Election bannerElection banner
Published:Updated:

நகைச் சீட்டு நடத்துவது சட்ட விரோதம்... ஆனாலும், பெரிய நகைக் கடைகள் மீது நடவடிக்கை இல்லையே... ஏன்?

நகை
நகை

பக்கத்து வீட்டுக்காரர், பல நாள் பழக்கம், அதிக வட்டி தருகிறார்கள் என்பதற்காகவெல்லாம் அவர்களை நம்பி பணம் செலுத்துவீர்களானால் உங்கள் பணத்துக்கான பாதுகாப்பு என்பது துளியும் கிடையாது.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை குண்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. 46 வயதான இவர், தீபாவளிச் சீட்டு நடத்தி அந்தப் பகுதியில் 68 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பாகியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் தலைமறைவாகியிருந்த ஈஸ்வரியைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். ஆனால், அந்தப் பணம் கட்டியவர்களுக்கு முழுமையாக உரிய நேரத்தில் திரும்பக் கிடைக்குமா என்பது விடைதெரியாத கேள்வி.

தீபாவளிச் சீட்டு மோசடி...
தீபாவளிச் சீட்டு மோசடி...

இந்தச் சம்பவம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இப்படியான சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துகொண்டிருக்கின்றன. ஏழை எளிய மக்கள் தங்கள் ரத்தம் சுண்ட உழைத்துச் சேர்த்த பணத்தை ஏதாவது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் அபரிக்க ஏராளமானோர் இங்கு கண்கொத்திப் பாம்பாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். பத்திரிகைகளில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியானாலும் இதுபோன்ற சதுரங்க வேட்டைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

ஏழை எளிய மக்களைக் குறிவைக்கும் `சீட்டு’ மோசடிகள் குறித்து தமிழ்நாடு சீட்டு நிதிகள் சங்கத் தலைவரும் சிம்மவாஹினி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருமான எம்.கிருஷ்ணபாரதியிடம் இது குறித்துப் பேசினோம்...

``தீபாவளி சீட்டுக்கும் சிட் ஃபண்டுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை முதலில் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தீபாவளிச் சீட்டு, பாத்திரச் சீட்டுகளை எல்லாம் கடந்து இப்போது டாஸ்மாக் சீட்டு என்றெல்லாம் கூட சீட்டு நடத்தும் சில கறுப்பு ஆடுகள் எங்களைப் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சீட்டு நிறுவனங்களின் பெயருக்குத் தொடர்ந்து களங்கம் விளைவித்து வருகின்றனர்.

எம்.கிருஷ்ணபாரதி
எம்.கிருஷ்ணபாரதி

ஒரு சீட்டு நிறுவனம் என்பது, மத்திய சீட்டு சட்டம் 1982-ன்படி கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படிப் பதிவு செய்யாதவை அனைத்தும் கள்ளச் சீட்டுகளாகவே கருதப்படும்.

தமிழ்நாட்டில் சீட்டு நிறுவனங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என 1984 தமிழ்நாடு சீட்டு நிதி விதிகள் பல்வேறு விதிகளை வகுத்துக்கொடுத்திருகின்றது. அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு சீட்டு நிறுவனமும் அந்த விதிகளையும் மத்திய சீட்டுச் சட்டம்-1982 சட்டத்தையும் பின்பற்றித்தான் செயல்பட வேண்டும். அதன்படிதான் செயல்பட்டும் வருகின்றன.

பதிவு செய்யப்பட்ட ஒரு சீட்டு நிறுவனத்தால் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீட்டு நடத்தப்படுகிறது எனில், அந்த 5 லட்ச ரூபாய் மதிப்புக்கு நிரந்தர வைப்புத் தொகையையோ, அந்தத் தொகைக்கான சொத்து ஜாமீனையோ பதிவுத்துறையிடம் சமர்ப்பித்துக் கொடுத்தோதான் அந்த சீட்டையே நடத்தும். பொதுமக்கள் பணத்துக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அந்தளவுக்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தவிர, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஏலத் தொகை சென்றது, அந்த மாதம் சீட்டு எடுத்தவருக்குப் பணம் கொடுக்கப்பட்டதா, உள்ளிட்ட விபரங்களையும் சம்பந்தப்பட்ட சீட்டு நிறுவனங்கள் அவ்வப்போது பதிவுத்துறையிடம் சமர்ப்பித்தாக வேண்டும். இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

பதிவுத் துறை இணையதளம்
பதிவுத் துறை இணையதளம்

ஆனால், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டும் விபரம் இல்லாமலும் இப்படியான பதிவு செய்யப்பட்டாத சீட்டு நிறுவனங்களிடமோ, தனிப்பட்ட நபர்களிடமோ சிக்கிக்கொள்கின்றனர். பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தில் அதற்கான சான்றுகளை வாடிக்கையாளர்கள் பார்வைக்காக வைத்திருப்பார்கள். அதை வைத்தே அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.

தமிழக அரசின் பதிவுத் துறை இணையதளமான https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரிக்குள் சென்று வரைதளம் என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதற்கடுத்து தோன்றும் பக்கத்தில் சீட்டு நிதியங்கள் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் அடுத்து திறக்கும் புதிய பக்கத்தில் உங்களது மண்டலம், மாவட்டத்தைத் தேர்வு செய்தால் சீட்டு நிறுவனத்தின் பெயர் என்ற பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள சீட்டு நிறுவனங்களின் பட்டியல் கிடைக்கும்.

அதில் நீங்கள் சீட்டுப் போட விரும்பும் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம். இதை உங்களது மொபைல் மூலமாகவோ, கம்ப்யூட்டர் மூலமாகவோ வீட்டிலிருந்தே செக் செய்துகொள்ள முடியும். இதையெல்லாம் விட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்காரர், பல நாள் பழக்கம், அதிக வட்டி தருகிறார்கள் என்பதற்காகவெல்லாம் அவர்களை நம்பி பணம் செலுத்துவீர்களானால், உங்கள் பணத்துக்கான பாதுகாப்பு என்பது துளியும் கிடையாது. அப்படியான நடைமுறைகள் சட்டப்படி தவறு என்பதை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

Chit fund / Representational Image
Chit fund / Representational Image

பாத்திரச் சீட்டு, பலகாரச் சீட்டு, நகைச் சீட்டு, சுற்றுலாச் சீட்டு, தீபாவளிச் சீட்டு ஆகியவற்றுக்கு அரசின் அங்கீகாரம் கிடையாது என்பதையும் பொதுமக்கள் உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும். அதேபோல, அரசும் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பிறகு, நடவடிக்கை எடுக்காமல் முன்கூட்டியே இதையெல்லாம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றவரிடம், ``நகைச் சீட்டு அனுமதியில்லை எனும்போது பெரிய பெரிய நகைக்கடைகள் எல்லாம் நகைச் சீட்டுக்கு பெரியளவில் விளம்பரம் கொடுத்து செயல்படுத்தியும் வருகிறார்களே, அது எப்படி?” எனக் கேட்டோம்.

``வலையில் பெரிய பெரிய திமிலங்களும் சிறிய சிறிய மீன்களும் சிக்காது. சிறிய மீன்கள் வலைக்குள் அகப்படாது. பெரிய மீன்கள் வலையை அறுத்துக்கொண்டு தப்பித்துவிடும். பெரிய பெரிய நிறுவனங்கள் நகைச் சீட்டு நடத்தினாலும் அது தவறுதான். திமிங்கிலம் போல அவர்கள் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் செய்லபடுகின்றனர்.

திருவள்ளூரில் தீபாவளி சீட்டு நடத்தி 68 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஈஸ்வரியைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. அதே வேளையில், அரசு அலுவலக ஊழியர்களின் குடும்பத்தினரே இப்படியான பெரிய பெரிய நகைக்கடைகளில் நகைச் சீட்டுப் போடுகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை'' என்றார் கவலையுடன்.

நமக்குத் தெரிந்தவர் சிட்டுத் திட்டம் நடத்துகிறார். அவர் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்பி பணத்தைப் போடுவதைவிட, நமக்குத் தெரிந்தவராக இருந்தாலும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி சீட்டுத் திட்டம் நடத்துகிறாரா என்று பார்த்து, பணத்தைப் போட்டால், நமக்கு எப்போதும் நஷ்டம் வராது என்பதை மக்கள் உணர வேண்டும்!

மேலும் சிட் பண்ட் குறித்த முழுமையான தகவல்களுக்கு நாணயம் விகடன் மற்றும் தமிழ்நாடு சிட் ஃபண்ட் கம்பெனீஸ் அசோசியேஷன் இணைந்து நடத்திய `சிட் ஃபண்ட் A to Z - முழுமையான வழிகாட்டி’ என்ற நிகழ்ச்சியின் வீடியோவை கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து காணுங்கள்...

நாணயம் விகடன் & தமிழ்நாடு சிட் பண்ட் கம்பேனீஸ் அசோசியேஷன் இணைந்து நடத்தும் ‘சிட் ஃபண்ட் A to Z - முழுமையான வழிகாட்டி’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி, #WebinarWithVikatan | #ChitFund | #NaanayamVikatan

Posted by Naanayam Vikatan on Friday, December 4, 2020
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு