Published:Updated:

12 மணி நேரம் உழைப்பு... ₹125 சம்பளம்... முறைசாரா துறை பெண் தொழிலாளர்கள் நிலை இதுதான்!

ரெஹானா ஒரு தையல் கூலித் தொழிலாளி. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர், வயதான மாமனார், இரண்டு மகன்கள் ஆகியோரின் உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவருக்கு வேலை எந்த உறுதியும் இல்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழில்`உழைப்பே உயர்வு தரும்’ என்ற மேற்கோளை நாம் பள்ளிக்காலங்களிலேயே படித்திருப்போம். ஆனால், `20 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வாரத்தில் 6 நாள்கள், நாளுக்கு 12 மணி நேரம் எனக் கடுமையாக உழைத்தாலும் ஒரு நாளுக்கு 125 ரூபாய்க்கு மேல் தன்னால் சம்பாதிக்க முடியவில்லை எனக்கூறும் ரெஹானா என்ற 42 வயது பெண்மணி, இந்தியாவில் உழைப்புக்கும் ஊதியத்துக்குமான இடைவெளி, அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு மட்டும் மலையுச்சிக்கும் பாதாளத்துக்குமான தொலைவாக இருப்பதாகக் கூறுகிறார்.

ரெஹானா ஒரு தையல் கூலித் தொழிலாளி. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர், வயதான மாமனார், இரண்டு மகன்கள் ஆகியோரின் உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கும் ரெஹானாவுக்கு, அவருடைய ஊதியத்துக்கும் வேலைக்கும் நம் சமூகமோ, அரசோ எவ்வித உறுதியையும் தருவதில்லை. ரெஹானா கார்மென்ட்ஸுக்கும் பொட்டிக்குகளுக்கும் துணி தைத்து தருகிறார். அவர் தன்னுடைய கூலியை சிறிதளவு உயர்த்தினாலும் அவருடைய வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு மற்றவருக்கு வழங்கப்பட்டுவிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார். சிரமப்பட்டாவது மோட்டார் வைத்த தையல் மெஷின்களை வாங்கிவிட்டால், உழைப்பு குறைந்து உற்பத்தி கூடும் என்று எதிர்பார்த்த ரெஹானாவுக்கு உண்மையில் கூடியது, மாதாந்தர மின் கட்டணம் மட்டுமே.

அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள்
அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள்

வருங்கால வைப்புநிதி, ஊதியவிடுப்பு இல்லை...

இந்த ரெஹானா ஒரு சோற்றுப்பதம். இவரைப் போல எந்தவிதமான ஒப்பந்தமும் பணி நிரந்தரமும், நிச்சயிக்கப்பட்ட கூலி போன்ற உறுதிப்பாடுகளும் இல்லாமல், இந்தியாவில் வேலை செய்யும் அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 96 மில்லியன் என்கிறது ஓர் அறிக்கை! பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் IWWAGE, பெண்களுக்கான சட்ட உதவி அமைப்பு மற்றும் சமூக ஆய்வுகள் அறக்கட்டளை (ISST) ஆகியவை இணைந்து, ``Women in The Informal Economy” என்ற ஆய்வறிக்கையை கடந்த 2021, பிப்ரவரியில் வெளியிட்டிருக்கின்றன. இவ்வறிக்கை, இந்தியா உலகில் வேறெங்கும் இந்த அளவுக்கு, உற்பத்தியில் 90% தொழிலாளர் சக்தியை நம்பியிருப்பதாகத் தெரிவிக்கிறது. இதில் நிரந்தரப் பணியாளர்களும், முறைசாரா பணியாளர்களும் அடங்குவர்.

தொழிற்சாலைகள் முறையான ஒப்பந்தப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதோடு, முறைசாரா தொழிலாளர்களையும் தங்கள் உற்பத்தித் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. நிறுவன ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி, ஊதியவிடுப்பு மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகையில், முறைசாரா தொழிலாளர்களுக்கு இவை எதுவும் வழங்கப்படுவதில்லை. வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் சட்டமும் இல்லை.

விவசாய வேலை செய்யும் பெண்கள்
விவசாய வேலை செய்யும் பெண்கள்

91% பேர் முறைசாரா துறையைச் சேர்ந்தவர்கள்

இந்தியாவில் இதுபோல முறைசாரா துறையில் பணிபுரிபவர்களில் 23% மட்டுமே பெண்கள் என்றாலும், ஊதியம் பெறும் வேலைகளில் உள்ள இந்தியப் பெண்களில் 91% பேர் முறைசாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்று IWWAGE - ISST அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உழைப்பதோடு சேர்த்து பணிபுரியுமிடத்தில் பாதுகாப்பின்மை மற்றும் பாலின பாகுபாடு ஆகியவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒரே பிரிவில் ஒரே விதமான பணியைச் செய்யும் தொழிலாளர்களில் பெண்களுக்கு ஆண்களைவிட குறைந்த ஊதியமும் அதிக வேலை நேரமும் நிர்ணயிக்கப்படுவது பரவலாக அனைத்து துறைகளிலும் வழக்கத்திலிருக்கிறது.

உதாரணமாக, இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஜவுளித் தொழிலில் 14.6 மில்லியன் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இத்துறையில் வேலை செய்யும் பெண்களில் 6.1% பெண் தையல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். ``இந்தத் துறையில் ஊதியங்கள் கட்டமைக்கப் படுவதில் பாலின ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இந்தியாவின் ஆடை உற்பத்தித் துறையில் பெரும்பாலான ஆண்கள் நிலையான மாத ஊதியம் பெறுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் செய்யும் வேலைக்கேற்ப கூலி மட்டுமே பெறுகிறார்கள்” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அரசு என்ன செய்கிறது?

2019-ம் ஆண்டு இந்தியாவின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு மாதம் 3,000 ரூபாய் பென்ஷன் வழங்கப் போவதாகவும், இதற்காக உடனடியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கோயல் அறிவித்தார். ஆனால், இந்தத் திட்டத்தில் 18 முதல் 29 வயதுடையவர்கள் மட்டுமே சேர முடியுமென்றும், மாத வருமானம் 15,000 ரூபாய் வரை கிடைப்பவராக இருக்க வேண்டுமென்றும், அவர்களும் வருடம்தோறும் 1,200 ரூபாய் தவறாமல் செலுத்தி வந்தால் மட்டுமே அவர்கள் 60 வயதை எட்டும்போது மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதால் மொத்த தொழிலாளர்களில் 10% பேர் கூட இத்திட்டத்தில் சேர முடியாதவர்களாக இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

44 தொழிலாளர் சட்டங்களை நான்கு `குறியீடுகளின்’ (Codes) கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு இம்மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் என்ற குறியீடுகளின் மூலம் முதலாளிகள் சட்டங்களுக்கு இணங்குவதை எளிதாக்குவது, ஊழியர்களுக்கு கட்டாய வருமானத்துக்கு வழிகோலுவது போன்றவற்றை உறுதி செய்யும் இம்மாற்றங்கள், `தெளிவற்றவை’ என்றும் ஏற்கெனவே இருந்த சட்டங்களுக்கு மரு வைத்து மாறுவேடத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 2008-ல் அறிவிக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நலன்களை வழங்குவதற்கான `ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம்’ இன்னமும் செயல்படுத்தபடவே இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஊரடங்கு...
ஊரடங்கு...

கொரோனா ஊரடங்கு பாதிப்புகள்

கொரோனாவால் ஊரங்கு அறிவிக்கப்பட்டபோது முறைசாரா துறைகளில் பணிபுரிந்த வயதான பெண்கள் முதலில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வேலை, ஊதியம், உணவு, தங்குமிடம் முதலான எந்தவிதமான ஆதரவுக்கரமும் நீட்டாமல் அவர்களை நட்டாற்றில் விட்டன. டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் ஆடை உற்பத்தித் தொழிலில் இருக்கும் ஏறத்தாழ 82% முறைசாரா தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை அல்லது அதற்கும் குறைவான உணவை மட்டும் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஓர் அறிக்கை கூறுகிறது. (`Garment Workers in India’s Lockdown’, a June 2020 report by the Society for Labour and Development.) கொரோனா கால ஊரடங்கால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிறுவனங்களில் இப்போதிருக்கும் முறைசாரா ஊழியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு பணிகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.

தீர்வு என்ன?

IWWAGE - ISST அறிக்கை, வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அவற்றில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குதல், வருவாயில் பாலின ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல், சமூக பாதுகாப்பு, முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்தல், நிறுவனங்கள் பெண்களுக்கான கழிப்பறைகள், குழந்தைகள் பகல் காப்பகம், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல் எனச் சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது. ஆனால், இவையெல்லாம் அரசும் நிறுவனங்களும், சமூகமும் இணைந்து முயற்சியெடுத்தால் மட்டுமே நடைமுறையில் சாத்தியமாகும். அதற்கு இந்தக் கொரோனாவும் வழிவிட வேண்டும்.

IndiaSpend
IndiaSpend

Source:

- Shalini Singh / Indiaspend.org

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.)

தமிழில் : காயத்ரி சித்தார்த்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு