Published:Updated:

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

அஞ்சலக சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலக சேமிப்பு

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாகக் கொண்டுவரப்பட்டது ‘சுகன்யா சம்ரிதி’ எனும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாகக் கொண்டுவரப்பட்டது ‘சுகன்யா சம்ரிதி’ எனும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

Published:Updated:
அஞ்சலக சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலக சேமிப்பு
  கே.சண்முகச்சாமி
கே.சண்முகச்சாமி

தபால் நிலையங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான பிணைப்பு என்பது எப்போதுமே சிறப்பானது. இன்ஸ்டாகிராம் தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினர் எல்லோருக்குமே கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் அனுப்பிய, பெற்ற அலாதியான அனுபவம் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சேமிப்பின் முக்கியத்துவத்தை குக்கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்த பெருமையும் தபால் நிலையங்களுக்கு உண்டு.

என்னதான் தற்போது வங்கி சேமிப்பு, பங்குச் சந்தை, கிரிப்டோகரன்சி எனப் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் வந்துவிட்டாலும் இன்றும் உறுதியான வருமானம் தரக்கூடிய, ரிஸ்க் இல்லாத நல்ல அருமை யான சேமிப்புத் திட்டங்களை ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனுக்காகவே தபால் நிலையங்கள் மூலமாக அரசு வழங்கிவருகிறது. எல்லா தரப்பு மக்களும் அவர்களின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப சேமிப்பும் முதலீடும் மேற்கொள்ள தபால் நிலையங்கள் வழங்கும் திட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்கிறார் சென்னை, துணை முதன்மை அஞ்சலக அதிகாரி கே.சண்முகச்சாமி.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

அஞ்சலக சேமிப்புக் கணக்கு

வங்கியில் தொடங்குவது போலவே அஞ்சலகத்திலும் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். ஆனால், வங்கிகள் போல் அல்லாமல் இதில் பல பலன்கள் உள்ளன. இதில் குறைந்தபட்சமாக ரூ.500 இருப்பு இருக்க வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு எதுவும் இல்லை. இந்தக் கணக்குக்கு முதிர்வுக் காலம் என்று எதுவும் இல்லை. இந்தச் சேமிப்புக் கணக்குக்கு 4 சதவிகித வட்டி வழங்கப்படும். இந்த வட்டியானது ஓவ்வோர் ஆண்டும் வழங்கப்படும். வங்கி களில் வழங்கப்படுவது போலவே ஏடிஎம் கார்டும் வழங்கப்படும். ஏடிஎம் கார்டுக்கு கட்டணம் எதுவும் இல்லை. தபால் துறையில் ஏடிஎம் வசதியும் வழங்கப்படுகிறது. வங்கிகளின் ஏடிஎம்களிலும் இக்கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். ஏடிஎம் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை வங்கி போலவே இவற்றிலும் விதிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால், சேவை வரி யில்லை. இலவச குறுஞ்செய்தி சேவையும் உண்டு. இந்தக் கணக்கில் ரூ.10,000 வரை ஒரு நிதியாண்டில் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லை.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

செல்வம் சேர்க்கும் செல்வ மகள் திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாகக் கொண்டுவரப்பட்டது ‘சுகன்யா சம்ரிதி’ எனும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம். இந்தச் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு 2015-ம் ஆண்டு தொடங்கியது. குறைந்த சேமிப்புத் தொகை, கணக்கை முடிக்கும்போது மூன்று மடங்கு தொகை எனப் பல்வேறு பலன்கள் இதில் உள்ளன. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் வரை, பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள் வரை இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இக்கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச தொகை ஆண்டுக்கு ரூ.250 மட்டுமே. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை வைப்புத்தொகை செலுத்தலாம்.

சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றுக்கு 7.6 சதவிகிதம் வட்டி பெறலாம். பொது வருங்கால வைப்பு நிதி, வங்கிகளில் இருக்கும் சேமிப்புக் கணக்குகளுக்குக் கொடுக்கப்படும் வட்டி விகிதங்களைவிட இந்தத் திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதனால், பெற்றோர்களுக்கும், நீண்டகால முதலீட்டை விரும்புபவர்களுக்கும் இது சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது.

இத்திட்டத்தின் முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள், முதிர்வுக் காலம் 21 ஆண்டுகள். 21 ஆண்டுகளில் சேமிப்புத் தொகையில் இருந்து மூன்று மடங்கு தொகை கிடைக்கும். உதாரணமாக இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 சேமித்து வந்தால், திட்டம் முதிர்வுக் காலத்தை எட்டும்போது வட்டியுடன் சேர்த்து ரூ.5.10 லட்சம் கிடைக்கும். முதிர்வுத் தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின்போது அல்லது

21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கும் உண்டு. இடையில் திட்டத்தின் மதிப்புத் தொகையில் 50 சதவிகிதத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காகப் பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தில் இணைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆதார் அட்டையுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை கொண்டு இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

பொன் மகன் சேமிப்புத் திட்டம்

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைப்போலவே, ஆண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டது பொன் மகன் சேமிப்புத் திட்டம். 10 வயதுக்கு மேலான குழந்தை என்றால் அந்தக் குழந்தை யின் பெயரிலேயே சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.

10 வயதுக்குக் குறைவாக இருந்தால் இணைப்புக் கணக்கு (Joint Account) தொடங்க வேண்டும். அதாவது பெற்றோர் பெயரிலும் குழந்தை பெயரிலும் சேர்த்து கணக்கு தொடங்க வேண்டும். குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரி, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் குழந்தை யின் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 15 ஆண்டு களுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 7.1 சதவிகித வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றத்துக்கு உள்ளாகக்கூடும். எனவே நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் குறித்து தபால் நிலையத்தில் அல்லது இந்தியா போஸ்ட் வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம்.

கணக்கு தொடங்கியதிலிருந்து 7-வது ஆண்டில் 50 சதவிகிதத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

பணத்தை முன்கூட்டியே எடுக்க விரும்பினால், பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பணத்தை முன்கூட்டியே எடுப்ப தற்கான உரிய காரணத்தைக் கூற வேண்டும்.

இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 என 15 ஆண்டுகளுக்குச் சேமித்து வந்தால், திட்டம் முதிர்வுக் காலத்தை எட்டும்போது வட்டியுடன் சேர்த்து ரூ.3.15 லட்சம் கிடைக்கும்.

பொன் மகன் சேமிப்புத் திட்டத்தில் அதிகபட்ச வயது வரம்பு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. திட்டத்தின் மொத்த காலம் 15 ஆண்டுகள். இதை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ளவும் வசதி உள்ளது. 15 ஆண்டுகள் முதிர்வுக்கு முன்பே மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான விண்ணப்பத்தை அஞ்சல் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

கிசான் விகாஸ் பத்திரம்

அஞ்சலகத்தில் உள்ள சிறு சேமிப்புத் திட்டங்களில் முக்கியமானது கிசான் விகாஸ் பத்திரம். இது அரசின் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நிரந்தர வருவாய் தரும் திட்டமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக 124 மாத முதிர்வுக் காலத்தில் இத்திட்டத்தில் நம்முடைய முதலீடு இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படும். எனினும் இந்தத் திட்டத்தின் நல்ல அம்சமே நீங்கள் இணையும்போது கிடைக்கும் வட்டியே, இறுதி வரையிலும் கிடைக்கும் என்பதுதான். இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடுக்கு எந்த வரம்பும் இல்லை. ஆனால், 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்யும்போது அந்த வருமானத்துக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். இத்திட்டத்தில் 18 வயது பூர்த்தியான இந்தியக் குடிமக்கள் யாரும் சேரலாம். குழந்தை அல்லது பெரியவர்களுடன் இணைந்தும் கணக்கு தொடங்கலாம். அப்படி இணையும்போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை கொடுக்க வேண்டும்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

இந்தச் சேமிப்புத் திட்டத்தில் விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும்பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி முதிர்ச்சித் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்தச் சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. ஒருவேளை முன்கூட்டியே பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு இந்தத் திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். நீங்கள் பணத்தைப் பெறும் நாள் வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். கிசான் விகாஸ் பத்திரத் திட்டத்துக்கு மற்ற திட்டங்களைப் போல் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும், முதிர்வுக் காலத்துக்குப் பிறகு, எடுக்கும்போது டி.டி.எஸ் (TDS) பிடிக்க மாட்டார்கள். கிசான் விகாஸ் பத்திரத்தை வைத்து கடன் வாங்க முடியும். அதோடு இவ்வாறு பிணையாக வைத்து வாங்கும் கடன்களுக்கு, மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது வட்டி விகிதமும் சற்று குறைவாகவே இருக்கும்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

அடல் பென்ஷன் யோஜனா

* இந்தியாவில் பல சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், அரசின் பென்ஷன் திட்டங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்புண்டு. கடந்த 2015 - 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட `அடல் பென்ஷன் யோஜனா' திட்டம், அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்துக்குப் பின்பு பயனளிக்கும் விதமாகக் கொண்டு வரப்பட்டது. அரசின் இந்த ஓய்வூதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக, அரசுப் பணியில் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான இந்தியக் குடிமகன் கணக்கைத் தொடங்கலாம். வயது மற்றும் பென்ஷன் தொகையைப் பொறுத்து இதற்கான மாதச் சந்தா தொகை ரூ.42 முதல் ரூ.1,454 வரை செலுத்த வேண்டிவரும்.

* இத்திட்டத்தில் 60 வயது முதல் ஆயுள் வரை கணக்குதாரருக்கும், அதன் பிறகு அவரின் வாழ்க்கைத்துணைக்கும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாதாந்தர பென்ஷன் தொகை கிடைக்கும். இருவரின் இறப்புக்குப் பிறகு வாரிசுக்கு ரூ.1.70 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் வரை தொகுப்பு நிதியாக வழங்கப்படும்.

* 18 வயதில் இத்திட்டத்தைத் தொடங்கினால் 60 வயதுக்குப் பிறகு, மாதம் ரூ.1,000 பென்ஷன் பெறும் திட்டத்துக்கு மாதச் சந்தா ரூ.42 மட்டுமே. ரூ.5,000 மாத பென்ஷன் பெற மாதம் ரூ.210 மட்டும் செலுத்தினால் போதும்.

* 40 வயதில் இத்திட்டத்தைத் தொடங்கினால் 60 வயதுக்குப் பிறகு, மாதம் ரூ.1,000 பென்ஷன் பெறும் திட்டத்துக்கு மாதச் சந்தா ரூ.291 மட்டுமே. ரூ.5,000 மாத பென்ஷன் பெற மாதம் ரூ.1,454 செலுத்த வேண்டும்.

* ஒவ்வொரு வயதினருக்கும் மாதச் சந்தா தொகை, பென்ஷன் தொகையைப் பொறுத்து மாறும். அதற்கான விவரங்களை அஞ்சலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

* இன்றைய பொருளாதார சூழலில் எல்லோருக்கும் சேமிப்பு அவசியமாகிறது. யாரையும் சார்ந்திராமல் இருக்க வேண்டும் என்பதால் எல்லா தரப்பினரும் சேமிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, மூத்த குடிமக்கள். வேலை செய்து வருமானம் ஈட்ட முடியாத காலத்தில் யாரையும் சாராமல் இருக்க சேமிப்பு மிகவும் உதவியாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் சேரலாம். 50 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறை ஊழியர்களும், 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களும் இதில் சேரலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 1,00,000 ரூபாய்க்கு 1,850 எனும் அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும். முதிர்வுக் காலம் 5 வருடங்கள். முதிர்வுத் தொகை ரூ.1.37 லட்சம்.

* இந்தக் கணக்கை ஜாயின்ட் கணக்காகவும் தொடங்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய ஒரு வருடத்துக் குள்ளாகவே முன்முதிர்வு செய்தால் வட்டி கிடையாது.

*ஒரு வருடத்துக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்குள் முன்முதிர்வு செய்தால் கணிசமான வட்டி கழிக்கப்படும்.

* 80 சி பிரிவில் வருமான வரி விலக்கு கோரலாம். ரூ.50,000 வரை வட்டிக்கு வரி இல்லை.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

தொடர்வைப்புக் கணக்கு (Recurring Deposit)

* மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள திட்டங்களில் இதுவும் ஒன்று. இன்று வங்கிகளில் உள்ள தொடர்வைப்புக் கணக்குத் திட்டங்களுக்கு அஞ்சலக தொடர்வைப்புக் (ஆர்.டி) கணக்கு முன்னோடி எனலாம்.

* காரணம் இந்தத் திட்டத்தில் மிகக் குறைவாக ரூ.100 முதல் சேமிக்க முடியும். மாதம்தோறும் குறைந்தபட்சமாக ரூ.100 சேமிக்க வேண்டும். அதிகபட்ச உச்ச வரம்பு எதுவும் இல்லை.

* இதன் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். காலாண்டு வட்டி 5.8 சதவிகிதம் வழங்கப்படும். மாதம் ரூ.1,000 வீதம் 5 ஆண்டுகளில் ரூ.60,000 செலுத்தினால் முதிர்வுத் தொகையாக ரூ.69,697 கிடைக்கும்.

* தேவைப்பட்டால் இந்த மாதாந்தர தொடர் வைப்புக் கணக்கை மூன்று வருடங்களுக்குப் பிறகு, முன்முதிர்வு செய்துகொள்ளலாம். ஆனால், சேமிப்புக் கணக்குக்கான வட்டிதான் வழங்கப்படும்.

* திட்டம் தொடங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில் உங்கள் சேமிப்பிலிருந்து 50 சதவிகித தொகையைக் கடனாகப் பெற முடியும்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

மாதாந்தர வருமான கணக்குத் திட்டம் (Monthly Income Scheme)

மாதாமாதம் வருமானம் கிடைக்கிற வகையில் தபால் அலுவலகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது தபால் அலுவலக மாதாந்தர வருமான திட்டக் கணக்குக்கு 6.6 சதவிகித வட்டி அளிக்கப்படுகிறது.

ஒரு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1000, அதிகபட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதுவே ஜாயின்ட் கணக்கு என்றால் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயின்ட் கணக்கு தொடங்கும்போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். இதில் மாதாந்தர வட்டி பெறும் வசதி உள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதந்தோறும் ரூ.550 வட்டி கிடைக்கும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 வருடங்கள். முன்கூட்டியே பணம் வேண்டுமென்றால் ஒரு வருடத்துக்குப் பிறகு, எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கணிசமான வட்டி பிடித்தம் செய்யப்படும்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (Pos t Office Time Deposit)

இதில் நான்கு வகையான திட்டங்கள் உள்ளன. 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது பிரிவு 80-சியின் கீழ் விலக்கு உண்டு. அதே போல இந்தத் திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் அரசு வட்டி விகிதத்தை மாற்றியமைக்கிறது. வருடத்துக்கு ஒருமுறை வழங்கப்படுகிற இதில் 1, 2, 3 வருட திட்டங்களுக்கு 5.5% வட்டியும், 5 வருட திட்டத்துக்கு 6.7% வட்டியும் கிடைக்கிறது. இது மிக பாதுகாப்பான முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப் படுகிறது. திட்ட முதிர்வுக் காலத்துக்கு முன்பே முன்முதிர்வு செய்தால் சேமிப்புக் கணக்குக்கான வட்டிதான் வழங்கப்படும். எனவே, திட்டங்களை முதிர்வுக் காலம் வரை தொடர்வது நல்லது.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificates)

* இந்திய குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டமாகத் தேசிய சேமிப்புச் சான்றிதழை (என்.எஸ்.சி) அரசு ஊக்கப்படுத்துகிறது. இது உத்தரவாதமான வட்டி மற்றும் முழுமையான மூலதன பாதுகாப்பை வழங்கும் திட்டமாகும். இந்தச் சேமிப்பு பத்திரத் திட்டத்தின் முதன்மை நோக்கம், சிறிய மற்றும் நடுத்தர வருவாய்தாரர்களையும் முதலீடு செய்ய வைப்பதுதான். தேசிய சேமிப்புச் சான்றிதழ்களை ஒருவர் தன்னுடைய பெயரிலோ, தன்னுடைய குழந்தைகள் பெயரிலோ வாங்க முடியும். தேசிய சேமிப்புச் சான்றிதழ்களுக்கு தற்போது ஆண்டுக்கு 6.8 சதவிகிதம் என்ற நிலையில் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உரியது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். தேசிய சேமிப்புப் பத்திரத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள்.

* இதற்கு, வருமான வரிச் சட்டப் பிரிவு 80-சியின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் தொடங்கி, ரூ.100 -ன் மடங்குகளில் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

* தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங் களில் பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கு பிணையாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.

* இந்தத் திட்டம் கூட்டு வட்டி அடிப்படையில் செயல்படுவதால், இதில் கிடைக்கும் வட்டி ஆண்டுதோறும் மறுமுதலீடு செய்யப்பட்டு, முதிர்வுக் காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும்.

* உதாரணமாக, ரூபாய் ஒரு லட்சத்தை இத்திட்டத்தில் செலுத்தினால் முதிர்வுத் தொகையாக ரூ.1,38,950 கிடைக்கும்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

பரிவர்த்தனை வசதிகள்!

* அஞ்சலகங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கிளைகள் உள்ளன. எனவே, மக்கள் எளிதில் அணுகி எந்தச் சேவையையும் பெற முடியும்.

* தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் இடத்திலேயே வழங்குவதைத் தற்போது தொடங்கியுள்ளன. ஆனாலும், பெரும்பாலும் திட்டங்களைத் தொடங்கவும் முடிக்கவும் நேரடியாக அஞ்சல் அலுவலகங்களுக்குத் தான் செல்ல வேண்டும். மற்றபடி இந்தியா போஸ்டல் பேமென்ட்ஸ் பேங்க் என்ற திட்டத்தைத் தொடங்கி பெரும்பாலான சேவைகளை இணையத்தின் மூலம் வழங்கி வருகிறது.

* அஞ்சலக சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, இந்த இந்தியா போஸ்டல் பேமென்ட்ஸ் பேங்க் செயலியுடன் இணைத்துவிட்டால் சேவைகளை அதன் மூலம் பெற முடியும். வங்கிக் கணக்கிலும் இந்தியா போஸ்டல் பேமென்ட்ஸ் பேங்க் பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

* அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கான தொகையை இந்தியா போஸ்டல் பேமென்ட்ஸ் பேங்க் செயலியிலிருந்து செலுத்தலாம். பெரும்பான்மையான திட்டங்கள் இந்த வசதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

* இந்த வசதி மூலம் கிடைக்காத சேவைகளைப் பெற அஞ்சல் அலுவலகங்களுக்குத்தான் நேரடியாகச் செல்ல வேண்டும்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

* திட்டங்களைத் தொடங்க முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, முகவரிச் சான்று, புகைப்படங்கள், குழந்தைகளின் பிறப்புச் சான்று ஆகியவை அவசியம்.

* வாழ்க்கைத் துணையின் விவரங்கள், நாமினி விவரங்கள் தெளிவாக சரியாக வழங்கப்பட வேண்டும்.

* அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் பலனை முழுமையாக அடைய திட்டங்களை ஒழுங்காக முதிர்வுக் காலம் வரை தொடர வேண்டும்.

* இடையில் தொடர முடியாமல் போனால் அடுத்த ஆண்டு தவணை செலுத்தும்போது முந்தைய ஆண்டு தவணையையும், செலுத்த தவறிய தவணையை அபராதத் தொகையுடனும் செலுத்த வேண்டும். மற்ற வங்கி சேமிப்புகள், முதலீட்டுத் திட்டங்களைவிட அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் எல்லோருக்குமானவையாக இருக்கும். ஏனெனில், முதலீடு குறித்து பயம் கொள்ள வேண்டிய அவசியம் துளியும் இருக்காது. பலன்களும் அதிகம்.

பெண்கள் ஏன் சேமிக்க வேண்டும்?

குடும்பமாக இருந்தாலும் சரி, தனித்து வாழ்பவராக இருந்தாலும் சரி... பெண்கள் நிதி சார்ந்து சுதந்திரத்துடன் இருக்க வேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஊதியம், பதவி உயர்வு போன்றவற்றில் பெண்களை ஆண்களுக்கு நிகராகப் பார்க்கும் சூழல் இன்னமும் இந்தியாவில் உருவாகவில்லை. மேலும் குடும்பம், சமூகம் போன்ற பல்வேறு காரணங்களால் வேலையில் தொடர்ந்து நீடிக்க முடியாத சூழலோ, குறிப்பிட்ட காலத்துக்கு வேலையில் இருக்க முடியாத நிலையோ உண்டாவதையும் பார்க்கிறோம்.

தனித்து வாழும் பெண்கள் சில நேரங்களில் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரையும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையும் உண்டாகிறது. அதற்குப் பொருளாதார பின்னணி அவசியமாகிறது. எனவே, பெண்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேமிக்கும் பழக்கத்தை இன்றே தொடங்க வேண்டும்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்
Deepak Sethi

பெண்களுக்கான சிறப்புக் கணக்குகள்!

வங்கிகளில் பெண்களுக்கென சிறப்பு சேமிப்புக் கணக்குகள் உள்ளன. அவற்றில் வழக்கமான சேமிப்புக் கணக்குகளைவிட கூடுதல் சலுகைகள் உண்டு. குறைந்தபட்ச இருப்பு, கட்டணங்கள் போன்றவற்றில் பெண் களுக்கான சிறப்புக் கணக்குகளில் சலுகைகள் வழங்கப்படும். அதேசமயம் விபத்துக் காப்பீடு, மருத்துவ காப்பீடு வசதிகளும் உண்டு. அவற்றின் கவரேஜ் தொகையும் வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும். மட்டுமல்லாமல் கடன் வசதிகள், குறைந்த வட்டி, ஷாப்பிங் மீதான கேஷ்பேக் சலுகைகள் போன்றவையும் அவற்றில் கிடைக்கும். எனவே வங்கிகளில் கணக்கு தொடங்கும்போது பெண்களுக்கு உள்ள சிறப்புக் கணக்குகள் குறித்த விவரங்களைக் கேட்டு அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

ஏஜென்டுகளிடம் கவனமாக இருங்கள்!

ஏஜென்டுகள் மூலமாக சேமிப்பு, காப்பீட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி 30 வருடங்களாக ஏஜென்டாக இருந்துவரும் கே.வி.கிருஷ்ண மூர்த்தியிடம் பேசினோம்.

``அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மட்டுமல்ல, வங்கி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் ஏஜென்டுகள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தவறுகளில் ஈடுபடுவதும் உண்டு. என்னதான் நம்பிக்கையானவராக இருந்தாலும் சூழ்நிலை, பண விஷயம் என்று வரும்போது பலர் தடுமாறிவிடுவது அதிகமாகவே நடக்கிறது. எனவே ஏஜென்டுகள் விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். ஏஜென்டுகள் அலுவலக வாசலிலேயே காத்திருப்பார்கள். ஏஜென்டுகளின் நோக்கம் கமிஷன். எதில் அதிக கமிஷன் கிடைக்கிறதோ அதற்கான திட்டங்களை மக்களிடம் திணிக்க முயற்சி செய்வார்கள். கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்தால் போதும் ஏதோ ஒரு திட்டத்தை தலையில் கட்டிவிடுவார்கள். நாமும் ஏஜென்டுகளின் நச்சரிப்பு தாங்காமலும், தெரிந்தவர், உறவினர் என்பதற்காகவும் அவர்கள் பரிந்துரைக்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்போம்.

ஆயிரங்களில் முதலீடு... அசத்தலான லாபம்! - அஞ்சலக சேமிப்பு... எளிதான திட்டங்கள்

சில ஏஜென்டுகள் நீங்கள் மறுத்தாலும் முதல் தவணையை நான் கட்டி ஆரம்பிக்கிறேன் என்று கூட சொல்வார்கள். ஆனால் அவர்கள் பரிந்துரைக்கும் திட்டங்கள் நமக்கு ஏற்றவையா என்பதைப் பார்த்தே அந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எக்காரணம் கொண்டும் நமக்குத் தேவையில்லாத சேமிப்பு, இன்ஷூரன்ஸ் போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டாம். பின்னர் இழப்பு நமக்குத்தான். அடுத்தது பணம் செலுத்தும் விஷயத்திலும் ஏஜென்டுகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அஞ்சலக சேமிப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை தபால் அலுவலகங்களில் நேரடியாகவும், இணைய வசதி மூலமாகவும் பணம் செலுத்தும் வசதிகள் இருப்பதால், முடிந்தவரை அதன் மூலமாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். சில நேரங்களில் ஏஜென்டுகள் மூலமாகப் பணம் செலுத்த வேண்டிய சூழல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுடைய பணத்தை சரியாக உங்கள் கணக்கில் செலுத்திவிட்டார்களா என்று பாருங்கள்.

ஆனாலும் பெரிய தொகைகளை ஏஜென்டுகள் மூலமாகச் செலுத்துவதை தவிருங்கள். என்னதான் நம்பிக்கையான வராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பதில் தவறில்லை. பின்னாளில் வரக்கூடிய பிரச்னைகளைவிட கறாராக இருப்பது மேல்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism