Published:Updated:

ஸ்டாலின் தர்பார்... பி.டி.ஆரின் முதல் பட்ஜெட் எப்படி..?

பட்ஜெட் தாக்கல்...
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் தாக்கல்...

பட்ஜெட் அலசல்

ஸ்டாலின் தர்பார்... பி.டி.ஆரின் முதல் பட்ஜெட் எப்படி..?

பட்ஜெட் அலசல்

Published:Updated:
பட்ஜெட் தாக்கல்...
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் தாக்கல்...

தமிழ்நாட்டின் 2020-21-ம் ஆண்டுக்கான திருத்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 13-ம் தேதி அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை வழக்கமான பட்ஜெட் போல பார்க்க முடியாது. பல விஷயங்களை உன்னிப்பாகப் பார்த்து ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்படி ஆராய்ந்தால், நமக்கு அடுத்தடுத்து கிடைப்பது அதிர்ச்சிதான்.

கடந்த பிப்ரவரியின்போது தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 2021-22-ம் நிதியாண்டுக்கான வருவாய் வருமானம் (Revenue Receipts) ரூ.2,18,991 கோடி ரூபாயில் இருந்து திருத்தப்பட்ட மதிப்பீடாக ரூ.2,02,495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, மாநிலத்தின் சொந்த வரி வருமானம் (State Own Tax Revenue - SOTR) ரூ.1,35,641 கோடியிலிருந்து ரூ.1,26,644 கோடியாகக் குறையும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

ஸ்டாலின் தர்பார்... பி.டி.ஆரின் முதல் பட்ஜெட் எப்படி..?

பற்றாக்குறையும் கடனும்...

ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட வருவாய் பற்றாக்குறையான (Revenue Deficit) ரூ.41,417 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, திருத்த மதிப்பீடாக வருவாய் பற்றாக்குறை ரூ.58,692 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2021-22-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) ரூ.92,529 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில ஜி.டி.பி-யில் (SGDP) 4.33 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 15-வது நிதிக்குழு மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக் குறை மாநில ஜி.டி.பி-யில் 4% வரையிலும் இருக்கலாம் என வரையறுத்துள்ளது. மின்சார துறை சீர்திருத்தத்தை மேற்கொண்டால் 0.5% கூடுதலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மொத்தக் கடன் (Total Debt) 2021-22-ம் நிதியாண்டில் ஜி.டி.பி-யில் 26.69 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது 14-வது நிதி கமிஷன் நிர்ணயத்தைவிட கொஞ்சம் அதிகம்தான்.

வருமானத்தின் வளர்ச்சி எப்படி..?

மாநிலத்தின் சொந்த வரி வருமானத்தின் வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 11.46%, 6.22%, 4.32 சதவிகிதமாக முறையே 2006-11, 2011-16 மற்றும் 2016-21 ஆகிய ஐந்தாண்டுகளில் இருந்துள்ளது. இதிலிருந்து கடைசி ஐந்தாண்டு களில் வளர்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளது. மேலும், இது மாநிலத்தின் ஜி.டி.பி-யில் 2006-07-ம் நிதியாண்டில் 8.48 சதவிகிதத்திலிருந்து 2020-21-ம் நிதியாண்டில் 5.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த 3% குறைவு என்பது கிட்டத்தட்ட மாநிலத்தின் வருவாயில் 60,000 கோடி அளவுக்கு வருமான இழப்பு என்பதைக் காட்டுகிறது. 2022-23-ல் நமது மாநிலத்தின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 11.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை இனிவரும் ஆண்டுகளிலும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் மக்கள் வைக்கும் கோரிக்கை.

இனி என்ன நடக்கும்?

கடந்த காலங்களில் மாநிலத்தின் வளர்ச்சியும் குறைந்திருக்கிறது; வருமானமும் குறைந்திருக்கிறது என்பதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையிலும் திருத்தப்பட்ட பட்ஜெட்டிலும் விளக்கமாகச் சொல்லிவிட்டார். இனி அரசின் வருமானத்தை அதிகரிப் பதற்கு என்னென்ன நடவடிக்கை எல்லாம் மேற்கொள்ளப் படலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். அரசின் இந்த நடவடிக்கைகள் நமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கும்!

முந்தைய நிதி ஆண்டுகளில் மற்ற மாநிலங்களின் சராசரி வருவாய்ப் பற்றாக்குறை 0.1% என்று இருந்தபோது, தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 1.5% என்று அபாயகரமாக இருந்துள்ளது. நம்முடன் போட்டிபோடும் மாநிலங்களான குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிராவில் வருவாய் உபரியைக் குறிப்பிடத்தகுந்த அளவில் வைத்திருக்கிறார்கள். நாமும் 2012-13-ம் நிதியாண்டில் வருவாய் உபரி மாநிலமாக இருந்தவர்கள்தான். ஆனால், அந்த நிலையிலிருந்து நாம் வெகுதூரம் கீழே இறங்கிவிட்டோம் என்பதே உண்மை.

2020-21-ம் நிதியாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை மாநிலத்தின் ஜி.டி.பி-யில் 3.16 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறை 52.48 சதவிகிதமாக இருந்திருக்கிறது. இது 2011-16-ம் ஐந்து ஆண்டுகளில் 14.94% மட்டுமே இருந்துள்ளது என்பதை நாம் கவனித்தாக வேண்டும்.

இதேபோல, மாநிலத்தின் ஜி.டி.பி-யில் நிதிப் பற்றாக் குறைக்கான விகிதம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நம்மைவிடக் குறைவாக வைத்திருக்கிறார்கள். இதை அவர்கள் எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்வது அவசியம்.

ஒவ்வொரு வருடமும் வாங்கப்படும் கடன் தொகையைக் கூட்டி தற்போது நிலுவையில் இருக்கும் தொகைதான் மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையாகும். நிதிப் பற்றாக் குறையையும், வருவாய் பற்றாக் குறையையும் குறைக்க ஒன்று வருவாயைப் பெருக்க வேண்டும் அல்லது செலவினங்களைக் குறைக்க வேண்டும்.

புதிய வரிகள் வரலாம்...

வருவாயை அதிகரிக்க வேண்டுமென்றால் வரிகள், கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் அல்லது புதிய கடன்கள் வாங்க வேண்டும் அல்லது மாநில பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்க வேண்டும் அல்லது புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.

செலவினங்களைக் குறைத் தால், குறிப்பாக, மூலதன செலவினங்களைக் குறைத்தால், மாநிலத்தின் முன்னேற்றத்தில் தடை ஏற்படலாம். அந்தத் தவற்றை விஷயம் தெரிந்த இந்த நிதியமைச்சர் செய்ய மாட்டார் என்று நம்புவோமாக!

ஆனால், வருவாய் செலவினத்தில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக இருப்பதால், அதைக் குறைக்க வழி உண்டா என்று கவனிக்க வேண்டும். அதேபோல், அதிக வட்டியில் வாங்கப்பட்ட கடன் களை சீரமைப்பு செய்து குறைந்த வட்டிக்கு மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மின் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படலாம்..!

இந்த பட்ஜெட்டில் இல்லாவிட்டாலும் மின் கட்டணத்தையும், போக்குவரத்துக் கட்டணத்தையும் கண்டிப்பாக உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இந்த அரசு உள்ளது . மின் கட்டணத்தில் சலுகை கொடுத்தாலும் அதற்குரிய பயனாளிகளைச் சரியாகத் தேர்ந் தெடுப்பதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம்.

ஆனால், மின்துறை என்பது ஷாக் அடிக்கும் துறை. அதில் சீர்திருத்தங்களைச் செய்யப் போனால், கடுமையான அதிர்ச்சி களை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும். என்ன சீர்திருத்தங்களை இந்த அரசாங்கம் செய்யப்போகிறதோ..?

தனியார் போக்குவரத்தை ஊக்குவித்து முறைப்படுத்துவதன் மூலம் அந்தத் துறையில் அரசுத் தரப்பிலிருந்து கூடுதல் முதலீட்டைத் தவிர்க்கலாம்.

மோட்டார் வாகன வரியும், சொத்து வரியும் பல வருடங்களாக உயர்த்தப்படாமல் இருப்பதால் அதை உயர்த்தும்பட்சத்தில் கூடுதல் வருவாயைப் பெறலாம். சொத்தின் மதிப்பைவிட குறைவாகப் பதிவு செய்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறிந் தால், முத்திரைக் கட்டண வருவாயை அதிகரிக்கலாம். இதன் மூலம் மாநிலத்தின் சொந்த வரி வருமானம் உயர வழி ஏற்படும்.

பெட்ரோல் மீதான மாநில வரியை ரூ.3 குறைத்துள்ளதன் மூலம் 2.63 கோடி இருசக்கர வாகனம் உபயோகிப்பவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. ஆனால், டீசலிலும் இந்த வரியைக் குறைத் திருந்தால் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களின் விலை குறைய வாய்ப்பு இருந்திருக்கும்.

மூன்று மாதங்களில் ரூ.40,000 கோடி புதிய கடன்...

தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதியாண்டில் ரூ.92,484 கோடி கடன் பெற திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறையும், புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தால் கல்வி, மருத்துவம், சுகாதாரம், சாலை வசதி, மின்சாரம், குடிநீர் மற்றும் ஊரக மேம்பாட்டு திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். அது மாநிலத்தின் வளர்ச்சியில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வருவாய் பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது நிதிப் பற்றாக்குறை மோசமானதல்ல. ஆனால், அது மாநிலத்தின் ஜி.டி.பி-யில் எவ்வளவு சதவிகிதம், எவ்வளவு கடன் தொகை வாங்குகிறோம், எந்த நோக்கத்துக்காக செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடன் வாங்கினால் அது நம் மாநிலத்தைக் கடன் பொறியில் (Debt Trap) சிக்க வைக்கும் ஆபத்து இருக்கிறது.

இனிவரும் ஆண்டுகள் அரசுக்கும் சரி, மக்களுக்கும் சரி சோதனையான ஆண்டுகளாக இருக்கப்போகின்றன. மக்கள் தங்கள் மனதைத் தயார் நிலையில் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது!