Published:Updated:

அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! - 30

சாதாரணப் பங்குகளைவிட குரோத் ஸ்டாக்ஸின் வருமானமும் லாபமும் அதீத வளர்ச்சி பெறும் என்று நம்பித்தான் மக்கள் அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால்...

சந்தையில் வேல்யூ இன்வெஸ்டிங், குரோத் இன்வெஸ்டிங் என்று உள்ள இரண்டு விதமான முதலீட்டு முறைகளில் வேல்யூ இன்வெஸ்டிங்கை 1920-ல் அறிமுகப்படுத்தியவர் பெஞ்சமின் கிரஹாம். அதன் மறுபக்கமான குரோத் இன்வெஸ்டிங்கை 1960-களில் அறிமுகப்படுத்தியவர் டி.ரோவ் ப்ரைஸ்.

வேல்யூ இன்வெஸ்டிங் பக்தர்கள் சந்தையின் போக்கைப் பொருட்படுத்தாது பங்கின் உள்ளார்ந்த மதிப்பின் அடிப்படையில் பங்குகளை வாங்குவார்கள் என்று முன்பு பார்த்தோம். ஆனால், நம்மில் பலரும் பங்குகளின் அடிப்படை மதிப்பீடுகள் ஏறத்தாழ இருந்தாலும், நாம் போடும் முதல் சீக்கிரமே அதீத வளர்ச்சி பெற்று நம் செல்வத்தைப் பலமடங்கு பெருக்குமா என்றுதான் பார்க்கிறோம். இதுதான் குரோத் இன்வெஸ்டிங்.

Investment
Investment
Image by Charles Thompson from Pixabay
`சரியா முதலீடு பண்ணா ஜாக்பாட்தான்!' - வேல்யூ இன்வெஸ்டிங் பத்தி தெரிஞ்சுப்போமா? - 29

புதிதாக சந்தைக்கு வரும் செக்டார்களிலும் (Food Aggregator, Financial Platforms), புதிதாக ஐ.பி.ஓ வரும் கம்பெனிகளிலும் (Zomato, Devyani International) அதீத வளர்ச்சியை எதிர்பார்த்து குரோத் இன்வெஸ்டிங் செய்யப்படுகிறது. இன்றைய ராபின் ஹூட் இன்வெஸ்டார்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்குத் தீனி போடுவது போல் உள்ள குரோத் ஸ்டாக்ஸ் (வளர்ச்சிப் பங்குகள்) மிகப் பெரிய லாபத்துக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.

குரோத் ஸ்டாக்குகளின் அம்சங்கள்

அதீத பி.இ (PE) ரேஷியோ:

ஸ்டீல் செக்டாரில் உள்ள ஏ.பி.எல்.அபோல்லோ ட்யூப்ஸின் பி.இ.ரேஷியோ 102.14. அதே செக்டாரில் உள்ள டாட்டா ஸ்டீல் கம்பெனியின் பி.இ.ரேஷியோ 9.76. அதாவது, டாட்டா ஸ்டீலுக்குக் கொடுக்கும் விலையைப்போல் பத்து மடங்கு விலையை ஏ.பி.எல்.அபோல்லோவுக்குக் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் டாட்டா ஸ்டீலைவிட ஏ.பி.எல்.அபோல்லோ அதிவேகமாக வளர்ந்து அதிக லாபம் தரும் என்ற எதிர்பார்ப்பு.

Industry (Representational Image)
Industry (Representational Image)
AP Photo/Rafiq Maqbool
காம்பௌண்ட் எஃபெக்ட்: ஐன்ஸ்டீன் இதை ஏன் 8-வது அதிசயம்னு சொன்னார்? - பணம் பண்ணலாம் வாங்க - 14

அதீத பி.இ.ஜி. (PEG) ரேஷியோ:

பி.இ.ரேஷியோவைவிட பி.இ.ஜி ரேஷியோ தரும் வழிகாட்டல் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதால் இதையும் பார்க்கிறோம். குரோத் ஸ்டாக்ஸின் பி.இ.ஜி ரேஷியோவும் சக ஸ்டாக்ஸைவிட அதிகமாகவே இருக்கும்.

அதீத வளர்ச்சி:

சாதாரணப் பங்குகளைவிட குரோத் ஸ்டாக்ஸின் வருமானமும் லாபமும் அதீத வளர்ச்சி பெறும் என்று நம்பித்தான் மக்கள் அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்:

இன்று தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற பல முதலீட்டு வழிகளிலிருந்து வரும் வருமானம், பணவீக்கத்தைவிட குறைவாகவே இருப்பதால் நம் முதலீடு கரையத் தொடங்குகிறது. குரோத் ஸ்டாக்ஸில் இருந்து வரக்கூடிய லாபம் அபரிமிதமாக இருப்பதால் நாம் போட்ட முதலீட்டுக்கு பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
எப்போதும் சரியாத இரண்டு செக்டார் பங்குகள் பற்றி தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 28

குரோத் ஸ்டாக்ஸின் நெகட்டிவ் அம்சங்கள்

பொதுவாக, குரோத் கம்பெனிகள் ஆரம்ப நிலையில் இருப்பவை. சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் இவற்றை வெகுவாகப் பாதிக்கும். ஏற்றம் வரும்போது அபரிமிதமான லாபம் கிடைக்கும்; ஆனால், சிறிய இறக்கம்கூட இவற்றை நிலைகுலையச் செய்துவிடும். ரிட்டர்ன் அதிகம் என்றால் ரிஸ்க்கும் அதிகம் இருப்பது இயல்புதானே?

இந்தக் கம்பெனிகள் வழக்கமான செயல்முறைகளில் இருந்து விலகி, சற்று அதிக ரிஸ்க் உள்ள பிசினஸ் உபாயங்களைக் கைக்கொள்கின்றன. மேலும் தங்கள் பிசினஸில் அதிக வளர்ச்சி வர வேண்டும் என்பதால் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய டிவிடெண்டையும் கொடுக்காமல், தங்கள் பிசினஸிலேயே மறுமுதலீடு செய்கின்றன. அந்த உத்திகள் ஜெயிக்காத பட்சத்தில் முதலீட்டாளர்கள் லாபமும் பெறாமல், டிவிடெண்டையும் இழக்க நேரிடும்.

அசாதாரண பொருளாதார ஏற்றம் மற்றும் அரசின் தலையீட்டால் சில சாதாரணக் கம்பெனிகள் அசாதாரண வளர்ச்சி காட்டி, குரோத் ஸ்டாக் போன்று தோற்றமளிக்கும். இயல்பு நிலை திரும்பும்போது இவற்றால் தாக்குப் பிடிக்க முடியாது. ஆகவே, குரோத் ஸ்டாக்ஸில் முதலீடு செய்ய விரும்புபவர்கள்,

1. சம்பந்தப்பட்ட கம்பெனி,

2. நிலவும் சமூக-பொருளாதார சூழ்நிலை,

3. கம்பெனியின் நீண்ட கால லாபம் ஈட்டும் திறன்,

4. கம்பெனி நிர்வாகிகளின் அனுபவம் மற்றும் திறமை - இவற்றை முழுமையாக அலசி ஆராய்ந்து இது குரோத் ஸ்டாக்தானா என்று கண்டறிய வேண்டும்.

Stock Market
Stock Market
Photo by Mark Finn on Unsplash
`ரிஸ்க் ஓகே; லாபம்தான் முக்கியம்' என நினைப்பவரா? ஸ்மால் கேப் பங்குகள் உங்களுக்குத்தான்! - 27

குரோத் ஸ்டாக்ஸ் உங்களுக்கு ஏற்றதா?

குரோத் ஸ்டாக்ஸ் பொதுவாக விலை அதிகமுள்ளவையாக இருக்கும். இவற்றில் முதலீடு செய்பவர்கள் இந்த அதிக விலையை, அடுத்த பலவருடங்கள் வரக்கூடிய லாபத்துக்கான விலை என்று எண்ணித்தான் முதலீடு செய்கிறார்கள். இந்தக் கணக்கு தவறாகவும் போகலாம். ஆகவே ரிஸ்க்கைத் தவிர்க்க எண்ணும் முதலீட்டாளர்களும், வாங்கி சில காலத்துக்குள்ளேயே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் இந்த ஏரியாவுக்குள் வராதிருப்பது நல்லது.

- அடுத்து புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு