Published:Updated:

மாநில அரசுக்குரிய பங்கைத் தர வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மாநில அரசுக்குரிய பங்கைத் தர வேண்டும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

வருமானம் என்று வந்துவிட்டால், ‘பங்கைப் பிரி, பங்கைப் பிரி’ என்று கேட்பது இப்போது வழக்கமான விஷயமாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான சில விமான நிலையங்களை மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்கும்போது கிடைக்கும் வருமானத்தை மாநில அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருப்பது உள்ளபடியே மிகச் சரியான விஷயம்தான்.

நிதிப் பற்றாக்குறையில் தவித்துவரும் மத்திய அரசு, நம் நாட்டில் உள்ள முக்கியமான விமான நிலையங்களைக் குத்தகை அடிப்படையில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பின்மூலம் தனியார் நிறுவனங்களுக்குத் தந்து, நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுக்க உள்ள 25 விமான நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தருவதன் மூலம் ரூ.20,782 கோடியைத் திரட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். மங்களூரு, லக்னோ, அகமதாபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களை அதானிக்குத் தர முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கடந்த ஆண்டே நிறைவேற்றப் பட்டும்விட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களையும் வருகிற 2025-க்குள் தனியாருக்குத் தர மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. மத்திய அரசு இப்படி செய்யும்பட்சத்தில், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மாநில அரசுகளுடன் பகிர வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.

பொதுவாக, ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டுமெனில், மத்திய அரசுடன் மாநில அரசும் பணத்தைச் செலவு செய்து, மக்களிடம் இருந்து நிலத்தை வாங்கி மத்திய அரசுக்குத் தருகிறது. தவிர, விமான நிலையத்துக்குச் சென்று வர அருமையான சாலை வசதிகளையும் அமைத்துத் தருவதுடன், மின் விளக்கு வசதியையும் செய்து தருகிறது. இதற்காக மாநில அரசுகள் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்துள்ள நிலையில், அந்த விமான நிலையத்தை மத்திய அரசு ஏதோ ஒரு நிறுவனத்துக்குத் தருவதும், அப்படிக் கிடைக்கும் நிதியை மத்திய அரசு அப்படியே தன்னுடைய கஜானாவுக்கு எடுத்துச் செல்வதும் எப்படி சரியாக இருக்க முடியும்? நாட்டு மக்களின் நன்மைக்காக விமான நிலையம் செயல்படும் எனில், மாநில அரசு பங்கு கேட்க முடியாது. ஆனால், தனியாருக்குத் தரும்போது, மாநில அரசு கஷ்டப்பட்டு செய்த செலவை ஏன் தானமாகத் தர வேண்டும்?

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஆளும் கூட்டாட்சி முறையே நம் நாட்டில் வழக்கத்தில் இருக்கிறது என்பது உண்மை எனில், மாநில அரசுகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பங்கை மத்திய அரசு, கேட்காமலே தர வேண்டும். தனக்குள்ள நியாயமான உரிமையைத் தமிழக அரசு கேட்டுவிட்டது. பங்கைத் தர வேண்டியது மத்திய அரசின் தார்மீகக் கடமை. செய்யுமா மத்திய அரசு..?

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism