ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து 0.75% வரை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிதிக்கொள்கை கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்த போவதாகவும், அதனையடுத்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் 0. 35% உயர்த்த போவதாகவும் கூறப்படுகிறது. மொத்தமாக 0.75% வரை வட்டி விகிதம் உயரும் என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போது கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவிகிதமாக இருக்கும் நிலையில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் மேலும் 0.40% உயர்ந்தால் 4.80 சதவீதமாக அதிகரிக்கும். அதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நிதிக்கொள்கை கூட்டத்திலும் 0.35% வரை உயர்த்தப்படலாம். இல்லையெனில், அடுத்த வாரம் 0.50% உயர்த்திவிட்டு ஆகஸ்ட் மாதம் 0.25% உயர்த்தப்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் இன்னும் 0.75% வரை வட்டி விகிதம் உயரும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறகின்றனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கடனுக்கான வட்டி விகிதம் அடுத்தடுத்து உயரும் என்பதை உறுதி செய்தார்.
ஆனால், எவ்வளவு உயரும் என்பதை அவர் கூறவில்லை என்றாலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வரை வட்டி விகிதம் உயரும் என்று கூறப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் ஒரே நிலையில் இருப்பதால் மே மாதத்தில் பணவீக்கம் 7.5 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கான வரி குறைப்பு மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு, விமான எரிபொருள் குறைப்பு ஆகியவை எல்லாம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த மாதம் நடைபெறும் நிதிக்கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 0.40%, ஆகஸ்ட் மாதத்தில் 0.35%, ஒட்டுமொத்தமாக 0.75 % உயர்த்தப்பட்டால் வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் இது அனைத்தும் பொதுமக்கள் தலையில்தான் சுமத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் என்ன சுமை தாங்கிகளா நினைக்கும்போதெல்லாம் வட்டியை உயர்த்த?