Published:Updated:

கழுத்தை நெரிக்கும் செலவுகள்... கட்டுப்படுத்த எளிய வழி இதுதான்...

சிறு சேமிப்பு

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பை விரும்புபவர்களில் நூற்றில் பத்து பேர் மட்டுமே செலவினங்களைக் கணக்கு பார்க்கின்றனர். மற்றவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க நினைப்பதே இல்லை.

கழுத்தை நெரிக்கும் செலவுகள்... கட்டுப்படுத்த எளிய வழி இதுதான்...

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பை விரும்புபவர்களில் நூற்றில் பத்து பேர் மட்டுமே செலவினங்களைக் கணக்கு பார்க்கின்றனர். மற்றவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க நினைப்பதே இல்லை.

Published:Updated:
சிறு சேமிப்பு

காலையில் எழுந்தவுடனே எதைச் செய்கிறோமோ இல்லையோ, கட்டாயம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தினம்தினமும் இப்படி செலவு எகிறுவதால், வரவு எட்டணா, செலவு பத்தணா என்றாகி பரிதவித்துக் கொண்டிருக்கிறது மத்தியதர வர்க்கம். இந்த நிலையில், எதிர்காலத்துக்கான பணத்தை எப்படி சேமிப்பது என்று தெரியாமல் தவிப்பவர்கள் நம்மில் ஏராளமானவர்கள். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செலவு செய்வதைக் குறைப்பது எப்படி, செலவைக் குறைத்து, சேமிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் என்ன என்பது சேலத்தைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும், சர்ட்டிஃபைட் ஃபைனான்சியல் பிளானருமான ஜெயகுமாரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஷாப்பிங்... செலவுகள்
ஷாப்பிங்... செலவுகள்

‘‘இப்போதுள்ள நிலையில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அது செலவாகிவிடுகிறது என்று பலரும் வருத்தப்படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையானது செலவுகளை நோக்கி நம்மைத் தள்ளுவதாகவே இருக்கிறது. சிறு வேலைக்காக வெளியில் சென்றாலும் 200 ரூபாயாவது செலவு செய்யாமல் மீண்டும் வீட்டுக்குத் திரும்ப முடிவதில்லை. பொருளாதார வளர்ச்சி, விலைவாசி உயர்வு, பார்த்ததை எல்லாம் வாங்ககிவிட வேண்டும் என்று நினைக்கும் கம்பல்சிவ் ஷாப்பிங் பிகேவியர், ஆடம்பர வாழ்க்கை வாழ்க்கை வாழவேண்டும் என்கிற ஆசை இதற்கு முக்கியமான காரணம்.

‘‘இன்றைக்கு நம்மிடம் இருக்கும் அத்தனை பணத்தையும் செலவு செய்துவிட்டால், நாளைக்கு நம்மிடம் அத்தியாவசமான ஒரு பொருளை விற்கவேண்டியிருக்கும்’’ என்று வாரன் பஃபெட் சொன்ன பொன்மொழி. செலவைக் குறைத்து சேமிக்காவிட்டால், நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கடன் வாங்கி வட்டி கட்ட வேண்டியிருக்கும் என்பது நிச்சயம்.

சேமிப்பு என்பது நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு பழக்கம்தான். ஆனால், அதனைத் தொடர்ந்து செய்கிறோமா என்பதுதான் முக்கியமான ஒன்று. சேமிப்பு என்றாலே மாத வருமானம் லட்சத்தில் உள்ளவர்களால் மட்டும்தான் செய்யமுடியும் என்றில்லை. தினக்கூலி, வாரக்கூலி சம்பாதிப்பவர்களால்கூட நிச்சயம் சேமிக்க முடியும். நீங்கள் மாதந்தோறும் ரூ.500 சேமிக்கிறீர்களா இல்லை, ரூ.1000 சேமிக்கிறார்களா என்பது முக்கியம் இல்லை. நீங்கள் சேமிக்கிறீர்களா இல்லையா என்பதான் முக்கியம்.

ஜெயகுமார் |CFA (Chartered Financial Analyst)
ஜெயகுமார் |CFA (Chartered Financial Analyst)

சேமிப்பினை மாதந்தோறும் 100 ரூபாயிலிருந்தே தொடங்கலாம். இதற்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. இப்படி நீங்கள் நாடும் திட்டம் அரசு அங்கீகாரம் பெற்ற திட்டமா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம், குறைந்த அளவில்தான் பணம் சேர்க்க முடியும் என்கிறபோது, லாபம் குறைவாக இருந்தாலும், அதிகம் ரிஸ்க் இல்லாத திட்டங்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.

பணத்தை சேமிக்க வேண்டும் எனில், முதலில் நாம் செய்யும் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கு நீங்கள் அவசியம் செய்யவேண்டியது, தினந்தோறும் நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வைப்பதுதான்.

ஒரு நாளைக்கு பால், தண்ணீர், மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், நொறுக்குத் தீனிகள், சிற்றுண்டி, தண்ணீர் கட்டணம் அலைபேசி/தொலைபேசிக் கட்டணம், மின் கட்டணம், பெட்ரோல், குழந்தைகளின் கல்விக் கட்டணம், விழாக்கள், பரிசுகள், பண்டிகைச் செலவுகள், மருத்துவச் செலவுகள், கேபிள் டி.வி, இன்டர்நெட் எனப் பல வகையான செலவுகளை செய்கிறோம். இந்த செலவுகளை ஒன்றுவிடாமல் ஒரு நோட்டில் எழுதவேண்டும். நோட்டுகளில் எழுதும் பழக்கம் இல்லை; ஆன்ட்ராய்ட் போனிலேயே குறித்து வைக்க முடியும் என்பவர்கள் அப்படியும் தாராளமாக செய்யலாம்.

ஷாப்பிங் - செலவுகள்
ஷாப்பிங் - செலவுகள்

இப்படி எழுதிவைக்கும் தினப்படி செலவுகளை வகைப்படுத்தி, ஒவ்வொரு வாரம் அல்லது மாத இறுதியில் அலசி ஆராயலாம். இதன்மூலம் ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம், எதற்கு அதிகம் செலவு செய்கிறோம், எதற்கெல்லாம் வீண்செலவு செய்கிறோம் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

இப்படி செய்வதன்மூலம் அடுத்த மாதத்துக்கான பட்ஜெட்டை நம்மால் சரியாக வகுக்க முடியும். அதிலிருந்து மிச்சமாகும் பணத்தை சேமிக்கவும் முடியும்.

பணக்காரர்கள்தான் இப்படி செலவுக் கணக்குகளை எழுதி வைக்க வேண்டும் என்பதில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் இதனை தாராளமாகப் பின்பற்றலாம்.

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பை விரும்புபவர்களில் நூற்றில் பத்து பேர் மட்டுமே செலவினங்களைக் கணக்கு பார்க்கின்றனர். மற்றவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க நினைப்பதே இல்லை.

செலவுகள் | பட்ஜெட் பிளானிங்
செலவுகள் | பட்ஜெட் பிளானிங்

மேலும், சேமிப்பு என்பது வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள் என அனைவரும் சேமிக்கலாம். மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பாக்கெட் மணியில் தேவையான செலவுகளை செய்துவிட்டு, மீதி பணத்தை அது ஒரு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை, அதை உண்டியலிலும் தபால் அலுவலகங்களிலும் சேமிக்கலாம். இனியாவது ஒவ்வொரு மாதமும் நீங்கள் கொஞ்சம் பணத்தைக் கட்டாயம் சேமிப்பது என்கிற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று பேசி முடித்தார் ஜெயகுமார்.

இதைப் படித்துமுடித்தபின், சேமிக்க நீங்களும் தயாராகிவிட்டீர்களா?

- விகடன் மாணவப் பத்திரிகையாளர் சு.கலையரசி