Election bannerElection banner
Published:Updated:

காசோலை பரிவர்த்தனை முதல் FASTag வரை... ஜனவரி முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

Credit Card
Credit Card ( Photo by Ales Nesetril on Unsplash )

இன்னும் இருநாளில் புத்தாண்டு 2021 பிறக்கவிருக்கிறது. வரும் ஜனவரியிலிருந்து நிதி தொடர்பான சில விஷயங்களில் சின்ன சின்ன மாற்றங்களும் அமலுக்கு வருகின்றன. அவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.

1. காசோலை பரிவர்த்தனையில் மாறுதல் - (Positive pay system)

ரிசர்வ் வங்கி 2021 ஜனவரி 1 முதல் நடைபெறவிருக்கும் காசோலை பணப் பரிவர்த்தனைகளுக்கான முறையில் மாறுதல்களை அறிவித்துள்ளது. 

அதன்படி 50,000 ரூபாய்க்கு மேல் காசோலை வாயிலாகப் பணபரிவர்த்தனை செய்யும் ஒருவர் அந்தக் காசோலை யாருக்கு வழங்கப்படுகிறது, என்ன தேதியில் வழங்கப்படுகிறது, எவ்வளவு தொகைக்கு வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை வங்கிகளுக்குத் தர வேண்டும்.

அந்தச் காசோலையை பரிசீலனை செய்யும்போது வாடிக்கையாளர் கொடுத்துள்ள தகவல்கள் சரிபார்க்கப்படும். இதில் தவறுகள் இருந்தால் அந்த காசோலை பரிசீலிக்கப்படாது.

இந்தத் தகவல்களை வாடிக்கையாளர்கள் தமது மொபைல் ஆப்பின் மூலமாகவோ, வங்கிக் கிளையிலோ, இன்டர்நெட் பேங்கிங் வாயிலாகவோ, ஏ.டி.எம் மூலமாகவோ தெரிவிக்க முடியும். இதற்கான வசதிகளை ஒவ்வொரு வங்கியும் தமது வாடிக்கையாளர்களுக்கு செய்து தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

Representational Image
Representational Image

இதன் மூலம் காசோலை மோசடிகளைப் பெருமளவு குறைக்க முடியும். பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

ரூ.50,000-க்கு மேல் காசோலை கொடுக்கும் ஒவ்வொருவரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். என்றாலும் இந்தத் தகவல்களை வாடிக்கையாளர் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், ரூ. 5 லட்சத்துக்கு மேல் காசோலை மூலம் பரிவர்த்தனை செய்யும்போது இந்தத் தகவல்கள் கட்டாயமாகும். இவற்றைக் கொடுத்தால் மட்டுமே இனி ரூ. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புடைய காசோலைகள் செல்லுபடியாகும். இந்த மாற்றமானது வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கொண்டு வரப்படுவதால் சரியான தகவல்களை வாடிக்கையாளர்கள் கொடுப்பது அவசியம்.

2. தொடர்பில்லாத அட்டை பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு (Contactless card transaction limit)

தற்போது வாடிக்கையாளர் தனது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வாயிலாகப் பணம் செலுத்தும்போது பின் நம்பர் செலுத்தாமல் 2,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும். இதன் உச்ச வரம்பை ஜனவரி 1 முதல் ரூ. 5,000 ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. தற்போதுள்ள டிஜிட்டல் காலத்தில் வாடிக்கையாளர் எளிமையாகத் தமது பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இது உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்த உச்ச வரம்பை வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு இணங்க ரூ.5,000 வரை உயர்த்திக்கொள்ள முடியும். வாடிக்கையாளர் வங்கிகளில் இந்த உயர்வுக்கு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே இந்த உச்சவரம்பு அவர் கணக்கில் நடைமுறைப்படுத்தப்படும். அதனால் தேவை இருந்தால் மட்டும் இந்த உச்சவரம்பை வாடிக்கையாளர்கள் உயர்த்திக் கொள்ளலாம்.

Fastag
Fastag

3. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டாக் (FASTag) கட்டாயம்

மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் 2021 ஜனவரி 1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டாக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் கூட்டம் கணிசமாகக் குறையும். மோட்டார் வாகன சட்டம் 1989-ல் மத்திய அரசு இதற்காக மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

புதிதாக விற்கப்படும் வாகனங்களில் ஃபாஸ்ட் டாக் வசதி வாங்கும்போதே கடந்த சில ஆண்டுகளாகச் செய்து தரப்பட்டு வருகிறது. இந்த வசதியை இன்னும் பெறாத பழைய நான்கு சக்கர உரிமையாளர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்வது முக்கியம்.  ஃபாஸ்ட் டாக் இன்னும் வாங்காதவர்கள் வங்கிகளிலோ, சுங்கச் சாவடி மையங்களிலோ, அமேசான்/ பேடிஎம் போன்ற இணையதளங்களிலோ விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்

4. மல்டி கேப் ஃபண்டுகளில் செபியின் புதிய கட்டுப்பாடுகள்:

மல்டி கேப் ஃபண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பொதுவாக, பெரிய நிறுவனங்கள் (large cap), நடுத்தர நிறுவனங்கள் (midcap) மற்றும் சிறிய நிறுவனங்கள் (small cap) எனப் பிரித்து முதலீடு செய்யும். ஆனால், மல்டி கேப் ஃபண்டுகளில் எந்தப் பிரிவுகளில் எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான மல்டிகேப் ஃபண்டுகள் அதிக அளவில் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இந்த முதலீட்டு கலவையில் புதிய கட்டுப்பாடுகளை செபி கடந்த ஆண்டு விதித்துள்ளது. அதன்படி மல்டி கேப் ஃபண்டுகளில் தலா 25 சதவிகிதம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். மீதியுள்ள 25 சதவிகிதத்தை ஃபண்டு மேனேஜரின் விருப்பப்படி பெரிய, நடுத்தர அல்லது சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

இந்த மாற்றத்தின் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தாங்கள் அதிகம் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களை விற்றுவிட்டு அதிக அளவு சிறிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த மாற்றத்தை ஜனவரி மாதத்துக்குள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது. அதிக அளவு பெரிய நிறுவனங்களை விற்பனை செய்வது சென்செக்ஸ் பங்குகளில் சரிவை ஏற்படுத்தலாம். அதனால் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதைச் செயல்படுத்துவதற்கு காலம் தாழ்த்தி வருகின்றன.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு செபி மற்றொரு தீர்வை முன்வைத்துள்ளது. மல்டி கேப் ஃபண்டுகளில்தான் இந்தப் புதிய விதி பொருந்தும். இந்த மாற்றத்தை விரும்பாத மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தமது திட்டத்தின் பெயரை மல்டி கேப் ஃபண்ட் என்று குறிப்பிடாமல் வேறு பெயரில் மாற்றம் செய்து கொள்ளலாம். அவ்வாறு மாற்றம் செய்தால் பங்குகளில் எந்த விகிதாசாரமும் கடைப்பிடிக்க வேண்டியது இல்லை என்று அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாத இறுதிக்குள் மல்டி கேப் ஃபண்டுகள் செபி அறிவுறுத்திய விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அல்லது தமது பெயரை ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதனால் மல்டி கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள் தமது முதலீடுகளில் என்ன மாற்றம் கடை பிடிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

5. பொதுவான டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசி (The Insurance Regulatory and Development Authority of India – சுருக்கமாக IRDAI)

அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் அனைத்துத் தரப்பினருக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்தப் பொதுவான காப்பீடு `சரல் ஜீவன் பீமா' என்று அழைக்கப்படும். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த பொதுப் பெயருடன் நிறுவனத்தின் சார்பு பெயரைச் சேர்த்து இந்தக் காப்பீட்டை வழங்கலாம். இந்தக் காப்பீடு பாலிசியில் கவரேஜ் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை இருக்கும். இதன் மூலம் சுலபமாகக் காப்பீட்டை ஒருவர் தேர்ந்தெடுக்க முடியும். இந்தக் காப்பீட்டை அதிகபட்சமாக 70 வயது வரை வாங்க முடியும். இந்த பாலிசியை சுலபமாக ஆன்லைனில் வாங்க முடியும். அவ்வாறு ஆன்லைன் மூலம் வாங்கப்படும் காப்பீடுகளுக்கு பிரீமியத்தில் 20% வரை தள்ளுபடி உள்ளது. இந்தச் சலுகையைப் பயன்படுத்தி இதுவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதவர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம்.

Insurance
Insurance

6. கார்களின் விலை உயர்கிறது

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி மற்றும் மகேந்திரா நிறுவனங்கள் ஜனவரி 1 முதல் தமது கார்களுக்கான விலையை உயர்த்த உள்ளன. இதைத்தொடர்ந்து பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இனி நீங்கள் வாங்கும் காரின் விலை அதிகமாக இருக்கும்.

7. சிறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில் செய்யப்பட்டுள்ள மாறுதல்

தற்போது நிறுவனங்கள் அனைத்து மாதங்களிலும் தமது ஜிஎஸ்டி கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். இதில் தற்போது மத்திய அரசு மாறுதலைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி ரூ. 5 கோடிக்கும் கீழ் வருமானம் ஈட்டும் சிறிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதன் மூலம் வருடத்துக்கு 12 முறை கணக்கு தாக்கல் செய்வதற்குப் பதில் நான்கு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதன் மூலம் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் நிறுவனங்கள் தனித்தனியாக GSTR -1 மற்றும் GSTR - 3B கணக்குகள் தாக்கல் செய்தால் போதும்.

வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமை ஆக்குவதற்காக இந்த நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மாறுதல் சிறு நிறுவனங்களுக்கு நிச்சயம் பயனளிப்பதாக இருக்கும்.

GST
GST

8. தொலைபேசியில் இருந்து அழைக்கும்போது 0 சேர்க்க வேண்டும்

ஜனவரி 15 முதல் வீட்டில் உள்ள தொலைபேசியில் (Landline) இருந்து மற்ற கைபேசி அழைப்புகளை அழைக்கும்போது 0 சேர்த்து அழைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைப்படி வீட்டு தொலைபேசியில் இருந்து கைபேசியை அழைத்தால் மட்டுமே 0 சேர்க்க வேண்டும். லேண்ட்லைன் டூ லேண்ட்லைன் அல்லது மொபைல் டூ லேண்ட்லைன் பேசும்போது 0 சேர்க்க வேண்டாம். 

9. எல்பிஜி சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வதில் மாறுதல்

தற்போது எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் மற்றும் பதினாறாம் தேதிகளில் நிர்ணயம் செய்கின்றனர். அதில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி சிலிண்டர் விலை ஒவ்வொரு வாரமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படும். இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்காததால் உடனடியாக இந்த மாற்றம் இல்லை என்றாலும், விரைவில் இதுவும் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.  இதன்மூலம் ஒவ்வொரு முறை வாங்கும் சிலிண்டர் விலையும் ஏற்ற இறக்கத்தோடு இருக்கலாம்.

காஸ் சிலிண்டர் விபத்துக்கும் இன்ஷூரன்ஸ் பெறலாம் தெரியுமா... க்ளெய்ம் பெறுவது எப்படி?
Gas Cylinder
Gas Cylinder
Photo: Vikatan / Muthuraj.R.M

10. மீண்டும் மீண்டும் நடைபெறும் E - Mandate உச்சவரம்பில் மாற்றம்:

மத்திய ரிசர்வ் வங்கி, மீண்டும் மீண்டும் நடைபெறும் E - Mandate உச்ச வரம்பை 2,000 ரூபாய் என்ற அளவிலிருந்து 5,000 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளது. இந்தச் சேவை தேவைப்படுகிறவர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை மட்டும் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு தவறான செய்தியும் பரவி வருகிறது. UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டண விதிப்பு என்ற செய்திதான் அது.

தற்போது வாடிக்கையாளர்கள் ஃபோன் பே, கூகுள் பே போன்ற தளங்களிலிருந்து இலவசமாகப் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய பணப் பட்டுவாடா நிறுவனம் (National Payments Corporation of India - NPCI) தெரிவித்துள்ளது என்ற செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியின்படி 30% வரை பணப் பரிவர்த்தனை செய்யும்போது கட்டணம் செலுத்த வேண்டும் என்ற வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி முற்றிலும் தவறு. GPay செயலியில் பணம் அனுப்புவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று கூகுள் நிறுவனம் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வாசகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

- ஷியாம் ராம்பாபு
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு