Published:Updated:

வெங்காய விலை, சித்தார்த்தா மரணம், மெகா டேக்ஓவர்... 2019 - முக்கிய பிசினஸ் நிகழ்வுகள்!

தனிநபர் வரி
தனிநபர் வரி ( vikatan )

2019-ம் ஆண்டும் தொழில்துறைக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியிருக்கிறது. சோகங்கள், சவால்கள், மாற்றங்கள் எனப் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. 2019-ம் ஆண்டைக் கொஞ்சம் வேகமாக பின்நோக்கிப் பார்ப்போம்.

தனிநபர் வரி குறையுமா?

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அருண் ஜெட்லி அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து, யார் நிதி அமைச்சர் என்னும் கேள்வி எழுந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர இருந்தது.

இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதலே அடுத்த சில வாரங்களில் ஆட்டோமொபைல் மந்தம், பிஸ்கட் விற்பனை சரிவு எனப் பொருளாதாரத்தில் மாற்றங்கள். அதனால் வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை வழக்கமாக்கினார் நிதி அமைச்சர். தான் அறிவித்த பல விஷயங்களை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பல அறிவிப்புகளுக்குப் பிறகும் சாதகமான மாற்றம் ஏற்படவில்லை என்பதால், இறுதியாக நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்தார். அனைத்து நிறுவனங்களும் 22% வரி (செஸ் மற்றும் சர்சார்ஜ் உடன் 25.17%) செலுத்தினால் போதும் என அறிவித்தார்.

தனிநபர் வரி
தனிநபர் வரி
vikatan

நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்த பிறகு ஜி.எஸ்.டி-யை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது நுகர்வை ஊக்குவிக்கத் தனிநபர் வருமான வரியைக் குறைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ல் பொருளாதார வளர்ச்சி, வெங்காயம் விலை உயர்வு எனப் பல பிரச்னைகளை நிதி அமைச்சர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2020-லாவது இதுமாதிரியான பிரச்னைகள் வராதிருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

வி.ஜி.சித்தார்த்தா மரணம்...

தொழிலில் நஷ்டம், கடன் பிரச்னை, விவசாயம் சரியில்லை எனத் தற்கொலை செய்பவர்களை இந்தியா பார்த்திருக்கிறது. ஆனால், ஒரு பெரும் தொழிலதிபர் நிதிப்பிரச்னை காரணம் தற்கொலை செய்துகொள்வது அபூர்வமாக நடப்பதுதான். ஆனால், 2019-ல் அது நடந்தது. ஆம், காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த்தா ஜூலை 29-ம் தேதி மாயமானார். சில நாள்களுக்குப் பிறகு மங்களூரு அருகே உள்ள நேத்தாரவதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி. சித்தார்த்தா
காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி. சித்தார்த்தா
vikatan

`சரியான பிசினஸ் மாடலை உருவாக்கத் தவறிவிட்டேன். நீண்ட காலம் போராடினேன். ஆனால், நெருக்கடியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பங்குகளைத் திரும்பி வாங்குமாறு பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் நெருக்கடி தருகின்றனர். வருமான வரித்துறை நடவடிக்கை காரணமாக நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு பிசினஸ்மேனாக நான் தோற்றுவிட்டேன்’ என இயக்குநர் குழுவுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் சித்தார்த்தா. இந்தச் செய்தி வந்தவுடன் காபி டே பங்குகள் கடுமையாகச் சரிந்தன. இதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டார். காபி டே நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

கார் விற்பனை வீழ்ச்சி

2019-ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாதமும் உயர்ந்துவந்த விற்பனை திடீரென கடுமையாகச் சரிந்தது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 13% அளவுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய சரிவு நடந்திருக்கிறது.

ஆட்டோமொபைல் துறை
ஆட்டோமொபைல் துறை
vikatan

பணப்புழக்கம் குறைவு, பொருளாதார மந்தநிலை, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பிரச்னை, பிஎஸ் 6 ரக வாகனங்களின் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் விற்பனைச்சரிவு ஏற்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் மாசுவைக் குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான காலக்கெடுவையும் மத்திய அரசு நிர்ணயம் செய்திருப்பதால், ஆட்டோமொபைல் துறையில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

ஆட்டோமொபைல் துறையில் சரிவு இருந்தாலும் கியா மோட்டார்ஸ் மற்றும் எம்.ஜி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் விற்பனையைத் தொடங்கியுள்ளன. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள் விற்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களிடம் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே ஆட்டோமொபைல் துறையினரின் 2020-ம் ஆண்டு இருக்கும்.

ஜெட் ஏர்வேஸுக்கு மூடுவிழா!

2019-ம் ஆண்டு விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சாதகமாக இருக்கவில்லை. 25 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தன்னுடைய கடைசி விமானத்தை இயக்கியது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே நிதி நெருக்கடி தொடங்கியது. பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை, மூலப்பொருள்களைத் தந்த வெண்டார்களுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவில்லை என ஜெட் ஏர்வேஸைச் சுற்றி பல பிரச்னைகள். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க பல விதமான நடவடிக்கைகள் எடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த நிறுவனத்தின் கடன் பாக்கி ரூ.8,000 கோடிக்குமேல் அதிகரித்ததால், ஜெட் ஏர்வேஸுக்கு மூடுவிழா நடந்தது.

இந்த ஆண்டும் ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ரூ.50,000 கோடிக்கும் கடன் இருக்கும் சூழலில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால், இதுவரை பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை.

ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ்
vikatan

பி.எம்.சி கூட்டுறவு வங்கி முறைகேடு

மகாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வங்கி கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஆறு மாதம் ஈடுபடக்கூடாது எனச் செப்டம்பர் 24-ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய்க்குமேல் பணம் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டதால், இந்த வங்கிக் கிளைகளின் முன் முதலீட்டாளர்கள் குவிந்தனர்.

ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த ஹெச்.டி.ஐ.எல் நிறுவனம் இந்த வங்கியில் இருந்து ரூ.6,500 கோடியைக் கடனாகப் பெற்றிருக்கிறது. இந்த வங்கி வழங்கியுள்ள கடனில் இந்தத் தொகை 73%. இந்தத் தொகை வாராக்கடனாக மாறியுள்ளதால், வங்கியில் நிதியில்லை. விதிமுறைகளுக்கு எதிராக இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தவிர, இந்தத் தகவல் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்தும் மறைக்கப்பட்டிருப்பதால், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது. ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் விருப்பமான பங்காக இருந்த யெஸ் பேங்க் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சிக்கலில் தவித்து வருகிறது. இந்தச் சிக்கல் இந்த ஆண்டும் முடியவில்லை. ஓராண்டுக்கு முன்பு 275 ரூபாயாக விலை போன இந்தப் பங்கு தற்போது வெறும் 50 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.

கூட்டுறவு வங்கி முறைகேடு, மக்கள் போராட்டம்
கூட்டுறவு வங்கி முறைகேடு, மக்கள் போராட்டம்
vikatan

கதற வைத்த கார்வி முறைகேடு

நிதித்துறையின் சமீபத்திய முறைகேடு கார்வி. இது புரோக்கிங் துறையில் 20 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவரும் நிறுவனம். வாடிக்கையாளர்களின் டீமேட் கணக்கில் உள்ள பங்குகளை அடமானமாக வைத்து வங்கிகளில் சுமார் 2,000 கோடி அளவுக்குப் பணத்தைப் பெற்று, குழும நிறுவனங்களுக்கு இந்தத் தொகையை கார்வி மாற்றியிருக்கிறது. அதனால் கார்வி புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு செபி தடை விதித்தது. பங்குகள் அடமானமாக வைக்கப்பட்டது, வாடிக்கையாளர் அனுமதியில்லாமல் நடந்த விஷயமாகும். அதனால், அந்தப் பங்குகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் எனச் செபி உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்தும் எந்தப் பலனும் இல்லை. அதனால் அடமானமாக வைக்கப்பட்ட பங்குகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

வாடிக்கையாளர்களுக்குப் பங்குகள் கிடைத்துவிட்டன. இதை அடமானம் வைத்து கார்வியும் பணத்தைப் பெற்று வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிட்டது. ஆனால், அடமானம் ஏற்றுக்கொண்ட வங்கிகளுக்கு இந்த நடவடிக்கை நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டன. கார்விக்கு வழங்கப்பட்ட தொகை, சம்பந்தப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் கணக்கில் இணைந்தன.

வீட்டுக்கடன் முறைகேடு

இந்தியாவின் மிகப் பெரிய நிதிமுறைகேடு (ரூ.31,000 கோடி) எனக் கடந்த ஜனவரியில் கோப்ரா போஸ்ட் வெளியிட்டது. வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனம் போலி நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி, அதன்மூலம் பெரும் பணத்தைக் கொள்ளை அடித்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எனப் பலரும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை இழந்தனர்.

மிகப் பெரிய மீடியா நிறுவனமான ஜீ குழுத்தின் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரா திடீரென ராஜினாமா செய்தார். எஸ்ஸெல் குழுமம் மற்றும் ஜீ குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா. ஜீ குழுமத்தின் பங்குகளை அடமானாக வைத்து நிதி திரட்டி குழுமத்தின் மற்ற தொழில்களில் பயன்படுத்தியுள்ளார். இது சிறிதாக இருந்தபோது பலருக்கும் தெரியவில்லை. ஆனால், மிகப்பெரிய தொகையாகப் பெருகியபோது (ரூ.20,000 கோடி) வட்டி செலுத்த முடியவில்லை. அதனால் அந்தக் குழுமத்தில் உள்ள லாபம் ஈட்டும் நிறுவனமான ஜீ நிறுவனத்தின் பங்குகளை, அடமானம் பெற்றவர்கள் விற்கத் தொடங்கினார்கள். இதனால் ஜீ பங்கு விலை கடுமையாகச் சரிந்தது. அதனால் தன்வசமுள்ள பங்குகளை விற்கத் தொடங்கி, இறுதியாக 5% பங்குகள் மட்டும் சுபாஷ் சந்திரா குழுமத்திடம் உள்ளது. ஓராண்டுக்கு முன் 41% பங்குகளை ஜீ குழுமம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜீ குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா
ஜீ குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா
vikatan

மெகா டேக் ஓவர்

மைண்ட் ட்ரீ மற்றும் எல் அண்ட் டி

மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் 60% பங்குகளை எல் அண்ட் டி நிறுவனம் வாங்கியது. ஆனால், இது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் ஆரம்பகால முதலீட்டாளர் காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா. இவர் வசம் உள்ள சுமார் 20.4% பங்குகளை எல் அண்ட் டி வாங்கியது. அதன்பிறகு மைண்ட் ட்ரியில் உள்ள பிற முதலீட்டாளர்களிடம் உள்ள சில சதவிகிதப் பங்குகளை எல் அண்ட் டி வாங்கியது.

இந்த நடவடிக்கைகளுக்கு மைண்ட் ட்ரீ நிறுவனர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களால் இந்த நடவடிக்கையை தடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஓபன் ஆபர்மூலம் பங்குகள் வாங்கியது. மொத்தம் 60% பங்குகள் எல் அண்ட் டி வசம் சென்றது. தலைமைச் செயல் அதிகாரி ராஸ்தோ ராவணன் விலகியதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயல் அதிகாரியை (தெபாஷிஸ் சாட்டர்ஜி) எல் அண்ட் டி நியமனம் செய்தது. இதுதவிர, ரிலையன்ஸின் 20 சதவிகித பங்குகளை சவுதி அரம்கோ நிறுவனத்துக்கு விற்க ஆர்.ஐ.எல் முடிவெடுத்தது, இன்ஃபோசிஸ் சி.இ.ஓ சலில் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரி மீது பணியாளர்கள் குற்றம் சாட்டியது, சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவாக என்.சி.எல்.டி தீர்பாயம் தீர்ப்பு வழங்கியது என இந்திய கார்ப்பரேட் உலகில் பல மாற்றங்கள் நடந்தன.

- வாசு கார்த்தி

அடுத்த கட்டுரைக்கு