Published:Updated:

கண்ணை மறைத்த பாசம்... கடன் சிக்கலில் தவிக்கவிட்ட செல்ல மகள்..! கரைசேரும் வழி எது?

மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -27

கண்ணை மறைத்த பாசம்... கடன் சிக்கலில் தவிக்கவிட்ட செல்ல மகள்..! கரைசேரும் வழி எது?

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -27

Published:Updated:
மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

அன்பும் பாசமும்தான் குடும்ப அமைப்பின் ஆணிவேர் என்பார்கள். ஆனால், பாசத்துக்கும், பண ரீதியான பிராக்டிக்கல் நடைமுறைக்கும் வித்தியாசம் தெரியாமல் சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்வதைப் பார்க்கலாம். பொள்ளாச்சியைச் சேர்ந்த துரை ராமசுப்புவின் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) நிலையும் அப்படித்தான் ஆகிவிட்டது. நடந்தது என்ன..? அவரே சொல்கிறார்.

“எனக்கு வயது 53. மளிகை வியாபாரம் செய்து வருகிறேன். என் மனைவிக்கு கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், கடைக்கு உறவினர் ஒருவரை அமர்த்தி கவனித்து வருகிறேன். தற்போதைய நிலையில் கடை மூலம் ஆட்கள் சம்பளம், செலவுகள் போக மாதம் சுமார் ரூ.45,000 வருமானம் கிடைக்கிறது.

கண்ணை மறைத்த பாசம்... கடன் சிக்கலில் தவிக்கவிட்ட செல்ல மகள்..! கரைசேரும் வழி எது?

எனக்கு ஒரே மகள். என் மகள் என்றால் எனக்கு உயிர். அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன். அவளுக்கு திருமணம் ஆனதும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என் சேமிப்பு ரூ.8 லட்சத்தைப் போட்டு அரை கிரவுண்ட் மனையை அவள் பெயரில் வாங்கிப் போட்டுள்ளேன். அவள் ஆசைப்பட்டதால் இன்ஜினீயரிங் படிக்க வைத்தேன்.

கல்விக் கடன் வாங்க முயற்சி செய்து சில காரணங்களால் கிடைக்க வில்லை. வெளியில் சுலபமாகக் கிடைத்ததால் 24% வட்டிக்கு 10 லட்சம் கடன் வாங்கித்தான் படிப்புச் செலவுகளைச் செய்தேன். என் வருமானத்திலிருந்து முறையாக வட்டி மட்டும் செலுத்தி வருகிறேன். அசல் தொகை ரூ.10 லட்சம் கடன் அப்படியே உள்ளது.

படித்து முடித்ததும் பெங்களூரில் பெரிய நிறுவனம் ஒன்றில் என் மகளுக்கு வேலையும் கிடைத்து விட்டது. அவள் வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், நான் நினைத்தபடி நடக்கவில்லை. நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வு நடந்து விட்டது. என் மகள் தன்னுடன் படித்த ஒருவனைக் காதலித்து வந்துள்ளாள். வேலை கிடைத்த இரண்டே மாதங்களில் எங்களிடம் சொல்லாமல் அவனைத் திருமணம் செய்துகொண்டாள். நான் முதலில் கோபப்பட்டாலும் என் மகளின் மேல் உள்ள பாசத்தால் அவர்களை ஏற்றுக்கொண்டேன்.

அவள் படிப்புக்காக நான் வாங்கிய கடனை அடைக்க அவள் ஒப்புக் கொண்டாள். ஆனால், அவளுடைய மாமியார் வீட்டினர் மறுத்துவிட்டார்கள். சரி, அவளுக்காக வாங்கிய வீட்டு மனையை விற்றுக் கடனை அடைத்து விடலாம் என்றாலும், என் மகள் கையொப்பம் இடக்கூடாது என அவள் வீட்டினர் சொல்லிவிட்டார்கள். என் மகள் பெயரில் மனை இருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

என் பெயரில் மனையைப் பதிவு செய்யச் சொல்லி பலர் அப்போதே சொன்னார்கள். நான் என் மகளுக்கு பரிசாக இருக்கட்டும் என நினைத்துதான் அவள் பெயரில் பதிவு செய்தேன்.

இப்போது ரூ.10 லட்சம் கடன் எனக்குச் சுமையாக உள்ளது. மன உளைச்சலில் தவித்து வருகிறேன். நான் குடியிருக்கும் வீடு, கடை தவிர எனக்கு வேறு சொத்துகள் எதுவும் இல்லை. வீட்டை விற்றுக் கடனை அடைத்துவிடலாம் என்றுகூட மனதில் தோன்றுகிறது. ஆனால், உடல்நிலை சரியில்லாத மனைவியை வைத்துக்கொண்டு வீட்டை விற்க தயக்கமாக இருக்கிறது.

கடையை பொருள்களுடன் சேர்த்து ரூ.13 லட்சத்துக்கு நான் பொறுப்புக்கு அமர்த்தியுள்ள உறவினரே கேட்கிறார். உண்மையில் கடையில் உள்ள பொருள்கள் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும். கடை 200 சதுர அடி பழைய கட்டடம் என்பதால் ரூ.8 லட்சம் போகும். குறைந்த விலைக்குக் கேட்கிறார். போனல் போகட்டும் எனக் கொடுக்க முடிவு செய்தாலும், வருமானத்துக்கு என்ன செய்வது எனக் குழப்பமாக உள்ளது. இந்த நிர்க்கதியான நிலையில் நான் என்ன செய்தால் என் சிக்கல் தீரும்?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“குழந்தைகளின் மீது நாம் வைக்கும் அக்கறையையும் பாசத்தையும் காட்ட பெற்றோர்கள் வீடு, மனைகளை குழந்தைகள் பெயரில் வாங்குவது, இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பது எனப் பல்வேறு நிதித் தவறுகளைச் செய்கிறார்கள். குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்து, கல்வி அளித்து, திருமணம் செய்து வைப்பது சரிதான். ஆனால், மொத்த சேமிப்பையும் போட்டு சொத்தை அவர்கள் பெயரில் வாங்குவது பாசத்தைக் காட்டுவது ஆகாது. சூழ்நிலை சிக்கல்களால் நெருக்கடியான நிலையையே அது உருவாக்கும். மிடில் கிளாஸ் மக்கள் கண்டிப்பாக இந்த தவற்றைச் செய்யக் கூடாது.

நீங்கள் உங்கள் மகளின் படிப்புக்காகக் கடன் வாங்கியது தவறில்லை. அது உங்கள் பொறுப்பு கடமையாகக் கருதலாம். ஆனால், உங்கள் மொத்த சேமிப்பையும் போட்டு உங்கள் மகள் பெயரில் மனை வாங்கியது தவறு. பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்குத்தானே சேரும்; பிறகு ஏன் அவர்களின் பெயரில் வாங்க வேண்டும் என யோசித்துச் செயல்பட்டிருந்தால் உங்கள் மகளின் பெயரில் மனை வாங்கியிருக்க மாட்டீர்கள்.

நிதி நிர்வாகத்தில் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பெயரில் மனை இருந்திருந்தால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்க முடியும்.

உங்கள் மகளின் படிப்புக்கு கல்விக் கடன் ஏன் கிடைக்க வில்லை என நீங்கள் தெளிவு படுத்தாவிட்டாலும், சரியான முயற்சியை நீங்கள் எடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே கல்விக் கடன் வாங்க முடியாமல் போனால்கூட குறைந்தபட்ச வட்டியில் கடன் பெற முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். நிறைய பேர் செய்யும் தவறு, தேவையான ஆவணங் களைத் திரட்டி வங்கிகளின் நம்பிக்கையைப் பெற்று கடன் வாங்குவதற்கான முயற்சி எடுக்காததுதான். சுலபமாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காக அதிக வட்டியில் கடன் வாங்கி யுள்ளீர்கள்.

சரி, இனி என்ன செய்யலாம் எனப் பார்ப்போம். உங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள கடையைத் தற்போதைக்கு விற்பனை செய்ய வேண்டாம். கடை மூலமான வருமானமே உங்களுக்கு இப்போது கைகொடுப்பதாக இருக்கும். நீங்கள் கடன் பெற்றுள்ள நபரை அணுகி உங்கள் சூழ்நிலையை விளக்குங்கள். வட்டியை 12% அளவுக்குக் குறைத்துக் கேளுங்கள். நீங்கள் இதுவரை சரியாக வட்டிப் பணத்தைக் கொடுத்து வருவதால் உங்கள் விளக்கத்தை அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.

12% வட்டி அடிப்படையில் இ.எம்.ஐ தொகையாக மாதம் ரூ.22,250 செலுத்தி வந்தால் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்தை செலுத்தி முடித்துவிடலாம்.

கடை வருமானத்திலிருந்து கடன் செலுத்தி, உங்கள் குடும்பச் செலவுகள் போக மாதம் ரூ.4000 - 5,000 வரை முதலீடு செய்யத் திட்டமிடுங்கள். உங்களால் இனி தொழில் நடத்த முடியாது என்ற சூழல் வரும்போது கடையை அப்போதைய மதிப்பில் விற்பனை செய்துகொள்ளலாம்.

இந்தத் தொகையுடன், முதலீடு செய்து வந்த தொகையையும் வைத்து ஓய்வுக்காலத்தை சமாளிக்கலாம். எனவே, நடந்ததை எண்ணி மனம் வருந்தாமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நிச்சயமாக விரைவில் கடன் சிக்கலில் இருந்து மீண்டு வந்துவிடலாம்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. குழந்தைகள் பெயரில் சொத்து வாங்கக் கூடாது.

2. குறைந்தபட்ச வட்டியில் கடன் பெற முயற்சி எடுக்க வேண்டும்.

3. ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பை மற்ற காரியங் களுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

4. பண நிர்வாகத்தில் உணர்வுரீதியான முடிவுகளை எடுக்கக் கூடாது.

5. வருமானம் வரும்போதே இலக்குகளை நிர்ணயம் செய்து முதலீடு செய்து வர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism