Published:Updated:

கணவர் திடீர் மரணம்... வரவு செலவில் மர்மம்... கடன் சிக்கலில் நான்..! பிரச்னைக்கு என்ன தீர்வு..?

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -23

பிரீமியம் ஸ்டோரி

சில குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். ஆனால், ஒருமித்த கருத்துடன் கூடி இருக்க மாட்டார்கள். தனித்தனி தீவாகப் பிரிந்து கிடப்பார்கள். தன்னுடைய செயல்பாடுகளை யாரோடும் பகிர்ந்துகொள்ளவும் மாட்டார்கள். கணவன் அதிகாரத் தோரணையுடன் நடந்துகொள்ளும் குடும்பங்களில் மனைவியிடம்கூட முக்கியமான விஷயங்களைக் கலந்து பேச மாட்டார்கள். இது எந்த அளவுக்கு பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்பதை மன்னார் குடியைச் சேர்ந்த ராதாசுந்தரியின் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) குடும்ப நிலையைக் கொண்டு அறிய முடியும். அவருடைய சூழலை அவரே விளக்கமாகச் சொல்கிறார்.

கணவர் திடீர் மரணம்... வரவு செலவில் மர்மம்... கடன் சிக்கலில் நான்..! பிரச்னைக்கு என்ன தீர்வு..?

“எனக்கு 47 வயது. என் கணவர் அந்தந்த சீஸனுக்கு ஏற்றவாறு சின்னச் சின்ன பிசினஸ்களைச் செய்து வந்தார். நிறைய சம்பாதித்தார். ஆனால், என்னிடம் வரவு செலவு விஷயங்களைச் சொல்ல மாட்டார். குடும்பச் செலவுக்கு மட்டும் அவ்வப்போது நான் கேட்கும் பணத்தை மறுக்காமல் கொடுத்து விடுவார்.

எங்கள் ஒரே மகன் 12-ம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய படிப்புச் செலவுக்கான பணத்தையும் என்னிடம் தந்துவிடுவார். நான் செலவு செய்துவிட்டு அவருக்குக் கணக்குக் கொடுத்துவிடுவேன். மற்றபடி, அவர் எவ்வளவு சம்பாதிக் கிறார், எவ்வளவு லாபம், எவ்வளவு சேமிப்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

அவர் நிறைய பேருக்குக் கடன் கொடுப்பதும், அவ்வப்போது சிலரிடம் பல லட்சம் கடனாக வாங்கி பிசினஸில் போடுவதும் எனக்கு ஓரளவு தெரியுமே தவிர, மற்றபடி அவருடைய கணக்கு வழக்கு களை எனக்குச் சொல்ல மாட்டார்.

சில மாதங்களுக்கு முன் பிசினஸ் விஷயமாக அவர் வெளியூர் சென்றபோது விபத்து ஒன்றில் சிக்கி இறந்துவிட்டார். பண விஷயங்களையும் நிர்வாக விஷயங்களையும் என்னிடம் சொல்ல மாட்டாரே தவிர, குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். திடீரென அவர் இல்லாமல்போனதும் நாங்கள் தவித்துப் போனோம்.

சிலர் அவரிடம் தாங்கள் கடன் வாங்கியதாகச் சொல்லி பணத்தை திரும்பக் கொடுத்தார்கள். நான்கு பேரிடமிருந்து ரூ.2 லட்சம் வரை கிடைத்தது. எதேச்சையாக அவர் குறித்து வைத்த டைரி ஒன்று கிடைத்தது. அதில் இவர்கள் நான்கு பேர் அல்லாமல் இன்னும் மூன்று பேருக்கு ரூ.2 லட்சம் வரை கடன் கொடுத்ததை அவர் குறிப் பிட்டிருந்தார். அவர்களிடம் கேட்ட போது திரும்பக் கொடுத்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள்.

அவருடைய மேசை லாக்கரில் இருந்து மூன்று எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தோம். அந்த பாலிசிகள் மூலம் ரூ.5 லட்சம் கிடைத்தது. இன்னும் அவர் யாருக்குக் கடன் கொடுத்துள்ளார், எங்கே குறித்து வைத்துள்ளார், என்னென்ன முதலீடு களைச் செய்துள்ளார் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி, வந்தவரைக்கும் வரட்டும், போனது போகட்டும் என விட்டு விட்டோம். ஆனால், கடந்த மாதம் புதுச் சிக்கல் ஒன்று வந்து நிம்மதியைக் கெடுத்துவிட்டது.

என் கணவருடன் பிசினஸ் செய்தவர் என வெளியூரைச் சேர்ந்த ஹோல்சேல் கடைக்காரர் ஒருவர் வந்தார். என் கணவர் அவரிடம் பிசினஸ் செய்ய பொருள்கள் வாங்கியதில் ரூ.8 லட்சம் தர வேண்டும் எனச் சொல்லி பணத்தைத் திரும்பக் கேட்டார். அவர் ரூ.8 லட்சத்துக்கு பொருள்கள் கொடுத்ததற்கான ஆதாரமாக சில பில்களை மட்டும் காட்டினார். வேறு ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார்.

என் கணவருடன் பிசினஸ் செய்த சிலரிடம் விசாரித்தபோது, அது உண்மைதான். வந்தவர் பெரிய ஹோல்சேல் ஷாப் நடத்துபவர் என்றும், அவரிடம் என் கணவர் பிசினஸ் பர்ச்சேஸ் செய்துவிட்டு பிறகு, பணம் கொடுப்பது வழக்கம் என்றும் சொல்கிறார்கள்.

கடனைத் திரும்பத் தந்ததில் ரூ.2 லட்சம், இன்ஷூரன்ஸ் பணம் ரூ.5 லட்சம், என்னிடம் உள்ள நகை 10 சவரன் தவிர வேறு சொத்துகள் எதுவும் இல்லை. வாடகை வீட்டில்தான் இருக் கிறேன். என் கணவர் மறைவுக்குப் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.20,000 சம்பளத்தில் வேலைக்குச் சென்றுதான் குடும்பச் செலவு களைச் செய்து வருகிறேன். நான் இந்தச் சிக்கலை எப்படிச் சமாளித்து மீள்வது..?”

கணவர் திடீர் மரணம்... வரவு செலவில் மர்மம்... கடன் சிக்கலில் நான்..! பிரச்னைக்கு என்ன தீர்வு..?

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“பொதுவாக, பல குடும்பங்களில் முக்கியமான விஷயங்களைக்கூட கலந்து பேசிக்கொள்வது இல்லை. தான் நினைப்பதும் செய்வதும் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் ஈகோவும்தான் இதற்குக் காரணம். இதுபோன்ற பழக்கம் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும். முக்கியமாக, நிதி நிர்வாகம் தொடர்பான விஷயங்களைக் குடும்பத்தினர் அனைவரும் பகிர்ந்துகொள்ள வில்லை எனில், பொருளாதார ரீதியாக இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் தங்கள் வாழ்க்கையில் கடைப் பிடிப்பதில்லை. உங்கள் கணவரும் நீங்களும்கூட நிதி நிர்வாகம் தொடர்பாகக் கலந்து பேசாத காரணத்தால்தான் உங்களுக்கு இப்போது பிரச்னை வந்திருக்கிறது.

துணைவர் செய்யும் வேலை, பிசினஸ் விஷயங்களை முழுமை யாகப் புரிந்துகொள்ளா விட்டாலும், அடிப்படையான வரவு, செலவு விவரங்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டி யது மிக அவசியம். உங்கள் குடும்ப நலனுக்காக உங்கள் கணவர் எடுத்து வைத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிகளையே நீங்கள் தேடித்தான் எடுத்திருக் கிறீர்கள். அந்த டாக்குமென்டுகள் உங்கள் கண்ணில் படாமல் போயிருந்தால், உங்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைக்காமல் போயிருக்குமே! அதேபோல, உங்கள் கணவர் கடன் கொடுத்த வர்களில் சிலர் மனசாட்சியுடன் நடந்துகொண்டார்கள். சிலர் பணம் வாங்கியிருந்தாலும் அதைத் தராமல் இருந்துவிடு வார்களே! 

இப்போது உங்கள் கணவர் செய்த வரவு செலவுகள் எதுவுமே தெரியாத நிலையில், உங்கள் கணவர் செய்த பிசினஸ் தொடர்பான நிலுவைத் தொகையைக் கேட்டு யாரும் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க இயலாது. நீங்கள் விசாரித்த வகையில் உங்கள் கணவர் நிலுவைத் தொகை வைத்திருந்தது உண்மைதான் என நீங்கள் நன்றாக தெரிந்துகொள்ளும் பட்சத்தில் மனசாட்சிப்படி கடனைத் திரும்பத் தர நீங்கள் முடிவு செய்யலாம். தற்போதுள்ள குடும்ப சூழ்நிலையில் கையில் உள்ள ரூ.7 லட்சத்தையும் கடனை அடைத்து விட்டால் உங்கள் மகனைப் படிக்க வைப்பதில் சிக்கல் ஆகிவிடும்.

உங்கள் கணவர் ஹோல்சேல் பர்ச்சேஸ் செய்திருந்தால், சில்லறை வியாபாரி களுக்குப் பொருள்களை டெலிவரி செய்திருப்பார். அவ்வாறு யார் யாரிடம் பொருள்களைத் தந்தார், அவர்களிட மிருந்து எவ்வளவு பணம் வந்தது, இன்னும் எவ்வளவு வர வேண்டும் என்பதையும் உங்கள் கணவருடன் பிசினஸ் செய்தவர் கள் மூலம் கண்டுபிடித்து வசூல் செய்ய முயற்சி எடுங்கள். அவ்வாறு கிடைக்கும் தொகையைக் கொண்டு பணத்தைத் திரும்பத் தருவதாக ஹோல்சேல் ஷாப் ஓனரிடம் சொல்லுங்கள். உங்கள் சூழ்நிலையை அவர் நிச்சயம் புரிந்து கொண்டு நெருக்கடி தரமாட்டார் என நம்பலாம்.

நான்கு, ஐந்து ஆண்டுகளில் உங்கள் மகன் தலையெடுக்க ஆரம்பித்த பின், உங்கள் பொருளாதாரச் சிக்கல் தீர்ந்துவிடும். இன்றைய கொரோனா பேரிடர் காலத்தில் உங்கள் நிலையைப் போன்றுதான் நிறைய பேருக்கு உள்ளது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனியாவது நிதி சார்ந்த விஷயங்களை உங்கள் மகனோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சேமிப்பு, முதலீடு, இன்ஷூரன்ஸ், கடன் விவரங்களை உரிய ஆவணங்களுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியம் என அனைவரும் உணர வேண்டும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

கணவர் திடீர் மரணம்... வரவு செலவில் மர்மம்... கடன் சிக்கலில் நான்..! பிரச்னைக்கு என்ன தீர்வு..?

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. நிதி நிர்வாகத்தில் குடும்பத்தினரிடம் வெளிப்படைத்தன்மை தேவை.

2. துணைவர் செய்யும் பிசினஸ் தொடர்பான வரவு செலவுகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

3. தேவைக்கேற்ப ஹெல்த், டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசிகளை எடுக்க வேண்டும்.

4. முக்கியமான நிதி விஷயங்களை ஆவணப் படுத்தி குடும்பத்தினருக்குத் தெரியும் வகையில் பாதுகாக்க வேண்டும்.

5. நிதி ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு