Published:Updated:

நிம்மதியை இழக்க வைத்த மைத்துனரும் மனைவியும்! ரூ.1.2 கோடி கடனைக் கட்ட என்ன வழி..?

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -20

பிரீமியம் ஸ்டோரி

சிலருக்கு தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வேலை செய்வதில் போரடித்துவிடும். அப்படிச் செய்துவிடலாமா, இப்படிச் செய்துவிடலாமா என மனம் அலைபாயும். அப்படிப்பட்ட மனநிலையில் அனுபவம் இல்லாத ஒரு துறையில் பணத்தை அள்ளிப் போட்டுவிட்டு கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு சிறுநகரைச் சேர்ந்த பரசு கார்த்தி (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது). என்ன செய்தார் அவர்..? அவரே சொல்கிறார்...

மாடல் படம்
மாடல் படம்

“எனக்கு வயது 43. நான் பெங்களூரில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பில் பணியாற்றி வந்தேன். மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளம். என் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல் இருந்ததால், என் மனைவி, குழந்தை கள் என் சொந்த ஊரிலேயே இருக்க, நான் மாதம் இரண்டு முறை ஊருக்குச் சென்று வந்துகொண்டிருந்தேன். வாழ்க்கை நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் தீபாவளிக்கு ஊருக்குப் போனபோது என் மைத்துனர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன். அவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். ‘மாப்ளே எத்தனை நாளைக்குத்தான் பெங்களூருக்கும் புதுக் கோட்டைக்கும் அலையப் போகிறீர்கள். நிலத்தை விற்றுவிட்டு, உங்க சேமிப்பையும் போட்டு பிரமாண்டமா லாட்ஜ் கட்டுவோம்’ என்றார்.

என் மனைவியும் அவர் சொன்னதைப் பிடித்துக்கொண்டு என்னை வற்புறுத்த ஆரம்பித்தார். வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். பி.எஃப் பணம், மற்ற சேமிப்பு எல்லாம் சேர்த்து ரூ.55 லட்சம் இருந்தது. நகரின் முக்கியமான இடத்தில் லாட்ஜ் கட்ட இடம் வாங்கினோம். அதற்கே ரூ.65 லட்சம் ஆனது. ரூ.10 லட்சத்துக்கு வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினேன். பூர்வீக நிலத்தை விற்றதன் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தது. மூன்று அடுக்கு மாடியில் பிரமாண்ட லாட்ஜ் கட்ட பிளான் போட்டோம். மொத்தம் ரூ.1.25 கோடி ஆகும் என பில்டர் சொன்னார்.

மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் திரட்டினேன். கொஞ்சம் நகைகளை விற்று ரூ.10 லட்சம் புரட்டினேன். ரூ.50 லட்சம் மட்டுமே தேற்ற முடிந்தது. இரண்டு மாடி கட்டிக் கொள்ளலாம் என்றேன். ஆனால், என் மனைவியும் மைத்துனரும் மூன்று மாடி என்றால்தான் பிரமாண்டம் இருக்கும் என்றார்கள். வேறு வழியில்லாமல் தனியார் வங்கி ஒன்றில் ரூ.75 லட்சம் கடன் வாங்கினேன். பில்டிங் கட்டி முடித்து இன்டீரியர் வேலைகள் எல்லாம் முடியும்போது சுமாராக ரூ.1.50 கோடி செலவானது. நிலம் விற்ற தொகை ரூ.30 லட்சம் போக, மீதி ரூ.1.20 கோடி கடன் மூலமே பில்டிங் கட்டி முடித்தோம்.

கோலாகலமாகத் திறப்பு விழா நடத்தி முடித்த நான்கே மாதங்களில் கொரோனா ஊரடங்கில் தொழில் முடங்கிப்போனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்ட நேரத்தில் இப்போது இரண்டாம் அலையில் சிக்கிக் தொழில் பாதித்துவிட்டது.

என் மைத்துனர் சொன்ன அளவுக்கு வருமானம் வரவில்லை. சிறு நகரம் என்பதால், பட்ஜெட்டுக்குள் அடங்கும் லாட்ஜ்களைத்தான் மக்கள் தேர்வு செய்தார்கள். அதிக கட்டணம் கொடுத்து தங்கும் அளவுக்கு பெரிய பிசினஸ் சென்டர் இல்லை என்பதை நான் இப்போதுதான் உணர்கிறேன். இ.எம்.ஐ செலுத்தவே சிரமமாக இருக்கிறது. ஃபைனான்ஸ் கம்பெனிக்கு ஒரு வருடமாக வட்டி செலுத்தாததால் நெருக்கடி தருகிறார்கள்.

சூழ்நிலை சரியானால்கூட கடனைக் கட்டி முடிக்கவே போராட வேண்டியிருக்கும். சிலர் ரூ.1.75 கோடி முதல் 1.85 கோடிக்குள் விலைக்குக் கேட்டு வருகிறார்கள். நஷ்டம் வந்தாலும் விற்றுக் கடனை அடைத்துவிட்டு, மறுபடியும் பெங்களூருக்கே போய்விடலாம் என்ற சிந்தனையும் வருகிறது. நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்..?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“யார் எது சொன்னாலும் நமக்கு அது சரிப்பட்டு வருமா என யோசித்துச் செயல்படும் எந்தவொரு காரியமும் படுதோல்வியில் முடியாது. அடுத்ததாக, நம் உழைப்பிலும் பணியிலும் சோர்வை ஏற்படுத்திக் கொள்ளும்போது, சுலபமாக பணம் கொட்டும் வழிகளை மனம் தேட ஆரம்பிக்கிறது.

உங்கள் மனைவி நீங்கள் சொந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்ற ஆசையில் உங்களைத் தவறான முடிவெடுக்க தூண்டியுள்ளார். உங்கள் மைத்துனர் அவருடைய தொழிலில் அவர் பெற்ற வெற்றியால் உண்டான அதீத நம்பிக்கையில் உங்களைத் தூண்டியுள்ளார். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், உங்கள் ஊரின் சந்தை நிலவரத்தை சரியாகக் கணக்கீடு செய்யாமல் பிரமாண்டமான பில்டிங், பிரமாண்டமான இன்டீரியர் என அகலக்கால் வைத்து திட்டமிட்ட பட்ஜெட்டைத் தாண்டிச் செலவு செய்துள்ளீர்கள்.

ஒரு திட்டத்தைத் தொடங்கும் முன்பு அதை முடிக்க ஆகும் மொத்தச் செலவுகள், அதற்கு நம்மிடம் இருக்கும் தொகை, எவ்வளவு கடன் வாங்க வேண்டும், திட்டம் முடிந்து மாத வருமானமாக எவ்வளவு கிடைக்கும் என எந்தவிதமான தோராயமான கணக்கீட்டையும் நீங்கள் செய்யாமலேயே போகிற போக்கில் போனதால்தான் உங்களுக்கு இந்த சுமையான நிலை ஏற்பட்டிருக்கிறது.

சரியான தொழில் அனுபவம் இல்லாவிட்டாலும், சரியான இடத்தையாவது தேர்வு செய்திருந்தால் கொரோனா காலகட்டத்துக்குப் பிறகாவது நல்ல வருமானம் வரும் என நம்பலாம். ஆனால், நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், அந்த நம்பிக்கையிலும் தளர்வு ஏற்படவே செய்கிறது.

அடுத்ததாக, தொழிலை முன்னெடுத்துச் செல்லும் தெளிவான இலக்குகள், திட்டங்கள் எதுவும் உங்களுக்கு இல்லை. நெருக்கடியிலிருந்து மீண்டுவந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டீர்கள். சிறு நகரங்களில் லாட்ஜ் நடத்திக் கொண்டிருப்பவர்கள் பலரும் தற்போது சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் இன்றைய நிலையில் இரண்டு விதமான முடிவுகளை யோசிப்பது சரியாக இருக்கும்.

ஒன்று, தொழிலை கொஞ்சம் மாறுதல் செய்து நடத்துவது. இரண்டு, விற்றுவிட்டு வேலைக்குப் போவது. பில்டிங்கை லாட்ஜாக நடத்தாமல் சிறு சிறு அலுவலங் களுக்கு வாடகைக்குவிட முடியுமா எனப் பாருங்கள். அப்படி நடத்தினால் வரக்கூடிய வருமானம், பராமரிப்புச் செலவுகள், கடன் வட்டி செலுத்தும் தொகை உள்ளிட்ட அனைத்து விஷயங் களையும் கணக்கிட்டு அதன் பிறகான இறுதி வருமானம் நீங்கள் வாங்கிய சம்பளத்தில் பாதி அளவுக்காவது கிடைக்குமா எனப் பாருங்கள். குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் அந்த வருமானம் இருந்தால் நல்லது.

அப்படி இல்லாதபட்சத்தில் நீங்கள் பில்டிங்கை விற்றுவிட்டுக் கடனை அடைப்பதே சரியாக இருக்கும். சுமார் ரூ.2.15 கோடி மதிப்புள்ள பில்டிங்கை ரூ.30-35 லட்சம் இழப்பில் விற்க வேண்டி யுள்ளதே எனக் கவலைப்படாதீர்கள். இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை வாய்ப்பு வரும்போதே விற்றுவிட்டு வெளியே வந்துவிடுங்கள்.

உங்களுக்கு ஐ.டி துறையில் நல்ல அனுபவம் இருப்பதால், மீண்டும் பணி வாய்ப்பு கிடைக்கும். பணியில் சேருங்கள். கால விரயமும், உங்கள் சேமிப்பாக இருந்த பண நஷ்டமும் ஏற்பட்டுவிட்டதே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், உங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி முன்னேறுங்கள். எதிர்காலத்தில் பிசினஸ் செய்ய வேண்டும் என முடிவெடுத்தால், இப்போதைய அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு தகுந்த அனுபவம் கொண்ட பங்குதாரரை இணைத்துக்கொண்டு இறங்குங்கள்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. அனுபவம் இல்லாத துறைகளில் ஈடுபடும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை.

2. தெளிவான திட்டம் இல்லாமல் செயலில் இறங்கக் கூடாது.

3. பிறர் சொல்லும் ஆலோசனைகளை விவாதித்து சிக்கல் இல்லாத தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

4. சந்தை நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும்.

5. திட்டமிட்ட தொகைக்குள் செலவை அடக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு