் நிலைமையைப் புரிய வையுங்கள்.

வழக்கறிஞர் ஒருவர் மூலமாக நீதிமன்றத்தில் மஞ்சள் கடுதாசி தாக்கல் செய்துவிடுங்கள். இதுதான் கடன்தாரர்கள் உங்களை நெருக்கடி செய்யாமல் இருக்க உரிய சட்ட ரீதியான ஒரே வழி.

உங்களிடம் கடன் தொகையை திரும்பத் தருவதற்குரிய எந்த விதமான வாய்ப்புகளும் இல்லாத நிலையில் ‘மஞ்சள் கடுதாசி’ தரும் முடிவைத் (Insolvancy petition) துணிச்சலாக எடுப்பதைத் தவிர, வேறு தீர்வு எதுவும் இல்லை.

இந்த முடிவை எடுப்பதால் மற்றவர்கள் என்ன நினைப்பார் களோ என எண்ணித் தயங்க வேண்டாம். மனதையும் உடலையும் தொய்வடையாமல் பார்த்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு 32 வயதுதான் என்பதால், நீங்கள் நினைத்தபடி தொழிலில் வெற்றிபெற நிறைய கால அவகாசம் எடுத்துக்கொள்ள முடியும்.

அடுத்ததாக, நீங்களும் உங்கள் மனைவியும் தொழில் அனுபவத்தைக் கொண்டு வேறு நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியுமா எனப் பாருங்கள். அல்லது மிகக் குறைந்த முதலீட்டில் குறைந்தபட்ச மாத வருமானம் தரக்கூடிய தொழிலை சின்ன அளவில் செய்து குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முயற்சி எடுங்கள். மேற்கொண்டு கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

தற்போது ஏற்பட்ட பின்னடைவை நினைத்து தொய்வடைந்துவிடாதீர்கள். சறுக்கலைச் சந்தித்தவர்கள் எத்தனையோ பேர் சரியான திட்டமிடல் மூலம் மீண்டும் ஜெயித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் நிலைமை சரியான பிறகு சரியாகத் திட்டமிட்டு தொழிலை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்!

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. சரியான திட்டம் இல்லாமல், அதிரடியான முன்னேற்றம் எப்போதும் சாத்தியமில்லை.

2. கடன் வாங்கும்முன் கட்டி முடிக்கும் வழிகளை ஆராய வேண்டும்.

3. பிசினஸில் முதலீட்டுக்கும் வருமானத்துக்குமான கணக்கைச் சரியாகக் கணிக்கக் கற்றுகொள்ள வேண்டும்.

4. சிக்கல் வரும்போது தற்கொலை எண்ணத்தைத் தலைதூக்க விடக்கூடாது.

5. துணிச்சலான, விவேகமான முடிவுகளை எடுக்கும்போது பிரச்னைகளில் இருந்து வெளிவர முடியும்.