Published:Updated:

வேலை to விவசாயம்... அதிரடி முடிவால் ஏற்பட்ட நஷ்டம்..! கடன் சுமையிலிருந்து விடுபட என்ன வழி..?

கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
கடன்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -14

அனுபவம் இல்லாமல் செய்யும் தொழிலில் ஜெயிப்பது மிகவும் கடினம் எனத் தொடர்ந்து இந்தப் பகுதியில் சொல்லிவருகிறோம். இதோ, மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த் என்ற இளைஞரும் அப்படிப்பட்டவராகத் தான் இருக்கிறார் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது). அவரே தன் நிலையை விவரிக்கிறார்.

கடன்
கடன்

“என்னுடைய வயது 29. நான் எங்கள் வீட்டில் ஒரே பையன். 10 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. அப்பா, கைதேர்ந்த விவசாயி. விவசாயம் மூலம் சம்பாதித்துதான் அவர் என்னை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். குடியிருக்க ரூ.15 லட்சம் செலவு செய்து வீட்டையும் கட்டினார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டார்.

அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் ரூ.55,000 சம்பளத்தில் நான் பணிக்குச் சேர்ந்திருந்தேன். அப்பாவுக்குப் பிறகு, விவசாயத்தைக் கவனிக்க ஆள் இல்லை. நிலம் தரிசாகத்தான் கிடந்தது. என்னுடன் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர் கோவைக்கு அருகே ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி பண்ணை அமைத்து ஐ.டி வேலையில் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகம் சம்பாதித்தார். ஒருமுறை நண்பர்களுடன் அவரின் பண்ணைக்குச் சென்று வந்தேன். பண்ணையில் நல்ல வருமானம் கிடைத்ததுடன் வேலை நெருக்கடி எதுவும் இல்லாமல் ஜாலியாக இருந்தார்.

அவரது பண்ணைக்குச் சென்று வந்த பிறகு, எனக்கும் அவரைப் போல செய்தால் என்ன எனத் தோன்றியது. வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வந்து தரிசாகக் கிடந்த எங்கள் நிலத்தை சரிசெய்தேன். உறவினர் சிலரின் யோசனைப்படி, 10 ஏக்கர் முழுக்க வாழையை நடவு செய்தேன். நிலத்தைச் சீர்படுத்த, வாழையை நடவு செய்ய ரூ.8 லட்சம் கடன் வாங்கினேன். இதற்குத் தெரிந்தவர்கள் சிலரிடம் ஆண்டுக்கு 22% வட்டியில் வாங்கியிருந்தேன்.

என்னுடைய கெட்ட காலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய புயலில் சிக்கி நடவு செய்திருந்த வாழை அனைத்தும் நாசமானது. பிறகு, ஒரு வருட காலத்துக்கு மீண்டும் கடன் வாங்கி வேறு சில பயிர்களை நடவு செய்தேன். ஆனாலும், அதிலிருந்து பெரிய வருமானம் எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. கடன் ரூ.12 லட்சமாக அதிகரித்ததுதான் மிச்சம்.

நிலத்தைக் குத்தைகைக்கு விட்டுவிட்டு மீண்டும் பணிக்குப் போகலாம் என்கிற யோசனை உள்ளது. கோவை, சென்னையில் இரண்டு, மூன்று நிறுவனங்களில் வேலைக்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. நான் கடந்த நான்கு மாதங்களாகக் கடனுக்கு வட்டி கட்டவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் எனக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்கிறார் என் அம்மா. திருமணத் துக்கும் கடன் வாங்கி மேலும் சுமையை ஏற்றிக்கொள்ள மனம் இடம்தரவில்லை.

இருக்கும் நிலத்தில் குறிப்பிட்ட பகுதியை விற்றுவிட்டு, கடனை அடைத்துவிடலாமா என்றும் யோசனை உள்ளது. என் சித்தப்பா நிலத்தின் ஒரு பகுதியை வாங்கிக் கொண்டு, என் கடனை அடைத்து விடுவதாகச் சொல்கிறார். பரம்பரை நிலத்தை விற்பனை செய்வதில் அம்மாவுக்கு உடன்பாடு இல்லை. அவரிடம் உள்ள நகைகள் 20 பவுனைக் கொடுத்து விற்றுவிட்டு முடிந்த அளவுக்கு கடனை அடைத்து விடச் சொல்கிறார். நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்..?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

‘‘22% வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டது தவறு. காரணம், அந்த அளவுக்கு விவசாயம் உறுதியான லாபத்தைத் தந்துவிடாது. அதனால்தான் குறைந்தபட்ச வட்டியில் தங்க நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டல் செய்பவர்கள் வேண்டுமானால் கூடுதல் லாபம் அடைய வாய்ப்பு உண்டு. உங்கள் நண்பரைப் பார்த்து நீங்களும் விவசாயம் செய்யத் தொடங்கிய தாகச் சொல்கிறீர்கள். அவர் ஆடு, மாடு வளர்ப்பு உள்ளிட்ட பல பண்ணைத் தொழில்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணையாக உருவாக்கி யிருக்கலாம்.

நீங்கள் 10 ஏக்கரிலும் வாழை மட்டுமே சாகுபடி செய்யாமல் வெவ்வேறு சாகுபடிகளைச் செய்ததால், நஷ்டத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கலாம். சரி, அடுத்து என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.

ரூ.12 லட்சம் கடனுக்காகப் பூர்வீக நிலத்தை விற்க வேண்டாம். முதலில் நீங்கள் ஒரு நல்ல வேலையில் சேருங்கள். கடன் கொடுத்தவர்களிடம் பேசி வட்டியை 9 - 10 சதவிகிதமாகக் குறைக்க முயலுங்கள். உங்கள் அம்மாவின் நகைகளை அடமானம் வைத்து ரூ.4 லட்சம் கடன் வாங்க முடியும். இதைக் கொண்டு அவசரப்படும் நபர் களிடம் வாங்கிய கடனை அடைத்துவிடவும்.

மீதமுள்ள கடன் ரூ.8 லட்சம் இருக்கும். குறைந்தபட்சம் ரூ.60,000 சம்பளம் என்றாலும் உங்கள் கடனை சுலபமாக அடைத்துவிடலாம். உங்கள் செலவுகளுக்கு ரூ.20,000 போக, 40,000 ரூபாயைக் கடன் கட்டப் பயன்படுத்தினால் குறைந்தபட்ச வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சம் கடன் தொகையை இரண்டு ஆண்டுகளில் கட்டிவிடலாம். அதுவரை வட்டியைச் செலுத்தி நகையை மீட்டுத் திரும்ப அடமானம் வைத்து வரவும். மூன்றாம் ஆண்டில் நகையை மீட்டுக்கொள்ளலாம். ஓரளவு கடனைக் கட்டிமுடித்ததும் இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு, திருமணத்தைத் திட்டமிடலாம்.

வேலை பார்த்துக்கொண்டே, விவசாயத்தில் ஈடுபடவும். ஆள்கள் வைத்து நீண்டகாலத்தில் பலன் தரும் வகையிலான பணப்பயிர்களைக் குறைவான செலவில் சாகுபடி செய்து வரவும். பொருளாதாரத்தில் நீங்கள் பலம் பெற்ற பிறகும், விவசாயத்தில் அனுபவம் பெற்ற பிறகும் வெற்றிகரமாக உங்கள் நண்பர் செய்வதுபோல ஒருங்கிணைந்த பண்ணை, மதிப்புக் கூட்டல் என நவீன உத்திகளுடன் பிற்காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு ஜெயிக்க வாழ்த்துகள்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

கடன்
கடன்

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. மிக அதிக வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்தால் லாபம் இருக்காது.

2. நண்பர் செய்துவரும் பண்ணைத் தொழில் என்ன வகையானது என முழுமையாக அறிந்துகொள்ளாதது தவறு.

3. விவசாயத்தில் அனுபவம் கொண்டவர்களை அருகில் வைத்துக்கொள்ளாமல், முழுக்க முழுக்க ஒரே பயிரை அதிகமாகக் கடன் வாங்கி நடவு செய்தது தவறு.

4. அக்கறை கொண்டவர்களிடம் ஆலோசனை செய்யாமல் அவசர அவசரமாக வேலையை விட்டது தவறு.

5. ஆர்வம் மட்டும் ஒரு தொழிலில் ஜெயிக்க உதவாது; அனுபவம் மிக முக்கியம்.