Published:Updated:

` `இ-வித்யா' கல்வி; புதிதாக 12 சேனல்கள்.. சுயசார்பு திட்ட 5ம் கட்ட அறிவிப்பில் என்னென்ன அம்சங்கள்?!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான ஐந்தாம் கட்ட அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

கொரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் முடங்கிய நிலையில், அதை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாள்களாக இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார். இன்று, ஐந்தாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன், ``மிகச் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். இக்கட்டான சூழலாக இருந்தாலும், இது ஒரு நல்ல வாய்ப்பு என பிரதமர் கூறி இருக்கிறார். தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும். தனித்துவம் மிக்க இந்தியாவை உருவாக்க இந்தத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம். பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் நேரடியாகப் பயன்பெற முடியும். 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தி உள்ளோம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இன்றைய 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது. இதுவரை 87 லட்சம் N95 முகக் கவசங்களும், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க 15,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்புக் கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. 4113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காகப் பேரிடர்ச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன. வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.3660 கோடி வழங்கப்பட்டுள்ளது. 6.8 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; மேலும் 12 அலைவரிசைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது; 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டி.வி. சேனல்; மாற்றுத் திறனாளிகளுக்கான மின்-பாடங்கள் உருவாக்கப்படும். புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மனோதர்பன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும். தொடக்கக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திறன் மேம்பாடு வரைவுத் திட்டங்கள் வகுக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது. இ-பாடசாலை திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
vikatan

பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து எளிதாக தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் தொடங்கும் முறைகள் மேலும் எளிமையாக்கப்படும். சிறு நிறுவனங்கள், தனிநபர் நிறுவனங்களுக்கு வாராக்கடன்களுக்குக் குறைந்தபட்ச அபராதம் வசூலிக்கப்படும். திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்பதற்குப் புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும். வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி காலக்கெடுவை நீட்டித்துக்கொள்ளலாம். பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும். தனியார் பங்களிப்பு இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தொடரும். சில முக்கியமான துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்குமாறு அனுமதிக்கப்படும். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மாநில அரசின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இக்கட்டான நேரத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை குறித்த காலத்தில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக மாநில அரசுகளுக்கு 12,390 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்க 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு