Published:Updated:

`அரசின் ஆதரவை மட்டுமே கேட்கலாம்; நோ நிதியுதவி!' - ஜவுளித்துறையினருக்கு சுட்டிக் காட்டிய ஸ்மிர்தி

தற்போதைய சூழலை எதிர்கொள்வதற்கான திறன் ஜவுளித்துறை நிறுவனங்களுக்கு உள்ளது. தேவைக்கேற்ப தங்களை மாற்றியமைத்தால் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்க வேண்டியதில்லை.

`` கொரோனா தொற்றுப்பரவலைத் தடுப்பதற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில், அரசுத்தரப்பில் நிதி உதவியை எதிர்பார்த்து நிற்காமல், ஜவுளித்துறையின் தேவைகளை நீங்களாகவே ஒருங்கிணைந்து செயல்பட்டு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்" என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி தெரிவித்துள்ளார். சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி அமைப்பினருடன் கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்தார்.

ஜவுளித்துறை
ஜவுளித்துறை

அவர் மேலும் கூறுகையில், `` கடந்த ஒன்றரை மாதங்களாக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்காக பி.பி.இ உடைகள் தயாரிக்கப்பட்டுவருகிறது. பஞ்சாப்பில் உள்ள ஜவுளி நிறுவனமான ஜே.சி.டி குழுமம், தாங்கள் தயாரித்த பி.பி.இ உடையின் மாதிரிகளை, தர ஆய்வு செய்வதற்காக அவுரங்காபாத்தில் உள்ள ஓர் ஆய்வகத்துக்கு கொண்டுசெல்ல அரசிடம் உதவிகேட்டது. அதை அரசாங்கமும் செய்துதந்தது.

இதுபோல, ஜவுளித்துறை நிறுவனங்கள், தேவைக்கேற்ப தங்களை மாற்றியமைத்தால் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்க வேண்டியதில்லை. நிதி அனைத்தும் பொதுமக்களின் பணம். நாங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொதுமக்கள் கணக்குக் கேட்கிறார்கள். எனவே, அரசின் தற்போதைய வேலையென்பது, கொள்கைகளை வகுப்பதும் தொழிலுக்கு ஆதரவு தேவைப்படும்போது வழங்குவதுமே ஆகும்" என்றார்.

ஸ்மிர்தி இரானி குறிப்பிட்டுள்ளதுபோல ஜவுளித்துறையில் புதிய வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது, நிதித்தேவைக்கு ஜவுளித்துறை நிறுவனங்கள், அரசாங்கத்தைச் சார்ந்து இருக்கின்றனவா என, இந்திய ஜவுளித்தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரனிடம் கேட்டோம்.

``இந்திய ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 35 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறோம். சீனாவின் ஏற்றுமதியோ நம்மைவிட மிகவும் அதிக அளவாக 240 பில்லியன் டாலராக உள்ளது. தற்போது கொரோனா பரவலின் தொடக்கமாக சீனா இருப்பதால் அந்த நாட்டின்மீது உலக அளவில் அழுத்தம் அதிகரித்துவருகிறது. சீனாவுடான ஒப்பந்தத்தைப் பல்வேறு நாடுகள் மறுபரிசீலனை செய்துவருகின்றன. எனவே, கொரோனா பிரச்னைகள் சரியானபின் சீனாவுக்குச் செல்லவேண்டிய ஆர்டர்கள், மற்ற நாடுகளுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வரக்கூடும். அந்த வாய்ப்புகளை நாம் எந்த அளவுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நம் வளர்ச்சி இருக்கும்.

பிரபு தாமோதரன்
பிரபு தாமோதரன்

பொதுவாக, நம் வழக்கமான ஏற்றுமதியிலிருந்து 1 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்தாலே 1.5 லட்சம் பேருக்கு ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு புதிதாகக் கிடைக்கும். சீனாவுக்கான ஆர்டர்களில் குறைந்தது 10% அளவுக்கு இந்தியாவுக்குக் கிடைத்தால் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதைத் திட்டமிட்டு செயல்படுத்தினால் இந்தியாவுக்கு நல்லது. ஒன்றரை மாதங்களாகத் தொழில்கள் முடங்கியுள்ள சூழலில், நம்மிடம் வருமானமே இல்லை. இன்னும் 6 மாத காலத்துக்கு ஜவுளித்துறையில் கடுமையான சூழல் நிலவும். எனவே, அரசுத்தரப்பில் சில உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வங்கிக்கடன்களுக்கான மாதத்தவணையை அடுத்த ஒரு வருட காலத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் மீண்டுவர முடியும். ஒரு வருட தள்ளிவைப்புக்குப்பின், வங்கிக்கடன்களைச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அளவுள்ள டேர்ம் லோன் கொடுக்க வேண்டும். இதைக்கொண்டுதான் மாதத்தவணைகளைச் செலுத்தமுடியும்.

இதனால் வங்கிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஏற்றுமதிக்கான பொருள்கள், துணி, நூல் மற்றும் ஆடையென பொருள்களாகவே தேங்கியுள்ளன. எனவே, பொருள் வாங்குவதற்கு பணம் இல்லை. இந்த நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க, 25% நடைமுறை மூலதன கடனை வழங்க வேண்டும். ஏற்கெனவே 10% என்று கொடுக்கப்படுவதும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதைக் கொடுத்தால்தான் அதிக நிறுவனங்களைத் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியும்" என்றார்.

ஜவுளிப்பொருள்
ஜவுளிப்பொருள்
vikatan

ஜவுளித்துறையை மேம்படுத்துவதற்கு, சில பொருள்களின் ஜி.எஸ்.டி விகிதத்திலும் மாற்றம் தேவைப்படுகிறது. ஏற்றுமதியில் பெருமளவு பாலியஸ்டர் விஸ்கோஸ் எனப்படும் செயற்கைப்பஞ்சு கலந்த ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன. பருத்திக்கு 5% ஜி.எஸ்.டியும், செயற்கைப் பஞ்சுக்கு 18% அளவிலும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது.

ஏற்றுமதியில் மற்ற நாடுகளோடு போட்டியிட வேண்டுமென்றால் விலை குறைவாக இருக்க வேண்டும். அதற்கு, செயற்கை பஞ்சுக்கான ஜி.எஸ்.டி விகிதத்தை 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். எனவே, வங்கிக்கடன் தள்ளுபடி, கூடுதல் கடன் வழங்குவது, ஜி.எஸ்.டியைக் குறைப்பதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், ஏற்றுமதியை அதிகரித்து, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியப் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு