Published:Updated:

உங்கள் வாழ்க்கையின் பாதுகாவலர்கள் இந்த இரண்டு இன்ஷூரன்ஸ்கள்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 48

கப்பல் மூழ்கிவிட்டால் உரிமையாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மற்ற கப்பல் உரிமையாளர்கள் கைகோக்கும் ரோமானிய `மரைன் இன்ஷூரன்ஸ்தான்' முதலில் வந்த காப்பீடு. தீவிபத்துக்கான இன்ஷூரன்ஸும் மற்ற சொத்துக்களுக்கான இன்ஷூரன்ஸும் அதன் பின் வந்தது.

கடந்த அத்தியாயத்தில் இன்ஷூரன்ஸ் என்பது வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகளின் கொடிய தாக்கத்தில் இருந்து நம்மைப் பொருளாதார ரீதியாகக் காக்க வல்ல பாதுகாப்பு அரண் என்று பார்த்தோம். ஆதி மனிதன் வேட்டையாட கூட்டமாகப் போனதும், அடுத்த மனிதன் கடற்கொள்ளையரைச் சமாளிக்க கப்பல்களைக் கூட்டமாகச் செலுத்தியதும் ரிஸ்க்கைப் பரவலாக்கும் முறைதான். கப்பல் மூழ்கிவிட்டால் உரிமையாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட மற்ற கப்பல் உரிமையாளர்கள் கைகோக்கும் ரோமானிய `மரைன் இன்ஷூரன்ஸ்தான்' முதலில் வந்த காப்பீடு. தீ விபத்துக்கான இன்ஷூரன்ஸும், மற்ற சொத்துக்களுக்கான இன்ஷூரன்ஸும் அதன் பின் வந்தது. இன்று நாம் காணும் லைஃப் இன்ஷூரன்ஸ் 1759-ம் வருடம் அமெரிக்காவில் தோன்றியது.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)
சில நிமிடங்களில் கடன்கொடுக்கும் `டிஜிட்டல் லெண்டிங்' - ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்ன? - 45

இன்ஷூரன்ஸ் செயல்படுவது எப்படி?

இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது நாம் ஒரு சிறு தொகையை பிரீமியமாகக் கட்டுகிறோம். நமக்கு எதிர்பாராத சேதங்கள் ஏற்படும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசியின் அடிப்படையில் இழப்பீடு வழங்குகின்றன. பாலிசிதாரர் செலுத்தும் பிரீமியத்தில் ஒரு பகுதி இழப்பீட்டுத் தொகையை உருவாக்கச் செல்கிறது; இன்னொரு பகுதி ரிஸ்க் குறைந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

லைஃப் இன்ஷூரன்ஸ் / நான் லைஃப் இன்ஷூரன்ஸ்:

பொதுவாக இன்ஷூரன்ஸை லைஃப், நான் லைஃப் என்று இரண்டாகப் பிரிப்பர்கள். லைஃப் இன்ஷூரன்ஸை ஆயுள் காப்பீடு என்றும் கூறுவார்கள். குடும்பத்தின் செலவுகளுக்குப் பணம் ஈட்டும் முக்கிய நபர் உயிரிழக்கும் பட்சத்தில், அந்த வலியை இறைவனாலும் ஈடு செய்ய இயலாது. ஆனால், அந்தக் குடும்பம் தன் வழக்கமான செலவுகளைக் குறைக்கவோ, குறிக்கோள்களை மாற்றவோ தேவையில்லாத அளவுக்குப் பொருளாதார ரீதியாக ஈடு செய்ய முடியும். அதைத்தான் லைஃப் இன்ஷூரன்ஸ் செய்கிறது. கொரோனா காலத்தில் இதன் தேவை மக்களுக்கு முழுவதுமாகப் புலனாகியது.

நான்-லைஃப் இன்ஷூரன்ஸை ஜெனரல் இன்ஷூரன்ஸ் என்போம். இது உயிர் தவிர்த்த மற்ற இழப்புகளுக்குக் காப்பீடு வழங்குகிறது. வீட்டுக்காப்பீடு, நகைக்காப்பீடு, வாகனக்காப்பீடு, விவசாயக் காப்பீடு, திருட்டு, பூகம்பம், வெள்ளம், பயங்கரவாதம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புக்கான காப்பீடு ஆகியவற்றைத் தருவது ஜெனரல் இன்ஷூரன்ஸ். கொரோனா காலத்தில் பலருக்கும் மிகவும் உதவியாக இருந்தது ஹெல்த் இன்ஷூரன்ஸ். இதுவும் ஜெனரல் இன்ஷூரன்ஸின் ஒரு அங்கமே.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)
இந்த 4 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் கடன்களை எளிதாக அடைக்கலாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 46

லைஃப் இன்ஷூரன்ஸ், நான் லைஃப் இன்ஷூரன்ஸ் என்ற இரண்டுமே இழப்பீடு தருபவை என்றாலும், இவற்றுக்கு இடையே சில வித்தியாசங்கள் உண்டு.

  • லைஃப் இன்ஷூரன்ஸ் ஒரு நீண்ட கால ஒப்பந்தம். இதற்கான பிரீமியத்தை ஒப்பந்தப்படி அவ்வப்போது செலுத்திவர வேண்டும். ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஒரு குறுகிய கால ஒப்பந்தம். ஒப்பந்தம் காலாவதியாகும்போது, முழு பிரீமியமும் செலுத்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

  • லைஃப் இன்ஷூரன்ஸில் முதலீட்டுக்கு உண்டான சில அம்சங்கள் உள்ளன. உயிரிழப்பு நேர்ந்தால் முழுத் தொகை கிடைக்கும் என்பது மட்டுமல்ல; யூலிப், மணி பேக் போன்ற சில பாலிசிகளில், உயிரிழப்பு இன்றி, பாலிசி ஹோல்டர் வெற்றிகரமாகப் பாலிசி காலத்தை முடிக்கும் பட்சத்தில், அவர் செலுத்திய பிரீமியமும், போனஸ் போன்ற சில எக்ஸ்ட்ரா நன்மைகளும் மொத்தமாகக் கிடைக்கும். ஜெனரல் இன்ஷூரன்ஸில் முதலீட்டின் சாயல் கிடையாது. நஷ்டம் அல்லது இழப்பு ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் அது ஈடு செய்யப்படும். க்ளெய்ம் ஏதும் இல்லாத பட்சத்தில் பணம் எதுவும் திரும்ப வராது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • லைஃப் இன்ஷூரன்ஸில் பாலிசி எடுக்கும்போது மட்டும் பாலிசிதாரர் உடனிருக்க வேண்டும். ஜெனரல் இன்ஷூரன்ஸில் பாலிசி எடுக்கும்போதும், இழப்பீடு கேட்கும்போதும் பாலிசிதாரர் இருக்க வேண்டும்.

  • லைஃப் இன்ஷூரன்ஸில் பாலிசிதாரர் இறந்தாலோ, பாலிசி முடிவடைந்தாலோ பணம் கிடைக்கும். ஜெனரல் இன்ஷூரன்ஸில் இழப்பு ஏற்பட்டால் மட்டுமே பணம் கிடைக்கும்.

  • லைஃப் இன்ஷூரன்ஸில் இன்ஷூர் செய்த முழுத்தொகையும் இழப்பீடாகக் கிடைக்கும். ஜெனரல் இன்ஷூரன்ஸில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டதோ அதற்கான இழப்பீடு மட்டுமே கிட்டும்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)
இன்னும் இன்ஷூரன்ஸை ஒரு முதலீடாகவே நினைக்கிறீர்களா?தவறு செய்கிறீர்கள்! - பணம் பண்ணலாம் வாங்க - 47

வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும்

இன்ஷூரன்ஸ் நமக்கு உதவுவது உண்மைதான். வாழும்போது நமது சொத்துக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட ஜெனரல் இன்ஷூரன்ஸ் உதவுகிறது. நம் வாழ்க்கைக்குப் பின் நம் குடும்பம் பணமின்றித் தத்தளிக்காமல் வாழ்க்கையில் மேற்செல்ல லைஃப் இன்ஷூரன்ஸ் உதவுகிறது. இப்படி இந்த இரு வித இன்ஷூரன்ஸ்களும் மனித வாழ்வின் எல்லா ஆபத்துத் தருணங்களிலும் பாதுகாவலாக உடனிருக்கின்றன.

- இனி அடுத்து புதன்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு