Published:Updated:

இலங்கை: கலங்காமல் கடன் வாங்கிய வேந்தர்கள், கலங்கினாலும் கடன் வாங்கும் மக்கள், பாடம் படிக்காத உலகம்!

இலங்கை

என்ன விலை கொடுத்தாலும் சரி, பொருள்கள் கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். ஒருவேளை உணவைத் தியாகம் செய்ய சொல்கிறது இலங்கை அரசாங்கம்... புதிய அரசாங்கமும் பொறுப்பேற்றுள்ளதால், ஓரளவிற்குத் தடையின்றி கிடைப்பதற்காவது வழிசெய்வார்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இலங்கை: கலங்காமல் கடன் வாங்கிய வேந்தர்கள், கலங்கினாலும் கடன் வாங்கும் மக்கள், பாடம் படிக்காத உலகம்!

என்ன விலை கொடுத்தாலும் சரி, பொருள்கள் கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். ஒருவேளை உணவைத் தியாகம் செய்ய சொல்கிறது இலங்கை அரசாங்கம்... புதிய அரசாங்கமும் பொறுப்பேற்றுள்ளதால், ஓரளவிற்குத் தடையின்றி கிடைப்பதற்காவது வழிசெய்வார்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Published:Updated:
இலங்கை

‘இன்று நீ... நாளை நான்' என்பது உலக நாடுகள் ஒவ்வொன்றுக்குமே பொருந்தக்கூடிய வாசகமாகத்தான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடான கிரேக்க நாடு, திவால் ஆனபோது உலகமே பதறியது. ஆனால், பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. கிரேக்கத்துக்கு முன்பாக, அமெரிக்காவின் நிலைகூட தள்ளாட்டத்தில்தான் இருந்தது. ஆனாலும், 'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்.. உள்ளே இருக்குமாம் ஈறும்பேனும்' என்பதுபோல, மிகப்பெரிய நாடு என்பதால், அமெரிக்காவின் நிலை அப்பட்டமாக வெளியில் தெரியவில்லை. மக்கள் தெருக்களில் டெண்ட் அடித்து போராடியபோதும், பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட போதும்கூட, 'பணக்கார நாடு'என்பது தொடர்ந்து பராமரிக்கப்படுவதால், அமெரிக்காவின் நிலை வீதிக்கு வரும் அளவுக்கு மாறிவிடவில்லை. கையிருப்பை வைத்துக் கொண்டே இன்னும் பல ஆண்டுகளுக்கு சமாளித்துவிடமுடியும் என்பதால், ஆட்டைத் தூக்கி மாட்டுல போடு... மாட்டைத் தூக்கி ஆட்டுல போடு' என்கிற ஸ்டைலில் மாற்றி மாற்றி சமாளித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்கா மட்டும்தானா... உலகின் பல நாடுகளின் நிலையும் இதுவேதான். குறிப்பாக, சிறியநாடுகள் பலவும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டுள்ளன. ஏற்கெனவே, பணக்கார நாடுகளிடம் கடன் வாங்கி வாங்கியே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதால், அவற்றால் எழக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் என்று நம் அண்டை நாடுகளே அதற்கு சரியான எடுத்துக்காட்டுகளாகி நிற்கின்றன.

இலங்கை
இலங்கை
Eranga Jayawardena

இந்த நிலைக்குக் காரணம்... நாட்டின் அதிபர்களாகவும், பிரதமர்களாகவும் பதவி வகித்தவர்கள் எடுத்த தாறுமாறான நடவடிக்கைகளே! 'வரவு எட்டணா... செலவு பத்தணா' கதையாகத்தான் ஆட்சியை நடத்தி வந்தனர். நாட்டின் அடிப்படை கட்டமைப்பை சுதேசியாக கட்டமைக்க முன்வரவே இல்லை. தனியார் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது, அந்நிய நாடுகளின் உதவிகளைப் பெற்றே காலத்தை ஓட்டுவது என்பதைத்தான் அவர்கள் செய்து வந்தனர். அதேபோல, அரசாங்கச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வேலைகளையும் தொடர்ந்தனர். இதன் எதிர்விளைவைத்தான் தினம் தினம் பட்டினி என்பதாக மக்கள் கடந்து கொண்டுள்ளனர். முக்கியமாக இலங்கையின் இன்றைய நிலை... உலக நாடுகளுக்கே ஒரு பாடம்தான் - இந்தியாவுக்கும்!

என்ன விலை கொடுத்தாலும் சரி, பொருள்கள் கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒருவேளை உணவைத் தியாகம் செய்ய சொல்கிறது இலங்கை அரசாங்கம். ராஜபக்ஷே துரத்தப்பட்டு, கோத்தபய ராஜபக்ஷே ஓடஓட விரட்டப்பட்டு, தற்போது ரணில் விக்ரம சிங்கே அதிபராக உட்கார்ந்திருக்கிறார். ஆனாலும், உணவுக்காக இலங்கை மக்கள் படும் துன்பங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது.

யார் வந்தமர்ந்தாலும், ஓரிரவுக்குள் நிலைமையை மாற்றிவிட முடியாது என்பதே நிதர்சனம். காரணம், காலகாலமாக பின்பற்றப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகளே. போகப்போகத் தெரியும் என்பதுபோல, அந்தக் கொள்கைகளின் பின்விளைவு இப்போது உலகையே அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. பெரிய நாடுகள் எல்லாம், 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பதுபோல சமாளித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை போன்ற சிறிய நாடுகள் திண்டாடுகின்றன.

டாக்டர் ஒய்.நந்தகோபன்
டாக்டர் ஒய்.நந்தகோபன்

அதற்கான ரிஷி மூலத்தை இலங்கையின் வவுனியா பல்கலைக்கழக வணிக ஆராய்ச்சித் துறை தலைவர் டாக்டர் ஒய்.நந்தகோபன் இங்கே பகிர்கிறார். அவரை இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் நிகமுனி மற்றும் சிவகுமார் திவ்யா ஆகியோர் நேர்காணல் செய்துள்ளனர். இனி நந்தகோபனிடமிருந்து...

தமிழர்களுக்கு எதிரான போக்கு...

‘‘இலங்கையைத் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த அரசாங்கங்களின் தவறான நிதி மேலாண்மைதான் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த பொருளாதார நெருக்கடிக்கு முன்பாக இலங்கையின் நிலைமை எப்படி இருந்தது, அரசாங்கத்தின் கொள்கை என்னவாக இருந்தது, பொருளாதார சமூக வளர்ச்சி பற்றி அவர்களுடைய சிந்தனை எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.

இலங்கை
இலங்கை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முடிவில் இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் விரோத கொள்கையே இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்னைகளுக்கான முக்கியமான காரணிகளில் முதன்மையாகத் திகழ்கிறது.

நீண்ட கால உள்நாட்டுப் போரினால் நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டது. குறிப்பாக, வடக்கு கிழக்கில் இருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதுடன் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் ஆரம்பமாகியது.

உருப்படியாக ஒரு தொழிற்சாலை கூட இல்லை...

இலங்கை எப்போதுமே உற்பத்திசார் தொழிற்சாலைகளை நிறுவுவதில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறிமாவோ ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்திக்கான முக்கியத்துவம் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பின்னர் பிரதமராகப் பொறுப்பேற்றவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் நிர்மூலமாக்கப்பட்டு தாராளப் பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டது.

இலங்கை
இலங்கை

அன்றைய இலங்கையின் வரவு - செலவுத் திட்டம் வெளிநாடுகளின் நன்கொடை மற்றும் நீண்ட காலக் கடன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்ததை அறியமுடியும்.

உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கான முறையான திட்டங்கள் எதுவும் இதுவரை இலங்கையில் ஆட்சியாளர்களிடம் இல்லை; அவர்களுக்கு அதை பற்றிய சிந்தனையும் இல்லை. இது இலங்கையில் உள்ள சாதாரண பாமரனுக்கும் தெரியும்.

உள்நாட்டு யுத்தத்தைக் காரணம் காட்டியே வெளிநாடுகளின் உதவியைக் கடனாகவும் மானியமாகவும் ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டே இருந்தனர். வடக்கு - கிழக்கிற்கு வெளியிலும் தேவையான முக்கியமான தொழிற்சாலைகள் எதனையும் தொடங்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாக இருந்தது.

செய்ததெல்லாம் தேவையற்ற செலவீனங்கள்...

இலங்கை அரசாங்கம் பெரும் நிதியுடன் மேற்கொண்ட பெரும்பாலான பெரிய செயல் திட்டங்கள் பயனற்றதாக இருந்தது. வருவாயைத் தரும் விஷயங்களுக்கு செலவு செய்யவில்லை.

இலங்கை  தாமரைக் கோபுரம்
இலங்கை தாமரைக் கோபுரம்

உதாரணமாக, மத்தளை விமான நிலையம், தாமரைக் கோபுரம் போன்ற திட்டங்களை சொல்ல முடியும். இந்தத் திட்டங்கள் நாட்டின் முன்னேற்த்திற்குப் பயனற்றவையாக அல்லது பயன் குறைந்தவைகளாக இருந்தன. இதுபோன்ற திட்டங்கள் நாட்டின் கடன் சுமையை உயர்த்தியுள்ளது.

உறுதிமொழிகளை மறந்து செயல்பட்ட ராஜபக்ச...

உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டு வந்த பின்னர் தேசிய இனப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதாகக் கூறி உதவிகளைப் பெற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டது, சீனசார்புக் கொள்கையைப் பின்பற்றியது. இதுவே இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணமாகும்.

மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச

தேயிலைத் தோட்டத் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்த சுற்றுலாத் துறையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பின்மையும் அடுத்தடுத்த காரணிகளாகும்.

பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள்...

பொருளாதார வீழ்ச்சியினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திப் பொருள்கள் தொடக்கம் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பெறுவதற்குக்கூட வெளிநாடுகளில் தங்கியிருப்பதன் விளைவாக வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்துள்ளது. இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைந்து அன்னியச் செலாவணியின் மதிப்புகள் உயர்ந்துள்ளதால், பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்களும் மத்தியதர வகுப்பினரும் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இலங்கை: கலங்காமல் கடன் வாங்கிய வேந்தர்கள், கலங்கினாலும் கடன் வாங்கும் மக்கள், பாடம் படிக்காத உலகம்!

சிறுதொழில்முனைவோரும் வாகனங்களை நம்பி வாழ்வாதாரத்தை மேற்கொண்டவர்களும் தொழில் வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். அரசாங்கமே மக்களை ஒருவேளை உணவைத் தியாகம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறது. சுற்றுலாத் துறை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இதனால் இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வர்த்தகர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்குப் பொருள்களை வாங்கவேண்டியிருப்பதால், என்ன விலைக்கு விற்பது என்ற குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் பதுக்கலில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக பொருள்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதுடன் பொருள்களின் விலையும் வரம்பின்றி அதிகரிக்கிறது. இந்த சுமைகளும் மக்கள் மீதே திணிக்கப்படுகிறது.

இலங்கையில் பணவீக்கம் எவ்வளவு?

இலங்கை மத்திய வங்கி என்னதான் புள்ளிவிபரங்களை வழங்கினாலும், தற்போதைய பணவீக்கம் 90 சதவிகிதத்திற்கும் அதிகம் என்று சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களில் வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவதற்காக பணவீக்கம் தொடர்பாக தவறான பல புள்ளி விபரங்களைக் கொடுத்து நாட்டின் பொருளாதாரத் தாங்குதிறனுக்கு அப்பால் பல பில்லியன் டாலர்களைக் கடனாகப் பெற்றதன் பலனை இன்று இலங்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம். வெகு விரைவில் இலங்கையின் பணவீக்கம் 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்
AP

மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரும் அன்றாடம் உழைத்து உண்பவர்களும் உணவிற்கும் எரிபொருளுக்கும், எரிவாயுவிற்குமே மிகவும் சிரமப்படுகிற சூழலில் வசதியான வாழ்க்கையைக் குறித்து சிந்திக்கவே முடியாதவர்களாக உள்ளனர். நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதிலேயே தங்கியுள்ளது.

அத்தியாவசிய பொருள்களின் விலை 3 மடங்கு உயர்வு!

தவறான பொருளாதார மற்றும் சர்வதேச கொள்கைகளே மிகவும் முக்கியமான காரணம். இதுவரை வெளிநாடுகளில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே நாம் (இலங்கை) மீண்டும் கடன்களைப் பெற்றுக்கொள்கிறோம். இது தவிர, அன்றாட அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கும் சர்வதேச நாடுகளின் நிதியுதவியை எதிர்பார்த்திருக்கிறோம்.

ஏற்கெனவே வாங்கிய கடன் அதற்கான வட்டி, இப்போது அந்த வட்டிக்காக வாங்கும் புதிய கடன் அத்துடன் இன்றைய நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகப் பெற்றுக்கொள்ளப்படும் கடன், இதனால் வீழ்ச்சியடையும் அன்னியச் செலாவணி கையிருப்பு - இவை அனைத்தும் சேர்ந்ததுதான் இன்றைய விலையேற்றம் என்பது உருவாகி இருக்கிறது. இந்த விலையேற்றம் இன்னமும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

இலங்கை
இலங்கை

ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளதுடன் புதிய அரசாங்கமும் பொறுப்பேற்றுள்ளதால், தங்கள் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்துவதற்காக யார் கையைக் காலைப் பிடித்தாவது முதலில் எரிபொருள், எரிவாயு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்திருந்தாலும் ஓரளவிற்குத் தடையின்றி கிடைப்பதற்காவது வழிசெய்வார்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இப்போது விலைகள் அதிகரித்தாலும் பொருள் கிடைக்காமலிருப்பதால், மக்கள் விலைவாசியைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாமல், பொருள்களைக் வாங்குவது குறித்தே அதிக கவனம் செலுத்துகின்றனர். எப்படியாவது அத்தியாவசியமான பொருள்கள் கிடைத்தால் சரி.. என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

இலங்கை
இலங்கை

தகுதிக்கு மீறி கடன் வாங்கும் மக்கள்...

குடும்பத்திற்கான மாதாந்திர வரவு-செலவுத் திட்டத்தை வகுக்கும் நிலை வரும்போதுதான் மக்களுக்கு தமது நிலை புரியும். இப்போது நாட்டைப் போலவே மக்களும் தமது தகுதிக்கு மீறி அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் கடன் வாங்குகின்றனர். இதுபின்னர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. அந்த நிலையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.

அரச ஊழியர்களுக்கு அண்மை காலமாக பணம் அச்சிடப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் பணத்தின் மதிப்பு மேலும் குறைவடைந்து செல்கிறது’’ என்று கூறினார்.

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது கம்பராமாயணத்தில்தான்... உண்மையிலேயே கொஞ்சம்கூட கலங்காமல், கடன் வாங்கி வாங்கிக் குவிப்பதை மட்டுமே தொழிலாகச் செய்துள்ளனர் இலங்கை வேந்தர்கள். இப்போது, வேறு வழியில்லாமல் மக்களும் கடன்கள் வாங்குவதையே தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளனர். வெகுசீக்கிரமே, அதற்கான பதிலை மக்களும் தரவேண்டியிருக்கும்.

கடன் என்பதை மட்டுமே துருப்புச்சீட்டாக வைத்துக் கொண்டு நாட்டை வழிநடத்தும் ஆட்சியாளர்களைத் தட்டிக் கேட்காவிட்டால், எந்தவொரு நாடும் இலங்கை போல் திவால் ஆவதை தடுக்கவே முடியாது!

- நிகமுனி, சிவகுமார் திவ்யா