Published:Updated:

படையெடுத்து வந்த சோகம்... துவண்டுவிடாமல் ஜெயித்துக் காட்டிய பிசினஸ்வுமன்! #திருப்புமுனை-25

தெர்மாக்ஸ் நிறுவனம்

சொந்த வாழ்க்கையில் சோகமான பல சம்பவங்கள் நடந்திருந்தால், பலரும் துவண்டுபோய் விடுவார்கள். ஆனால், அனுவோ அந்த சோகங்களைத் தாங்கிக்கொண்டதுடன், அதிலிருந்து மீண்டுவந்து தெர்மாக்ஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்

படையெடுத்து வந்த சோகம்... துவண்டுவிடாமல் ஜெயித்துக் காட்டிய பிசினஸ்வுமன்! #திருப்புமுனை-25

சொந்த வாழ்க்கையில் சோகமான பல சம்பவங்கள் நடந்திருந்தால், பலரும் துவண்டுபோய் விடுவார்கள். ஆனால், அனுவோ அந்த சோகங்களைத் தாங்கிக்கொண்டதுடன், அதிலிருந்து மீண்டுவந்து தெர்மாக்ஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்

Published:Updated:
தெர்மாக்ஸ் நிறுவனம்

திருப்புமுனையில் இது 25 வாரம். தோல்விகள் தரும் வலிகளில் இருந்து திருப்புமுனைகளை உருவாக்கி, ஜெயிப்பது ஒருவகை. சோகமான நிகழ்வுகள் தரும் வலிகளில் இருந்து மீண்டு வந்து திருப்புமுனை படைப்பது இன்னொரு வகை. அடுத்தடுத்து நிகழ்ந்த பல சோகமான சம்பவங்களில் இருந்து மீண்டுவந்து சாதனை படைத்த ஒரு தொழிலதிபரைத்தான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம். அவர்தான் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு ஆகா (Anu aga).

அனு அகா
அனு அகா

பார்சி   குடும்பத்தில்   பிறந்தார்...

1942-ம் ஆண்டு பார்சி குடும்பத்தில் பிறந்தவர் அனு ஆகா. செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவர். அதைத் தொடர்ந்து டாடா இன்ஸ்டிட்டியூட் ஆப் சோசியல் சயின்ஸில் படித்தார்.

அனுவின் அப்பா வான்சன் இந்தியா என்னும் நிறுவனத்தை நடத்தினார். இந்த நிறுவனத்தில் கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் ரோஹிண்டன் (Rohinton Aga) பணியாற்றினார். 1965-ம் ஆண்டு அனுவுக்கும், ரோஹிண்டனுக்கும் இடையே திருமணம் நடந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

படையெடுத்து வந்த சோகம்...

திருமணத்தைத் தவிர நடந்த மற்ற அனைத்து விஷயங்களும் சோகம் மட்டுமே. இந்த இணைக்கு முதலில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. மூன்றாவதாக, பிறந்த மகனுக்கு இதயத்தில் ஓட்டை கண்டறியப்பட்டது.

இத்துடன் முடியவில்லை. 1982-ம் ஆண்டு கணவருக்கு மாரடைப்பு. இதற்கான அறுவை சிகிச்சை செய்யும்போது ஸ்ட்ரோக் வந்ததால், இரு ஆண்டுகள் அவரால் இயல்பான வேலைகளை செய்ய முடியவில்லை. (இதற்கிடையே வான்சன் இந்தியா என்கிற நிறுவனம் 1980-ம் ஆண்டு தெர்மாக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. )

அனு ஆகா தன் கணவருடன்
அனு ஆகா தன் கணவருடன்

அதனால் தெர்மாக்ஸ் நிறுவனத்தில் ஹெச்.ஆர் பிரிவில் வேலைக்கு செல்லத் தொடங்கினார் அனு. இதிலிருந்து மீண்டுவந்த ரோஹிண்டன் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்தார்.

1995-ம் ஆண்டு தெர்மாக்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. மகள், மெஹர் இங்கிலாந்தில் செட்டில் ஆகியிருந்தார். முதல் குழந்தை பிறந்த பிறகு, அந்தக் குழந்தையுடன் இந்தியாவுக்கு வந்தவரை, பூனேவில் இருந்து மும்பைக்கு அழைத்துவர சென்று கொண்டிருந்த ரோஹிண்டனுக்கு இரண்டாவது அட்டாக் வந்தது. தெர்மாக்ஸ் நிறுவனம் பட்டியலான ஓர் ஆண்டுக்குள் இறந்துவிட்டார் ரோஹிண்டன்.

இதுவரை தனியார் நிறுவனமாக இருந்தது வரை சிக்கல் இல்லை. ஆனால், தற்போது பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதால், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அதனால் ரோஹிண்டன் இறந்து 48 மணி நேரத்துக்குள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் அனுவுக்கு. அடுத்த ஓர் ஆண்டில் ரோஹிண்டன் அம்மா இறக்க, அதே சமயத்தில் அனுவின் 25 வயது மகன் கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

‘கடவுளே, என் கஷ்டத்துக்கு ஒரு முடிவே இல்லையா...’ என்று கதறுகிற மாதிரி, தொடர் சோகங்கள் மட்டுமே அனுவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்தன.

பெரும் சிக்கலில் சிக்கிய நிறுவனம்...

சொந்த வாழ்க்கையில் சோகம் ஒருப் பக்கம் எனில், நிறுவனத்தில் நடந்த பெரும் சோகங்கள் இன்னொரு பக்கம். 400 ரூபாயில் வர்த்தகமான தெர்மாக்ஸ் நிறுவனப் பங்கு 36 ரூபாய் வரை சரிந்தது.

வெற்றிதான் வீழ்ச்சிக்கான தொடக்கப் புள்ளி என்பது போல, இந்த நிறுவனம் பட்டியலானதில் இருந்தே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து சரிந்துகொண்டே இருந்தன. முதலில் தேவை இல்லாத பல விரிவாக்க நடவடிக்கைகள நிறுவனம் எடுத்தது. மூலப்பொருள் விலையேற்றம், பொருளாதார மந்தநிலை என அனைத்தும் சேர்ந்து வீழத் தொடங்கியது.

தெர்மாக்ஸ்
தெர்மாக்ஸ்

தெர்மாக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக 1999-ம் ஆண்டு நஷ்டம். உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்காமல் இருந்ததால்தான் இந்த நஷ்டம் என நிறுவனத்தின் முக்கியமான உயரதிகாரிகள் நம்பினார்கள்.

இந்த நிலையில், சிறு முதலீட்டாளர்கள் பங்குகள் சரிவதைக் குறித்து அச்சம் தெரிவித்து கடிதம் எழுதினார்கள். `இந்த மெயில் வரும் வரை நிறுவனத்தில் நடக்கும் எது குறித்தும் நான் பெரிய அளவில் கவனம் கொள்ளவில்லை. ஆனால், இந்த மெயில் என்னை வேறு மாதிரி செயல்பட வைத்தது’ என்று சொல்லிவிட்டு களத்தில் இறங்கினார் அனு.

2004-ம் ஆண்டு, அதுவரை இல்லாத அளவுக்கு நிறுவனத்தின் வருமானம் ரூ.1,281 கோடியாக உயர்ந்தது....

அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அனு...

முதலில், மொத்த இயக்குநர்கள் குழுவையும் நீக்கினார். நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த இயக்குநர் குழு மற்றும் நிர்வாக இயக்குநர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த சிக்கலைக் களைவதற்கு சர்வதேச ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப்-ஐ (BCG) துணைக்கு அழைத்தார் அனு. நிறுவனத்தை முழுவதும் கண்டறிந்த பி.சி.ஜி முக்கியமான ஆலோசனைகளை வழங்கியது. இவற்றில் பெரும்பாலானவற்றை எந்தத் தயக்கமும் இன்றி அமல்படுத்தினார் அனு.

தெர்மாக்ஸ் நிறுவனம்
தெர்மாக்ஸ் நிறுவனம்

தேவைக்கு அதிகமான மூலப்பொருள்கள், தேவைக்கு அதிகமான பணியாளர்கள் என ஒழுங்கற்று இருந்ததால், நஷ்டத்தை சந்தித்துவந்தது தெர்மாக்ஸ் நிறுவனம். இன்ஜினீயரிங் நிறுவனமாக இருந்த தெர்மாக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள், சாப்ட்வேர், லீஸ் ஃபைனான்ஸ், பெயிண்ட், பாட்டலிங் ஆலை என விரிவாக்கம் செய்யப்பட்டதால், முதலீடு பரவலாக்கப்பட்டது.

எங்கெல்லாம் செலவைக் குறைக்க முடியுமோ, அங்கெல்லாம் செலவு குறைக்கப்பட்டது. சப்ளை செயின் சீராக்கப்பட்டது. பணியாளர்களுக்கு வி.ஆர்.எஸ் வழங்கப்பட்டது. சில நூறு பணியாளர்கள் ஓய்வு பெற்றனர். 2,200 பணியாளர்களில் இருந்து 800 பணியாளர்களாக குறைக்கப்பட்டனர். மொத்த வருமானத்தில் பணியாளர்கள் செலவு 16 சதவிகிதமாக இருந்த சூழலில் இதனை 7.5 சதவிகிதமாக அனு குறைத்தார்.

மேலும், தேவை இல்லாத பிரிவுகள் போட்டி நிறுவனங்களிடம் விற்கப்பட்டன. இதுபோல, பல நடவடிக்கைகளை ஒன்றாக எடுத்ததால், 2004-ம் ஆண்டு, அதுவரை இல்லாத அளவுக்கு நிறுவனத்தின் வருமானம் ரூ.1,281 கோடியாக உயர்ந்தது.

சமூக சேவையில் ஆர்வம் காட்டும் அனு

2004-ம் ஆண்டு தன்னுடைய 62-வது வயதில் முக்கியமான பொறுப்புகளில் இருந்து விலகி அனு ஆகா சமூக சேவைகளில் கவனம் செலுத்தினார்.

இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் தொழிலில் பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும் சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தெர்மாக்ஸ்
தெர்மாக்ஸ்

தற்போது 80 வயதாகும் அனு, சமூக சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளின் பட்டியலில் இவரும் இருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில் சோகமான பல சம்பவங்கள் நடந்திருந்தால், பலரும் துவண்டுபோய் விடுவார்கள். ஆனால், அனுவோ அந்த சோகங்களைத் தாங்கிக் கொண்டதுடன், அதிலிருந்து மீண்டுவந்து தெர்மாக்ஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.

தெர்மாக்ஸ் நிறுவனமும் அனு ஆகாவும் நமக்கு மிகப் பெரிய இன்ஷ்பிரஷேனாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

(திருப்புமுனை தொடரும்)