Published:Updated:

வெள்ளை அறிக்கை... வித்தியாசமாக யோசிக்கும் அமைச்சர் பி.டி.ஆர்!

பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பழனிவேல் தியாகராஜன்

பொருளாதாரம்

வெள்ளை அறிக்கை... வித்தியாசமாக யோசிக்கும் அமைச்சர் பி.டி.ஆர்!

பொருளாதாரம்

Published:Updated:
பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பழனிவேல் தியாகராஜன்

மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசின் சொத்துகளைக்கூட விற்கத் தயங்காத அரசியல்வாதிகள்தாம் நம் நாட்டில் அதிகம். அரசின் நிதி நிர்வாகத்தை சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக யோசித்துச் செயல்படும் அரசியல்வாதிகள் மிகக் குறைவுதான். அப்படிப் பட்டவர்களில் ஒருவராக இருக்கிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையைப் பார்த்தாலே இந்த உண்மை பளிச்சென்று தெரிகிறது.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர்...

இதற்கு முக்கியமான காரணம், உலகப் புகழ்பெற்ற ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ் மென்ட் (அமெரிக்காவின் மசசூசெட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) கல்லூரியில் அவர் எம்.பி.ஏ படித்ததுதான். பொருளாதார ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற ஃபிராங்கோ மோடிகிலியானியிடம் நேரடியாகப் படித்தவர். படித்து முடித்த பிறகு லேமென் பிரதர்ஸ் நிறுவனத்திலும் சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியிலும் முதலீட்டு மேலாளராகவும் இருந்திருக்கிறார். உலக அளவில் நிதி நிர்வாகம் எப்படிச் செய்யப்படுகிறது என்பதை நேரடியாகப் பார்த்துப் பழக்கப்பட்டவர் பழனிவேல் தியாகராஜன். அதனால்தான் நிதி நிர்வாகம் சரியாக மேற்கொள்வதற்குத் தேவையான சீர்திருத்தங்களை அவர் தீர்மானமாக முன்வைத்திருக்கிறார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவர் பேசியபோது சில விஷயங்களில் அவரது வித்தியாசமான அணுகுமுறையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

`ஜீரோ டாக்ஸ் என்பது ஏமாற்று வேலை!’

இன்றைக்குப் பொதுமக்கள் அனைவரும் வரி குறைவாக அல்லது வரி எதுவும் இல்லாத ஜீரோ டாக்ஸ் பட்ஜெட்டை அரசாங்கங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நினைக் கின்றனர். ஆனால், இந்த எதிர்பார்ப்பு அர்த்த மற்றது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார் பழனிவேல் தியாகராஜன்.

‘‘ஒரு அரசாங்கமானது வரி வருமானம் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துதான் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிறது. அரசாங்கங்கள் குறைந்த அளவில் வரி விதித்தாலோ, வரியை விதிக்காமலே இருந்தாலோ, அரசுக்கு வருமானம் கிடைக்காது. அப்போது நலத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான பணத்துக்கு எங்கே போவது?

ஜீரோ டாக்ஸ் அல்லது குறைந்த வரி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கும். குறைவான வருமானம் பெறுகிறவர்கள் எப்போதும் குறைவாகத்தான் வருமான வரி கட்டுகிறார்கள். அதிகம் சம்பாதிக்கிறவர்கள் அதிகம் வரி கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். யாரிடமிருந்து எவ்வளவு வரியை நியாயமாக வாங்க வேண்டும் என்று யோசித்து, அதன்படி வரி விதிப்பதே சரி. தவிர, வரி குறைவாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமில்லாத பேச்சு. அது ஒரு ஏமாற்று வேலை’’ என்றார் நிதியமைச்சர்.

வளர்ந்த பொருளாதார நாடுகளான ஆஸ்திரேலியா, சுவீடன் ஆகிய நாட்டு அரசாங்கங்கள், அங்கு நலத் திட்டங்களுக்கு பெரிய அளவில் செலவு செய்யக் காரணம், அதிகம் வரி விதிக்கப்படுவதுதான். வரி விகிதம் குறைவாக இருக்க வேண்டும்; ஆனால், அரசிடமிருந்து எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது யதார்த்தத்தில் நடக்க வாய்ப்பு இல்லாத செயல் என்பதை மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார் நிதியமைச்சர்.

வெள்ளை அறிக்கை... வித்தியாசமாக யோசிக்கும் அமைச்சர் பி.டி.ஆர்!

எல்லோருக்கும் இலவசத் திட்டமா?

அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகை இலவசத் திட்டங்களை நிறைவேற்றவே செலவாகிறது. இந்த இலவசத் திட்டங்களின் மூலமான பயனானது தகுதியானவர்களுக்குப் போய்ச் சேரு வதைவிட, தகுதி இல்லாதவர் களுக்கே போய்ச் சேருகிறது என்பதே உண்மை.

‘‘இலவசத் திட்டங்கள் மூலமான பயனை யாருக்குத் தரலாம், யாருக்குத் தரக்கூடாது என்பதற்கான தகவல்கள் நம்மிடம் இல்லை. அதனால், எல்லோருக்கும் இலவசத் திட்டங்களைத் தருகிறோம். உதாரணமாக, தி.மு.க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4,000-த்தை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடுங்பங்களுக்குத் தந்தோம். தகுதியில்லாத பலரும் இந்தப் பணத்தை வாங்கியிருப்பதாக எங்களுக்குப் புகார் வந்தது. வரி கட்டுபவர்கள் யார் என்கிற தகவல் நம்மிடம் இருந்தால், அந்தத் தகவல்களின் அடிப் படையில் தகுதியானவர் களுக்குத் தரலாம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு ஊழியர்களின் வருமானம் குறையவில்லை. ஆனால், அவர்களும் அரசின் இலவசத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பயனை அடையவே செய்திருக்கிறார்கள்’’ என்று பேசினார்.

இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகப் பெரும் பணம் செலவழிக்கிறது அரசாங்கம். இந்தப் பணம் தகுதியான நபர்களுக்குப் போய்ச் சேரும் பட்சத்தில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. ஆனால், ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கு பவர்கள்கூட ரேஷனில் அரிசி வாங்குவதும் ஏழை களுக்குச் சென்று சேர வேண்டிய உதவித் தொகையைப் பெறுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலல்ல.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை அனைவருக்கும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மானியத்தைத் தருவதில் மத்திய அரசாங்கம் பல மாற்றங்களைக் கொண்டு வந்த பிறகு, தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் இந்த மானியம் சென்று சேரும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கிறது. மத்திய அரசாங்கத்தால் இப்படிச் செயல்பட முடியும் என்கிறபோது, நமது மாநில அரசாங்கத்தால் ஏன் இப்படிச் செயல்பட முடியாது?

சரியாகச் செய்யப்படாத நிதி நிர்வாகம்...

பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் பாதிப் படையும்போது நிதி நிலைமை மோசம் அடைவதைத் தவறு என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது நிதி நிர்வாகத்தை சரியாகச் செய்யவில்லை எனில், நாம் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். இந்தக் கடனை அடைக்க கூடுதலாகக் கடன் வாங்குவது, அந்தக் கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்குவது என்று நம் நிலை மோசமாகிக்கொண்டே இருக்கும் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொன்னார் நிதியமைச்சர்.

கடந்த 15 ஆண்டுக் காலத்தில், தி.மு.க ஆட்சியில் உற்பத்தியும், அரசின் வருமானமும் எப்படி உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்ன நிதி அமைச்சர், 2016-க்குப் பிறகு, உற்பத்தி படிப்படிப்படியாகக் குறையத் தொடங்கியதுடன், நிதி நிர்வாகம் எப்படி எல்லாம் மோசமான நிலையை அடைந்தது என்பது பற்றியும் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்னார். அரசின் நடைமுறைகள் மாறாமல் நிர்வாகம் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, அரசின் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டால்தான் அரசின் வருமானமும் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் சொன்னது மிகச் சரியான விஷயமே!

எதிர்ப்பார்களா, ஏற்றுக்கொள்வார்களா?

தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன கருத்துகளை பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்களா அல்லது எதிர்ப்பார்களா என்பது முக்கியமான விஷயம். ஆனால், அழுகிக்கிடக்கும் அரசு நடைமுறை களைச் சரிசெய்ய இப்போதாவது நடவடிக்கை எடுக்காவிட்டால், இனிவரும் காலத்தில் என்ன நடவடிக்கை எடுத்தும் எந்தப் பயனும் இருக்காது. `எல்லாத்தையும் மாத்தணும்’ என்று செயல்படத் தொடங்கியிருக்கும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் வித்தியாசமானவர்தான்!