Published:Updated:

கொரோனாவால் பாதிக்கப்படும் உலகப்பொருளாதாரம்! என்னென்ன துறைகளில் பாதிப்பு?

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் பரவலால், டூர்ஸ் & டிராவல்ஸ் துறைதான் பெருமளவு பாதிப்பைச் சந்தித்தது. உலக அளவில் சுமார் 5 கோடி பேரின் பணியிடங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள், தற்காலிக வேலையிழப்பு, சம்பளக்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுக்கத் தற்போது கொரோனா விழிப்புணர்வு குறித்த சிந்தனையிலேயே இருக்கிறார்கள். எவ்வளவோ மருத்துவ உலகம் வளர்ந்துள்ள சூழலிலும் தற்போதுவரை கொரோனா பாதிப்பு எந்தக் கட்டத்தில் உள்ளது, விரைவில் கட்டுப்படுத்தப்படுமா என்பது குறித்து கணிக்கமுடியாத அளவில் உள்ளது. எனவே தற்போதைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்தான் உலக நாடுகள் அனைத்தும் எடுத்துவருகின்றன. இன்றுவரை (மார்ச் 16) உலக அளவில் 6,513 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,69,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இதுவரை 113 பேர் பாதிக்கப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

உலகப் பொருளாதார பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வட்டி விகிதத்தைக் குறைத்தன. அதன்காரணமாக வட்டி வருமானம் குறைந்துவருகிறது. அமெரிக்கக் கடன் பத்திரங்களின்மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் 1 சதவிகிதத்தைவிடக் குறைந்து மோசமான நிலையில் உள்ளது. நடப்பு 2020-ம் ஆண்டில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் 1-2 டிரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. விமானப்போக்குவரத்து, ஹோட்டல், ரெஸ்டாரன்டுகள், டெக்ஸ்டைல்ஸ், நுகர்வோர் தயாரிப்புகளின் விற்பனை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை பெருமளவு பாதிப்பைச் சந்தித்துவருகிறது.

2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலும் சீனாவிலிருந்தே தொடங்கியது. அப்போது உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு 4% என்ற அளவிலேயே இருந்தது. சார்ஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் 0.5% முதல் 1% வரை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது உலகப்பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு 16.3 சதவிகிதமாக உள்ளது. எனவே, கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள தாக்கம், உலகப்பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துவருகிறது. கொரோனா பரவத்தொடங்கியபோது சீனாவுடனான விநியோகத்தொடர்பை விலக்கிவந்த நாடுகள், தற்போது மற்ற நாடுகளோடும் தங்களது விநியோக மற்றும் பயணிகள் போக்குவரத்தையும் துண்டித்துக்கொண்டு தனித்தீவுகளாக மாறிவருகின்றன.

டூர்ஸ் & டிராவல்ஸ் துறை
டூர்ஸ் & டிராவல்ஸ் துறை
vikatan

உலக அளவில் டூர்ஸ் & டிராவல்ஸ் துறையில் பாதிப்பு

கொரோனா வைரஸ் பரவலால், டூர்ஸ் & டிராவல்ஸ் துறைதான் பெருமளவு பாதிப்பைச் சந்தித்து வருகிறது. உலக அளவில் சுமார் 5 கோடி பேரின் பணியிடங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள், தற்காலிக வேலையிழப்பு, சம்பளக்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவிலான விமானப் பயணங்களில் வெளிநாட்டுப் பயணங்கள் 63.8% பாதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு விமானப்பயணம் 36.2% பாதிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் விமானப்போக்குவரத்தில் அதிகபட்சமாக 49.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் விமானப்போக்குவரத்தில் 37.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

பஹ்ரைன், ஈராக், ஈரான், குவைத், லெபனான், ஐக்கிய அரபு நாடுகளின் விமானப்போக்குவரத்தில் 4.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. கனடா மற்றும் அமெரிக்காவின் விமானப்போக்குவரத்தில் 21.1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் டூர்ஸ் & டிராவல்ஸ் துறையில் பாதிப்பு

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குமான 585 சர்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் 16 விமானப்போக்குவரத்து நிறுவனங்கள் 492 விமானங்களையும், 4 இந்திய தனியார் விமானப்போக்குவரத்து நிறுவனங்கள் 93 விமானங்களையும் ரத்துசெய்துள்ளன. இதன்காரணமாக இந்தியாவிலுள்ள டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

எம்.கார்த்திகேயன்
எம்.கார்த்திகேயன்
vikatan

இதுகுறித்து, 'மை ஹேப்பி ஜர்னி' டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தை பெங்களூரில் நடத்திவரும் எம்.கார்த்திகேயனிடம் கேட்டபோது, "கொரோனா பாதிப்பு பரவி வருவதோடு, அதுகுறித்த பீதியும் பரவுவதால் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்களுக்குப் பெரிய வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் நிறுவனத்தில் இதுவரை 300-400 புக்கிங்குகள்வரை கேன்சலாகியுள்ளன. எங்களுக்கு வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்தான் பெரிய சீசன். இதற்கான புக்கிங்குகள் ஏற்கெனவே முடிவடைந்துள்ள நிலையில் அனைத்துமே தற்போது கேன்சலாகிவருகின்றன. ஃப்ளைட் புக்கிங்கைப் பொறுத்தவரை குறைந்த கட்டணத்திலான விமானச்சேவைக்கு புக்கிங் கேன்சலாகும்போது பணத்தைத் திருப்பித்தர மாட்டார்கள். எனவே, இது வாடிக்கையாளர்களையும் எங்களையும் சேர்த்தே பாதிப்புக்குள்ளாக்குகிறது. பணத்தைத் திரும்பப்பெறுவதிலும்கூட முழுத்தொகையும் திரும்பக்கிடைக்காது.

கடந்த ஒன்றரை மாத காலமாக டிராவல்ஸ் புக்கிங் நிறுவனங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் பணியாளர்களுக்குச் சம்பளம் தருவது மிகக்கடினமாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு வருமானம் குறைவதால் வெவ்வேறு நிறுவனங்களுக்குப் பணியாற்றி வருமானத்தை மீட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். எங்களைப்போல அனைத்து டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும் இதே சிக்கல்தான். கோடைக்கால சுற்றுலா புக்கிங்குகளுக்காக விளம்பரங்களுக்கும் பெரிதும் செலவழித்திருப்பார்கள். அவற்றுக்கான வருமானம் இல்லாததால் அதுவும் பெரிய இழப்புதான். இந்த இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்குக் குறைந்தது 6 மாத காலங்களாகலாம்" என்றார்.

டூர்ஸ் & டிராவல்ஸ்
டூர்ஸ் & டிராவல்ஸ்
vikatan

ஸ்டார் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள்

டூர்ஸ் & டிராவல்ஸ் துறையில் ஏற்பட்ட பாதிப்பின் நீட்சியாக, ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரன்டுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 70%-75% வரை புக்கிங் ஆகக்கூடிய ஹோட்டல்களில் தற்போது 20% அளவிலேயே புக்கிங் ஆகின்றன. வரும் கோடைக்கால சீசனில் நல்ல வருமானம் பெறக்கூடிய தருணத்தில் புக்கிங் குறைந்தால் அடுத்த நிதியாண்டின் வருமானத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடும். ரெஸ்டாரன்டுகளில் உணவருந்துவோரின் எண்ணிக்கையும் 30%-35% வரை குறைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் சினிமா தியேட்டர்களும் மால்களும் மூடப்படவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் வருமானமும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மக்கள் பெருமளவு ஓரிடத்தில் குவியக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திப்போடப்படுவதால் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

ஆடை ஏற்றுமதித்துறை

2018-19 நிதியாண்டில் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை ஆடை ஏற்றுமதித்துறை பெற்றுத்தந்தது. ஆடைத்தயாரிப்பில் 60% வருமானம் ஏற்றுமதி மூலமாகவே கிடைக்கிறது. உள்நாட்டு விற்பனையால் 40% வருமானம் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பாதிப்பானது, இந்திய ஆடைத்தயாரிப்புகளைத் தேக்க நிலைக்குக் கொண்டுசெல்கிறது. அதேபோல, சீனாவிலிருந்து கிடைக்கவேண்டிய ஆடைத்தயாரிப்புக்கான உதிரிப்பொருள்களின் வரவு தடைபட்டுள்ளதும் இந்த நிறுவனங்களுக்குப் பாதிப்பாக உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மக்கள் ஷாப்பிங் செய்வது குறைந்துவருவதால் உள்நாட்டு விற்பனையும் மந்தமாகவே இருக்கிறது.

சோப்புகள், சேனிடைசர்கள், மாஸ்க்குகள் போன்ற சுகாதாரம் சார்ந்த பொருள்களுக்கு மட்டும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது!

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்ட நுகர்வோர் பயன்பாட்டுப்பொருள்களுக்கான இறக்குமதியில் சுமார் 45% பொருள்களை சீனாவிலிருந்தே இறக்குமதி செய்துவருகிறோம். ஏர்கண்டிஷன்களுக்குப் பயன்படக்கூடிய கம்ப்ரசர்கள், மொபைல் போன்கள், மொபைல் போன் கவர்கள், டிவி ரிமோட் உள்ளிட்டவை அதிக அளவில் சீனாவிலிருந்து இறக்குமதியாகின்றன. கடந்த ஜனவரி-மார்ச் கால அளவில் மொபைல்போன் இறக்குமதி 15% அளவுக்குக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் மட்டுமல்லாது பறவைக்காய்ச்சல் பீதியாலும் சிக்கன் உணவுவகைகளின் விற்பனை கடந்த சில வாரங்களாக 30% அளவுக்குக் குறைந்துள்ளது. இது கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனங்களைப் பெரிதும் பாதித்துள்ளதால் கோழி இறைச்சிக்கான விலை கிலோவுக்கு 180 ரூபாய் என்பது தற்போது 100 ரூபாய்க்கும் கீழாகக் குறைந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் பாதிப்பு

ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட மல்ட்டிநேஷனல் கார்ப்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டுப்பணிகள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்று பணிமுடித்துக்கொடுப்பதை அனைத்து நாட்டு நிறுவனங்களும் ஒத்திவைத்துள்ளன. அதேபோல, புதிய பணி ஆணைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அந்த நிறுவனங்களுக்குப் புதிய பணிகளைத்தொடங்குவது தள்ளிப்போவதால் வருமான இழப்பு ஏற்படக்கூடும். நவீன இயந்திரங்களின் பயன்பாடுள்ள நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப சேவை வழங்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. எனினும் சில நிறுவனங்களில் உயர்தர கணினியில் பணியாற்றுவோரால் வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவது இயலாததாக உள்ளது. அதேபோல டேட்டாக்களைப் பாதுகாப்பாகக் கையாளும் நிறுவனங்களிலும் இது சிக்கலான ஒன்றாக உள்ளது.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்
vikatan

இந்தியப் பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து ஒரு மாத காலமாக இறக்கத்தில் பயணிக்கிறது. எப்போதாவது ஏற்றத்தை நோக்கிச்சென்றாலும் உடனே அதைவிடப்பெரிய அளவில் இறக்கம்கண்டுவிடுகிறது. "தற்போது மிகப்பெரிய நெருக்கடியான சூழலில் உலகப்பங்குச்சந்தைகள் உள்ளன. கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில்துறை இழப்புகள் காரணமாக இந்தியா மட்டுமல்லாது அனைத்துச் சந்தைகளிலும் முதலீடுகள் விலக்கப்பட்டு இறக்கத்தைச் சந்தித்துவருகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்னர் 42,000 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ், தற்போது 32,000 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்துத் துறைசார்ந்த பங்குகளும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. வருமானம் மீட்டக்கூடிய துறை என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எனவே, தற்போது பங்குச்சந்தைகளில் முதலீடுசெய்ய விரும்புபவர்கள், மிகவும் கவனத்தோடு நிறுவனங்களைத் தேர்வுசெய்வது அவசியம். பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதால் தினசரி வர்த்தகத்துக்கு இது நல்ல நேரமாக உள்ளது" என்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

பொருளாதாரச்சரிவிலும் லாபமீட்டும் வாய்ப்பு

இவ்வளவு இழப்புகளுக்கும் இடையே, சோப்புகள், சேனிடைசர்கள், மாஸ்க்குகள் போன்ற சுகாதாரம் சார்ந்த பொருள்களுக்கு மட்டும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா காரணமாக தினமும் பலமுறை கைகளைக் கழுவ வேண்டுமென்றும், சேனிடைசர்களைப் பயன்படுத்த வேண்டுமென்றும், முகத்துக்கு சுவாசக்கவசம் மாட்டவேண்டுமென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான தேவை தடாலடியாக அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவற்றின் தயாரிப்பை அதிகரிக்கலாம்.

மாஸ்க்குகள்
மாஸ்க்குகள்
vikatan

கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதற்கு தற்போதுவரை அதிகாரபூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பரவுவது தொடக்க நிலையில் உள்ளதா அல்லது இறுதிக்கட்டத்தில் உள்ளதா என்பதையும் உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. எனவே, உலக நாடுகள் அனைத்துமே நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், பொருளாதார இழப்பைத் தடுப்பதற்குமான கூட்டு முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். பொருளாதார இழப்பைவிட உயிரிழப்பைத் தடுப்பதே நமக்கு முதன்மைத்தேவை. கூடிய விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நம்புவோமாக.

அடுத்த கட்டுரைக்கு