Published:Updated:

பண்ணை நிலம்... பகட்டு வாழ்க்கை... வறட்டு கெளரவம்! கடன் சிக்கலில் தள்ளிய பேராசை...

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 9

பிரீமியம் ஸ்டோரி

எப்போதுமே நமக்காக நாம் வாழ வேண்டும். அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து காப்பியடித்து வாழ முற்படும்போது வேண்டாத சிக்கலில் மாட்டிக்கொண்டு நிம்மதியை இழக்க நேரிடும். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நித்யா குருநாதனின் கதையைக் கேட்டால் உங்களுக்கே புரியும்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

“என் கணவர் அரசுப் பணியில் உள்ளார். இன்னும் 16 வருடங்கள் சர்வீஸ் உள்ளது. இரண்டு குழந்தைகள். வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, கடனைச் செலுத்தியும் முடித்து விட்டோம்.

வங்கியில் வாங்கிய நகைக்கடன் ரூ.2 லட்சம் தவிர, வேறு கடன் எதுவும் இல்லாமல் இருந்தது. கணவரின் ரூ.45,000 சம்பளத்தில் குழந்தைகள் படிப்புச் செலவு, குடும்பச் செலவுகள் என நிம்மதியாகப் போய்கொண்டிருந்த வாழ்க்கையில் இப்போது குழப்பம் வந்து சேர்ந்துள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன் என் கணவரின் தம்பி திண்டிவனம் அருகில் பண்ணை நிலம் பார்க்கச் செல்வதாக அழைத்தார். நாங்களும் பிக்னிக் போல இருக்கட்டுமே என காரில் சென்றோம். சென்று வந்ததும் ‘நீங்களும் வாங்கலாமே... பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு உதவும்’ என ஆசையை விதைத்துவிட்டுப் போனார் என் கணவரின் தம்பி.

‘உங்கள் தம்பி பிசினஸில் நிறைய சம்பாதிக்கிறார். அவர் சமாளிக்க முடியும். நாம் மாதச் சம்பளத்தில் வாழ்கிறோம். நிலம் வேண்டாம்’ என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் என் கணவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவ்வப்போது விடுமுறை நாள்களில் பண்ணைக்கு காரில் போய் ஜாலியாக பொழுதைக் கழித்துவிட்டு வரும் நண்பர்களின் தூண்டுதல் வேறு சேர்ந்துகொள்ள பிடிவாதமாக வாங்கினார்.

தனியார் வங்கியொன்றில் ரூ.22 லட்சம் கடன் வாங்கி நிலத்தை வாங்கினார். ஆனால், அடுத்த இரண்டே மாதங்களில் செலவுகளைச் சமாளிக்க பணம் இல்லாமல் திண்டாடிப் போனோம். மாதம் ரூ.28,000 வரை இ.எம்.ஐ செலுத்தப் போய்விடுவதால், குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தவே சிரமப்பட்டுக் கொண்டிருக் கிறேன்.

சமீபத்தில்தான் ஒரு விஷயம் என் காதுக்கு வந்தது. ஆள்களைச் சேர்த்து விடுவதற்கு ஏற்ப நிலம் வாங்குவதில் சலுகைகள் எனப் பண்ணை நில ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆஃபர் அறிவித்து உள்ளதால், எங்களைப்போல இன்னும் இரண்டு, மூன்று பேரை இழுத்துவிட்டு, தான் வாங்கிய நிலத்துக்கு சலுகையைப் பெற்றிருக்கிறார் என் கணவரின் தம்பி.

இதை தாமதமாகத் தெரிந்துகொண்ட என் கணவர், உறவு முறிந்துவிடும் என நினைத்து எதையும் கேட்டுக்கொள்ள வில்லை. எங்களைப்போல சமாளிக்க முடியாமல் எங்களோடு நிலம் வாங்கியவர்கள் கொஞ்சம் விலையைக் குறைத்து என் கணவரின் தம்பியிடமே நிலத்தை கைமாற்றி விட்டுவிட்டார்கள். இதில் ரூ.2 லட்சம் வரை நஷ்டப் பட்டாலும் பிரச்னையிலிருந்து மீண்டுவிட்டார்கள். ஆனால், என் கணவர் கெளரவம் பார்த்துக் கொண்டு குழப்பத்தில் இருக்கிறார். குடியிருக்கும் வீட்டை விற்றுவிடலாமா எனத் தவறான முடிவுக்கு வழிவகுக்கும் வகையில் யோசிக்கிறார். என்ன செய்தால் இந்த பிரச்னையிலிருந்து நாங்கள் வெளிவர முடியும்?”

கடன்
கடன்

“புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதை தான் உங்களுடையதும். வாழ்க்கை யில் பெரிய இடத்தைப் பிடிக்க ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அது உங்கள் தகுதிக்கு உட்பட்ட ஆசையாக இருந்தால் சிக்கல் என்பது இருக்கவே இருக்காது.

உங்கள் ஆசையும் முயற்சியும் இருக்கும் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது. வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல சூழலைக் கெடுத்துவிடக் கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம், சொத்து வாங்கிக் கொடுப்பதில் ஒருவர் ஆர்வம் காட்டுகிறார் என்றால், உண்மையான அக்கறையா, இல்லை ஆதாயத்துக்காகவா என்ற கோணத்தில் யோசிக்க வேண்டும். அவர் ஆதாயம் பெறுவதற்காக உங்களுடைய ஆசையைத் தூண்டியுள்ளார்.

ஒரு சொத்து வாங்கி இ.எம்.ஐ செலுத்தும் நிலையில் மீதமாகும் தொகையில் மாதச் செலவுகளை ஈடு செய்ய முடியுமா என சிம்பிளாக ஒரு பேப்பரில் எழுதி கணக்கிட்டுப் பார்த்திருந்தாலே, பண்ணை நிலம் வாங்கும் முடிவை எடுத்திருக்க மாட்டீர்கள். நீண்ட காலத்துக்குச் செலுத்தும் வகை யில் ஒரு பெரிய தொகையைக் கடனாகப் பெறும் முன் நாம் செய்ய வேண்டிய அடிப்படைக் கணக்கீட்டைத் தவறாமல் செய்தாலே தவறு செய்ய மாட்டோம்.

உங்களிடம் ரூ.20 லட்சம் பணம் இருக்கும்பட்சத்தில், ஆண்டுக்கு 6% வட்டி என்றாலும், ரூ.1.2 லட்சம் வருமானம் கிடைக்கும். இதைக்கொண்டு நீங்கள் விரும்பும் இடங்களுக்கு சுற்றுலா, பிக்னிக் சென்று வர முடியும். எனவே, ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பண்ணை நிலம் வாங்குவது தவறு.

சுலபமாகப் பணமாக்கும் சரியான முதலீட்டுத் திட்டத்தில் மிகச்சிறிய தொகையைக்கூட முதலீடு செய்ய முடியாத நீங்கள், பண்ணை நிலத்துக்காக இவ்வளவு பெரிய இ.எம்.ஐ தொகையைச் செலுத்த முடியும் என முடிவெடுத்தது எப்படி என்பதுதான் புதிராக உள்ளது.

எதிர்காலத்துக்கான சொத்து என்ற எண்ணத்தில் பண்ணை நிலம் வாங்குவதும் தவறு. பராமரிப்புச் செலவுகளையும், மாதாந்தர இ.எம்.ஐ தொகை யையும் ஈடுசெய்து அதைத் தாண்டிய வருமானத்தைத் தருமா என்று கணக்கிட்டாலே உங்களுக்குப் புரிந்துவிடும்.

பலரும் விவசாயத்தில் உள்ள ரிஸ்க்குகளை அறிந்து கொள்ளா மலேயே இறங்கி, பிறகு தோல்வி யைச் சந்திக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துவரும் விவசாயி களாலேயே லாபம் எடுக்க முடிய வில்லை என்பதே உண்மை நிலவரமாக உள்ளது. அப்படி இருக்க அரசாங்கப் பணியில் இருந்து கொண்டு நம்மால் நேரம் ஒதுக்க முடியுமா என யோசிக்க வேண்டும். பண்ணை நிலம் என்பதே மிதமிஞ்சிய பணம் வைத்திருப்பவர்களுக்கானதே தவிர, நடுத்தர வருமானக்காரர்கள் கடன் வாங்கி இதில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதியை இ.எம்.ஐ செலுத்திவிடும்போது, வழக்கமான அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் இல்லாமல் தடுமாறும் நிலைதான் உங்களுக்கு இருக்கும். வீட்டை விற்கும் முடிவை எடுக்காதீர்கள். உங்களுடன் நிலம் வாங்கியவர்கள் எடுத்த முடிவே சரியானது.

நீங்கள் உடனே அந்த நிலத்தை உங்கள் கணவரின் தம்பிக்கோ, இல்லை வேறு யாருக்கோ கைமாற்றி விட்டுவிட்டு வெளியில் வந்துவிடுவதே நல்லது. இரண்டு, மூன்று லட்சம் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை. எந்த அளவுக்கு விரைவாக காலம் கடத்தாமல் இந்த முடிவை எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நஷ்டம் அதிகமாகாமல் தவிர்க்க முடியும்.

இந்த நிகழ்வை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி எச்சரிக்கையாக இருங்கள். எப்போதுமே நடுத்தர வருமான சூழலில் வாழ்கிறவர்கள் உடனடியாகப் பணமாக்கும் முதலீடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடு செய்துவருவதே பாதுகாப்பானது.

உங்கள் முதலீடு ரியல் எஸ்டேட்டில்தான் இருக்க வேண்டும் என விரும்பினால் வீட்டு மனையை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு வாங்கிப் போடவும். ரியல் எஸ்டேட் தவிர, வேறு முதலீடுகள் பற்றியும் அறிந்து கொண்டு செயல்படுங்கள்!”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்...

1. அடுத்தவரைப் பார்த்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் எச்சரிக்கை அவசியம்.

2. வருமானம், செலவுகள், வாங்கும் கடன் குறித்த கணக்கீடு அவசியம்.

3. சொத்து வாங்கும்போது தேவைக்காகவா, ஆசைக்காகவா என்ற கேள்வி முக்கியம்.

4. நெருங்கிய உறவினர் என்றாலும் ஆதாயத்துக்காகச் செய்கிறாரா என ஆராய வேண்டும்.

5. பிரச்னையை உணர்ந்துவிட்ட பிறகு, வெளிவர வேண்டுமே தவிர, வறட்டுக் கெளரவத்துக்காக சிக்கலை அதிகப்படுத்திக்கொள்ளக் கூடாது.

பிட்ஸ்

டந்த ஜனவரி மாதத்தில் யு.பி.ஐ (UPI) மூலம் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.4.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் ரூ.4.16 லட்சம் கோடி அளவுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு