Published:Updated:

திடீர் வேலை நீக்கம்; பதறாமல் சமாளிப்பது எப்படி?

வேலை

வேலை நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த வேலை கிடைக்க எத்தனை மாதங்கள் தோராயமாக ஆகலாம் என்பதை யோசித்து, அதுவரையிலான செலவுகளுக்கான நிதி ஆதாரத்தைத் தயார் செய்யுங்கள். தேவையற்ற செலவுகளை எல்லாம் நிறுத்திவிட்டு முடிந்தவரை சேமிக்க வேண்டும்.

திடீர் வேலை நீக்கம்; பதறாமல் சமாளிப்பது எப்படி?

வேலை நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த வேலை கிடைக்க எத்தனை மாதங்கள் தோராயமாக ஆகலாம் என்பதை யோசித்து, அதுவரையிலான செலவுகளுக்கான நிதி ஆதாரத்தைத் தயார் செய்யுங்கள். தேவையற்ற செலவுகளை எல்லாம் நிறுத்திவிட்டு முடிந்தவரை சேமிக்க வேண்டும்.

Published:Updated:
வேலை

இன்றைய சூழலில் எப்போது யாருக்கு வேலை போகும் என்றே தெரியாத நிலைதான் பெரும்பாலான வேலைகளில் இருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியோ, கொரோனா போன்ற பெருந்தொற்றோ, சந்தை சூழலோ, அல்லது டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் போன்றவர்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை வாங்கும் போதோ இப்படி எந்தக் காரணங்களுக்காக வேண்டுமானாலும் வேலையிலிருந்து நாம் நீக்கப்படலாம்.

வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

ட்விட்டர், அமேசான் இன்னும் பல ஐடி நிறுவனங்கள் சமீபத்தில் பல ஆயிரக்கணக்கானோரை வேலை நீக்கம் செய்திருக்கிறது. ஆனால் சில விஷயங்களைக் கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டுக்கொண்டால் அதுபோன்ற சமயங்களில் எளிதில் சமாளித்துவிடலாம். சரி எப்படி?

வேலை நீக்கத்துக்கு முன்..

ஒருவேளை உங்களுடைய துறையிலோ, அல்லது நிறுவனத்திலோ சூழல் சரியில்லை, உங்களுடைய வேலைக்கு உத்தரவாதம் இல்லை என்று தோன்றும்பட்சத்தில் முன்கூட்டியே திட்டமிட தொடங்கிவிடுங்கள்.

குறிப்பாக உங்களுடைய நிதிநிலை. வேலைநீக்கம் செய்யப்பட்டால் அடுத்த வேலை கிடைக்க எத்தனை மாதங்கள் தோராயமாக ஆகலாம் என்பதை யோசித்து, அதுவரையிலான செலவுகளுக்கான நிதி ஆதாரத்தைத் தயார் செய்யுங்கள். தேவையற்ற செலவுகளை எல்லாம் நிறுத்திவிட்டு முடிந்தவரை சேமிக்க வேண்டும். குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கான செலவுகளைச் சமாளிக்கும் வகையில் அவசரகால நிதி தயார் செய்துகொள்ள வேண்டும்.

வேலை மாறுதல்...
வேலை மாறுதல்...

உங்களுடைய நிறுவனத்தில் முடிந்தவரை பெறத்தகுந்த அனைத்து பலன்களையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். திடீர் வேலை நீக்கம் தொடர்பான சட்ட விதிமுறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்கு அது உதவியாக இருக்கும். அதேபோல் ஏதேனும் மருத்துவ சிகிச்சைகளுக்கான தேவை இருந்தால் நடப்பு நிறுவனத்தில் உள்ள காப்பீட்டை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.

அடுத்த வேலைக்கு முயற்சிப்பதற்கான முன் தயாரிப்புகளையும் தொடங்கிவிட வேண்டும். நம்முடைய ரெஸ்யூமை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். புதிய வேலைக்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். துறை சார்ந்த நண்பர்களிடமெல்லாம் வேலை காலி இருக்கிறதா என்பதைக் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேலை நீக்கம் செய்யப்பட்டதும் அடுத்த வேலைக்குப் போகும் அளவுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

வேலை நீக்கத்தின் போது

வேலை நீக்கம் செய்யப்படுவது உறுதி ஆனதும் நிறுவனத்தின் வேலை நீக்க நடைமுறைகளை முழுமையாகக் கேட்டுக்கொள்ளுங்கள். நோட்டீஸ் பீரியட் என்ன, நிறுவனத்துக்கு நீங்கள் தர வேண்டிய ட்யூஸ் என்ன, நிறுவனத்திடமிருந்து நீங்கள் பெற வேண்டியவை என்னென்ன என்பதையெல்லாம் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும்.

பணியில் இருக்கும் கடைசி நாள்வரை நிறுவனத்துக்கும் வேலைக்கும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். எடுத்த வேலைகளை, பொறுப்புகளை முடித்துவிட வேண்டும். நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறோம் என்றாலும் அங்குள்ள அனைவரிடமும் சுமுகமான உறவைக் கடைசிவரை வைத்துக்கொள்வது நல்லது.

நாளை என்ன வேலை
நாளை என்ன வேலை

உங்களுடைய ஆவணங்கள், தகவல்கள், சேகரிப்புகள் போன்றவற்றையெல்லாம் பட்டியலிட்டு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எதையாவது மறந்துவிட்டாலோ விட்டுச் சென்றாலோ மீண்டும் நிறுவனத்துக்குள் எளிதாக வர முடியாது. விட்டுச் சென்றது பத்திரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. சர்வீஸ் லெட்டர், எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர், போன்றவற்றையெல்லாம் தவறாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். செட்டில்மென்ட், பிஎஃப் உள்ளிட்ட விஷயங்களைத் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

வேலை நீக்கத்துக்குப் பிறகு..

வேலை நீக்கம் செய்யப்பட்ட உடனேயே தயாராக இன்னொரு வேலை இருந்தால் பெரிதாகச் சிக்கல் இருக்காது. ஒருவேளை புதிய வேலை இன்னும் கிடைக்காதபட்சத்தில் அதுவரைக்கும் நம்முடைய மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வேலை இல்லை என்பது மன உளைச்சலை உண்டாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வேலை இல்லாத காலகட்டத்தை வீணாக்கவும் கூடாது.

வேலை தேடுதல்
வேலை தேடுதல்

புதிய வேலைக்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம். உடலையும் மனதையும் மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளிலும் இறங்கலாம். புதிய வேலை சார்ந்து தேடுதலில் ஈடுபடுவது, நிறுவனங்களை நேரில் சென்று சந்திப்பது போன்றவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் உங்களுடைய வேலை தேடும் முயற்சியைப் பாதிக்கும்படியான பதிவுகளைத் தவிர்த்துவிடுங்கள். முந்தைய வேலையில் நீங்கள் செய்த தவறுகளையெல்லாம் சரிசெய்துகொள்ளுங்கள். புதிய வேலையை புதிய உற்சாகத்துடன் அணுகுங்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர அதுவே வழி.