`நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை!' - பிரிட்டன் நீதிமன்றம் சொன்னது என்ன?

கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடந்தபிறகு பிப்ரவரி 25-ல் தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது. அதன்படி, நிரவ் மோடி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.
"இந்திய சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்தத் தடையும் இல்லை'' என பரபரப்பான தீர்ப்பினை இங்கிலாந்து நீதிமன்றம் அளித்ததன்மூலம் மோசடி மன்னன் நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில், வங்கிச் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை சாதுரியமாகப் பயன்படுத்தி (Operational Risk Fraud) 13,570 கோடி ரூபாயை மோசடி செய்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி.

இந்த மோசடியிலிருந்து தப்பித்து தலைமறைவாக சுற்றிக் கொண்டிருந்தவரை, கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீஸ் கைது செய்தது. அதன்பிறகு இங்கிலாந்திலுள்ள வாண்ட்ஸவொர்த் சிறைச்சாலையில் அடைத்தது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசின் அமலாக்கத்துறை பல கட்ட முயற்சிகள் எடுத்து வந்தது.
இதற்கான வழக்கு விசாரணை, இங்கிலாந்து 'வெஸ்ட்மினிஸ்டர்' நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடந்தபிறகு பிப்ரவரி 25-ல் தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது. அதன்படி, நிரவ் மோடி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், "இந்திய சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்தத் தடையும் இல்லை. அதுமட்டுமல்லாமல் நாடுகடத்தப்பட்டால் நிரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் எனவும் இந்திய அரசு உறுதியளித்துள்ளது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின்மூலம் நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் முயற்சித்து வந்தது நிறைவேறியிருக்கிறது. இதுவரை மொத்தம் 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சி.பி.ஐ முடக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம், தங்க மற்றும் வைர நகைகள் என பல தரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.