பாரத ஸ்டேட் வங்கி கடந்த நவம்பர் 30-ம் தேதி வரையிலான காலத்தில் கொடுத்த கடன் ரூ.5 லட்சம் கோடி கடந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி வரை கல்விக்கடன், நகைக்கடன், ஆட்டோ மற்றும் வீட்டுக்கடன் எனப் பலவகைக் கடன்களை வழங்கியுள்ளது எஸ்.பி.ஐ வங்கி.
``கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் ரீதியிலான திட்டங்கள் ரூ.5 லட்சம் கோடி என்கிற கடன் இலக்கை எட்ட உதவியாக இருந்ததாக’’ இந்த வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த வங்கி கொடுத்துள்ள கடன் உதவி ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு ஜனவரியில் இந்த வங்கி கொடுத்த கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2018-ம் ஆண்டு ஜனவரியில் அது ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2020-ல் கொரோனா பேரிடர் காலத்தில் ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2021-ல் ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தவிர, ரூ.1 லட்சம் கோடிக்கு குறு, சிறுவீட்டுக் கடன் உதவிக்காக வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 2021-ம் ஆண்டில் இந்த வங்கி கொடுத்துள்ள கடன் உதவி ரூ.5 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. மேலும், வரும் நிதி ஆண்டான 2023-24 -ல் எஸ்.ஐ.பி-யின் கடன் இலக்கு ரூ.7 லட்சம் கோடியை எட்டும் என்றும், 2027-ம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடியை எட்டும் எனவும் இந்த வங்கி எதிர்பார்க்கிறது.

கடன் தருவதில் எஸ்.பி.ஐ வங்கியானது மற்ற வங்கிகளைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. ஆக்சிஸ் வங்கி வீட்டுக் கடன் பிரிவில் ரூ.4,23,000 கோடி வரையிலும், வீட்டுக்கடன் அல்லாத பிரிவில் ரூ.2,76,000 கோடியும் கடன் வழங்கியுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி வீட்டுக்கடன் பிரிவில் ரூ.5.80,000 கோடியும், வீட்டுக்கடன் அல்லாமல் ரூ.4,87,000 கோடியும் கடன் வழங்கியுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அதிகபட்சமாக வீட்டுக்கடன் பிரிவில் ரூ.5,06,000 கோடியும், வீட்டுக் கடன் அல்லாத பிரிவில் ரூ.1,87,000 கோடியும் கடன் வழங்கியுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக்கடன் பிரிவில் ரூ.1,58,000 கோடியும், வீட்டுக் கடன் அல்லாத பிரிவில் ரூ.70,000 கோடியும் கடன் வழங்கியுள்ளது. ஆனால், எஸ்.பி.ஐ வங்கியோ வீட்டுக்கடன் பிரிவில் ரூ.1 லட்சம் கோடியும், வீட்டுக்கடன் அல்லாத பிரிவில் ரூ.4,39,000 கோடியும் கடனுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது!
- மா.பிரதீபா