Published:Updated:

கேட்டது ரூ.3,000 கோடி; கொடுத்தது ரூ.510 கோடி... கொரோனா நிவாரண நிதியில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனையா?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கான இழப்பீட்டை, குறிப்பாக தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய இழப்பீட்டைக் கேட்டும் கொடுக்காமல் மத்திய அரசு, காலம்தாழ்த்தி வருகிறது. அந்தத் தொகையைக் கொடுத்தாலே தமிழ்நாடு அரசு கையேந்த வேண்டிய நிலை இல்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ள உதவித்தொகை தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், மகாராஷ்டிராவுக்கு அடுத்து பாதிப்படைந்த மாநிலம் தமிழ்நாடு. வென்டிலேட்டர்கள், மருந்துப்பொருள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும், தொடர் மருத்துவக்கண்காணிப்பில் வைப்பதற்கும் பெரிய அளவில் செலவாகிறது. இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை தடுப்புத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக, மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கொரோனா நிதி ஒதுக்கீடு
கொரோனா நிதி ஒதுக்கீடு
vikatan

தமிழகத்துக்கு சுமார் ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ரூ.510 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவுக்கு ரூ.1,611 கோடியும், கேரளாவுக்கும் வெறுமனே ரூ.157 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.966 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.910 கோடி, ஒடிசாவுக்கு ரூ.802 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.740 கோடி, பீகாருக்கு 708 கோடி, குஜராத்துக்கு ரூ.662 கோடி என தமிழ்நாட்டைவிட வட மாநிலங்கள் பலவற்றுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவினால், மகாராஷ்டிராவில் இதுவரை 690 பேரும், தமிழ்நாட்டில் 571 பேரும், டெல்லியில் 503 பேரும், தெலங்கானாவில் 321 பேரும் அடுத்ததாக கேரளாவில் 314 பேரும், மற்ற மாநிலங்களில் இதைவிடக் குறைவான எண்ணிக்கையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டெல்லியில் தற்போது நிலவரம் கட்டுக்குள் வந்துவிட்டது. புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி, மற்ற மாநிலங்களைவிடக் குறைவாக இருப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவரது இந்த அறிவிப்போடு, மாநிலங்களுக்கான பற்றாக்குறையைப் போக்குவதற்கு 15-வது நிதிக்குழு பரிந்துரையின்பேரில் மத்திய அரசு வழங்கும் நிதியான ரூ.6,195 கோடியும் இணைத்துக் கணக்கில்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையில் கேரளாவுக்கு மட்டுமே அதிகப்படியாக 1,276 கோடி ரூபாயும், தமிழ்நாட்டுக்கு 335 கோடி ரூபாயும் வழங்கப்படுவதாகவும், அதுபோக மேலும் 11 மாநிலங்களும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ``கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்குக் குறைவான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தவறான ஒன்றாகும். இதில் அவர்கள் பாரபட்சம் பார்ப்பதாகவே உள்ளது. மாநிலங்களின் பற்றாக்குறைக்காக 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி வழங்கப்படும் நிதியை கொரோனாவுக்கான நிதியோடு இணைத்துக்காட்டுவதும் தவறானதாகும். அது மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவேண்டுமென்று நிதிக்குழு பரிந்துரைக்கும் தனியான கணக்கீடு. அதற்கும் கொரோனாவுக்கும் தொடர்பில்லை.

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்
பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்
vikatan

மாநிலங்களின் கடந்த 5 ஆண்டுக்கால வரவு செலவு கணக்கீடுகளின் அடிப்படையில், மாநிலங்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக குறிப்பிட்ட அளவு நிதியை வழங்கும்படி மத்திய நிதிக்குழு பரிந்துரை செய்யும். அந்த பற்றாக்குறைக்கு மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளும் ஒரு காரணமாகும். அதன்காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கிப் பயணித்தது. மாநிலங்களின் வருவாயையும் அது பாதித்தது.

குறிப்பாக, ஜி.எஸ்.டியைக் கொண்டுவரும்போது, மாநிலங்களுக்கு ஏற்கெனவே இருந்த வரி வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்படி பாதிப்பு வரும்போது அதற்கான இழப்பீடு வழங்குவதாக ஜி.எஸ்.டி கவுன்சிலில் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜி.எஸ்.டி வசூல் குறைவாக உள்ளது. இதற்கான இழப்பீடு பெறுவதற்காகவே இழப்பீட்டு வரி என்றும் ஏற்படுத்தப்பட்டு வசூலிக்கப்பட்டது. அப்படியிருந்தும் மாநிலங்களுக்கான இழப்பீட்டை, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய இழப்பீட்டைக் கேட்டும் கொடுக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. அந்த தொகையைக் கொடுத்தாலே தமிழ்நாடு அரசு கையேந்த வேண்டிய நிலை இல்லை" என்றார்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி
vikatan

ஆக மத்திய அரசு, முறையாக மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிதியை நிறுத்திவைக்காமல் வழங்கினாலே இப்போதுள்ள சூழலில் சமாளித்துக்கொள்ள உதவும். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதி அனைத்தையும் இந்த நேரத்தில் வழங்கினால், சிறுகுறு தொழில் நிறுவனங்கள், தினக்கூலித்தொழிலாளர்கள் என அனைத்து பாமர மக்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவக்கருவிகளை வாங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு அடுத்தகட்டமாக அந்த நிலுவைத்தொகைகளை வழங்கினால் மாநிலங்களுக்கு நல்லது.

அடுத்த கட்டுரைக்கு