Published:Updated:

இந்தியாவின் முன்னணி கன்ஸ்யூமர் பிராண்டாக தமிழகத்தின் `டைட்டன்' ஆனது எப்படி? #Titan

Titan
Titan

டைட்டன் நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாற்றம் கண்டு, இன்றைக்கு இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் மிகப் பெரிய பிராண்டாக மாறியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைட்டன் வாட்ச், கடிகாரப் பிரியர்களின் மிகப் பிரபலமான பிராண்ட் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த நிறுவனத்தின் 27.88% பங்குகள் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத தகவல். எப்படி இது சாத்தியமானது, டைட்டன் நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாற்றம் கண்டு, இன்றைக்கு இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் மிகப் பெரிய பிராண்டாக மாறியிருக்கிறது என்பதை பிரபல பத்திரிகையாளரான வினய் காமத் `டைட்டன் – இன்சைட் இண்டியா’ஸ் மோஸ்ட் சக்ஸஸ்ஃபுல் கன்ஸ்யூமர் பிராண்ட்’ என்கிற புத்தகத்தில் சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகத்திலிருந்து முக்கியமான சில விஷயங்களைப் பார்ப்போம்.

டைட்டன் பெயர் எப்படி வந்தது?

டைட்டன் நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் அந்த நிறுவனத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு விவாதமே நடந்தது. காரணம், டாடா தொடங்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் அந்த நிறுவனத்தின் பெயர் ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கும். அந்த வகையில் பலரும் கூடி விவாதித்தார்கள். கடைசியில், `TATA Industries (TI), Tamilnadu (TAN)’ என்கிற இரண்டு வார்த்தைகளில் இருக்கும் சில எழுத்துகளை எடுத்து டைட்டன் என்கிற பெயரை உருவாக்கினார்கள். இந்தப் பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிப்பதாக இருந்தது. கிரேக்கப் புராணங்களில் டைட்டன் பலத்துக்கும் உறுதிக்குமான கடவுள். டைட்டனின் தயாரிப்புகளும் பலமாகவும் உறுதியாகவும் இருக்கும் என்கிற அர்த்தம் தரும் என்பதற்காக இந்தப் பெயரை வைத்தார்கள்.

மொஸார்ட்டின் 25-வது சிம்பனி

இந்த நிறுவனம் ஆரம்பித்தவுடன் ஹெச்.எம்.டி நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த அமிதா, ஹரிராவ், துவாரகநாத், சாந்தாராம் போன்றவர்கள் இதில் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிவந்த நிறுவனம் ஒன்றோடு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1987-ம் ஆண்டு டைட்டன் கடிகார தொலைக்காட்சி விளம்பரத்தில் வெளியான அந்த இசை (மொஸார்ட்டின் 25-வது சிம்பனி) இன்றைக்கும் தொடர்ந்து ஒலித்துவருவது குறிப்பிடத்தக்கதாகும். அதே ஆண்டு டிசம்பர் மாதம் டைட்டனின் முதல் சில்லறை விற்பனைக் கடை பெங்களூருவில் இருக்கும் சஃபீனா ப்ளாசாவில் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கடை திறந்த அன்று மக்கள் அன்றைக்கு வெளியான பத்திரிகை விளம்பரத்தோடு வருகை தந்தனர்!

சஃபீனா ப்ளாசா கடையின் வெற்றிக்குப் பிறகு பத்தாயிரம் மக்கள் தொகைக்கு மேலாக இருக்கும் நகரங்களில் எல்லாம் டீலர்களை நியமிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது. அதோடு வழக்கமான முறையில் இல்லாமல் புத்தகக்கடைகள், நகைக்கடைகள், பிரபலமான ரெஸ்டாரெண்டுகள் எனப் பல இடங்களிலும் டைட்டன் தனது தயாரிப்புகளை விற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தியது.

டைட்டன் ஷோரூம்களில் வேலை பார்க்கும் விற்பனையாளர்கள் அந்தப் பகுதியிலிருக்கும் ரேமண்ட்ஸ், பாட்டா ஷோரூம்களின் விற்பனை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்கிற நோக்கில் அப்போது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவில் உயர் அதிகாரியாக இருந்த ரவிகாந்த் அவர்களுக்கு அவ்வப்போது `க்விஸ்' வைப்பதுண்டு.

Titan Company
Titan Company

போட்டியாளர்களை அரவணைத்த ஸ்ட்ராட்டஜி

கடிகாரங்களை விற்பனை செய்தால் மட்டும் போதாது, அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதற்கு சேவை மையங்கள் அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு ஷோரூமின் ஒரு பகுதியில் குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் சேவை மையங்கள் நிறுவி ஒரு மாற்றத்தை உருவாக்கியது.

ஆரம்பத்திலிருந்து டைட்டன் ஹெச்.எம்.டி, ஆல்வின் போன்ற நிறுவனங்களை போட்டியாளர்களாகக் கருதவில்லை. மாறாக, வெளிநாடுகளிலிருந்து கள்ளத்தனமாக இந்தியச் சந்தையில் விற்கப்பட்டு வரும் கடிகாரங்களைத்தான் போட்டியாகக் கருதிவந்தது. இதனால் உலகளவில் புகழ்பெற்ற பல டிசைன்களிலும், பல விலைகளிலும் தனது தயாரிப்பை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

வாட்ச் பரிசு

சேலைக்கு மாற்றாகக் கடிகாரம் வாங்குவதையும், ஏதாவது விசேஷம் எனில் கடிகாரம் பரிசளிப்பதையும் பிரபலப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு அதிலும் வெற்றியடைந்தது. ஐரோப்பியச் சந்தையில் நுழைந்த டைட்டன் போதுமான விநியோக வசதியும், அந்நாட்டவரின் விருப்பத்துக்கேற்ற டிசைன்களையும் உருவாக்காததால் மிகப் பெரிய தோல்வியடைந்தது.

Titan watch
Titan watch

2002-ம் ஆண்டு டைட்டன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த பாஸ்கர் பட், ``புதிதாக எதுவொன்றையும் வணிகரீதியில் அறிமுகப்படுத்துவதற்கு முன் `பைலட்' (முன்னோட்டம்) செய்ய வேண்டுமென்பதை நாங்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டோம்" எனக் கூறினார். ஒரே நேரத்தில் பதினோரு நாடுகளில் தங்களது தயாரிப்பை அறிமுகப்படுத்தும் `ரிஸ்க்’கையும் டைட்டன் மேற்கொண்டது.

2000-மாவது ஆண்டில் 27-வது மாநிலமாக உத்தராகண்ட் மாநிலம் உதயமான புதிதில் அங்கு நிறுவப்படும் தொழிற்சாலைகளுக்கு பத்தாண்டுகளுக்கு கலால் வரி எதுவும் வசூலிக்கப்படாது என்றும், லாபத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை என்கிற அறிவிப்பால் உந்தப்பட்ட டைட்டன் அங்கு மிகப் பெரிய தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தது.

வாட்ச் டு ஜுவல்லரி

டைட்டன், நகை உற்பத்தி & விற்பனையில் நுழைவதைப் பலரும் விரும்பவில்லை. இருந்தாலும் துணிச்சலுடன் `தனிஷ்க்’ பிராண்டின் மூலம் `டாடா’ குழுமத்தின் நம்பகத்தன்மையைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு அதிரடியாகக் களத்தில் இறங்கி வெற்றியடைந்தது. முதலில் `நிஷ்கா’ என்கிற பெயர்தான் வைப்பதாக இருந்தது அதன்பின் பல கலந்தாலோசனைக்குப் பிறகு `தனிஷ்க்’ என்கிற பெயர் தெரிவு செய்யப்பட்டது.

நகைகளின் `காரட்’ டை சோதிக்கும் பொருட்டு காரட் மீட்டர் என்கிற ஒரு சாதனத்தை வெளிநாட்டிலிருந்து தனிஷ்க் இறக்குமதி செய்தது. பாரம்பர்யமாக நகை செய்து தருபவர்கள் 14 அல்லது 18 காரட்களில் நகை செய்து தங்களிடம் 22 காரட் எனச் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என மக்களிடையே ஒரு கருத்து நிலவியது. அந்த நேரத்தில் இந்த சாதனத்தை இறக்குமதி செய்ததால் எங்கே தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றெண்ணி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனிஷ்க் `19=22’ என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களிடம் இருக்கும் நகைகளை பரிசோதனை செய்து கொள்ளலாமென்றும் அது 19 காரட்டுக்கு அதிகமாக, ஆனால் 22 காரட்டுக்கு குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்தக் குறைவான தங்கத்தையும் ஈடுசெய்து, தயாரிப்புக் கூலி இல்லாமல் புதிய நகை செய்து தருவதாக தனிஷ்க் அறிவிக்க அது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மாருதி நிறுவனம் 50,000 தங்க நாணயங்களுக்கு ஆர்டர் கொடுத்தது தனிஷ்க்கின் ஆரம்பகால விற்பனைக்கு உதவியது. இப்படியாக பல விதங்களில் புதுமைகளை அறிமுகப்படுத்தி தனக்கென்று ஒரு இடத்தை டைட்டன் தக்கவைத்துக் கொண்டது.

TITAN: Inside India’s Most Successful Consumer Brand
TITAN: Inside India’s Most Successful Consumer Brand

கண்ணாடி, அழகுசாதனப் பொருள்கள்

வாட்ச் தயாரிக்க ஆரம்பித்த டைட்டன் நிறுவனம், இன்று பலவிதமான பொருள்களைத் தயார் செய்து விற்கிறது. மூக்குக் கண்ணாடி (டைட்டன் ஐ-ப்ளஸ்), அழகுசாதனப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள் (டைட்டன் ஸ்கின்), ஃபாஸ்ட்ராக் என்கிற பெயரில் நவீன பாணி பொருள்கள், டனேரியா (Taneira) என்கிற பெயரில் சேலைகள் என ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி, வெற்றி நடைபோட்டு வருகிறது.

சக்திகந்த தாஸ்தான் தலைவர்

* இப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் சக்திகாந்த தாஸ் 2006-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை டைட்டனின் சேர்மனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* 2015-ம் ஆண்டு இது தனது 1,000-மாவது கடையை பெங்களூருவின் இந்திரா நகரில் திறந்தது.

* 2017-ம் ஆண்டு டைட்டன் கம்பெனி லிமிட்டெட்டின் சந்தை மூலதனம் சுமார் 10 பில்லியன் டாலரையும் தாண்டியது.

* 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை டைட்டன் நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்திய கடிகாரங்களின் எண்ணிக்கை சுமார் 225 மில்லியன் ஆகும். இது உலகளவில் கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது.

இனிவரும் காலத்தில் இன்னும் பல்வேறு பொருள்களைத் தயார் செய்து, தனது சாம்ராஜ்யத்தை உலகம் முழுக்க பரப்பும் வல்லமை டைட்டன் நிறுவனத்துக்கு நிச்சயம் உண்டு. இத்தகைய நிறுவனம் நம் தமிழகத்தில் இருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமைதானே!

அடுத்த கட்டுரைக்கு