நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெளிநாட்டு வேலை... எதிர்பாராத சூழல்... குழப்பத்தில் வாழ்க்கை..! அழுத்தும் கடன்... அடுத்தது என்ன..?

கடன் சுமையில்...
பிரீமியம் ஸ்டோரி
News
கடன் சுமையில்...

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -19

சிலர் தெரிந்து எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், சூழ்நிலை அவர்களை இக்கட்டான நிலையில் கொண்டுபோய் விட்டு விடும். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர்தான் பொள்ளாச்சியைச் சேர்ந்த தர்மராஜ் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது). அவருடைய நிலையை அவரே விளக்கிச் சொல்கிறார்...

கடன் சுமையில்...
கடன் சுமையில்...

“நான் பேக்கரி நடத்திவருகிறேன். செலவுகள், ஆட்களின் சம்பளம் போக சுமார் ரூ.35,000 வருமானம் வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குமுன் என்னுடைய மகன் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டான். ஒரே மகன் என்பதால், அவனுடைய ஆசைக்கு குறுக்கே நிற்க விரும்ப வில்லை. உறவினர் இரண்டு பேர்களிடம் தலா ரூ.3 லட்சம் கடன் வாங்கி அனுப்பி வைத்தேன். ரூ.6 லட்சத்தை ஆறே மாதங்களில் அடைத்துவிடலாம் என்றான் என் மகன். ஆனால், விதி வேறுவிதமாக வேலை செய்தது. வெளிநாட்டுக்குச் சென்ற அவனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக அவனுக்கு இடது கையும் இடது காலும் இயங்காமல் போய் விட்டது. ஊருக்கே வரவைத்து விட்டேன். தற்போது என்னுடனே வைத்து பராமரித்து வருகிறேன். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் கடன் மேலும் ரூ.3 லட்சம் அதிகமானதுதான் மிச்சம். குணப் படுத்த இயலவில்லை.

என் உறவினர்கள் பணத்தைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பேக்கரி வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளையும் மருத்துவச் செலவுகளையும் மட்டுமே சமாளித்து வருகிறேன். கடன் கட்ட முடியவில்லை. ‘வீட்டை விற்பனை செய்தால் ரூ.20 லட்சம் கிடைக்கும். விற்றுவிட்டு ரூ.9 லட்சம் கடனைக் கட்டி முடித்துவிடலாம். மீதமுள்ள பணத்தைக்கொண்டு லீஸுக்கு வீடு எடுத்துக்கொள்ளலாம்’ என என் மனைவி யோசனை சொல்கிறார். எனக்குத்தான் பூர்வீக வீட்டை விற்க மனம் இடம்கொடுக்கவில்லை.

என் மனைவியிடம் 15 சவரன் நகைகள் உள்ளன. அதை விற்றுவிட்டு பாதிக் கடனை அடைத்துவிட்டால், மீதிக் கடனை பேக்கரி வருமானத்திலிருந்து அடைத்துவிடலாம் என நான் நினைக்கிறேன். நான் கடன் வாங்கிய இரண்டு பேரில் ஒருவர் கஷ்டத்தில் உள்ளார். அவரிடம் ரூ.4 லட்சம் வாங்கி யுள்ளேன். இன்னொருவர் கொஞ்சம் வசதியானவர். இவரிடம் ரூ.5 லட்சம் வாங்கியுள்ளேன். நகை விற்கும் தொகை யைக் கஷ்டத்தில் இருப்பவருக்குக் கொடுத்துவிட்டு, இன்னொருவருக்கு மாதம்தோறும் கொடுத்துவிடலாம் என நினைக்கிறேன். அதற்கு அவர் ஒப்புக் கொள்வாரா எனப் பேசினால்தான் தெரியும்.

கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பேக்கரி வருமானம் என்ன ஆகுமோ என்ற கவலையும் எனக்கு இருக்கவே செய்கிறது. சொன்னபடி கொடுக்க முடியாமல் போனால், சிக்கலாகிவிடுமே என்றும் பயப்படுகிறேன். இப்படிக் குழப்பமான சூழ்நிலையில் தவிக்கிறேன். நெருக்கடியான இந்த நேரத்தில் நான் கடன் சுமையிலிருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும்?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“சில நேரங்களில் நாம் நினைப்பதற்கு நேர்மாறாக நடந்துவிடுவது உண்டு. பலருடைய வாழ்க்கையில் இது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உங்கள் மகன் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்க நினைத்ததும், அதற்கு நீங்கள் கடன் வாங்கி ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததும் கொஞ்சம்கூட தவறு இல்லை. உங்கள் மகன் சொன்னது போல, ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்குள் கடன் முழுவதை யும் நிச்சயம் செலுத்தியிருக்க முடியும். ஆனால், எதிர்பாராத விதமாக உங்கள் மகனுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்புக்கு என்ன செய்ய முடியும்..?

நீங்கள் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலானோர் முக்கியமான இலக்குகளுக்கான செலவுகளைத் தோராயமாகக் கணக்கிட்டு, அதில் பாதி அளவுக்காவது முன்கூட்டியே சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என நினைப் பதில்லை. காரியம் நடக்கும் நேரத்தில் கையில் அதற்கென ஒரு ரூபாய்கூட சேர்க்காமல் இருந்து விட்டு, முழுத் தொகையையும் மிகச் சுலபமாகக் கடனாக வாங்கிவிடுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தவரை பணம் சேர்த்து வைத்தால் பெரிய அளவில் கடன் சுமை அழுத்தாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.

நீங்கள் பேக்கரி நடத்தி ஓரளவு வருமானமும் ஈட்டும்பட்சத்தில் ஏன் முக்கியமான இலக்குகளைத் திட்டமிட்டு முதலீடுகள் ஏதும் செய்யவில்லை எனத் தெரிய வில்லை. செலவுகள் கட்டுக்குள் அடங்கவில்லை எனக் காரணங்கள் சொன்னாலும் சேமிப்பையும் முதலீட்டையும் கூட முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு செலவாக நீங்கள் கருதவில்லை. நீங்கள் மட்டுமல்ல, நிறைய பேர் செய்யும் நிதி சார்ந்த தவறு இதுதான். இதனால்தான் சிக்கலான நேரங்களில் மீண்டு வர எந்தவிதமான நிதி ஆதாரமும் இல்லாமல் தவிக்க வேண்டிய சூழல் உள்ளது.

அடுத்ததாக, தனக்கும் தன் குடும்பத்துக்கும் சேர்த்து தேவைக்கேற்ப ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பலரும் எண்ணுவதில்லை. எதிர்பாராமல் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்படும்போது ஏற்படும் மருந்துவச் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கும் நிலையைத் தவிர்க்க ஹெல்த் பாலிசி அவசியம் என நிறைய பேர் உணர்வதில்லை.

சரி, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி உங்களுக்கான தீர்வு என்ன எனப் பார்ப்போம். உங்களுக்கு ரூ.9 லட்சம் மட்டுமே கடன் உள்ளது. இதுவும் உங்கள் தவறுகளால் ஏற்பட்ட கடன் அல்ல; சூழ்நிலையால் ஏற்பட்டது. எனவே, இவ்வளவு கடன் பட்டுவிட்டோமே என சஞ்சலப்படாதீர்கள். மிக சுலபமாக இந்தச் சிக்கலில் இருந்து மீண்டு வந்துவிடலாம்.

நீங்கள் வீட்டை விற்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டாம். உங்கள் மகனைப் பராமரிக்க வேண்டிய சூழலில் நீங்கள் இருக்கும் நிலையில் சொந்த வீடுதான் செளகர்யமாக இருக்கும். வாடகை வீடு, லீஸுக்கு வீடு என்றால் சில சிக்கல்கள் வரலாம்.

நகையை விற்றுக் கடனை அடைக்கும் முடிவை எடுப்பது சரியாக இருக்கும். சுமார் ரூ.4.5 லட்சத்துக்கு நகையை விற்க முடியும். ரூ.3 லட்சம் ரூபாயை நீங்கள் கடன் வாங்கியவர்களில் கஷ்டப்படும் நபருக்கும், ரூ.1.5 லட்சத்தை இன்னொருவருக்கும் கொடுத்துவிடவும். பாக்கித் தொகையை மாதம்தோறும் செலுத்திவிடுவதாக இருவரி டமும் சொல்லவும். உங்கள் சூழ்நிலையைக் அவர்கள் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்வார்கள்.

உங்கள் வருமானத்தில் மாதம்தோறும் ரூ.10,000 கடன் கட்ட ஒதுக்கவும். அதிகத் தொகை தர வேண்டியவருக்கு ரூ.7,500, குறைந்த தொகை பாக்கியுள்ள நபருக்கு ரூ.2,500 என்ற கணக்கில் கொடுத்து வரவும். நீங்கள் இன்னும் கொஞ்சம் மெனக் கெட்டால் உங்கள் பிசினஸ் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி வருமானம் அதிகரித்தால், வெகு சீக்கிரமாகவே கடனைச் செலுத்தி முடித்துவிடலாம்.

கொரோனா காலத்தில் பிசினஸ் பாதிக்குமோ என அச்சப்பட வேண்டிய தில்லை. உங்கள் பிசினஸ் உணவு தொடர்பானது என்பதால், பெரிதாக பாதிப்படைய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அப்படியே சிறிது பாதிப்பு இருந்தாலும் அது குறுகியகால பாதிப்பாகவே இருக்கும். எனவே, கவலையை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் செயல்படவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்!

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. இலக்குகளை நிர்ணயம் செய்து முதலீடுகளைச் செய்து வர வேண்டும்.

2. குடும்பத்துக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

3. எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற திட்டம் தேவை.

4. நடந்தவற்றை எண்ணி கவலைப்படுவதைவிட, அடுத்து என்ன என யோசித்தால் ஆயிரம் வழிகள் தோன்றும்.

5. பாசிட்டிவ்வான மனநிலையுடன் அடுத்தகட்ட முயற்சிகளைச் செய்தால் சுமையாக இருக்காது.