Published:Updated:

முதல் முயற்சி தோல்வி... இன்று கொடிகட்டிப் பறக்கும் அஜித்தின் நிறுவனம்! # திருப்புமுனை - 30

Quess Corp

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறை தொழில்முனைவோராக பல வெற்றிகளை அடைந்திருக்கிறார். இவர் அப்பா கேட்கும் முக்கியமான கேள்வி, லாபம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல. தொழிலில் கடன் இருக்கிறதா, இல்லையா என்பதுதான். அதனால் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார் அஜித்.

முதல் முயற்சி தோல்வி... இன்று கொடிகட்டிப் பறக்கும் அஜித்தின் நிறுவனம்! # திருப்புமுனை - 30

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறை தொழில்முனைவோராக பல வெற்றிகளை அடைந்திருக்கிறார். இவர் அப்பா கேட்கும் முக்கியமான கேள்வி, லாபம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல. தொழிலில் கடன் இருக்கிறதா, இல்லையா என்பதுதான். அதனால் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார் அஜித்.

Published:Updated:
Quess Corp

அண்ணா நகர் அஜித்... 

இந்திய ஸ்டாப்பிங் (Staffing) பிரிவில் முக்கியமான நிறுவனம் குவிஸ் கார்ப். இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமான பங்கு வகித்தவர் அஜித் ஐசக். எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் படித்து, வேலைக்குச் சென்று, அதன்பிறகு தொழில் தொடங்கி, அந்தத் தொழிலை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தில் மற்றொரு நிறுவனத்தை வாங்கி என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தவர் அஜித் ஐசக்.

அஜித் ஐசக்
அஜித் ஐசக்

இவர் பெயரைப் பார்த்தவுடன் யாரோ என்று நினைக்க வேண்டாம். அச்சு அசல் சென்னைவாசி. இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை அண்ணாநகரில்தான். இவரின் அப்பா டன்லப் நிறுவனத்தில் பணியாற்றியவர். எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோவில். பள்ளியில் படிக்கும்போதே பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். ஆனால், கடும் நஷ்டம் என்பதால், அந்த பங்கு வாங்குவதை நிறுத்திவிட்டார். ஆனால், பின்னாள்களில் மிகப் பெரிய நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் வெற்றிகரமாகப் பட்டியலிட்டார்.

படித்து முடித்தவுடன் டியூப் இன்வெஸ்ட்மென்டில் மேனேஜ்மென்ட் பயிற்சி ஊழியராகச் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் (Godrej and Boyce) நிறுவனத்தில் வேலை. அங்கு சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு எஸ்ஸார் குழுமத்தில் வேலை. இதனைத் தொடர்ந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். படித்து முடித்தபின் ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் ஆரம்பகாலப் பணியாளர்களில் இவரும் ஒருவர். 96-ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை ஐ.டி.எஃப்.சி.யில் இருந்தவர், அதைத் தொடர்ந்து சொந்தமான தொழில் தொடங்கத் திட்டமிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் முயற்சியே தோல்வி

2000-ம் ஆண்டுகளில் பல ஐ.டி நிறுவனங்கள் உருவாகின. பல இணையதளங்கள் மூலம் தொழில் தொடங்கப்பட்டன. ஐசக்குக்கு மனிதவளத் துறையில் அனுபவம் இருப்பதால், வேலை தேடுபவர்களுக்கென சேவையைத் தரும் வேலையை இணையம் மூலம் தரலாம் எனத் திட்டமிட்டார். இந்த ஐடியாவை வைத்துக் கொண்டு ஜே.பி மார்கன் உள்ளிட்ட சில முதலீட்டு நிறுவனங்களை சந்தித்தார். இந்த ஐடியா பிடித்ததால், இரண்டு மில்லியன் டாலர் முதல் ஐந்து மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டனர்.

Quess Corp
Quess Corp

ஆனாலும், முதலீடு செய்வதாக ஒப்புக்கொண்ட முதலீட்டாளர்கள் அனைவரும் நிச்சயமாகப் பணம் போடுவார்கள் என்று சொல்ல வாய்ப்பில்லை. அதனால் ஒரு முதலீட்டாளருடன் மட்டுமே செல்லலாம் எனத் திட்டமிட்டார். ஜேபி மார்கன் நிறுவனம் அப்போது பல துறையிலும் முதலீடு செய்துவந்தது. அதாவது, ஒவ்வொரு புதுயுகத் தொழில்களிலும் ஜேபி மார்கன் இருக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அதனால் ஐசக்குக்கு நிதி கிடைத்தது. Go4careers என்னும் தளத்தைக் கட்டமைக்க ஐசக் முடிவெடுத்தார்.

இரண்டே மாதத்தில் மூடப்பட்ட இணையதளம்...

இப்போது இணையதள வடிவமைப்பு என்பது பெரிய வேலை இல்லை. ஆனால், 2000-ம் ஆண்டுகளில் அது முக்கியமான பணி என்பதால், பெங்களூருக்கு சென்றார். 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் இணையதளம் தொடங்கப்பட்டது. ஆனால், வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படி வரவேற்பு இல்லை. அதனால் அடுத்த இரு மாதங்களில் அந்தத் தளம் மூடப்பட்டது.

பெரிய வேலையை விட்டுவிட்டு வந்தபிறகு முதல் முயற்சியே தோல்வி. ஆன்லைனில் மனிதவள நிறுவனம் தொடங்குவது மிகப் பெரிய சிக்கல் என்பதால், ஆப்லைன் மூலம் செயல்படத் தொடங்கினார்.

குவிஸ் கார்ப்
குவிஸ் கார்ப்

இந்த நிலையில், முதலீட்டுத் தொகையை கணிசமாகக் குறைத்துக்கொண்டு ஆப்லைன் மூலம் வேலையைத் தொடங்கினார். `Go4careers’ என்னும் நிறுவனம் `People one consulting’ என மாறியது. டெலிகாம், பேங்கிங், இன்ஷூரன்ஸ், ரீடெய்ல் என பல துறைகளுக்குத் தேவையான ஆள்களை `பிபுள் ஒன் கன்சல்டிங்’ வழங்கியது. இந்த நிறுவனம் சீராக வளர்ந்து வந்த நிலையில், ஸ்விஸ் நாட்டை சேர்ந்த `Adecco’ என்னும் நிறுவனம் ‘பீபுள் ஒன்’ என்னும் நிறுவனத்தை வாங்கியது. நான்கு ஆண்டுகளில் ஜே.பி மார்கன் நிறுவனத்துக்கு முதலீடு செய்ததைவிட நான்கு மடங்கு லாபம் கிடைத்தது.

ஐக்யா ஹூமன் கேப்பிடல் (Ikya Human Capital)

இந்த நிலையில், ஜே.பி மார்கன் நிறுவனத்தில் அதிகாரி அங்கிருந்து வெளியேறி, இந்தியா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த முதலீட்டு நிறுவனம் Ikya Human Capital என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை. மாதம் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது வந்தது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தை மீட்பதற்கு மனிதவளத் துறையில் ஏற்கெனவே அனுபவம் வாய்ந்த ஐசக் வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து 33% பங்குகளை வாங்கினார். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

முதலில் நஷ்டத்தைக் குறைக்க வேண்டும்... அதற்குத் தேவையில்லாத பிரிவுகளின் அலுவலகங்களை மூடினார். அதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் செயல்படும் பல நிறுவனங்களை ஒன்றிணைத்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கினார்.

குவிஸ் கார்ப்
குவிஸ் கார்ப்

இந்த நிலையில், ஜே.பி மார்கன் இந்த நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டை விற்றுவிட்டு வெளியேற திட்டமிட்டது. வெளிநாட்டு இந்தியரான பிரேம் வாட்சாவிடம் பங்குகளை விற்றது ஜே.பி மார்கன். ஆனால், நிறுவனம் என்னவோ ஓஹோவென வளர்ச்சி அடைந்துகொண்டே இருந்தது.

இந்தச் சமயத்தில், ஐ.பி.ஓ செல்லத் திட்டமிட்டார் ஐசக். ஆனால், டிரேட் மார்க் குறித்த விஷயத்தில் அடுத்த சிக்கல் வந்தது. Ikya என்பது இவர்களுடைய நிறுவனத்தின் பெயர். ஆனால், IKEA என்னும் பெயரில் சர்வதேச பர்னிச்சர் நிறுவனம் இருந்தது. இதனால் இவர்களுக்கு இடையே டிரேட் மார்க் சர்ச்சை இருந்தது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே ஐ.பி.ஓ செல்ல வேண்டாம் என முடிவெடுத்தார் ஐசக். ஐக்யா நிறுவனத்தின் பெயரை `குவிஸ் கார்ப்’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.

பெயர் மாற்றம் செய்தாலும் நீதிமன்றம் குவிஸ் கார்ப்க்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது. இரு நிறுவனங்களின் தொழிலும் முற்றிலும் வேறுவேறு என்பதால், குழப்பம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

144  மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்...

தவிர, குவிஸ் கார்ப் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியான சமயம் பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழல் இருந்தது. பிரெக்ஸிட், ரகுராம் ராஜனின் ராஜினமா என பல சாதகமற்ற சூழல் செய்திகளாக வெளியே பங்குச் சந்தை நிலையற்றதாக ஆக்கி இருந்தது. இருந்தாலும் தெளிவான பிசினஸ் மாடல் இருப்பதால், சந்தை சூழலைப் புறக்கணித்து ஐ.பி.ஓ கொண்டு வந்தனர். 144 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. முதல் நாளில் 58% அளவுக்கு பிரீமியமாக உயர்ந்தது.

குவிஸ் கார்ப்
குவிஸ் கார்ப்

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறை தொழில்முனைவோராக பல வெற்றிகளை அடைந்திருக்கிறார் ஐசக். இவர் அப்பா கேட்கும் முக்கியமான கேள்வி, லாபம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல. தொழிலில் கடன் இருக்கிறதா, இல்லையா என்பதுதான். அதனால் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் ஐசக்.

ஒரே தொழிலில் இருக்கும் பல நிறுவனங்களை ஒன்றாக்கி ஐ.பி.ஓ கொண்டு வந்து வெற்றி அடைய செய்யக் காரணம், அவரது திறமையான மேலாண்மைதான். தற்போது பல பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் சந்தையில் ஒரே பிரிவில் செயல்படும் நிறுவனங்களை இணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. அவர்களின் நோக்கமெல்லாம் குவிஸ் கார்ப் போல நாங்களும் ஆக வேண்டும் என்பது தவிர வேறில்லை!

(திருப்புமுனை தொடரும்)