Published:Updated:

நான்கே ஆண்டுகளில் `யுனிகார்ன் கிளப்'... அசத்திய சென்னை தொழிலதிபரின் ஸ்டார்ட் அப் #Tekion

இந்தப் பட்டியலில் புதிதாக டெகியான் (Tekion) நிறுவனம் சமீபத்தில் இணைந்திருக்கிறது. நிறுவனம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் இந்த உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

தொழில்முனைவோர்களுக்கு யுனிகார்ன் என்பது புதிய வார்த்தை கிடையாது. ஆனால், சாதாரண மனிதர்களுக்கு அது இன்னும் பழக்கப்படாத வார்த்தைதான். ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனங்களைதான் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடி) யுனிகார்ன் என்று ஸ்டார்ட் அப் உலகில் சொல்வார்கள்.

இந்தப் பட்டியலில் புதிதாக டெகியான் (Tekion) நிறுவனம் சமீபத்தில் இணைந்திருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் இந்த உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் தளத்தை (Automotive Retail Cloud platform) இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

Tekion
Tekion

டெஸ்லாவில் பணிபுரிந்தவர்

டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைமைத் தகவல் தொடர்பு அதிகாரியாக (Chief Information Officer - CIO) இருந்தவர் விஜயன் (Jay Vijayan). அவர் தொடங்கிய நிறுவனம்தான் இது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

15 கோடி டாலர் முதலீடு...

சமீபத்தில் இந்த நிறுவனம் 15 கோடி டாலர் முதலீட்டை (Series C) திரட்டியது. 100 கோடி டாலர் மதிப்பீட்டில் இந்த முதலீடு திரட்டப்பட்டிருக்கிறது. தற்போது அட்வென்ட் இண்டர்நேஷனல் இதில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறது. மேலும், ஏர்பஸ் வென்ச்சர்ஸ், எஃப்.எம் கேப்பிடல் மற்றும் எக்ஸார் (ஃபியட் மற்றும் பெராரி ஆகிய நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனம்) உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் முதலீடு செய்திருக்கின்றன.

சிலிக்கான் வேலியில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. தவிர, சென்னை மற்றும் பெங்களூருவில் அலுவலகம் உள்ளது. சர்வதேச அளவில் 450-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

Elon Musk
Elon Musk
AP Photo/Susan Walsh

எலான் மஸ்க்கிடம் பணிபுரிந்தவர்

விஜயன், சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். இந்த நிறுவனம் தொடங்கப்படும் முன்பாக 2016-ம் ஆண்டு வரை டெஸ்லா நிறுவனத்தில் தலைமைத் தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவர் எலான் மஸ்க் தலைமையின்கீழ் நேரடியாகப் பணியாற்றியவர். அதற்கு முன்பாக ஆரக்கிள், வி.எம்.வேர் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு முன்பாக சில மாதங்களுக்கு முன்பு 6.5 கோடி டாலர் நிதி திரட்டியது. அப்போது அலையன்ஸ் வென்ச்சர்ஸ், பி.எம்.டபிள்யூ ஐவென்ச்சர்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.

தனித்துவம் மிக்க நிறுவனம்

தற்போது வரை 17 வாகன உற்பத்தி நிறுவனங்கள் டெகியான் நிறுவனத்தின் சேவையைப் பெற்று வருகின்றன. மீதமுள்ள நிறுவனங்களையும் விரைவில் இணைக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. தற்போது வட அமெரிக்க சந்தையை மட்டும் கவனிக்கப் போவதாகும் அடுத்த ஆண்டு ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதுபோன்ற ஒரு நிறுவனத்துக்காக ஆட்டோமொபைல் துறை பல பத்தாண்டுகளாகக் காத்திருந்தது. இந்த நிறுவனத்தால் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என செர்ரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைவர் ஜோ செர்ரா கூறியிருக்கிறார்.

நான்கு ஆண்டுகளில் பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனம் என்பது அசாத்திய சாதனையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு