பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

இனி சம்பளதாரர் அனைவருக்கும் பென்ஷன்... உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
பென்ஷன்

பென்ஷன்

சம்பளதாரர்களுக்கான பென்ஷன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தந்த தீர்ப்பு பற்றிப் பலரும் விவாதித்தாலும், இதனால் சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. இந்தத் தீர்ப்பு உருவாக்கப்போகும் விளைவுகள் பற்றிப் பார்ப்போம்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

தனியார் நிறுவனங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள் போன்றவற்றில் பணி புரியும் ஊழியர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட், பென்ஷன், காப்பீடு முதலான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அமைக்கப்பட்டதுதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees Provident Fund Organisation) எனப்படும் இ.பி.எஃப்.

இ.பி.எஃப்பில் ஒருவர் உறுப்பினராக முக்கியமான காரணி சம்பள வரம்பு. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட 1952-ல் உறுப்பின ராகச் சேர நிர்ணயிக்கப்பட்ட சம்பள வரம்பு ரூ.300. அது படிப்படியாக வளர்ந்து தற்போது ரூ.15,000 ஆகியிருக்கிறது. அதாவது, ஊழியரின் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படியின் கூட்டுத்தொகை ரூ.15,000-க்குள் இருந்தால், அந்த ஊழியர் தங்குதடையின்றி இ.பி.எஃப் உறுப்பினராகிவிடலாம்.

பணியில் சேரும்போது உள்ள சம்பளம்தான் ரூ.15,000-க்கு உட்பட்டு இருக்க வேண்டுமே தவிர, அதற்குப் பிறகு, எவ்வளவு வேண்டு மானாலும் சம்பளம் அதிகரிக்கலாம். இத்தகைய ஊழியருக்கு இ.பி.எஸ் (Employees Pension Scheme) திட்டத்தில் சேர அனுமதி உண்டு; பென்ஷன் பெறலாம்.

ரூ.15,000-க்கும் அதிகமான சம்பளத்துடன் பணியில் இணைவோர், இ.பி.எஃப் உறுப்பின ராக, அதன் ஆணையரிடம் ஒப்புதல் பெற வேண்டும்; பென்ஷன் திட்டத்தில் சேர முடியாது.

இனி சம்பளதாரர் அனைவருக்கும் பென்ஷன்... உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

பென்ஷன் பெற ஓர் ஊழியர் 10 ஆண்டு பணியை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற அரசு ஊழியருக்கான பென்ஷன் விதியானது இ.பி.எஃப். ஊழியருக்கும் பொருந்தும். ஆனால், ஓய்வு பெறும்போது ஊழியர் தனது கடைசிச் சம்பளமாகப் பெறும் தொகையின் அடிப்படை யிலேயே பென்ஷன் என்ற அரசு ஊழியருக்கான பென்ஷன் விதி, இ.பி.எஃப் ஊழியருக்குப் பொருந்தாது. மாறாக, ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் பெற்றிருந்த சராசரி சம்பளத்தின் அடிப்படையிலேயே பென்ஷன் கணக்கிடப்படும். அது மட்டுமல்ல, மேற்கண்டவாறு 5 வருட சராசரி சம்பளம் ரூ.20,000 என வந்தாலும், பென்ஷன் 15,000 ரூபாய்க்கே கணக்கிடப்படும். காரணம், பென்ஷனுக்கான சம்பள வரம்பு ரூ.15,000 என்பதே.

இத்தகைய நிபந்தனைகளால் தனது கடைசி சம்பளமாக ரூ.15,000 பெற்றிருந்த ஒருவர்,33 ஆண்டு பணிநிறைவு செய்திருந்தாலும் ரூ.15,000-ல் 50% தொகையாக உள்ள ரூ.7,500-ஐ பென்ஷனாகப் பெற முடியவில்லை. மேலும், சராசரி சம்பளம் ரூ.20,000, பணிக்காலம் 33 ஆண்டு என்ற தகுதி உடையவரும் பென்ஷனாக ரூ.10,000-ஐ பெற முடியாமல் இருந்தது.

பங்களிப்பு பென்ஷன்

இ.பி.எஃப் ஊழியர்கள் பெறுவது ‘பங்களிப்பு பென்ஷன்’ அதாவது, ஊழியர் தனது சம்பளம் + அகவிலைப்படியில் 12% தொகையை இ.பி.எஃப் திட்டத் தில் செலுத்துவார். இது மொத்தமும் ஊழியரின் பி.எஃப் கணக்கில் சேர்ந்துவிடும். நிறுவனமும் தனது பங்காக 12% தொகையைச் செலுத்தும். இதில் 8.33% ஊழியரின் பென்ஷன் கணக்கில் சேரும்; 3.67% ஊழிய ரின் பி.எஃப்பில் சேர்ந்துவிடும்.

சட்டத் திருத்தம்...

1995-ல் நடைமுறைக்கு வந்த பென்ஷன் திட்டத்தில் 01.09.2014-ல் சட்டத் திருத்தம் செய்தது இ.பி.எஃப் அமைப்பு. அதாவது, 16.11.1995 அன்றோ, அதன் பிறகோ ரூ.15,000-க்குமேல் சம்பளம் பெறும் ஊழியர் (EPS) பென்ஷன் திட்டத்தில் சேர முடியாது.

பென்ஷனுக்கான அதிக பட்ச சம்பளம் ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டது.

பென்ஷன் திட்டத்துக்கு அதிகரித்த பங்களிப்புத் தொகை செலுத்த வகை செய்யும் விதிப் பிரிவு நீக்கப்பட்டு, கூடுதல் பங்களிப்பு செலுத்த ஆறு மாத அவகாசம் தரப்பட்டது.

சம்பள வரம்பான ரூ.15,000-த் துக்குமேல் (அதாவது, பணியில் சேர்ந்த பிறகு சம்பளம் ரூ.15,000-க்குமேல் உயரும் பட்சத் தில்) சம்பளம் பெறுவோர் பங்களிப்புத் திட்டத்துக்கு மேலும் 1.16% சம்பளத்தை செலுத்த வேண்டும் என்பதே சட்டத் திருத்தம். என்றாலும் முன்னதாக, ரூ.6,500 வரம்புக்கு உட்பட்டு பங்களிப்பு சந்தா செலுத்தியவர்கள், கூடுதல் சந்தா செலுத்த முற்பட்டபோது, காலம் கடந்து விட்டது என்று தெரிவித்து, சந்தா செலுத்த அனுமதிக்கவில்லை.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு...

மேற்கண்ட சட்டத் திருத்தங் களை எதிர்த்து ஊழியர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் 2018-ல் மேற்கண்ட இ.பி.எஃப் அமைப்பின் சட்டத் திருத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து இ.பி.எஃப் அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் அனைத் தையும் ஒதுக்கி வைத்துத் (set aside) தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு...

கேரள நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், இ.பி.எஃப் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. கடந்த 4-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றித்தான் பலரும் இப்போது பேசி வருகிறார்கள்.

இ.பி.எஃப் அமைப்பின் 2014-ம் ஆண்டு எம்ப்ளாயீஸ் பென்ஷன் திட்டத்தில் செய்யப் பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என்பதை உறுதி செய்கிறது.

அரசமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்துக்குப் பிரிவு 142-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள அசாதாரண அதிகாரத்தின்படி, அதிகரிக்கப் பட்ட பென்ஷன் பெற உரிய காலக் கெடுவுக்குள் ஒப்புதல் தெரிவிக் காதவர்கள், அடுத்த நான்கு மாதத்துக்குள் ஒப்புதல் தெரிவிக்கலாம். நிறுவனத்துடன் ஊழியரும் சேர்ந்து இதைச் செய்யலாம்.

ரூ.15000-க்கு மேல் சம்பளம் பெறுவோர் தனது சம்பளத்தில் 1.16% தொகையை பென்ஷன் நிதியத்துக்குச் செலுத்த வேண்டும் என்ற இ.பி.எஃப் அமைப்பின் சட்டத் திருத்தம் விதி மீறிய செயலாக உள்ளது. என்றாலும், ஊழியர் பங்களிப்புத் தொகைக்குப் பதிலாக சட்டப்படியான மாற்று வருவாயில் ஈடுகட்டலாம். இதைச் செயல்படுத்திக்கொள்ள தீர்ப்பின் இந்தப் பகுதி ஆறு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2014-ன் சட்டத் திருத்தம், இ.பி.எஃப் அமைப்பிலிருந்து விலக்கு (Exemption) பெற்ற சுமார் 1,300 நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஊழியரின் கடைசி 60 மாத சம்பளத்தின் சராசரித் தொகையை அடிப்படையாகக் கொண்டு பென்ஷன் கணக்கிடுவதில் குறை சொல்ல ஏதுமில்லை.

01.09.2014-க்கு முன் ஓய்வு பெற்று, ஒப்புதல் தெரிவிக்காத வர்கள் இந்தத் தீர்ப்பின் மூலம் பயன்பெற முடியாது.

இவை அனைத்துக்கும் மேலாக, 2014 இ.பி.எஃப் சட்டத் திருத்தத்தின்படி (EPS) பென்ஷன் திட்டத்தில் சேருவதற்கான சம்பள வரம்பு ரூ.15,000 என்பது ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், சம்பள வரம்பின்றி அனைத்து இ.பி.எஃப் உறுப்பினர்களும் பென்ஷன் திட்டத்தின் மூலமும் பயன்பெற வழி பிறந்துள்ளது.

இனி சம்பளதாரர் அனைவருக்கும் பென்ஷன்... உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

சற்றே ஏமாற்றம்...

ஊழியரின் கடைசி சம்பளத்துக்கு பென்ஷன் கணக்கிடத் தேவையில்லை. 60 மாத சராசரி சம்பளத்துக்கு பென்ஷன் கணக்கிடுவதில் தவறேதுமில்லை என்ற தீர்ப்பு காரணமாகத் தனது கடைசி சம்பளமாக ரூ.15,000 பெற்றிருந்தவர், 33 ஆண்டு பணி நிறைவு செய்திருந்தாலும் ரூ.7,500-ஐ பென்ஷனாகப் பெற முடியாது; பென்ஷன் குறையும்.

பென்ஷனுக்கான சம்பள வரம்பு ரூ.15,000 என்பதில் மாற்றமில்லை என்பதால், அதிகபட்ச பென்ஷன் இப்போதைக்கு ரூ.7500-க்கு மேல் உயராது.

மத்திய அரசு ஊழியர் ஒருவர் 10 ஆண்டு பணி முடித்து, அவர் எவ்வளவு குறைவான சம்பளம் பெற்றவராக இருந்தாலும் குறைந்தபட்ச பென்ஷனாக (ரூ.9,000+ரூ.6,840) ரூ.15,840 பெறுவார். இதில் ஐந்தில் ஒரு பங்கான ரூ.3,000 கூட குறைந்தபட்ச பென்ஷனாக இல்லை. இதைப் பற்றிய முறையீடும் ஏதுமில்லை.

சம்பள வரம்பின்றி எல்லாரும் பென்ஷன் திட்டத்தில் சேரலாம் என்ற தீர்ப்பு சுமார் ஆறு கோடி இ.பி.எஃப் உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உச்ச நீதிமன்றம் இப்போது அளித்திருக் கும் தீர்ப்பு சம்பளதாரர்கள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இனி அவர்கள் தங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டு, நாட்டின் பொருளாதாரம் உயரப் பாடுபடுவார்கள் என்று எதிர்பார்ப்போம்!