Published:Updated:

“சித்தி பெயரில் வீடு... ஏமாற்றிய அப்பா... கடன் சிக்கலில் நான்..!” கரைசேரும் வழிமுறைகள்...

கடன் சிக்கலில்...
பிரீமியம் ஸ்டோரி
கடன் சிக்கலில்...

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு - 26

“சித்தி பெயரில் வீடு... ஏமாற்றிய அப்பா... கடன் சிக்கலில் நான்..!” கரைசேரும் வழிமுறைகள்...

S O L U T I O N - நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு - 26

Published:Updated:
கடன் சிக்கலில்...
பிரீமியம் ஸ்டோரி
கடன் சிக்கலில்...

எப்போதுமே யாருக்குப் பணம் கொடுத்தாலும் ஏன், எதற்கு, அவசியம் தரத்தான் வேண்டுமா, இதனால் ஏதாவது சிக்கல் வருமா எனப் பல கோணங்களிலும் யோசிக்க வேண்டும். அப்படி யோசிக்காமல் பணத்தைக் கொடுத்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் சிக்கல் வரும். அதுவும் சிக்கலான குடும்பச் சூழலில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். தன் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் எனத் தெரிந்திருந்தும் பணம் கொடுக்கல் வாங்கலில் அஜாக்கிர தையாக இருந்துள்ளார் திருவண்ணா மலையைச் சேர்ந்த கணேஷ் தியாகராஜ் (பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது). தன் கவனக் குறைவால் இப்போது கடன் சிக்கலில் மாட்டித் தவிக்கிறார். அவருடைய பிரச்னையை அவரே சொல்கிறார்...

“சித்தி பெயரில் வீடு... ஏமாற்றிய அப்பா... கடன் சிக்கலில் நான்..!” கரைசேரும் வழிமுறைகள்...

“நான் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். என் வயது 39. மாதம் ரூ.45,000 சம்பளம் வாங்கினேன். என் மனைவி பி.காம் முடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு, பணிக்குச் செல்லவில்லை. என் அப்பா நான்கு ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊரில் ரூ.20 லட்சத்தில் வீடு கட்டுவதாகச் சொன்னார். என்னிடம் ரூ.10 லட்சம் பணம் ஏற்பாடு செய்யச் சொன்னார். கிராமத்தில் ஏற்கெனவே பூர்வீக வீடு இருக்கும்போது புது வீடு கட்டுவது அவசியமா எனக் கேட்டேன்.

‘என் அண்ணன், தம்பிகள் எல்லாம் புது வீடு கட்டிவிட்டார்கள். இது என் கெளரவப் பிரச்னை’ என்று சொல்லி கோபப்பட்டார் அவர். எனவே, பர்சனல் லோன் ரூ.5 லட்சமும், என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சமும், பி.எஃப் பணத்திலிருந்து 2 லட்சமும் ஏற்பாடு செய்துகொடுத்தேன்.

லோன் இ.எம்.ஐ, நகைக் கடன் எனச் செலவு கூடுதலாகிவிட்டதால், கிரெடிட் கார்டு, கைமாத்துக் கடன் எனச் சமாளித்து வந்தேன். என்னுடைய குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள் எனக் கூடுதலாக ரூ.6 லட்சம் கடன் ஆகிவிட்டது. நகையை மீட்டுத் திரும்பவும் அடமானம் வைத்து வருகிறேன். தற்போது பர்சனல் லோன் நிலுவைத் தொகை ரூ.2 லட்சம், கிரெடிட் கார்டில் ரூ.1 லட்சம், நகைக் கடன் ரூ.2 லட்சம், நண்பர்களிடம் 12% வட்டியில் வாங்கிய கடன் ரூ.4 லட்சம் என ரூ.9 லட்சம் கடன் உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா சூழலில் எனக்கு வேலை போய்விட்டதால், தற்போது இன்னொரு நிறுவனத்தில் ரூ.30,000 சம்பளத்துக்கு வேலை பார்த்து வருகிறேன். குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், பூர்வீக வீட்டை விற்றுப் பணம் கொடுங்கள்; கடனை அடைத்துவிடுகிறேன் என அப்பாவிடம் கேட்டேன். பூர்வீகச் சொத்தை விற்பது அவமானம் என மறுத்துவிட்டார்.

நான்கு மாதங்களுக்கு முன் திடீரென உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்து விட்டார். பிறகுதான் தெரிந்தது, புது வீட்டை அப்பா தன் இரண்டாவது மனைவியின் பெயரில் கட்டியுள்ள விஷயம். நான் எவ்வளவோ முயன்றும் சூழ்நிலை எனக்குச் சாதகமாக இல்லை. பூர்வீக வீட்டை விற்றால் ரூ.8 லட்சம் கிடைக்கும். ஆனால், அம்மா அந்த வீட்டில்தான் இருப்பேன் என அடம் பிடிக்கிறார். கடனைக் கட்ட வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறேன். எப்படி இந்தச் சிக்கலில் இருந்து மீள்வது?”

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

‘‘உங்கள் அப்பாவுக்கு இரண்டு குடும்பங்கள் இருப்பது தெரிந்திருந்தும் நீங்கள் இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாது. கெளரவத்துக்காக வீடு கட்ட வேண்டும் என்று உங்கள் அப்பா சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. உங்கள் அப்பா சொல்வதை உங்களால் மீற முடியவில்லை என்ற நிலையில், கடன் வாங்கிக் கொடுக்கும் முடிவை எடுக்கும்போது, வீடு கட்டப்படும் நிலம் யார் பெயரில் இருக்கிறது, கட்டப்படும் வீட்டில் யார் யாருக்கெல்லம் உரிமை உள்ளது என்பதையெல்லாம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். எத்தகைய நெருங்கிய உறவுமுறையாக இருந்தாலும் பணம் விஷயத்தில் கறாராகச் செயல்பட்டால்தான் பிற்காலத் தில் சிக்கல் வராமல் தவிர்க்க முடியும்.

சரி, நடந்த தவறுகளை எண்ணிக் கலங்குவதில் பயனில்லை. இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலில் இருந்து மீளும் வழிகளைப் பார்ப்போம்.

கொரோனா காலத்தில் வேலை இழப்பு, சம்பளக் குறைப்புக்கு ஆளானவர்கள், இந்தத் தற்காலிக சூழ்நிலையை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்துவரும் காலகட்டங்களில் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப் படுவதால், உங்களுக்கு தகுதி, திறன், பணி அனுபவம்  இருக்கும் நிலையில், நீங்கள் தொடர் முயற்சியை மேற்கொள்ளும் பட்சத்தில் நிச்சயமாக அதிக சம்பளத்தில் வேலை அமையும். சிரமம் மிகுந்த சூழலை எப்படிக் கடந்து மீள்வது என்று மட்டும் யோசித்துச் செயல்பட்டால் போதும்.

உங்களுக்கான மொத்தக் கடனே உங்களுடைய 30 மாத சம்பளம்தான். கடனுக்காக நீங்கள் மன உளைச்சலில் தவிக்க வேண்டாம். உங்கள் பூர்வீக வீட்டில் இருக்க விரும்பும் உங்கள் அம்மாவை தொந்தரவு செய்ய வேண்டாம். இதைத் தவிர்த்து கடன் சிக்கலில் இருந்து மீளும் வழிகளை யோசிப்பதே சரி.

உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சூழல் தெரியும் என்பதால், அவர்களிடம் கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொல்லி, அவர்களிடம் வாங்கிய கடனுக்கு வட்டியிலிருந்து விலக்கும், போதிய கால அவகாசமும் பெற்றுக்கொள்ளுங்கள். தயக்கத்தை விட்டு அவர்களிடம் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால், அவர்கள் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்கள். 

உங்கள் மனைவி தற்காலிகமாக வேலைக்குப் போக முடியுமா என யோசியுங்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் பணி வாய்ப்புகள் கூட இப்போது கிடைக்கிறது. மாதம் ரூ.10,000 அல்லது ரூ.15,000 வருமானம் கிடைத்தாலே உங்களுக்கு சுமை குறையும். நகைக் கடனைத் தனியார் நிறுவனங்களில் வைத்திருந்தால் பொதுத்துறை வங்கிகளில் மாற்றவும். கெடுத்தேதியில் நகையை மீட்டு திரும்ப அடமானம் வைக்க வேண்டியது முக்கியம்.

நீங்கள் அவசரமாகக் கையாள வேண்டிய கடன்கள் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை தான். தற்போது ஆர்.பி.ஐ கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள செப்டம்பர் வரை அவகாசம் தந்துள்ளது. இதைப் பயன்படுத்தி பர்சனல் லோனை நீண்ட காலத்தில் செலுத்தி முடிக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்துகொள்ளுங்கள். மாதம் ரூ.4,000 என்ற அளவில் இ.எம்.ஐ செலுத்தும் வகையில் மாற்றி அமைத்துக்கொண்டால் பெரிய சுமை இருக்காது.

நெருங்கிய உறவினர் யாரிடமாவது சூழநிலையைச் சொல்லி கடன் பெற்று கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் செலுத்திவிடவும். மாதம் கொஞ்சம் தொகையை ஒதுக்கி உறவினருக்குக் கொடுத்து வரவும். கிரெடிட் கார்டை சரண்டர் செய்துவிடுவது நல்லது. உங்களுக்கு கூடுதல் சம்பளத்தில் பணி அமையும் வரை குடும்பச் செலவுகளைச் சிக்கனமாக சிறப்பு பட்ஜெட் போட்டு மேற்கொள்ளவும்.

பொதுவாகவே, இறுக்கமான பொருளாதாரச் சூழலில் இருப்பவர்கள் கடன் வாங்காமல் இருப்பதே நல்லது என்பதை இனியாது புரிந்துகொண்டு செயல்படுஙகள். எல்லா கஷ்டங்களில் இருந்தும் விரைவில் மீண்டுவிடலாம். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்..!‘

1. அவசியமற்ற செயல்பாடுகளுக்கு கடன் வாங்கக் கூடாது.

2. நெருங்கிய உறவாக இருந்தாலும் பண நிர்வாகத்தில் விழிப்புடன் கேள்வி எழுப்ப வேண்டும்.

3. கிரெடிட் கார்டை சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் சரண்டர் செய்வதே நல்லது.

4. நெருக்கடியான நேரங்களில் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

5. சிக்கலான சூழலில் பதற்றமில்லாமல் யோசித்தால் நிச்சயம் மீளும் வழி கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism