Published:Updated:

கட்டுக்கடங்கா விலைவாசி உயர்வு... இலங்கையின் நிலைக்கு என்ன காரணம்?

இலங்கைப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
இலங்கைப் பொருளாதாரம்

இலங்கைப் பொருளாதாரம்

கட்டுக்கடங்கா விலைவாசி உயர்வு... இலங்கையின் நிலைக்கு என்ன காரணம்?

இலங்கைப் பொருளாதாரம்

Published:Updated:
இலங்கைப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
இலங்கைப் பொருளாதாரம்

சுதாகரன் பேரம்பலம்

வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் வரவு என்ன, செலவு என்ன, எதற்கு கடன் வாங்குகிறோம், எப்படி அடைக்கப்போகிறோம் என்று எதுவுமே தெரியாமல் ஏகாந்தமாய் நடந்துகொண்டால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அந்த கஷ்டத்தைத்தான் இன்று இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ன ஆச்சு இலங்கைக்கு, பிரச்னையின் ஆணிவேர் எங்கே தொடங்கியது என்று பார்ப்போம்.

எப்படி ஆரம்பித்தது சிக்கல்?

இலங்கையின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள். வருடம் 20 பில்லியன் டாலர்கள் பெறுமதியான பொருள்களை இறக்குமதி செய்கிறது. ஆக வருடந்தோறும் 10 பில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவு செய்கிறது. இதுவரையான காலகட்டம் வரை இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர் மூலம் 3 பில்லியன் டாலர்கள் கிடைத்தது. மீதி 7 பில்லியன் டாலர்களை மத்திய கிழக்கு, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வேலை பார்க்கும் இலங்கைத் தொழிலாளர்கள் ‘Remittance’ என்ற வகையில் நாட்டுக்குள் அனுப்பி வந்தனர். இதன் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகக் கணக்கு சுமாராக ஓடி கொண்டிருந்தது. இலங்கையிடம் தோராயமாக 7 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பும் இருந்தது.

பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்த கொரோனா...

2020-ல் வந்த கொரோனா எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாகவே சுற்றுலா துறை படுத்தே விட்டது. தென்கொரியா போன்ற நாடுகளில் வேலை செய்த பலரும் வேலை இழந்து திருப்பி வந்ததாலும், மத்திய கிழக்கில் வேலை செய்தவர்கள் ‘Remittance’ என்ற பெயரில் அனுப்பிய தொகை குறைந்ததாலும் இலங்கையால் அதிகரித்த இறக்குமதிக்கான பற்றாக்குறையை ஈடு செய்ய முடியவில்லை. முதலில் அவர்கள் ஆடம்பர வாகனங்கள், செயற்கை உரம், கட்டட பொருள்கள், தானியங்கள் என்று பல இறக்குமதியை தடை செய்தார்கள். மருந்து பொருள்களும், எரிபொருள் போன்ற மிக அத்தியாவசியமான பொருள்களும் மட்டுமே இறக்குமதிக்கு அனுமதிக்கபட்டன.

கட்டுக்கடங்கா விலைவாசி உயர்வு... இலங்கையின் நிலைக்கு என்ன காரணம்?

கரைந்துபோன அந்நிய செலாவணி கையிருப்பு...

இருந்தும் அதற்குக்கூட பணம் போதவில்லை. அவர்கள் முதலில் கையை வைத்தது அந்நிய செலாவணி கையிருப்பில்தான். 7 பில்லியன் டாலராக இருந்த கையிருப்பு சில மாதங்களிலேயே இரண்டு பில்லியன் டாலராக கரைந்து போனது. கடந்த மாதம் அடிப்படையான எரிபொருளை கொண்டு வருவதற்கே கையேந்தும் நிலைமைக்கு வந்தது இலங்கை. இதுவரையான காலமும் இலங்கைக்கு பாலும் தேனும் ஊட்டி வளர்த்த சீனாவும் பழைய பாக்கியை முதலில் கட்டி விடுங்கள் என்று சொன்னபோது நிஜமாகவே ‘கடன்பட்டார் நெஞ்சம் போல்’ கலங்கி நின்றார் இலங்கை அதிபர் ராஜபக்சே. காரணம், சீனாவை நம்பி இந்தியா , மேற்கு உலக நாடுகள், ஐ.எம்.எஃப் என்று இலங்கை கெத்து காட்டிய இடங்களின் லிஸ்ட் மிக பெரியது.

இப்போது, நிலைமை தலைக்குமேல் போய்விட்டது. இலங்கைப் பொருளாதாரம் ஆட்டம் காண கொரோனா மட்டுமே காரணம் இல்லை. ஆண்டாண்டு காலமாக அதிக வட்டியில் வாங்கிய கடன், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்காமை, ஏற்றுமதியை அதிகரிக்காமல் இருந்தது, அதிகரித்த அரசாங்க செலவுகள், ஊழல் மோசடி என்று பல காரணங்கள் சொல்கிறார்கள்.

மக்கள் அரசின் மீது வெறுப்பின் விளிம்பில் இருக் கிறார்கள். இன்னும் விட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று ஐ.எம்.எஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கி இருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவும் அண்டை நாடு என்ற வகையில் ஒரு பில்லியன் டாலர் கடன் வசதி செய்து கொடுத்திருக்கிறது. இந்தியா கொடுத்ததைப் பார்த்த சீனாவும் மனசு மாறி 2.5 பில்லியன் டாலர் கடன் வசதி செய்து கொடுக்க பரிசீலனை செய்கிறதாம்.

மீண்டுவருமா இலங்கை ?

உலக நாடுகள், ஐ.எம்.எஃப்-ன் தயவில் சில மாதங்களுக்கு இலங்கைப் பொருளாதாரம் என்ற வண்டி ஓடக்கூடியதாக இருக்கும். ஆனால் இந்தப் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் எனில் அதற்கு சில வழிகள் உண்டு.

எதிர்பார்த்தபடி சுற்றுலா பயணிகள் வர வேண்டும்.இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் இலங்கையில் உள்ள நிலைமையைக் காரணம் காட்டி அவர்களுடைய நாட்டு பயணிகளைப் போக வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கொரோனாவுக்கு முன் இருந்த நிலைமைக்கு வர நீண்ட நாள்கள் பிடிக்கலாம்.

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர் அனுப்பும் பணம் அதிகரிக்க வேண்டும், இலங்கைப் பொருளாதாரம், ரியல் எஸ்டேட் துறை அதலபாதாளத்தில் விழுவதால் அவர்கள் மேலதிகமாக பணத்தை முதலீடு செய்வார்களா என்பது சந்தேகமே.

அடுத்து, இறக்குமதிக்குச் சமனாக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும், தேயிலை, தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இலங்கைக்கு ரஷ்யா, உக்ரைன் யுத்தம், மேற்கு நாடுகளில் துளிர்விடும் பண வீக்கம், வேலையின்மை போன்ற பிரச்னைகள் அச்சம் தருவதாகவே இருக்கும்.

இலங்கை வரலாற்றிலேயே ஒரு கடினமான பொருளாதாரச் சிக்கலை இலங்கை மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு, மீண்டு வருவதற்கான வழிகள் அனைத்தும் சவாலானதாகவே இருக்கிறது. மொத்தமாகவே இலங்கையில் பொருளாதார மறு சீரமைப்பு செய்ய வேண்டும், அரசாங்க வருவாயை அதிகரிக்க வேண்டும், செலவுகள் குறைய வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் ஐ.எம்.எஃப் வேறு பல நிபந்தனைகளைப் போட இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மக்களின் ஒப்புதலோடு செய்ய முடியுமா என்பதே மிக பெரிய கேள்வி

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கத்திடம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்போது தீரும் என்று கேட்டதற்கு, “தற்போதைய பொருளாதார சிக்கல் என்பது உடனடியாகத் தீர்க்கக்கூடிய ஒன்று அல்ல, இது பல காலமாகவே  ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தொடர்ச்சியான மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே இன்றைய பிரச்னை. இலங்கை அரசாங்க வருவாயை அதிகரிக்க வேண்டும், அரசாங்கம் வீண்  செலவுகளைக் குறைக்க வேண்டும், நுகர்வுக்குக்கூட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன் பெறுவதைக் குறைக்க வேண்டும். இலங்கையின் ஏற்றுமதி அனைத்துமே தேயிலை, ரப்பர், தைத்த ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தான். இவை போதிய வருமானத்தைப் பெற்றுத் தராது. இதனால் ஏற்றுமதியை பன்முகபடுத்த வேண்டும். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்’’ என்றார்.

இந்தியா உட்பட அயல்நாடுகள் செய்கிற உதவிகள் தற்போது இருக்கிற பிரச்னையில் இருந்து தற்காலிகமாக மீண்டு வர வாய்ப்பாக இருக்கும், ஆனால் நீண்ட காலத்தில் நிரந்தரமாக தீர்வைப் பெற மேலே சொன்ன பொருளாதார மறுசீரமைப்புகள் கட்டாயமானது இலங்கைக்கு.

விரைவில் மீண்டு வரட்டும் இலங்கைப் பொருளாதாரம்; செழிக் கட்டும் மக்களின் வாழ்வாதாரம்!