Published:Updated:

ரீஃபண்ட் தரமறுக்கும் விமான நிறுவனங்கள்! -தவிக்கும் ஏஜென்டுகள்

விமான நிறுவனங்கள்
விமான நிறுவனங்கள் ( vikatan )

தங்களது விமானங்களில் புக்கிங் செய்தவர்களை இழந்துவிடாமல் இருக்க நினைக்கும் விமான நிறுவனங்கள், டிக்கெட்டுகளுக்கான பணத்தை ரீஃபண்ட் தராமல், அடுத்த ஓராண்டு காலத்தில் பயணம்செய்து இதைக் கழித்துக்கொள்ளுமாறு வற்புறுத்துகின்றன.

கொரோனா தாக்குதலால் தொடக்கத்திலேயே பெரும் பாதிப்பை எதிர்கொண்டது டூர்ஸ் & டிராவல்ஸ் துறை. இந்த ஆண்டு விடுமுறைக்காலம்தான் டிராவல்ஸ் நிறுவனங்களின் சீசன். இதற்கான புக்கிங்குகள் சில மாதங்களுக்கு முன்பே, குறிப்பாக, கொரோனா தாக்குதல் விஸ்வரூபம் எடுக்கும்முன்பே முடிந்திருந்தன. இந்த நிலையில், கொரோனா பரவலால் அனைத்து நாடுகளும் தங்களது விமானப் போக்குவரத்தை ரத்துசெய்யத் தொடங்கியதும் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்கள் பெருத்த நெருக்கடியைச் சந்தித்தன.

விமான நிறுவனங்கள்
விமான நிறுவனங்கள்
vikatan

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான தொகையை ரீஃபண்ட் செய்வதில் தற்போது ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும், டிராவல் ஏஜென்டுகளுக்குமிடையே பிரச்னை எழுந்துள்ளது. பொதுவாக டிராவல் ஏஜென்டுகள், ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் பாலமாக இருப்பவர்கள். ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பயணத்துக்காக ஏஜென்டுகள் மூலமாகப் பெற்ற டிக்கெட்டுகளை, கொரோனா பரவத்தொடங்கியதுமே கேன்சல் செய்யத்தொடங்கினார்கள். அதன்பின்னர்தான் விமானப்பயணங்களே ரத்துசெய்யப்பட்டன.

விமானப்போக்குவரத்து முடங்கியதால் இந்தியாவைச்சேர்ந்த இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. தங்களது விமானங்களில் புக்கிங் செய்தவர்களை இழந்துவிடாமல் இருக்க நினைக்கும் விமான நிறுவனங்கள், டிக்கெட்டுகளுக்கான பணத்தை ரீஃபண்ட் தராமல், அடுத்த ஓராண்டு காலத்தில் பயணம்செய்து கழித்துக்கொள்ளுமாறு வற்புறுத்துகின்றன.

``டிக்கெட் கட்டணத்தைப் பணமாகத்தர மறுப்பதோடு, அந்த டிக்கெட்டை வேறு பெயருக்கு மாற்றவும் மறுக்கின்றன. இது, டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இதைக்கூறினால் அவர்கள் ஏற்க மறுப்பார்கள். நீண்டகால வாடிக்கையாளர்களையும், வாடிக்கையாளர்களுடனான நல்லுறவையும் இழக்க நேரிடும். வாடிக்கையாளர்களுக்குத் தேவை, ரீஃபண்ட் தொகை மட்டுமே. இப்படி திருப்பித்தரப்படாத ரீஃபண்ட் தொகையே சுமார் 10,000 கோடி ரூபாய்வரை இருக்கும்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு புக்கிங் ஏஜென்ட்.

ஷாகுல் ஹமீது
ஷாகுல் ஹமீது
vikatan

இதுகுறித்து டிராவல் ஏஜென்ட்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா தென்மண்டல தலைவர் ஷாகுல் ஹமீதிடம் கேட்டபோது, ``எங்கள் வாடிக்கையாளர்களுக்காக பதிவு செய்யும் டிக்கெட்டில் எப்போது அவர்கள் பயணம் செய்கிறார்களோ, அப்போதுதான் அந்த டிக்கெட்டுக்கான தொகை அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகச் சொல்லமுடியும். இந்த கொரோனா வைரஸ் தாக்குதல், உலகளாவிய அளவில் எவருமே எதிர்பார்க்காத பேரழிவாக உள்ளது. எனவே பயணம் செய்வதற்காக முன்கூட்டியே புக்கிங் செய்தவர்கள், அவர்களது புக்கிங்கை கேன்சல் செய்தது தவிர்க்கமுடியாதது.

ஒருகட்டத்தில், கொரோனா பரவலைத்தடுக்கும் முயற்சியாக, அரசாங்கமே விமான சேவைகளை நிறுத்திவிட்டது. எனவே, ஏற்கெனவே புக்கிங் செய்து பயணிக்க முடியாமல் போனவர்களுக்கு, அவர்களுடைய டிக்கெட் கட்டணத்தை ரீஃபண்ட் செய்வதே முறையான செயல். இந்தத் தொகை வாடிக்கையாளர்களின் பணம். அமெரிக்கா போன்ற நாடுகளில் ரீஃபண்ட் தரும்படி உத்தரவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு ரீஃபண்ட் தராமல் அவர்களை மீண்டும் பயணிக்குமாறு வற்புறுத்துவது முறையான செயல் அல்ல. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து மீண்டும் விமானப்பயணம் தொடங்கப்பட்டாலும்கூட பெரும்பாலானவர்கள், மிகவும் அவசியமென்றால் மட்டுமே விமானப்பயணம் மேற்கொள்வார்கள். அப்படியிருக்கையில் ரீஃபண்டைத் தராமல் அவர்களே வைத்திருப்பது தவறானது. டிராவல் ஏஜென்டுகள் தற்போது ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே இருதலைக்கொள்ளி எறும்புகளைப்போல் சிக்கியுள்ளனர்.

விமான நிறுவனங்கள்
விமான நிறுவனங்கள்
vikatan

ஏற்கெனவே டிராவல்ஸ் நிறுவனங்கள், வருமான இழப்பு காரணமாக நிறுவனத்தை நடத்த முடியாமல் திணறுகிறார்கள். எவ்வித வருமானமும் இல்லாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதே கடினமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், ரீஃபண்ட் சிக்கல்களை எதிர்கொள்வது, அவர்களைத் தொழிலைவிட்டே வெளியேற்றும் அபாயம் உள்ளது. எனவே, இதுகுறித்து விமானப்போக்குவரத்து அமைச்சகத்தை அணுகி எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் எடுத்துவைத்தோம். நாங்கள் அளித்துள்ள விவரங்களைப் பார்த்தபின், பணத்தைத் திருப்பித்தரும்படி ஏர்லைன்ஸ் நிறுவனங்களை வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார்கள். வாடிக்கையாளர்களின் ரீஃபண்டுகள் திரும்பக் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு