Published:Updated:

மீண்டும் நோக்கியா... புது முதலீடுகளால் உயிர்த்தெழும் ஸ்ரீபெரும்புதூர்!

இந்நிறுவனங்கள் முதலீடு செய்வதன்மூலம், ஸ்ரீபெரும்புதூரின் தொழிற்சாலைகள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nokia Factory
Nokia Factory ( Photo: Hussain / Vikatan )

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் முக்கிய முதலீட்டாளராக இருந்த நோக்கியா நிறுவனம், வரி ஏய்ப்பு காரணமாக மூடப்பட்டவுடன் ஸ்ரீபெரும்புதூரே கலையிழந்தது. நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால், சுமார் 15,000 பேருக்கும் அதிகமானோர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாவும் பாதிக்கப்பட்டனர்.

வரி ஏய்ப்பு பிரச்னை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட முடக்கம் உள்ளிட்டவற்றால் ஸ்ரீபெரும்புதூரின் தொழில்துறை அமைப்பும் சரிந்து, பல முதலீட்டு வாய்ப்புகளைத் தமிழகம் இழக்கத் தொடங்கியது. இந்த முதலீடுகள், உத்தரப்பிரதேசத்தின் நொய்டா (மோட்டோரோலா மற்றும் சாம்சங் இரண்டும் அங்கு மாற்றப்பட்டன) மற்றும் ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வணிகப் பூங்காவான ஸ்ரீசிட்டி (தைவானிய நிறுவனமான ஃபாக்ஸ்கான் இடம் பெயர்ந்தது) போன்ற தொழில் பூங்காக்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

உலகில், அதிக எண்ணிக்கையில் ஃபீச்சர் மொபைல்கள் தயாரிக்கும் நோக்கியா நிறுவனம், மறுபடியும் மார்க்கெட்டிற்குள் வந்திருப்பதால், உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களுக்கான மார்க்கெட்டும் உருவாகியுள்ளது. இந்த நிறுவனங்கள், அவற்றின் தொழிற்சாலைகளை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவ உள்ளன.

Nokia Mobile
Nokia Mobile

ஃபின்லாந்தைச் சேர்ந்த சார்ஜர் மற்றும் அடாப்டர் தயாரிப்பாளரான சால்காம்ப், நோக்கியாவிற்கு போன் கேஸ்கள் வழங்கி வந்த லைட் ஆன் மொபைல்ஸ், ஸ்ரீபெரும்புதூரில் பயன்படுத்திவந்த நிலத்தை வாங்கியுள்ளது. சுமார் 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள இந்நிறுவனம், 2020 மார்ச் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளுக்கு சப்ளையரான சீனாவைச் சேர்ந்த லக்ஸ்ஷேர், நோக்கியாகவிற்கு உதிரி பாகங்கள் வழங்கிவந்த மற்றொரு நிறுவனமான விண்டெக்கின் உற்பத்திச்சாலையை வாங்க உள்ளது.

இந்நிறுவனங்கள் முதலீடு செய்வதன்மூலம், ஸ்ரீபெரும்புதூரின் தொழிற்சாலைகள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `ஸ்ரீபெரும்புதூர் தொழில் பூங்கா 2020' மார்ச் மாதத்திற்குள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என்று அரசாங்க அதிகாரிகளும் மற்றும் தொழில்துறை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

இதனால், தொழில்துறை முதலீடுகளில் தமிழக அரசு மீண்டும் முன்னணி நிலையை அடைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள 268 மொபைல் உற்பத்திப் பிரிவுகளில், மூன்று அல்லது நான்கு மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன.

அதிகரிக்கும் ஊதியங்கள், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப் போர் காரணமாகத் தொழில் நிறுவனங்கள் சீனா மீது குறைந்த ஆர்வம் காட்டுகின்றன. அதே நேரத்தில், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் முதலீடுகளை இந்தியாவிற்குள் ஈர்த்துவருகின்றன.

Representational Image
Representational Image
ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது, முதலீட்டாளர்களுக்கு சாதகமான ஒரு விஷயம்.

இப்புதிய தொழில் பூங்காவிற்காக, புதிய மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கையை நான்கு முதல் எட்டு வாரங்களில் அரசு நிர்ணயிக்கும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிறுவனங்களின் மூலதனச் செலவுகளைக் குறைப்பதற்காக, ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே 100 ஏக்கர் நிலத்தை `ப்ளக் அண்டு ப்ளே' மாடலுக்காக அரசு ஒதுக்க உள்ளது.

தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழில் சூழல், அதிக நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. கலையிழந்துகிடக்கும் ஸ்ரீபெரும்புதூர், இப்பெரு முதலீடுகளால் மீண்டும் உயிர்த்தெழும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.