Published:Updated:

சம்பளம் ரூ.8,500 கடன் ரூ.7.22 லட்சம்... தப்பிக்கும் வழி என்ன? மீண்டு வர ஆலோசனை...

மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -16

சம்பளம் ரூ.8,500 கடன் ரூ.7.22 லட்சம்... தப்பிக்கும் வழி என்ன? மீண்டு வர ஆலோசனை...

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு -16

Published:Updated:
மாடல் படம்
பிரீமியம் ஸ்டோரி
மாடல் படம்

சராசரியான ஒரு வாழ்க்கையை நடத்து வதற்கான அடிப்படையான பண வரத்தைத் தாண்டி நம் தேவைகளைத் திட்டமிடும்போது, குடும்பச் செலவுகளுக்கும் பணம் இல்லாமல், கடனுக்கான வட்டி கட்டவும் முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும். அப்படித்தான் திருவண்ணாமலையைச் சேர்ந்த கனகராஜ் (பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது), கடனில் சிக்கி மன உளைச்சலில் தவிக்கிறார். தன்னுடைய நிலையை அவரே விளக்குகிறார்...

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

“எனக்கு வயது 53. நான் தனியார் தொழிற்சாலை ஒன்றில் டெக்னீசிய னாகப் பணிபுரிந்து வந்தேன். மாதம் ரூ.15,000 சம்பளம். குறைவான வருமானம் என்றாலும், சிக்கனமாக குடும்பச் செலவுகளைச் சமாளித்து கடனுக்கான இ.எம்.ஐ-யையும், வட்டியையும் தட்டுத் தடுமாறி செலுத்தி வந்தேன்.

கொரோனோ ஊரடங்கின்போது எனக்கு வேலை போய்விட்டது. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. முன்பு பார்த்த அதே வேலை என்றாலும்கூட, சம்பளம் ரூ.8,500 மட்டுமே. கடனைக் கட்டி முடித்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது.

2015-ம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டினேன். அப்போது வங்கியில் வீட்டுக் கடன் வாங்க முயற்சி செய்தேன். எனக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வீட்டுக் கடன் கிடைத்தது. வீட்டுக் கடன் இ.எம்.ஐ ரூ.4,000. இப்போது வீட்டுக் கடன் ரூ.1.22 லட்சமாக உள்ளது. எனக்கு வீடு கட்டி முடிக்கக் கூடுதல் பணம் தேவைப்பட்டதால் ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றில் ரூ.3 லட்சமும், என் மைத்துனரிடம் ரூ.2 லட்சமும் மாதத்துக்கு 3% வட்டி அடிப்படையில் கடனாக வாங்கினேன். மைத்துனருக்கு மாதம் ரூ.6,000 வட்டியும், ஃபைனான்ஸ் கம்பெனிக்கு ரூ.9,000 வட்டியும் செலுத்தி வந்தேன். கொரோனா காலகட்டத்தில் எனக்கு வேலை போன பிறகு, அரசாங்கம் தந்த சலுகைக் காலகட்டம் ஆறு மாதக் காலத்துக்கு வீட்டுக் கடன் இ.எம்.ஐ செலுத்தவில்லை. இப்போது தொடர்ந்து செலுத்தி வருகிறேன். கடந்த ஓராண்டாக என் மைத்துனருக்கு வட்டித் தொகை தரவில்லை. ஃபைனான்ஸ் கம்பெனிக்கு மட்டும் ரூ.9,000 படாதபாடு பட்டு செலுத்தி வருகிறேன்.

கடன் சுமையில்...
கடன் சுமையில்...

மைத்துனர் என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டதால், சிக்கல் இல்லை. ஆனால், வீட்டுக் கடன் இ.எம்.ஐ, ஃபைனான்ஸ் கம்பெனி வட்டி என மொத்தம் 13,000 ரூபாய் கடனுக்கு பண ஒதுக்க வேண்டியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாத சூழலில் குடும்பச் செலவுகளுக்காக நண்பர்கள், உறவினர் களிடம் வாங்கிய கடன் தொகை ரூ.1 லட்சம் உள்ளது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பதால், மன உளைச்சலாக உள்ளது.

எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன், செல்போன் கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக இருக்கிறான். ரூ.9,000 சம்பளம். அவனுடைய செலவுக்குப் போக ரூ.5,000 என்னிடம் கொடுப்பான். இளையவன், பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு ஓராண்டு காலமாக வேலை தேடிவருகிறான். நானும் கூடுதல் சம்பளத்தில் வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. என்னுடைய வீடு தற்போது ரூ.30 லட்சம் மதிப்புடையது. இது தவிர, வேறு சொத்துகள், நகைகள் எதுவும் இல்லை. என்னுடைய இந்தச் சிக்கல் தீர ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.”

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“முழுத் தொகையையும் சேர்த்துக்கொண்டு வீடு கட்டும் வேலையில் இறங்க வேண்டும் எனச் சொல்ல மாட்டேன். ஆனால், குறைந்தபட்சத் தொகையை யாவது சேர்த்துவிட்டு, மேற்கொண்டு கடன் வாங்கி வீடு கட்டுவதே சரியான செயல்.

அண்மையில் ஆலோசனை கேட்டு வந்திருந்த ஒருவர், தான் வீடு கட்டத் திட்டமிட்டிருப்ப தாகச் சொன்னார். தனியார் வங்கி ஒன்றில் ரூ.15 லட்சம் கேட்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். முன்கட்டப் பணி களுக்கு அவரிடம் பணம் எதுவும் இல்லை. அதற்காக பர்சனல் லோன் வாங்கப்போவதாகச் சொன்னார். மாதம் ரூ.30,000 சம்பளம் வாங்கும் அவர், வீட்டுக் கடன் இ.எம்.ஐ, பர்சனல் லோன் இ.எம்.ஐ போக மீதியுள்ள சொற்ப தொகையில் குடும்பச் செலவுகளை எப்படிச் சமாளிப்பார்..? சின்னச் சின்னதாகக் கடன் வாங்கி நெருக்கடியில் தவிக்கப்போகிறார் என்பது தெரியவே, வீடு கட்டும் திட்டத்தை இரண்டு ஆண்டு களுக்கு தள்ளிவைக்கச் சொல்லி விட்டு, வீடு கட்ட ஆகும் செலவில் 20-25 சதவிகிதம் சேர்ப்பதற்கான திட்டத்தைத் தந்தேன். 

நீங்கள் மொத்தத் தொகையை யும் கடன் வாங்கியே வீடுகட்ட நினைத்ததே உங்கள் சிக்கலுக்குக் காரணம். கொரோனா காலத்தில் வேலை இழப்பும் சேர்ந்து கொள்ளவே மிகவும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. எந்தவொரு திட்டமிடுதலையும் செய்யும்முன் எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு களையும் கருத்தில்கொள்ள வேண்டும். அடுத்து, வங்கியில் போதிய கடன் கிடைக்கவில்லை என்பதற்காக மிக அதிக வட்டி யில் கடன் வாங்கியது மிகப் பெரிய தவறு. குறைந்தபட்ச வட்டியில் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் கண்டறி யாமல் விட்டுவிட்டீர்கள்.

முதலில், ஃபைனான்ஸ் கம்பெனியில் வாங்கிய ரூ.3 லட்சத்துக்கு மாதம் ரூ.9,000 வட்டி செலுத்தும் சூழல் இப்போது இல்லை என்பதை எடுத்துச்சொல்லி, விரைவில் அசலை செட்டிமென்ட் செய்து விடுவதாகப் பேசுங்கள்.

உங்கள் சம்பளம் ரூ.8,500, உங்கள் மூத்த மகன் தரும் ரூ.5,000 என மொத்தம் ரூ13,500 மட்டுமே உங்கள் மாத வருமானம். இதில் வீட்டுக் கடன் இ.எம்.ஐ ரூ.4,000 போக, மீதித் தொகையைக் குடும்பச் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேற்கொண்டு வெளியில் கடன் வாங்குவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிடுங்கள்.

உங்களுக்கு மொத்தம் உள்ள கடன் ரூ.7.22 லட்சம். இதில் ரூ.1.22 லட்சம் வங்கி வீட்டுக் கடன் என்பதால், பிரச்னை இல்லை. நீங்கள் கடன் வாங்கிய அதே வங்கியை அணுகி மேற்கொண்டு, ரூ.6 லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா எனக் கேளுங்கள். நீங்கள் கடந்த ஆறு ஆண்டு களாக சரியான முறையில் இ.எம்.ஐ செலுத்தி வருவதாலும், உங்கள் வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.30 லட்சம் என்பதாலும் கூடுதலாக ரூ.6 லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வருமானம் ஈட்டும் வகையில் உங்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பது கடன் கிடைக்க கூடுதல் வாய்ப்பாகவே கருதலாம்.

அதிகபட்சமாக 9% வட்டி என்றாலும் 15 ஆண்டுகள் கட்டிமுடிக்கும் வகையில் கணக்கிட்டால் மொத்தமே ரூ.7,300 மட்டுமே இ.எம்.ஐ செலுத்த வேண்டி யிருக்கும். இந்த ரூ.6 லட்சத்தைக் கொண்டு அனைத்து வெளிக் கடன்களையும் அடைத்துவிடலாம். ஒருவேளை, வங்கியில் கடன் கிடைக்கவில்லை எனில், வீட்டு வசதிக் கடன் தரும் நிறுவனங்களை அணுகவும். ரூ.7.22 லட்சம் மொத்தமாகக் கடன் பெற்று வங்கி வீட்டுக் கடன் உட்பட அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடவும். இதற்கு 15% வட்டி என்றாலும், 15 ஆண்டுகளில் கடனைச் செலுத்தி முடிக்க மாதம் இ.எம்.ஐ ரூ.10,100 செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கெனவே ரூ.4,000 இ.எம்.ஐ செலுத்தி வருவதால், வங்கியில் மேற்கொண்டு கடன் வாங்கினால் ரூ3,300 மட்டுமே கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்; வீட்டு வசதி நிறுவனம் எனில், ரூ.6,100 கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் இரண்டாவது மகனை உடனடி யாகக் கிடைக்கும் வேலையில் சேரச் சொல்லுங்கள். தகுதியான வேலை அமையும் போது பிறகு மாறிக்கொள்ளலாம். அவர் மூலமாகக் குறைந்தபட்சம் ரூ.8,000 அல்லது ரூ10,000 வருமானம் கிடைக்கும் பட்சத்தில் அதிகப்படியான இ.எம்.ஐ செலுத்த சுலபமாக இருக்கும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. வரவு செலவைக் குறித்து யோசிக்காமல் கடன் வாங்கினால், மாதாந்தர குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும்.

2. அதிக வட்டியில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

3. எதிர்பாராத நிகழ்வுகளையும் கருத்தில்கொண்டே நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

4. தகுதியை நிர்ணயம் செய்துகொண்டு ஓராண்டு காலத்துக்கு வேலைக்கே போகாமல் இருக்கக் கூடாது.

5. கடன் வாங்கி வீடு கட்டத் திட்டமிட்ட மொத்தச் செலவில் 20% அளவுக்காவது கையிருப்பைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

பிட்ஸ்

ந்த நிதி ஆண்டில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த டிவிடெண்ட் ரூ.30,369 கோடி. மத்திய அரசோ ரூ.65,746 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தது!