Published:Updated:

தொடங்கினார் நேரு; முடித்தார் மோடி! பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய ஐந்தாண்டு திட்டங்களின் நிலை...

ஐந்தாண்டுத் திட்டம் தயாரிப்பு

இந்த 75 வருட சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி நிலையில் இதன் பங்கு இன்றியமையதது.

தொடங்கினார் நேரு; முடித்தார் மோடி! பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய ஐந்தாண்டு திட்டங்களின் நிலை...

இந்த 75 வருட சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி நிலையில் இதன் பங்கு இன்றியமையதது.

Published:Updated:
ஐந்தாண்டுத் திட்டம் தயாரிப்பு

இந்தியா தனது 75-வது சுதந்திரத்தைக் இன்று கொண்டாடும் நிலையில், நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றியவை ஐந்தாண்டுத் திட்டங்கள் ஆகும். பிரிட்டிஷ்காரர்களின் சுரண்டல் அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்றபிறகு, இந்தியப் பொருளாதாரத்தில் முன்னேற்றமும், தன்னிறைவு என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியிருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு திட்டக்குழுவை உருவாக்கினார்.

ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்

இது அரசின் திட்டங்களைத் தீர்மானிக்கும் ஓர் அரசு குழுவாகும். இது நாட்டின் வளங்களைக் கணக்கிட்டு, வளங்களைப் பெருக்கி, சமச்சீராகப் பயன்படுத்தி பொருளாதார மற்றும் சமுதாய நலனை உயர்த்தத் திட்டமிடுதலே இதன் முதன்மை பணி ஆகும்.

இந்தத் திட்டமுறை சோவியத் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டது. ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட திட்டமுறையை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் ஆனது பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி, அதிகப்பட்ச பொருளாதார பலனைப் பெற வழிகாட்டியுள்ளது. இதுவரை 12 ஐந்து ஆண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவைப் பற்றி விரிவாகக் காண்போம்.

முதல் ஐந்தாண்டுத் திட்டம்...

இத்திட்டத்தின் காலம் 1951-1956 ஆகும். இந்த ஐந்தாண்டு திட்டத் தலைவராக நேருவும், துணைத் தலைவராக குல்சாரிலால் நந்தாவும் செயல்பட்டனர். இது ஹாரேட் டாமர் (Harrod Domar) மாதிரியை அடிப்படையைக் கொண்டது. இதன் முதன்மை நோக்கம் விவசாயத் துறையை முன்னேற்றுவதாகும். பிறகு, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு அடித்தளம், மருத்துவம் மற்றும் கல்வி குறைந்த மலிவு விலையில் வழங்குவது. மொத்த திட்ட பட்ஜெட் ரூ.2,069 கோடி, பிறகுரூ.2,878 கோடியாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, பக்ரா, ஹிராகுட் மற்றும் தாமோதர் பள்ளாதாக்கு போன்ற முக்கியஅணைகள் கட்டப்பட்டது.

ஒப்பீட்டளவில் நல்ல பயிர் விளைச்சல் இருந்தது. தொழிற்சாலை தொடங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் இந்தியா முழுக்க தொடங்கப்பட்டது போன்ற காரணங்களால், நிகர உள்நாட்டு உற்பத்தி 15% உயர்ந்தது. தனிநபர் வருமானம் 8% உயர்ந்தது. வளர்ச்சி இலக்கான 2.6% தாண்டி, இத்திட்டம் 8.6% வளர்ச்சியோடு வெற்றிஅடைந்தது.

நேரு
நேரு

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்...

இதன் திட்டக்காலம் 1956-1961. இதன் முதன்மை நோக்கம், நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவது ஆகும். இது விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் பொதுத்துறையின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. இது இந்தியப் புள்ளியியல் நிபுணர் பிரசாந்த சந்திர மஹாலனோபிஸால் உருவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் காலகட்டத்தில் நீர்மின் திட்டங்கள், பல எஃகு ஆலைகளும் தொடங்கப்பட்டன. நிலக்கரி உற்பத்தி அதிகரித்தது, வடகிழக்கு பகுதியில் அதிக ரயில் பாதைப் போடப்பட்டன. அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி துறைகள் உத்வேகம் பெற்றன.

இத்திட்டத்திற்கு ரூ.48 பில்லியன் ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் ஏறக்குறைய வெற்றி பெற்றது. இந்த சிறிய சறுக்கலுக்கு, அந்நியச் செலாவணி நெருக்கடியை நாடு எதிர்க்கொண்டதும், விரைவான மக்கள் தொகை வளர்ச்சியும் கூறப்பட்டது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்...

இதன் திட்டக்காலம் 1961-1966. இதன் முதன்மை நோக்கம், சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுயமுன்னேற்ற நிலை என்பது ஆகும். விவசாயம் மற்றும் கோதுமை உற்பத்தியில் முன்னேற்றத்தை வலியுறுத்தியது. சில திட்டங்களும் கொண்டுவரப்பட்டாலும், 1962-இல் சீனா - இந்தியப் போர் இந்தியாவைப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பாதுகாப்புத் துறை மீது கவனம் அதிகம் செலுத்தப்பட, கூடவே 1965-66-இல் பாகிஸ்தானுடன் போர் என பிரச்னை கிளம்ப, போதக்குறைக்கு 1965-இல் வறட்சியும் ஏற்பட்டது. போர் பணவீக்கத்தையும், வறட்சி உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்தியது. வளர்ச்சி இலக்கு 5.6 சதவிகிதமாக இருக்க, 2.4% மட்டுமே எட்டப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் இந்தியா பன்னாட்டு நிதி மையத்தில் (IMF) கடன் வாங்கத் தொடங்கியது. 1966-ல் ரூபாய் மதிப்பும் முதன்முறையாகக் குறைக்கப்பட்டது. இது ‘காட்கில் திட்டம்’ என்றும் அழைக்கப்பட்டது.

இந்திய - பாகிஸ்தான்  போர்
இந்திய - பாகிஸ்தான் போர்

திட்ட விடுமுறை காலம்...

இதன் காலம் 1966 - 1967 ஆகும். அடுத்ததடுத்த போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் படுதோல்வி காரணமாக திட்ட விடுமுறை காலம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இக்காலத்தில் 1966 முதல் 1969 வரை மூன்று ஆண்டுகள் ஓர் ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு முறையே வேளாண்மை, வேளாண் சார் தொழில் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

''1975-இல் 20அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தபட்டது. இது 1979 வரை பின்பற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை 1978-ல் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசு நிராகரித்து, ஒரு வருடம் முன்பே கைவிடப்பட்டது...''

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்

இதன் காலம் 1969-1974 ஆகும். இத்திட்டம் இரண்டு முக்கியமான நோக்கத்தைக் கொண்டு செயல்பட்டது. அவை, நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலை அடைவதாகும். இது காட்கில் ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் காலத்தில்தான் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட்டு விவசாயம் மேம்பட்டது.

ஆனால், மீண்டும் 1971-இல் இந்திய - பாகிஸ்தான் போர் மற்றும் வங்காளதேச விடுதலைப்போர் காரணமாக தொழில் துறை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, போருக்கு செலவிட நேர்ந்தது. இதன் இலக்காக 5.7% வளர்ச்சி எட்டப்படாமஸ் 3.3%மட்டுமே பெற்றது.

மொரார்ஜி தேசாய்
மொரார்ஜி தேசாய்

ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்...

இதன் திட்டகாலம் 1974-1979 ஆகும். இத்திட்டத்தில் வேளாண் மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விவசாய உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பு உருவாக்கி, தேவைக்கு ஏற்ப பலசாலைகள் அமைக்கப்பட்டது.

1975-இல் 20அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தபட்டது. இது 1979 வரை பின்பற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை 1978-ல் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசு நிராகரித்து, ஒரு வருடம் முன்பே கைவிடப்பட்டது. இருப்பினும், 4.4% வளர்ச்சி இலக்கைக் கொண்டு உருவாக்கப்பட்டு, 4.8% வளர்ச்சி எட்டப்பட்டு வெற்றி பெற்றது.

சழல் திட்டம்...

இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் கைவிடப்பட்டபின், தொடங்கப்பட்டது. 1978-79-ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்கு இச்சுழல் திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்...

இத்திட்டத்தின் காலம் 1980 - 1985 ஆகும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். இது முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பொருளாதார தாராளமயமாக்கலின் தொடக்கத்தைக் குறிப்பதாக இருந்தது. பெரும் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுபடுத்த குடும்பக் கட்டுப்பாடும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் இலக்கு 5.2% வளர்ச்சி விகிதமாக இருந்த நிலையில், 5.7% வளர்ச்சியோடு வெற்றி பெற்றது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம்...

இத்திட்டத்தின் காலம் 1985 - 1990 ஆகும். இத்திட்டத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத் திறனை அதிகரிப்பு, உணவுதானிய உற்பத்தி மற்றும் ஆக்கப்பூர்வ வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வளர்ச்சியை ஏற்படுத்துவது இதன் நோக்கம் ஆகும். ஆறாவது ஐந்தாண்டு திட்டம் நன்கு வெற்றி கண்டதால், ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு நல்ல அடித்தளம் இதற்கு அமைத்துக் கொடுத்தது. முதன்முறையாக, பொதுத்துறையைவிட தனியாருக்கு முன்னுரிமை வழங்கியது, தனியார் துறைக்கு வெற்றியாக அமைந்தது. வளர்ச்சி இலக்கு 5.0 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் 6.0% வளர்ச்சி எட்டப்பட்டது.

இரு ஓராண்டுத் திட்டங்கள்...

மத்திய அரசில் நிலையற்ற அரசியல் சூழல் மற்றும் வேகமாக மாறிவந்த பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக 1990-இல் எட்டாவது திட்டம் தொடங்க முடியவில்லை. இக்காலத்தில்1990-91 மற்றும் 1991-92 ஆம் ஆண்டுகளில் ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

நரசிம்ம ராவ்,  மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம்:

இத்திட்டத்தின் திட்டக்காவும் 1992 - 1997 ஆகும் இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு கல்வி, சமூக நலம் போன்ற மனிதவள மேம்பாடு நடவடிக்கைக்கு முன்னுரிமைக் கொடுக்கப்பட்டது.

இத்திட்டக் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி, தனியாருக்குக் கதவுகள் திறந்துவிடப்பட்டன. வர்த்தக நடைமுறை மற்றும் செயல்முறை இலகுவாக்கப்பட்டு, கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன. அக்காலத்தில் ஏறக்குறைய திவாலாகும் நிலையில் இருந்த இந்தியாவை, மீட்டெடுக்க இது உதவியது. இத்திட்டத்தில் வளர்ச்சி இலக்கு 6.6%. ஆனால், 6.8% வளர்ச்சி எட்டப்பட்டது..

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம்

இத்திட்டத்தின் காலம் 1997-2002 ஆகும். இத்திட்டத்தில் சமுதாய நலன், சமூக நீதியுடன்கூடிய சமமான பொருளாதார வளர்ச்சி இதன் நோக்கம் ஆகும். இத்திட்டக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை மற்றும் தனியார் ஒருங்கிணைந்து செயல்பட்டு வளர்ச்சிக்கு உதவியது. நாட்டின் சேவைத் துறை, விவசாயம் மற்றும் தொழில் துறையில் கணிசமாக வளர்ச்சி எட்டப்பட்டது. ஆனால், வளர்ச்சி இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. 5.6% மட்டுமே வளர்ச்சி வீதம் இருந்தது.

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்...

இத்திட்ட ஆண்டு 2002- 2007. இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் தலா வருவாயை இரு மங்காக உயர்த்த இலக்கு கொண்டது. மேலும், வறுமை விகிதத்தைக் குறைப்பது, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்த எண்ணம் கொண்டது. இது 8% வளர்ச்சி இலக்கோடு செயல்படத் தொடங்கி, 7.27. மட்டுமே எட்டியது. இத்திட்டத்திற்கு சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ரூபாய் செலவிடப்பட்டது.

11-வது இந்தாண்டுத் திட்டம்...

திட்டக்காலம் 2007-2012 ஆகும். இதன் நோக்கம் விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும். மேலும், கல்வி மற்றும் திறன்மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூகத்துறைக்கு முக்கியத்துவம், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் போன்றக் கொள்கைக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இது 8.1% வளர்ச்சி இலக்கு கொண்டு செயல்படத் தொடங்கியது. ஆனால் 7.9% மட்டுமே எட்டப்பட்டது

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

12-ஆம் இந்தாண்டு திட்டம்...

இதன் திட்டக்காலம் 2012-2017 ஆகும். இது சமுதாய வளர்ச்சி நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் முக்கியமாக விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி ஆகும். இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும். இதுவே கடைசி ஐந்தாண்டுத் திட்டமாக மாறியது. ஏனெனில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திட்டக்குழுவைக் கலைத்து, ஐந்தாண்டு திட்டமுறையைக் கைவிட்டது. அதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது.

இந்த 75 வருட சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி நிலையில் இதன் பங்கு இன்றியமையதது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி பிண்ணனி மற்றும் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று, இந்த ஐந்தாண்டு திட்டங்கள்...