Published:Updated:

அம்பானி ஆகும் ஆசையில் கரைந்த பென்ஷன் பணம்! கடன் சுமை தீர என்ன வழி..?

மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! -29

அம்பானி ஆகும் ஆசையில் கரைந்த பென்ஷன் பணம்! கடன் சுமை தீர என்ன வழி..?

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! -29

Published:Updated:
மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

சிலர் சரியான திட்டமும் தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் அம்பானி ஆகிவிடலாம் என்ற கனவுகளோடு தெரியாத பிசினஸில் இறங்கி, இருக்கும் சேமிப்பை இழந்து, கடனாளி ஆகி புலம்பித் தவிப்பதைப் பார்க்கலாம். காரைக்குடியைச் சேர்ந்த வெங்கடேச மூர்த்தியின் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) நிலையும் இதுதான். அவருடைய நிலையை அவரே விவரிக்கிறார்.

அம்பானி ஆகும் ஆசையில் கரைந்த பென்ஷன் பணம்! கடன் சுமை தீர என்ன வழி..?

“நான் அரசுத் துறையில் பணியாற்றி மூன்று ஆண்டு களுக்கு முன் ஓய்வு பெற்றேன். செட்டில்மென்ட் தொகை ரூ.14 லட்சம் கிடைத்தது. எனக்கு பென்ஷனாக ரூ.17,000 வருமானம் வருகிறது. ரூ.14 லட்சத்தை என் மகன் வீடு கட்டுவதற்காகக் கேட்டான். நான் மறுத்துவிட்டேன். காரணம், அந்தப் பணத்தைக்கொண்டு ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையில் இருந்தேன்.

என்ன பிசினஸ் ஆரம்பிக்கலாம் என தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தபோது, என் மைத்துனரின் மகன் டிராவல்ஸ் பிசினஸ் ஆரம்பித்தான். ‘மாமா, நான் நான்கு கார்கள் வாங்கவுள்ளேன். நீங்கள் நான்கு டெம்போ வேன்கள் வாங்குங்கள். நல்ல வருமானம் கிடைக்கும்’ என்றான்.

ஆபீஸ் அட்வான்ஸ், மற்ற செலவுகள் போக, நான் வைத்திருந்த பணம் போதாமல், இரண்டு வண்டிகளை ஃபைனான்ஸ் மூலம் வாங்கினேன். மொத்த பிசினஸும் எங்கள் இரண்டு பேரின் பெயரில்தான் நடந்தது. பிசினஸ் ஆர்டர்கள் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் என் மைத்துனர் மகனே கவனித்துக்கொண்டான். ஆபீஸ் பொறுப்புகளை நான் பார்த்துக் கொண்டேன்.

ஓராண்டுக் காலத்துக்கு பிசினஸ் சுமாராகப் போனது. பிறகு கொரோனா முடக்கம் காரணமாகத் தொழில் முடங்கிப்போனது. ஃபைனான்ஸ் கட்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந் தோம். சம்பளம் சரியாகத் தராததால், டிரைவர்கள் இரண்டு பேர் வேலையை விட்டுப் போய்விட்டார்கள். பிறகு, மைத்துனர் மகனே வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். அண்மையில் மலைப் பிரதேசம் ஒன்றில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும்போது விபத்தில் மாட்டிக்கொண்டான். உயிர் பிழைத்துக் கொண்டாலும் அவன் பூரண குணமாக எட்டு மாதம் ஆனது. தொழிலை நான் மட்டும் கவனித்துக்கொண்டேன்.

என்னால் ஓரளவுக்கு மேல் தொழில் நுணுக்கத்தைப் புரிந்து செயல்பட முடியவில்லை. டிரைவர்கள் தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்தார்கள். என்னால் கண்டிக்க முடியவில்லை. வண்டிகள் பராமரிப்பு, டீசல் எனச் செலவுகளை ஈடுகட்டி பெரிதாக வருமானம் வர வில்லை. ஃபைனான்ஸ் கட்ட முடியாமல் சிரமப்படுகிறேன். ஃபைனான்ஸ் நிலுவைத் தொகை ரூ.9 லட்சம் உள்ளது.

இன்றைய சூழலில் கார்களை விற்றுவிட்டு வேறு தொழிலைக் கவனிக்கப் போவதாகச் சொல் கிறான் மைத்துனரின் மகன். நான் நான்கு வண்டிகளை விற்றால் இன்றைய நிலைமையில் ரூ.10 - 11 லட்சம்தான் கிடைக்கும்.

வீடு கட்ட பணம் தர மறுத்த தால் என் மகன் என்னைக் கண்டுகொள்வதே இல்லை. தொழிலில் பணத்தை இழந்தது தெரிந்தும் அவன் பாராமுகமாக இருந்துவிட்டான். இப்போது நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்..?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“ஓய்வுக்காலத்தில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும், புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் சரிதான். அதற்காகப் பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு உழைத்துக் கிடைத்த பணம் முழுவதையும் அனுபவம் துளியும் இல்லாத துறையில் முதலீடு செய்து கடனாளியாகி நிற்பது ஏற்க முடியாதது.

உங்கள் மகன் வீடு கட்ட நீங்கள் பண உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; உங்கள் பிசினஸ் குறித்து அவரிடம் நீங்கள் கலந்து பேசியிருக்கலாம்.அப்படிச் செய்யாமல் உங்கள் இஷ்டத்துக்கு தொழிலை ஆரம்பித்துவிட்டு, இப்போது பிறரைக் குறை சொல்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

தொழில் ஆரம்பிக்கும் முன் கொஞ்சமாவது, அந்தத் தொழில் குறித்த நெளிவுசுளிவுகளை தெரிந்துகொள்ள முயற்சி எடு்க்க வேண்டும். நீங்கள் உங்கள் மைத்துனரின் மகனை மட்டுமே நம்பி செயல்பட்டதுதான் தோல்விக்குக் காரணம்.

மற்றபடி, கொரோனா காரணமாகத் தொழில் சுணக்கம் என்பது தற்காலிகமானதுதான். உங்கள் தோல்விக்குக் காரணம், தொழில் அனுபவம் இல்லாததும், தவறான முடிவுகளை எடுத்தலுமே தவிர, கொரோனா முழுக்க காரணம் அல்ல. கையில் இருக்கும் காசுக்கு இரண்டு வேன் களை மட்டுமே வாங்கியிருக்கலாமே. எதற்கு எடுத்த எடுப்பில் அகலக்கால் வைக்க வேண்டும்?

தொழில் ஆரம்பித்த பிறகு, ஒருசில ஆண்டுகளில் எதிர் பாராத சிக்கல் ஏதும் ஏற்பட்டால் அதைச் சமாளித்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்குத் தொழிலில் நிலைத்தன்மையை உருவாக்க முதலீடு அல்லாமல், கூடுதல் தொகையை ஒதுக்கிவைத்திருக்கும் திறன் மிக முக்கியம். ஆனால், நீங்கள் ஆரம்பகட்டத்துலேயே கடன் வாங்கும் நிலையில்தான் இருந்துள்ளீர்கள்.

சரி, நடந்த தவறுகளை எண்ணி மன உளைச்சல் அடைவதில் பயன் இல்லை. இனி என்ன செய்வது எனப் பார்ப்போம்.

வண்டிகளை விற்றுக் கடனை அடைத்துவிட்டு வெளிவருவதே புத்திசாலித்தனம். முதலீட்டு இழப்பு என்பது தொழில் அனுபவங்களைக் கற்றுக்கொள்ள கொடுத்த விலையாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பென்ஷன் வருவதால் பெரிதாக பணச் சிக்கல் வந்துவிடாது.

உங்களுக்கு ஆர்வம் இருக்கும்பட்சத்தில் உங்கள் அனுபவங்களைக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தால் கூடுதலாக ரூ.20,000 வரை கிடைக்கலாம். தாராளமாக வாழ்க்கையை நடத்த முடியும். உங்கள் மகனுடன் இணக்கமாகும் முயற்சிகளை மேற்கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.’’

தொகுப்பு: கா.முத்துசூரியா

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்..!

1. ஓய்வுக்கால நிதி முழுவதையும் ஹைரிஸ்க் முதலீடுகளில் போடக் கூடாது.

2. குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று, புதிய முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.

3. அனுபவம் இல்லாத துறையில் அடுத்தவர்களை மட்டுமே முழுக்க நம்பி இறங்கக் கூடாது.

4. தோல்வி ஏற்பட்ட பிறகு, அதை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வர குடும்பத்தினரின் ஆதரவைப் பெற முயல வேண்டும்.

5. ஓய்வுக்காலத்தில் பிசினஸ் தொடங்கும்போது, முறையான வழிகாட்டுதலும் கூடுதல் கவனமும் மிக அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism