இலங்கைப் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, நிதி அமைச்சர் பதவியையும் தன்வசமாக்கிக் கொண்டிருக்கிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. அடுத்த மூன்று மாதங்கள் அன்றாட வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கும் என்கிற நிலையில், அங்குள்ள ஒவ்வொரு தினத்தையும் கழிப்பதற்கு மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
‘‘இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடி யில் இருக்கிறது. இதனால் இனிவரும் காலங்களில் மோசமான நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணத்தை அச்சிட வேண்டிய நிலையில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார் ரணில். காகிதப் பஞ்சம் எனப் பள்ளி, கல்லூரிப் புத்தகங்களை அச்சிட முடியாது என்று அறிவித்த இலங்கை அரசாங்கம், இப்போது நாட்டின் தேவைக்காகப் பணத்தை அச்சிடத் தொடங்கியிருப்பது உலகில் எந்த நாட்டிலும் நடக்காதது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
கச்சா எண்ணெய், முக்கியமான மருந்துப் பொருள்கள் என எந்தப் பொருளையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இலங்கையால் முடியவில்லை. காரணம், மிக மிகக் குறைந்த அளவிலேயே இலங்கையிடம் அமெரிக்க டாலர் உள்ளது. இந்த டாலரை வைத்து ஒருசில நாள்கள்கூட கடத்த முடியாது என்கிற நிலையில், பணப் பற்றாக்குறையைப் போக்க, பணத்தை அச்சிட்டு வெளியிடத் தொடங்கியிருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு அமெரிக்க டாலர் வாங்கி, அதன் மூலம் கச்சா எண்ணெயும் மருந்துப் பொருள் களையும் வாங்கத் திட்டமிட்டு வருகிறது இலங்கை.

இப்படிச் செய்து, நாட்டின் பணப்பற்றாக் குறையைத் தற்காலிகமாக நீக்கலாம்தான். ஆனால், இதில் ஒரு பெரிய ஆபத்து உண்டு. இப்படிச் செய்வதைப் பார்க்கும் சர்வதேச தரநிர்ணய நிறுவனங்கள், நாட்டின் பொருளா தார நிலைக்கு அளிக்கப்படும் ரேட்டிங்கைக் குறைத்துவிடும்.
1991-ல் இப்படியொரு நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டபோது, மேற்கொண்டு பணத்தை அச்சிடுவதற்குப் பதிலாக, அரசு கஜானாவில் இருந்த தங்கத்தை விற்று, அமெரிக்க டாலரை வாங்கி, நிலைமையைச் சமாளித்தனர் நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும்.
ஆனால், தற்போது ஏற்கெனவே திவால் நிலையில் இருக்கும் இலங்கைக்கு எந்த நாடும் கடன் கொடுக்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், இலங்கையின் தரக் குறியீடு மேலும் குறைக்கப்பட்டால், அந்த நாட்டால் எங்கும் கடன் வாங்க முடியாது. ஏற்கெனவே வாங்கிய கடனைத் திரும்பத் தர முடியாத நிலையில் இருக்கும் இலங்கைக்கு இனி யார் கடன் தருவார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது!
இலங்கையைப் போல பெரும் நெருக்கடி யிலிருந்து மீண்டு வர விரும்பும் நாடுகள் சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். முதலாவதாக, அந்த நாட்டின் அடிப்படை வலிமை என்ன, வருவாயை ஈட்டக்கூடிய வகையில் என்னென்ன சொத்துகளை உருவாக்கலாம் என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்து, சர்வதேச பொருளாதாரத்தில் நாட்டின் பங்களிப்பு மதிப்பை எப்படி உயர்த்துவது, சர்வதேச பொருளாதாரத்தில் நாட்டின் பங்களிப்பு மதிப்பை உயர்த்துவதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து வருவாய் நாட்டுக்குள் வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படிக் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி தொடர்ந்து நாட்டின் பொருளாதார மதிப்பை உயர்த்துவதுடன் புதிய சொத்துகளை உருவாக்கும் பணியைச் செய்ய வேண்டும். தொழில்துறை, சேவைத்துறை என சந்தைகளை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
சீனா டெக்ஸ்டைல் மற்றும் எலெக்ட்ரானிக் ஹப்பாகவும், தைவான் செமி கண்டக்டர் ஹப்பாகவும், மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வளத்தின் ஹப்பாகவும் திகழ்வது போல, இலங்கை தனக்கிருக்கும் சுற்றுலா வளத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, செல்வம் சேர்த்திருக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகளை எல்லாம் இலங்கை கோட்டை விட்டது.
இன்றைய நிலையில் இலங்கையின் மொத்த கடன் 45 பில்லியன் டாலர். அதில் சீனாவிடமிருந்து மட்டுமே 12 பில்லியன் டாலர் கடன் பெற்றிருக்கிறது. ஒருவேளை இலங்கையால் அந்தக் கடனைச் செலுத்த முடியவில்லை, வட்டி யைச் செலுத்த முடியவில்லை எனில், அந்தப் பணத்தை நேரடியாக எடுத்துக்கொள்ளும் அதிகாரமும் சீனாவுக்கு உண்டு.
இப்படி இலங்கையானது சீனாவிடம் எக்குத்தப்பாக மாட்டியிருக்கும் நிலையில், ஜப்பான் போன்ற ஆசிய நாடு களோ, ஐரோப்பிய நாடுகளோ எந்த வகையிலும் நிதி உதவி செய்யத் தயாராக இல்லை.
இந்த நிலையில், இந்தியா தனது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ மூலம் ஒரு பில்லியன் டாலர் (ரூ.7,500 கோடி) அளவுக்குக் கடன் தர முடிவு செய்திருக்கிறது. இந்தக் கடனுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவாதம் தந்தாலும், இது மாதிரியான கடன் பொதுவாக, எக்ஸிம் பேங்க் மூலமே தரப்படும். ஆனால், இப்போதுதான் ஒரு பொதுத்துறை வங்கி இலங்கை அரசுக்குக் கடன் தரரப்படுகிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
இலங்கைக்கு இந்தக் கடன் தரப்படுவதற்கு முக்கியமான காரணமே, அத்தியாவசமாகத் தேவைப்படும் மருந்துப் பொருள் களை வாங்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால், இந்தக் கடன் உதவியால் இலங்கை ஒரு சில நாள் மட்டுமே சமாளிக்கும் என்பதே உண்மை!
பாகிஸ்தானில் வட்டி விகிதம் 13.75%
நமது பக்கத்து நாடுகளில் இலங்கை மட்டுமல்ல, பாகிஸ்தானும் படாதபாடு பட்டுவருகிறது. அந்த நாட்டின் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருப்பதால், அந்த நாட்டின் மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தைக் கடுமையாக அதிகரித்து உள்ளது. பாகிஸ்தான் மத்திய வங்கி கடந்த திங்கள் அன்று வட்டி விகிதத்தை 150 அடிப்படைப் புள்ளிகள் என்கிற அளவுக்கு உயர்த்தியது. இதன் காரணமாக அந்த நாட்டில் வட்டி விகிதம் 13.75% என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியமான பொருள்களை இறக்குமதி செய்வதற்கான டாலர் கைவசம் இல்லை. கைவசம் இருக்கும் சில பில்லியன் டாலர்களை வைத்து இன்னும் எவ்வளவு நாள் தள்ள முடியும் என்கிற கவலையில் இருக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்!