Published:Updated:

உச்சத்தில் பங்குச் சந்தைகள் - மேலும் எழுச்சி பெறுமா?

பங்குச் சந்தை

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரண்டு தினங்களில் 9.4% அளவிற்கு உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுதான். இதனைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் அதன் 52 வார உச்சபட்ச நிலையை எட்டிப் பிடித்துள்ளன.

உச்சத்தில் பங்குச் சந்தைகள் - மேலும் எழுச்சி பெறுமா?

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரண்டு தினங்களில் 9.4% அளவிற்கு உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுதான். இதனைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் அதன் 52 வார உச்சபட்ச நிலையை எட்டிப் பிடித்துள்ளன.

Published:Updated:
பங்குச் சந்தை

கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் மாதாந்திர பணவீக்க விகித குறியீடு வெளியிடப்பட்டது. சென்ற அக்டோபர் மாதத்திற்கான பணவீக்க குறியீடு 7.9% என்ற அளவிற்கு இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால் அதைவிட சிறப்பாக அக்டோபர் மாதத்திற்கான குறியீடு 7.7% என்ற அளவில் குறைந்து வந்துள்ளது.

நிஃப்டி
நிஃப்டி

இதன் காரணமாக அமெரிக்காவின் முன்னணி குறியீடுகளில் ஒன்றான நாஸ்டாக் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரண்டு தினங்களில் 9.4% அளவிற்கு உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுவாகும். இதனைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் அதன் 52 வார உச்சபட்ச நிலையை எட்டிப் பிடித்துள்ளன. பேங்க் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பணவீக்கம் உயர்வது காரணமாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் 3% என்ற அளவிற்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. ஒவ்வொரு மாதத்திலும் 75 புள்ளிகள் உயர்த்தப்பட்டன.

தற்போது அந்த நடவடிக்கை காரணமாக பணவீக்க விகிதம் சற்று குறைந்து உள்ளதால் உயர்த்தப்படும் வட்டி விகிதங்களில் அளவு இனி வரும் காலங்களில் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு பொருளாதாரம் மந்த நிலை ஏற்படும் என்ற ஒரு பேச்சு நிலவுகிறது.

பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள்

பணவீக்க விகிதம் குறைவது பொருளாதாரம் மந்த நிலை ஏற்படுவதற்கான நிலையை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலான முன்னணி  அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருந்தன. இவையெல்லாம் சேர்ந்து பங்குச் சந்தைகள் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் இவையெல்லாம் நாணயத்தின் ஒரு பக்கமாகவே இருக்கிறது. ஃபெடரல், ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு பணவீக்க விகிதம் 2% க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பதாகும். தற்போது 7.7% என்ற நிலையில் இருக்கும் பணவீக்க விகித குறியீடு  2%  என்ற நிலையை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதனால்,  இந்த உயர்வு தொடருமா என்று இப்பொழுதே உறுதியாக கூற முடியாது.

இவை மட்டுமின்றி பங்குச் சந்தையை பாதிக்கும் பல்வேறு நிகழ்வுகள் தொடருகின்றன. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் தற்போது பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதனை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளை கொண்ட தாய் நிறுவனமான மெட்டா தொடங்கி வைத்தது. கடந்த ஓராண்டாகவே மெட்டா நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவினை சந்தித்து வருகிறது.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்

உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்த மார்க் ஜூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவிற்கு கடந்த ஓர் ஆண்டில் குறைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 11 ஆயிரம் ஊழியர்களை அந்த நிறுவனம் வீட்டிற்கு அனுப்புகிறது.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்தார். தொடர்ந்து அமேசான் நிறுவனமும் பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

பெரிய நிறுவனங்கள் மட்டுமன்றி பல்வேறு சிறிய நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்வது அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் அதிகரிக்கும் பணவீக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும்.

மேலும் அமெரிக்காவில்  உள்ள 37% சிறு நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதத்திற்கான வாடகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர் என்று ஒரு சர்வே தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வாங்கும் திறன் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட சிரமங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவை அனைத்தும் பங்குச் சந்தைகள் இன்னும் சரிவிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக பெரும்பாலான கிரிப்டோ கரன்சிகள் மிகப்பெரிய சரிவினை சந்தித்து வருகின்றது. சென்ற ஒரு வாரத்தில் மட்டும் 30 பில்லியன் டாலர் அளவிற்கு கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆன எஃப் டி எக்ஸ் சென்ற வாரத்தில் திவால் ஆனது. இந்த எக்ஸ்சேஞ்சில் 10 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களில் தான் முதலீடு செய்திருந்த பணத்தின் பெரும் பகுதியை இழந்துள்ளனர். இதுவே கிரிப்டோ கரன்சிகளில் இந்த அதிகபட்ச சரிவிற்கு காரணமாக இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை நமது நாட்டின் பணவீக்க விகித குறியீட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. முடிந்த அக்டோபர் மாதத்தின் பணவீக்க விகிதக் குறியீடு கடந்த மூன்று மாதங்களின் குறைந்தபட்ச அளவாக 6.77% ஆக வந்துள்ளது. 

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
RBI

ஆனால்  மத்திய ரிசர்வ் வங்கி  பணவீக்க விகித குறியீட்டின் அளவுகோலாக 6% என்று நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 10 மாதங்களாக இந்த அளவுகோலை விட பணவீக்க விகிதம் அதிகமாகவே இருந்து வருகிறது. என்றாலும் பல்வேறு உலக நாடுகளை விட இந்திய பொருளாதாரம் சற்று சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்று கூறலாம்.

இதன் காரணமாக இந்தியப் பங்கு சந்தைகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அதன் உச்சபட்ச புள்ளிகளை தாண்டி 19 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகும் என்று பல சந்தை வல்லுநர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். என்றாலும்  அதற்கு அச்சமூட்டும் முக்கிய அம்சமாக உயர்ந்து வரும் பண வீக்க விகிதம் உள்ளது. பணவீக்க விகிதத்தை எப்படி கட்டுப்படுத்த இருக்கிறோம் என்ற மைய புள்ளியை வைத்து தான் பங்கு சந்தையில் காளையின் கை ஓங்குமா அல்லது கரடியின் பிடி இறுகுமா என்பதை கணிக்க முடியும்.