Published:Updated:

நிம்மதியைப் பறித்த கிரெடிட் கார்டுகள்... தப்பிக்க என்ன வழி..? காப்பாற்றும் வழிமுறைகள்

கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -10

நிம்மதியைப் பறித்த கிரெடிட் கார்டுகள்... தப்பிக்க என்ன வழி..? காப்பாற்றும் வழிமுறைகள்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -10

Published:Updated:
கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

டிஜிட்டல் யுகத்தில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது பலருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், நிதி ஒழுக்கம் அறவே இல்லாதவர்களை கிரெடிட் கார்டானது கடன் சுமையில் தள்ளி, தத்தளிக்க விட்டுவிடுகிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சென்னையைச் சேர்ந்த கணேஷ்ராம். அவர் தன் நிலையை நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

“நான் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். வயது 36. மாத சம்பளம் ரூ.38,000. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு வரை பெரிதாக எந்தச் சிக்கலும் இல்லாமல் என் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

அடிப்படையில் நான் கொஞ்சம் செலவாளி என்பதால், சம்பாதிக்கும் பணம் முழுவதையும் ஏதாவது ஒருவகையில் செலவு செய்துவிடுவேன். கையில் ரூ.1,000 பணம் இருந்தால் உடனே நல்ல ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவேன். ரூ.10,000 இருந்தால் மினி டூர் போய்விடுவேன். எனது இந்த செலவழிக்கும் குணத்தால் சில மாதங்கள் குடும்பச் செலவுகளைக்கூட சமாளிக்க முடியாமல் திணறியிருக்கிறேன்.

இப்படி ஒரு கஷ்டத்தில் இருந்த போதுதான், தனியார் வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு வேண்டுமா என்று கேட்டார்கள். ‘அவசரத்துக்கு உதவுமே...’ என நான் வாங்கினேன். ஒரு கார்டு என்னை அடுத்த கார்டை வாங்க வைத்தது. அடுத்தடுத்து நான்கு வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை வாங்கினேன். என்னைக் குறித்து நன்கு அறிந்த சில நண்பர்கள், ‘உன் குணாதிசயத்துக்கு கிரெடிட் கார்டு சரிபட்டு வராது. ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். பேசாமல் சரண்டர் செய்துவிடு’ என்று எச்சரித்தார்கள். ‘என்னை மீறி என்ன ஆகிவிடப்போகிறது...’ என்று நினைத்து தைரியமாக இருந்தேன்.

கடன்
கடன்

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு இடங்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். பிற்பாடு எங்கே பொருள்கள் வாங்கச் சென்றாலும் பணம் கொடுத்து வாங்கும் நிலை மாறி கார்டைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். எவ்வளவு செலவு செய்கிறோம் என கணக்கு பார்க்காமல் செலவு செய்தேன். மளிகைப் பொருள்கள், ஆன்லைனில் பர்ச்சேஸ் என எக்கசக்கமாக செலவு செய்ததால், அடுத்தடுத்த மாதங்களில் என் சம்பளத்தைவிட இரண்டு மடங்குக்கு மேல் கிரெடிட் கார்டு பில் வந்தது.

பில் கட்ட பணம் இல்லாமல் தவித்தபோது, நண்பன் ஒருவன் தந்த ஐடியாபடி இன்னொரு கிரெடிட் கார்டிலிருந்து பேடிஎம் வழியாக என் வங்கிக் கணக்குக்கு பணத்தைப் பெற்று பில் தொகையைச் செலுத்தினேன். இப்படியே ஒரு கார்டைக் கொண்டு இன்னொரு கார்டு கடனை அடைத்துவர, ஒரு கட்டத்தில் எதுவுமே செய்ய முடியாமல் திண்டாடிப் போனேன். கொரோனா வந்தபிறகு என் சம்பளம் பாதியானது. இதனால் பல மாதங்களாக பில் செலுத்தாமல் விட்டதால் வட்டிக்கு வட்டி சேர்ந்து இன்றைக்கு ரூ.6 லட்சம் வரை கடன் ஆகிவிட்டது. ‘உடனடியாக பணத்தைக் கட்டுங்கள்’ என நான்கு வங்கிகளில் இருந்தும் இப்போது நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

இத்தனைக்கும் வீட்டுக்குத் தேவையான டி.வி, ஃப்ரிஜ் என உருப்படியான பொருள்கள்கூட வாங்கவில்லை. என்ன செலவு செய்தேன் என எண்ணிப் பார்த்தால் பயனுள்ளதாக எதுவும் இல்லை. ஹோட்டல், சினிமா என இஷ்டத்துக்கு செலவு செய்திருப்பது மட்டும் தெரிகிறது.

என்னால் குடும்பச் செலவுகளைச் சமாளித்து இந்தக் கடனை அடைக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்டவே சிரமப்பட்டு வருகிறேன். தொடர்ந்து கடனைச் செலுத்தாமல்விட்டால் சிபில் ஸ்கோர் பாதித்து, எதிர்காலத்தில் அவசரத்துக்கு கடன் வாங்க முடியாத நிலை வந்துவிடும் போலிருக்கிறது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து எப்படி மீண்டு வருவது...?” என்று கேட்டிருந்த கணேஷ்ராமுக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

“நுகர்வுக் கலாசார யுகத்தில் மக்களைச் செலவு செய்ய வைக்க பலவிதமான தந்திரங்களை ஆன்லைன் வணிக நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. வங்கிகளுடன் கைகோத்து சலுகைகளையும் ஆஃபர்களையும் வாரி வழங்கி தங்கள் பொருள்களை விற்க முயற்சி செய்கின்றன. கிரெடிட் கார்டுகளைக் கொண்டு மக்களும் தங்களுக்கு தேவையான பொருள்களை ஆஃபரில் வாங்கி மகிழ்கிறார்கள்.

நிதி நிர்வாகத்தை சரியாகக் கையாளாதவர்கள் கிரெடிட் கார்டைக் கொண்டு தங்களுக்கு அவசியம் இல்லாத பொருள்களையும் ஆஃபரில் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கிக் குவித்து விடுகிறார்கள். தாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்வதே இல்லை. கிரெடிட் கார்டு பில் வந்தபிறகுதான் பதறிப் போய் தங்களின் செலவு விவரங்களைப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்களில் ஒருவராகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

கிரெடிட் கார்டு என்பது இரு முனைக் கத்தி போன்றது. லாகவமாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் பதம் பார்த்து விடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பணமாக இல்லாமல் கார்டு மூலம் செலவு செய்யும்போது நமக்கான வருமானம் என்ன என்பதையே மறந்து வரவைவிட இரண்டு, மூன்று மடங்கு தொகைக்கு செலவு செய்வதையே இயல்பாகக் கொண்டுவிடுகிறார்கள். அத்தகைய நிலையில் இருந்து செலவு செய்ததால்தான் உங்களுக்கு இந்தச் சிக்கலே வந்துள்ளது.

அடுத்ததாக பில் தொகையை சரியான தேதியில் செலுத்தாமல், குறுக்கு வழிகளைக் கையாண்டு கடன் சுமையை மேலும் மேலும் சுமத்திக்கொண்டுள்ளீர்கள்.கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏ.டி.எம் மூலம் பணம் எடுத்தால் மிக அதிக வட்டி உண்டு என்ற அடிப்படை விஷயம்கூட தெரியாமல் இன்றைக்கு பணம் எடுக்கிறார்கள். ஒரு கார்டு கடனை அடைக்க இன்னொரு கார்டை பயன்படுத்தி சமாளித்து தப்பித்துவிட முடியாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

சரி, போனது போகட்டும். காலம் கற்றுத் தந்த பாடத்தை மனதில் மறக்கமுடியாதபடி நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களால் கடனைத் திரும்பச் செலுத்தும் வாய்ப்பு இல்லை என்பதை நீங்கள் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் பணம் எடுத்த வங்கிகளின் மெயின் பிராஞ்சை அணுகி, செட்டில்மென்ட் செய்வதாகப் பேசுங்கள். 24%, 36% வட்டியெல்லாம் செலுத்தும் நிலையில் நீங்கள் இல்லை என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரியவையுங்கள். 10 - 12% வட்டியில் கணக்கிட்டு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் இ.எம்.ஐ-ஆக கடனை அடைத்து விடுவதாகச் சொல்லுங்கள்.

இப்படி செட்டில்மென்ட் செய்யும் நிலையில் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கத்தான் செய்யும். எதிர்காலத்தில் கடன் வாங்க முடியாது. ஆனால், இதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறபோது இந்த முடிவை காலம் கடத்தாமல் எடுப்பதே சரி.

நடந்த தவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நிதி நிர்வாகத்தைக் கற்றுக்கொண்டு வாழப் பழகுங்கள். நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். நிலைமை சரியாகும்வரை குடும்ப நிதி நிர்வாகத்தை உங்கள் மனைவியிடம் கொடுங்கள்.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும்போது நாம் செலவு செய்யும் தொகை எவ்வளவு என்பது குறித்த உளவியல் ரீதியான தெளிவும் பக்குவமும் மிக அவசியம். உங்களுக்கு அந்தப் பக்குவம் வரும் வரை பணமாக எடுத்து செலவு செய்வது அநாவசியச் செலவுகளைக் குறைக்க உதவும். எதிர்காலத்தில் கடன் சுமையில் சிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

* ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சிக்கலை அதிகமாக்கிவிடும்.

* மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கடன் அட்டைகளை முழுக்கத் தவிர்க்க வேண்டும்.

* ஒரு செலவை செய்யும் முன் ஏன் எதற்கு அவசியமா என நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

* வரவுக்குள் செலவை அடக்க மாதாந்தர பட்ஜெட் உதவியாக இருக்கும்.

* கடன் வாங்கும் முன்பே அதைத் திரும்பக் கட்டும் வழிகளைக் குறித்த தெளிவு இருக்க வேண்டும்.

பிட்ஸ்

ங்கிகள் மீதான புகார்களின் எண்ணிக்கை கடந்த 2019-20-ம் ஆண்டில் 3,08,630-ஆக உயர்ந்து இருக்கிறது. 2018-19-ல் 1,95,901 புகார்கள் மட்டுமே பதிவானது குறிப்பிடத் தக்கது!