இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கும் தமிழகத்தின் எதிர்காலமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கிறது என்பதை இப்போது தமிழக அரசு உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தழைத்தோங்க பல விரிவான திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில், ``தமிழ்நாட்டைச் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்வதற்கு ரூ.50 கோடியை வளர்ந்துவரும் தொழில்களுக்கான தொடக்க நிதிக்கு (seed funding) அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) டான்சிம்-இன் கிளை மையங்கள் ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் மண்டல அளவில் ஏற்படுத்தப்படும். சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன்கூடிய மாநில புத்தொழில் நிறுவன மையம் ஒன்று அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில், அந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் புதுமையான பொருள்களை ரூ.50 லட்சம் வரை அரசுத் துறைகளும், நிறுவனங்களும் நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரால் தொடங்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்துக்கு (TANSIM) ரூ.30 கோடி நிதியுதவி வழங்கப்படும். அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்முதல்களில், 5% தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த அறிவிப்புகள் குறித்தும், தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் டான்சிம்-இன் சி.இ.ஓ சிவராஜா ராமநாதனிடம் பேசினோம்.
``ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட டான்சிம் நிறுவனத்தின் மூலமாக அறிமுகப்படுத்த சில ஆக்கபூர்வமான திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதில், முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது, தாழ்த்தப்பட்ட பிரிவினரான எஸ்.சி, எஸ்.டி-க்காகத் தனியாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவிலேயே சிறப்பான, முன்னோடியான திட்டம் ஆகும். இந்தப் பிரிவினர் தொடங்கக்கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய இந்த பட்ஜெட் மூலமாக வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசுத் துறைகளுக்கு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களைக் கொண்டு சேர்ப்பது கடினமாக இருந்துவந்தது. கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் வரை டெண்டர் மூலம் அணுகத் தேவையில்லை என சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 50 லட்சம் ரூபாயாக இது உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள், துறைசார் நிபுணர்கள் போன்றோரை இணைக்கும் புள்ளியாக சென்னையில் ஒரு `ஸ்டார்ட் அப் மையம்’ அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த மையம் 75 கோடி ரூபாய் மதிப்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் அருகில் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகியிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்" என்றவர், டான்சிம் அமைப்பால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி விளக்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``டான்சிம் அமைப்பின் நோக்கம், அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் எங்கும் 10,000 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அதற்கான அனைத்து விஷயங்களையும் தமிழக அரசு செய்துகொடுக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான ஒரு சில அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் அரசு தெரிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விஷயங்களுக்கான திட்டப் பணிகள் நடைபெற ஆரம்பித்துவிட்டன. விரைவில் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பமாகும்.
இன்றைய நிலையில், புதிய ஐடியாக்களைக் கொண்டுவரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆதார நிதி வழங்கி அரசு உதவி செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் ஐடியாக்களில் இருந்து மிகச் சிறந்த ஐடியாக்களைத் தேர்வு செய்ய டான்சிம் அமைப்பு வில்குரோ (villgro) மற்றும் ஹெட்ஸ்டார்ட் நெட்வொர்க் ஃபவுண்டேஷன் (Headstart Network Foundation) என்கிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்களின் பணி நல்ல நல்ல ஐடியாக்களையும், அதைக் கொண்டு வரும் நிறுவனங்களையும் தேர்வு செய்து சமர்ப்பிப்பதுதான்.

அதிலிருந்து ஜூரிக்கள் `பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' ஐடியாக்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆதார நிதியை வழங்க அரசிடம் பரிந்துரைப்பார்கள். நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 19 ஐடியாக்கள் தேர்வாகி, அந்த நிறுவனங்களுக்கு ஆதார நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இன்னும் 31 பேருக்கு ஆதார நிதி வழங்கப்பட இருக்கிறது.
நிதியை அவர்களுக்கு வழங்குவதுடன் மட்டும் எங்களின் பணி முடிந்து விடுவதில்லை. தொடர்ச்சியாக ஒரு வருடம் அவர்களுடன் பயணித்து, அவர்களுக்குத் தேவையான வர்த்தகக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் பிசினஸை மேம்படுத்துவது டான்சிம்-இன் கடமை.
இன்றைய நிலையில், சென்னை, கோவை ஆகிய இரு நகரங்களில் மட்டும்தான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அமைக்கும் சூழல் இருக்கிறது. ஏனெனில், இவ்விரு நகரங்களில்தான் முதலீட்டாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதே போல, தொழில் துறைகளும் அதிகம் இருக்கின்றன. அதனால்தான் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிப்பவர்களின் முதல் தேர்வாக இந்த இரண்டு நகரங்கள் இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

`பழைமையாக நடந்துகொண்டு இருக்கும் ஒரு விஷயத்தில், புதிய சிந்தனைகளைப் புகுத்தி தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையாக்குவதுதான் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வேலையாக இருக்க வேண்டும்.' அந்த அடிப்படையில் புதிய, புதிய ஐடியாக்களுடன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான யோசனைகளுடன் எங்களை அணுகும்போது, அரசின் பல்வேறு நலதிட்டங்களுடன் வழிகாட்ட டான்சிம் காத்துக்கொண்டிருக்கிறது.
இன்றைய இளைஞர்களிடையே படித்து முடித்ததும் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற மனநிலை வேறூன்றி இருப்பது போல, படித்த முடித்த கையோடு ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும், தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் அவரோடு சேர்ந்து, தமிழ்நாடும் வளரும்.

இன்று பல தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வரும் சூழலில், இளைஞர்கள் தொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ளது. முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள் கிடைப்பதுடன் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதை இளைஞர்கள் நிச்சயமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் தெளிவாக.
இளைஞர்கள் கையில் இந்தியா என்பார்கள். ஆனால், அதை இப்போது மாற்றிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்... `இளைஞர்கள் ஆரம்பிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் கையில் இந்தியா!'