ஸொமேட்டோ பங்கு தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கிறது. காரணம் இந்த நிறுவனம் சார்ந்த விஷயங்கள் ஏதாவது செய்திகளில் வந்தவண்ணம் இருக்கின்றன.
தற்போது ஸொமேட்டோ பங்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் பங்கு மீண்டும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ பங்குச் சந்தையில் பட்டியலாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் ஐபிஓ-வுக்கு முந்தைய பங்குதாரர்கள் பங்குகளை விற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது. இதனால் தற்போது பங்குதாரர்கள் தங்களிடமிருந்த பங்குகளை மொத்தமாக விற்க ஆரம்பித்துள்ளனர்.
நியூ ஏஜ் பிசினஸ் என்ற வகையில் ஸொமேட்டோ பங்கு வெளியீட்டுக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்தது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியல் ஆன பிறகு, இப்பங்கு கடுமையான இறக்கத்தைச் சந்தித்தது.
இந்த வகை நிறுவனங்களின் லாப வளர்ச்சி மிக மிகக் குறைவு என்பது ஒரு பக்கம். இன்னொருபக்கம் இந்நிறுவனத்தின் மதிப்பீடு அதிகமாக இருந்ததாகவும் கருதப்பட்டது. இதனால் இப்பங்கு தொடர்ந்து இறக்கத்தைச் சந்தித்து, வந்தது. கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பங்கு அதன் உச்ச விலையிலிருந்து 70 சதவிகிதம் அளவுக்குச் சரிந்து வர்த்தகமானது. இந்நிலையில் பங்குச் சந்தையில் பட்டியலாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்பங்கில் மொத்த விற்பனை நடக்க ஆரம்பித்துள்ளது.

உபர் நிறுவனம் இந்நிறுவனத்தில் வைத்திருந்த 7.8 சதவிகித பங்குகளையும் மொத்தமாக விற்பனை செய்துள்ளது. அதாவது மொத்தம் 61.2 கோடி பங்குகள். ஒரு பங்கு விலை ரூ.50.44 வீதம் ரூ.3,087 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளது. இப்பங்கில் மொத்த விற்பனை அதிகமாக நடப்பதால் பங்கு விலை அதிக ஏற்றத்தாழ்வுடன் வர்த்தகமாகிறது.
அதேசமயம் இந்தப் பங்குகளை வாங்கவும் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனம் ஆர்வமாக இருக்கின்றன. கீஸ்கொயர் கேபிடல், ஜேம்ஸ் ஸ்ட்ரீட், டெம்பிள்டன் குளோபல், எஃப் எம் ஆர், மிரே அசெட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் இவை தவிர பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முதலீட்டு நிறுவனங்களூம் ஸொமேட்டோ பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஸ்யூரன்ஸ், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட், அவெண்டஸ் கேபிடல், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷ்யூரன்ஸ், நியூ ஹாரிசோன் மற்றும் டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்களும் இப்பங்குகளை வாங்கியுள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் ஸொமேட்டோ நிறுவனத்தின் எபிட்டா நஷ்டம் ரூ.150 கோடியாக உள்ளது. நிகர நஷ்டம் ரூ.186 கோடி ஆகும். இதர வருமானம் ரூ.170 கோடியாக இருக்கிறது.
முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு ஸொமேட்டோ நிதிநிலை மேம்பட்டிருக்கிறது என்றாலும் இப்பங்கின் விலை நகர்வு ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் கவனமாகத்தான் வர்த்தகம் செய்ய வேண்டும்.