Published:Updated:

தினம்தோறும் ரூ.10,000... ஆசையைத் தூண்டிய மும்பை நண்பர்..! - ரூ.30 லட்சம் கடன்... எப்படி மீள்வது..?

கடன் சிக்கல்...
பிரீமியம் ஸ்டோரி
கடன் சிக்கல்...

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -20

தினம்தோறும் ரூ.10,000... ஆசையைத் தூண்டிய மும்பை நண்பர்..! - ரூ.30 லட்சம் கடன்... எப்படி மீள்வது..?

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -20

Published:Updated:
கடன் சிக்கல்...
பிரீமியம் ஸ்டோரி
கடன் சிக்கல்...

சிலர் நல்ல வேலை, நல்ல சம்பளம் இருந்தும், பிறருடைய தவறான வழிகாட்டலால் கடனை வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். சராசரியான வருமானத்தைக் காட்டிலும் அதிக வருமானம் வேண்டும், மிக விரைவில் கோடிகளைக் குவிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர்தான் சுரேஷ் பூபதி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த அவர் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது), தன் நிலையைத் தொலைபேசி மூலம் விவரித்தார்.

கடன் சிக்கல்...
கடன் சிக்கல்...

“எனக்கு வயது 32. நான் மத்திய அரசு பணி நிமித்தமாக அஸ்ஸாமில் இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குடும்பம் சொந்த ஊரில் இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு எந்தக் கடனும் இல்லாமல் நிம்மதியாக இருந்தேன். ஆனால், மும்பையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு சோதனைக் காலம் ஆரம்பமானது.

‘பங்குச் சந்தையில் இன்ட்ரா டே வர்த்தகம் மூலம் தினமும் ரூ.10,000 சம்பாதிக்க முடியும்’ என மும்பை நண்பர் சொல்ல, எனக்கும் ஆசை வந்தது. பங்கு வர்த்தகம் தொடர்பான சில விஷயங்களை அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆரம்பத்தில் என்னிடம் இருந்த பணத்தில் டிரேடிங் செய்ததில் தினமும் ரூ.3,000, ரூ.4,000 கிடைத்தது. இன்னும் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால், இன்னும் அதிகமான பணம் போட்டு டிரேடிங் செய்ய வேண்டும். எனவே, ரூ.14 லட்சம் கடன் வாங்கி டிரேடிங் செய்ய ஆரம்பித்தேன். திடீரென அந்த நண்பர் காணாமல் போய்விட்டார். பிறகு சில புரோக்கிங் நிறுவனங்களை அணுகி, அவர்கள் உதவியுடன் டிரேடிங் செய்தேன். அவர்களும் தினமும் ரூ.10,000 சம்பாதிக்க முடியும் எனச் சொன்னார்கள். சில நாள்கள் ஓரளவு பணம் கிடைத்தாலும், ஒரே நாளில் ரூ.40,000 இழப்பு ஏற்பட்டதும் அதிர்ந்துபோனேன். தொடர்ச்சியாக இழப்பு ஏற்படவே, மேலும் கடன் வாங்கி விட்டதைப் பிடிக்க முயற்சி செய்தேன். ஊரில் ரூ.5 லட்சம் சீட்டுக் கட்டி வந்தேன். அந்தச் சீட்டையும் ஆரம்பத்திலேயே எடுத்து டிரேடிங்கில் போட்டு இழந்துவிட்டேன். ரூ.4 லட்சம் வரை சீட்டுக்கான பணம் கட்ட வேண்டி யிருப்பதால், மாதம்தோறும் சீட்டுத் தொகை செலுத்த இயலாமல் தவிக்கிறேன். சீட்டுப் பிடிப்பவர்கள் மிகவும் தரக் குறைவாகப் பேசுகிறார்கள். கடனாக வாங்கியது ரூ.14 லட்சம், சீட்டுத் தொகை ரூ.4 லட்சம், தெரிந்த சிலரிடம் வாங்கியது என மொத்தம் ரூ.30 லட்சம் கடன் ஆகிவிட்டது.

இந்த அளவுக்குக் கடன் இருப்பது என் மனைவிக்கும் உறவினர்களுக்கும் தெரியாது. அலுவலகத்தில் இருந்து வர வேண்டிய ரூ.3.5 லட்சம், பி.எஃப் ரூ.10 லட்சம் தவிர, வேறு சொத்து எதுவும் இல்லை. பி.எஃப் தொகையை எடுக்க முயற்சி செய்தேன். மிகவும் குறைந்த அளவுக்குத்தான் எடுக்க முடியும் என்றார்கள்.

மாதம் ரூ.50,000 சம்பளம். கையில் கிடைப்பது ரூ.46,000. என் செலவுகள் போக குடும்பத்துக்கு அனுப்புவது ரூ.10,000. கடந்த இரண்டு மாதங்களாக அதுவும் அனுப்பவில்லை. என்னுடைய அம்மாவுடன் என் மனைவியும் குழந்தைகளும் இருப்பதால் சமாளித்து வருகிறார்கள். அக்கம்பக்கம் வாங்கிய கடனை மட்டும் கட்டிவிட்டு என் செலவுகளை மட்டுமே சமாளித்து வருகிறேன். மிச்சம் ஏதும் இல்லை. கடன் தந்தவர்களின் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற அளவுக்கு மன நிம்மதி இழந்து தவிக்கிறேன். என் பிரச்னையிலிருந்து மீண்டு வர ஏதாவது வழி உள்ளதா..?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் தீர்வுகள்...

“நீங்கள் ஓரளவு நல்ல சம்பளத்தில் பணியில் இருந்தும், யாரோ ஒருவரின் தூண்டுதலால் அதிக வருமானத்துக்கு ஆசைப் பட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். பங்குச் சந்தையைப் புரிந்துகொண்டு முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெறலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முழு நேரப் பணியில் இருந்துகொண்டு, அரைகுறை ஆலோசனைகளைக் கேட்டு பங்கு வர்த்தகத்தில் இறங்கியது மிக மிகத் தவறு. நீங்கள் நினைத்ததுபோல, பங்கு வர்த்தகத்தில் ஒரு நாளில் ரூ.10,000 சம்பாதிக்க எல்லோருக்கும் முடியு மானால், இங்கே எல்லோருமே கோடீஸ்வரர்கள் ஆகிவிடு வார்கள். யார் எதைச் சொன்னாலும் அது சாத்தியமா, அதுவும் நம்மால் சாத்தியமா... என்ற ஒரு கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுத் தெளிவான பதிலைப் பெற்றிருந்தால், இந்த அளவுக்கு சிக்கல் வந்திருக்காது.

இன்னொரு முக்கியமான விஷயம், கடன் வாங்கி முதலீடு செய்வது தவறு. அதுவும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மிகத் தவறு. இந்த பாலபாடத்தைக்கூட தெரியாத ஒருவர்தான் உங்களை இந்த ஆபத்தில் இறக்கிவிட்டு விட்டுச் சென்றுள்ளார். பெரிய அளவில் கடன் வாங்குவதாக இருந்தால், அது வீட்டுக் கடனாக மட்டுமே இருக்கலாம். மற்ற எந்த காரணங்களுக்காகவும் பெரிய தொகையைக் கடனாக வாங்க முற்படும் முன் ஒருமுறைக்கு நூறு முறை யோசிக்க வேண்டும்.

இங்கே கடன் வாங்காமல் யாரும் இல்லை. வாங்குகிற வர்களில் 98% பேரால் திரும்பச் செலுத்த முடிகிறது. 1 - 2 % பேரால் திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதற்காக தவறான முடிவுகளை எடுப்பது சரியான தீர்வாக அமையாது. உங்களை நம்பி நான்கு பேர் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பிரச்னையைத் துணிச்சலாக எதிர்கொள்ளத் தயாராவதுதான் புத்திசாலித் தனம். மானம், அவமானம் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டு அஞ்சாதீர்கள். எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

முதலில், மனைவி, அம்மா மற்றும் அக்கறை கொண்ட சிலரை அழைத்து அவர்களிடம் உங்கள் பிரச்னைகளைச் சொல்லுங்கள். உங்கள் சிக்கலுக் கான வழிகாட்டல் அவர்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அக்கறை கொண்ட வர்கள் யாரும் இல்லை; யாராலும் எதுவும் உதவ முடியாது என நீங்களே நினைத்துக்கொண்டு மனம் வெதும்பாதீர்கள்.

பி.எஃப்-லிருந்து பணம் எடுக்க வேண்டும் எனில், சில முக்கியமான காரணங்கள் இருக்க வேண்டும். கடனை அடைக்க பி.எஃப் பணத்தை எடுக்க இயலாது. முதலில், உங்கள் மாதச் சம்பளத்தை உங்கள் செலவுக்கு ரூ.6,000, குடும்பச் செலவுக்கு ரூ.15,000, கடன் செலுத்த ரூ.25,000 எனப் பிரித்துக்கொண்டு அதற்கு ஏற்ப செலவுகளைச் சுருக்கமாகத் திட்டமிடுங்கள்.

கடன்தாரர்களை அழைத்து உங்களிடம் திரும்பத் தர எதுவும் இல்லை என்ற உண்மையைச் சொல்லுங்கள். வட்டியைத் தள்ளுப்படி செய்யச் சொல்லுங்கள். மாதம்தோறும் தவணை முறையில் செலுத்துவதாகச் சொல்லுங்கள். சொன்னபடி செலுத்தி அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தால் நெருக்கடி தரமாட்டார்கள்.

உங்களுக்கு வர வேண்டிய ரூ.3.5 லட்சம் கையில் கிடைத்ததும் அதிக நெருக்கடி உள்ள சிறு சிறு கடன்களை அடைத்துவிடவும். நடந்த தவறுகளைப் பாடமாக எடுத்துக்கொண்டு இனி நிதி ஒழுக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

மீண்டும் சிக்கல் இல்லாத வாழ்க்கைச் சூழலை உங்களால் நிச்சயம் உருவாக்க முடியும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அறிய வேண்டிய 5 பாடங்கள்..!

1. கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது.

2. நிதி சார்ந்த விஷயங்களைக் குடும்பத்தினருடன் பகிர்வது மிக அவசியம்.

3. பிறர் சொல்வதைக் கேட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது.

4. அதீத வருமானம் எனில், அங்கே அதற்கேற்ற ரிஸ்க்கும் உண்டு.

5. நிதி சார்ந்த அடிப்படை விஷயங்களையாவது அறிந்து வைத்திருப்பது நல்லது.