Published:Updated:

கடன் சிக்கலில் தள்ளிய பிசினஸ் ஆசை..! மீண்டு வர யோசனைகள்...

கடன் சிக்கல்...
பிரீமியம் ஸ்டோரி
கடன் சிக்கல்...

S O L U T I O N

கடன் சிக்கலில் தள்ளிய பிசினஸ் ஆசை..! மீண்டு வர யோசனைகள்...

S O L U T I O N

Published:Updated:
கடன் சிக்கல்...
பிரீமியம் ஸ்டோரி
கடன் சிக்கல்...

பணியில் இருப்பவர்களுக்கு பிசினஸ் ஆசை வரக் கூடாது எனச் சொல்ல முடியாது. ஆனால், சிக்கல் எதுவும் இல்லாமல் பார்த்துவரும் பணியை விட்டுவிட்டு, பிசினஸில் இறங்க முடிவு செய்யும் முன் எல்லா வகையிலும் உள்ள எதிர்மறையான அம்சங்களைப் பட்டியலிட்டு சர்வ ஜாக்கிரதையாக இறங்க வேண்டும். அதுவும் பார்ட்னர்ஷிப் முறையில் பிசினஸ் எனில், அதுகுறித்த அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிச் செய்ய வேண்டும். நண்பர்தானே, உறவினர்தானே என்று எண்ணி ஏனோதானோவென்று இருந்துவிட்டால், இக்கட்டான சூழ்நிலை வரும்போது பலவிதமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி (பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது) தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை விவரிக்கிறார்.

கடன் சிக்கலில் தள்ளிய பிசினஸ் ஆசை..! மீண்டு வர யோசனைகள்...

“நான் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தேன். என் வயது 53. என் நண்பர் ஒருவர் ஆடை உற்பத்தி செய்யும் பிசினஸை சின்னதாகச் செய்துவந்தார். மாதம் இரண்டு லட்சம் வரை சம்பாதித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, என்னையும் பிசினஸில் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்வதாகச் சொன்னார்.

நானும் எத்தனை நாளைக்குத்தான் ரூ.30,000 சம்பளத்துக்கு கைகட்டி வேலை பார்ப்பது என நினைத்து வேலையை விட்டுவிட்டு, நண்பருடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டேன்.

எனக்குக் கிடைத்த செட்டில் மென்ட் தொகை, பி.எஃப் என மொத்தம் ரூ.10 லட்சம் ரூபாயை என் நண்பரிடம் கொடுத்தேன். மொத்த முதலீடு ரூ.30 லட்சம் என்றும், இன்னும் ரூ.5 லட்சம் தந்தால் இருவருக்கும் சரிசமமான முதலீடாக இருக்கும் என்றார் நண்பர்.

நான் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து, ரூ.5 லட்சம் கொடுத்தேன். ஆரம்பத்தில் பிசினஸ் நன்றாகத்தான் போனது. எனக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாகக் கிடைத்தது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் கொரோனா ஊரடங்கு தொடங்கவே வருமானம் நின்றுபோனது. பிறகு ஊரடங்கு முடிந்து தொழிலை மீண்டும் தொடங்கினாலும், வருமானம் பாதியாகக் குறைந்துபோனது. தட்டுத்தடுமாறி தொழிலை நடத்திவந்தோம்.

அடுத்த சோதனையாக கொரோனா இரண்டாம் அலை வர, தொழில் முற்றிலும் பாதிப்படைந்தது. வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டோம். வர வேண்டிய தொகைகளும் வராமல் போய்விட்டது.

விரைவில் தொழிலை மீட்டெடுத்து விடலாம் என நானும் என் நண்பரும் புதிய சில திட்டங்களைச் செயல்படுத்த யோசித்து வைத்திருந்தோம். ஆனால், யாரும் எதிர்பாரத நிகழ்வு நடந்து எல்லா வற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. அண்மையில் என் நண்பர் திடீரென மாரடைப்பில் இறந்துவிட்டார். தொழில் அவருடைய மகன்களிடம் சென்றுவிட்டது.

‘உங்களை வேலைக்குச் சேர்த்ததாகத் தான் அப்பா சொன்னார். நீங்கள் முதலீடு போட்டதாகச் சொல்ல வில்லையே’ என அவர்கள் சொல்ல எனக்குத் தலைசுற்றிப் போனது. நானும் என் நண்பரும் ஒப்பந்தம் எதுவும் போட்டுக் கொள்ளவில்லை என்பதால் நான் பணம் கொடுத்த விவரத்தை எப்படி அவர்களுக்குச் சொல்லி புரிவைப்பது எனத் தெரியவில்லை.

தொழில் மூலமான வருமானத்தை நம்பி என் வீட்டை விரிவுப்படுத்த ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றில் 22% வட்டியில் ரூ.5 லட்சம் வாங்கியுள்ளேன். இத்துடன் நகைக்கடன் ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் கடன் நெருக்கடியுடன், குடும்பச் செலவைச் சமாளிக்க வருமான மும் இல்லாமல் கஷ்டப் படுகிறேன். எனக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றைத் தவிர, வேறு சொத்துகள் இல்லை. என் பிரச்னையிலிருந்து விடுபடும் வழி என்ன..?”

கடன் சிக்கலில் தள்ளிய பிசினஸ் ஆசை..! மீண்டு வர யோசனைகள்...

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“நீங்கள் வேலையை விட்டு விட்டு பிசினஸில் இறங்கியதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், செட்டில்மென்ட் தொகை போதாமல் கூடுதலாக கடன் வாங்கியும் பிசினஸில் முதலீடு செய்யும் அளவுக்கு நீங்கள் போனபோது, மிக மிக கவனமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

அவர் உங்கள் நண்பர்தான் என்றாலும், பிசினஸ் என வரும் போது அதற்கான நடைமுறை களைப் பின்பற்றியிருக்க வேண்டு மல்லவா? பார்ட்னர்ஷிப் பிசினஸ் என்கிறபோது அடிப்படையாகச் செய்ய வேண்டிய சில விஷயங் களையாவது நீங்கள் செய்திருக்க வேண்டும்.

பார்ட்னர்ஷிப் எனில், எந்த வகையான பார்ட்னர்ஷிப், முதலீடு மட்டும் போடுகிறீர்களா, நிறுவனத்தில் பொறுப்பும் எடுத்துக்கொள்ளப் போகிறீர் களா, மொத்தத் தொழில் முதலீட்டில் உங்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம், லாபத்தில் உங்களுக்குக் கிடைப்பது எவ்வளவு என்பது உள்ளிட்ட எந்தக் கேள்விகளுக்கும் உங்களிடம் சரியான பதில் இல்லை. நீங்களும் உங்கள் நண்பரும் எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் போடாமல் இருந்தது மிகத் தவறு.

பங்குதாரராக நீங்கள் ரூ.15 லட்சத்தைத் தொழிலில் முதலீடு செய்துள்ளதாகச் சொன்னாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லாமல் இருப்பது உங்களுக்கு பாதகமான விஷயம்தான். ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் வாய்மொழியாக மட்டுமே பேசி யிருந்தால் அதனால் பயனில்லை. நீங்கள் உங்கள் நண்பருக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்த தாகவே அர்த்தமாகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் பணம் தந்ததற்கே ஆதாரம் இல்லை என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.

முதலீட்டுத் தொகையை சிறுகச் சிறுக நீங்கள் பணமாகக் கொடுக்காமல் செக் மூலமாகவோ, ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ தந்திருந்தால் உங்களுக்குச் சாதகமாக இருந்திருக்கும். முடிந்தவரை உங்கள் நண்பருக்கு ரூ.15 லட்சம் கொடுத்ததை நிரூபணம் செய்ய முடியுமா எனப் பாருங்கள். ஆனால், இது உடனே நடக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லை.

நடந்த தவறுகளை நினைத்துக் கலங்கிக்கொண்டிருக்காமல் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது, முதலில் நீங்கள் ஒரு வேலையைத் தேடிக் கொள்வதுதான். நீங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்திலோ, வேறு நிறுவனங்களிலோ முயற்சி செய்து வேலையை அமைத்துக்கொள்ளுங்கள்.

அடமானம் வைத்துள்ள நகையின் மதிப்பைக் கணக்கிட்டு, உறவினர் நண்பர்களிடம் கைமாத்துக் கடன் பெற்று மீட்டெடுத்து, கடன் தொகைக்கேற்ப நகையை விற்று, முதலில் நகைக் கடனை அடையுங்கள். மீதமுள்ள நகைகளைப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து வீட்டு விரிவாக்கத்துக்கு வாங்கிய ரூ.5 லட்சம் கடனை வங்கி அல்லது வீட்டுவசதி நிறுவனத்துக்கு மாற்றுங்கள். வங்கிக் கடன் எனில், அதற்கு 8% வட்டி என்றாலும் 10 ஆண்டுகளில் கடன் செலுத்தி முடிக்கும் வகையில் மாற்றி அமைத்தால் மாதம் சுமார் ரூ.6,000-தான் இ.எம்.ஐ செலுத்த வேண்டும்.

வங்கிகளில் கடனை மாற்றுவதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் இருந்து, வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றும்பட்சத்தில் 15% வட்டி என்றாலும், 10 ஆண்டுகள் செலுத்தும் வகையில் எனில், மாதம் சுமார் 8,000 இ.எம்.ஐ செலுத்த வேண்டி யிருக்கும். சம்பளத்திலிருந்து இ.எம்.ஐ செலுத்தி விட்டு, மீதமிருக்கும் தொகையில் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வாருங்கள்.

ஒருவேளை, உங்கள் நண்பரின் மகன்கள் நீங்கள் உங்கள் நண்பருக்குப் பணம் கொடுத்த விஷயம் உண்மைதான் என்பதைத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் உருவானால் உங்களுக்கான சிக்கல் மிகச் சுலபமாகத் தீர்ந்துவிடும். அதை உங்களால் செய்ய முடிந்தால், அதுவே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. ஓய்வுக்காலத்துக்கான மொத்தப் பணத்தையும் ரிஸ்க்கான முதலீடுகளில் போடக் கூடாது.

2. சரியான ஆவணப்படுத்தல் இல்லாமல் வாய்மொழியாகப் பேசி பார்ட்னர் ஆவது கூடாது.

3. அத்தியாவசியம் இல்லாத செலவுகளுக்கு அதிக வட்டிக்குக் கடன் வாங்கக் கூடாது.

4. கூடுமானவரை கொடுக்கல் வாங்கலை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

5. தெளிவான திட்டம் இல்லாமல் மாற்று யோசனை களைச் செயல்படுத்தக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism