Published:Updated:

காலக்கெடு முடிந்தும் திரும்பப் பெறப்படாத டெபாசிட்டுகள்…

டெபாசிட்
பிரீமியம் ஸ்டோரி
News
டெபாசிட்

இப்போது எடுக்காவிட்டால் திரும்பக் கிடைக்காது!

U N C L I M E D M O N E Y

அஞ்சலகங்களில் உள்ள தேசிய சேமிப்புப் பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், டைம் டெபாசிட் போன்ற பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்யப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல் பாடில்லாத / கோரப்படாத கணக்கு களில் தேங்கியுள்ள டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது மத்திய அரசின் (Press information bureau) அச்சு ஊடகத் தகவல் குழு.

அவ்வாறு திரும்பப் பெறாமல் உள்ள சேமிப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட அனைத்து சிறுசேமிப்பு இனங்களுக்கும் தனித்தனி பட்டியலை, மாநில வாரியாக, இந்திய அஞ்சல் துறை, தனது (www.indiapost.gov.in) வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலின்படி, தமிழக அஞ்சலகங்களில் மட்டுமே சுமார் 11 லட்சம் டெபாசிட்டுகள் கோரப் படாமல் உள்ளன. (பார்க்க அட்டவணை) 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் டெபாசிட் செய்யப்பட்டு, திரும்பப் பெறப்படாத கிஷான் விகாஸ் பத்திரங்களின் எண்ணிக்கை மட்டுமே 29,640. இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியரக துணை அஞ்சலகத்தில் மட்டும் 2,340 தேசிய சேமிப்புப் பத்திரங்களின் தொகை திரும்பப் பெறாமல் உள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திரும்பப் பெறப்படாத தேசிய சேமிப்புப் பத்திரங்கள் மட்டுமே 5,34,534. இவ்வாறு மாநில வாரியான கூட்டுத் தொகையைக் கணக்கிட்டால், திரும்பப் பெறப்படாத சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை கோடி களில் இருக்கும்.

மேற்கண்ட கணக்குகளைத் தொடங்கியவர், கணக்குத் தொடங் கப்பட்ட அஞ்சல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தொகையைப் பெறலாம். கணக்கைத் தொடங்கியவர் இல்லாத பட்சத்தில் வாரிசுதாரர்கள் மற்றும் நியமனதாரர்கள் கைவசம் உள்ள ஆவண ஆதாரங்களுடன் தொடர்புடைய அஞ்சலகங்களை அணுகிப் பணம் பெறலாம்.   

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

செயல்பாடாற்ற கணக்குகள்...

எந்த ஒரு சேமிப்புக் கணக்கும் தொடர்ந்தாற்போல் 36 மாதங்கள் பரிவர்த்தனை இல்லாமல் போனால் அவை செயல்பாடற்ற (Dormant) கணக்கு என வகைப்படுத்தப்படுகிறது. தவிர, கடிதம், போன், மெயில் மூலம் கணக்குதாரருக்கு செயலற்றுப்போன கணக்கு பற்றி ஒரு முறைக்கு இருமுறை தகவல் தரப்படுகிறது.  

தனது சேமிப்புக் கணக்கு செயல்பாடற்ற கணக்காகிவிட்டது என்ற தகவல் கிடைத்ததும், கணக்கு தாரர் உடனடியாக அஞ்சலகத்தை அணுகி செயலற்ற கணக்கை செயல் பாட்டுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லது கணக்கில் உள்ள தொகையைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். 

இவ்வாறு செயலற்ற கணக்கை உயிர்ப்பிக்காமலும் கணக்கில் உள்ள தொகையைப் பெற்றுக்கொள்ளா மலும் இருந்துவிட்டால், அத்தகைய செயல்பாடற்ற கணக்குகள் அஞ்சலகப் பொறுப்பிலேயே இருந்து வரும். ஏழு ஆண்டுகள் முடிந்ததும் செயல்பாடற்ற கணக்குகளில் உள்ள தொகை முழுவதும் மூத்த குடிமக்கள் நிதியத்துக்கு (Senior Citizen Welfare Fund) மாற்றப்பட்டுவிடும். 

அதாவது, செயல்பாடற்ற காலம் மூன்று ஆண்டுகள். அதற்குப் பின் அஞ்சல கத்தில் தேங்கிய ஏழு ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து வகை அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களிலும் திரும்பப் பெறாமல் தேங்கியுள்ள டெபாசிட் தொகை முழுவதும் மூத்த குடிமக்கள் நல நிதியத்துக்கு மாற்றப்பட்டுவிடும். 

தற்போதைய அறிவிப்பு 

இவ்வாறு மூத்த குடிமக்கள் நல நிதியத்துக்கு டெபாசிட்டில் உள்ள பணத்தை மாற்றுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட டெபாசிட்தாரர் களுக்கு, அவர்கள் கணக்கு வைத்திருந்த அஞ்சலகம் மூலமாகவும், வலைதள அறிவிப்புகள் வழியாகவும் காலம் கடந்த கணக்குகள் மூத்த குடிமக்கள் நல நிதியத்துக்கு மாற்றப்பட உள்ள தகவல் அறிவிப்பு செய்யப்படும். அத்தகைய ஓர் அறிவிப்புதான் கடந்த 18.12.2020 அன்று மத்திய அரசின் அச்சு ஊடக தகவல் குழுவால் வெளியிடப் பட்டுள்ளது. எனவே, டெபாசிட்தாரர்கள், வாரிசுகள், நியமனதாரர்கள் உடனடியாக அஞ்சலகத்தை அணுகி, டெபாசிட் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

டெபாசிட்
டெபாசிட்

நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்

மேற்கண்ட டெபாசிட் தொகையை இலகுவாகப் பெற, எளிய நடைமுறையை மத்திய அரசு கடந்த 28.08.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி...  

* இறந்துபோனவரின்  டெபாசிட் தொகை நியமனப் படிவத்தின் அடிப்படையில் மற்றும் சட்டபூர்வ சாட்சியம் (Legal Evidence) அடிப்படையில் பெறலாம். 

* சட்டப்பூர்வ சாட்சியம் இல்லாத நிலையிலும், பணம் வழங்கும் அதிகாரிக்கு திருப்தி எனத் தோன்றினால் ரூ.5 லட்சம் வரையான தொகையை வழங்கக் கூடும்.

* டெபாசிட் தொகை ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டு இருந்து, சட்டபூர்வ சாட்சியமும் இல்லாது போனால் வாரிசுரிமைச் சான்று (Succession certificate) சமர்ப்பித்து, தொகையைப் பெறலாம்.

* ரூ.5 லட்சம் வரம்பு என்பது ஒவ்வொரு டெபாசிட்டுக்கும். நியமனம் பதிவு செய்யப் பட்டிருந்தால், டெபாசிட் செய்த அஞ்சலகத்தில் நியமனதாரர் படிவம் பதிவு செய்யப்பட்டிருந்தால், மேற்கொண்டு எந்த சட்டபூர்வ ஆவணமும் கோரா மல், பண வரம்பு இல்லாமல் அஞ்சலகம் டெபாசிட் தொகையை வழங்கிவிடும். 

இதற்கான விண்ணப்பம் மற்றும் டெபாசிட்தாரரின் இறப்புச் சான்று, பாஸ்புக் அல்லது டெபாசிட் சர்டிஃபிகேட் ஆகிய வற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இறப்புச் சான்றின் ஒரிஜினல் வேண்டும் என்ற அவசியம் இல்லை. போட்டோ காப்பியும் ஏற்றுக்கொள்ளப்படும். 

புள்ளிவிவரம்
புள்ளிவிவரம்

அடையாளச் சான்று போதும்...

16.09.2020 தேதியிட்ட மத்திய அரசின் சுற்றறிக்கையின்படி, சாட்சி தேவைப்படும் இனங்களில் சாட்சியானவர் நேரடியாக அஞ்சலகத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. சாட்சியின் அடையாளச் சான்றின் (ID Proof) நகல் ஒன்றை, சாட்சியே சுய மேலொப்பம் செய்து தந்துவிட்டால் போதுமானது.

அடையாளச் சான்றாக ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட் முதலியவற்றின் நகல்களைப் பயன்படுத்தலாம். முகவரி ஆதாரத்துக்கு மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம்,  ஆதார், பாஸ்போர்ட் போதுமானது.

நியமனதாரரில் ஒருவர் இறந்து போயிருந்தால், இறந்துபோன நியமனதாரரின் இறப்புச் சான்றைச் சமர்ப்பித்து,  டெபாசிட் தொகையை இதர நியமனதாரர்கள் பங்கிட்டுப் பெறலாம். நியமனதாரர் அனைவருமே இறந்து போயிருந்தால், கடைசியாக இறந்துபோன நியமனதாரரின் வாரிசுக்குத்தான் தொகை கிடைக்கும்.

விரைந்து பெறுவதே சரி...

எனவே, இதுநாள் வரை திரும்பப் பெறப்படாத டெபாசிட் தொகையைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் உடனடியாக அஞ்சலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். தவறினால், தொகை முழுதும் மூத்த குடிமக்கள் நல நிதியத்துக்குப் போய்விடும்.

தற்போது வாங்கத் தவறினால்...

வருகிற 18.02.2021-ம் தேதிக்குள் திரும்பப் பெறப்படாத டெபாசிட் கணக்குகளில் உள்ள நிகரத் தொகை மூத்த குடிமக்கள் நலநிதியத்தில் சேர்க்கப் பட்டுவிடும். இந்த நிதியத்திலிருந்து 25 ஆண்டுகள் வரை பணம் பெறலாம். என்றாலும், அஞ்சலகத்தில் உள்ளபோதே பணத்தைப் பெற்றுவிடுவதே சுலபமான வழியாக இருக்கும்.  

தேசிய சேமிப்புப் பத்திரம்!

தேசிய சேமிப்புப் பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் போன்றவற்றின் அசல் (Original) பத்திரம் தொலைந்து போயிருந்தால் அதற்கான படிவம் (NC29) அஞ்சலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். சேமிப்புப் பத்திரத்தின் (Duplicate) நகல் பெறலாம்.  விண்ணப்பத்துடன் தொலைந்து போன சேமிப்புப் பத்திரத்தின் போட்டோ காப்பி இருந்தால் இணைக்கலாம். இல்லாதுபோனால் பத்திரத்தின் வரிசை எண், பத்திர மதிப்புத் தொகை, டெபாசிட் செய்த அஞ்சலகம் மற்றும் டெபாசிட்தாரர் பெயர் ஆகிய விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் படிவம்  NC-54-ல்  உத்தரவாதப் பத்திரம், ஆதார் அடையாளத்துடன்கூடிய ஒரு சாட்சியம், காணாமல் போனதற்கான முதல் தகவல் அறிக்கை (FIR) ஆகியவையும் இணைக்க வேண்டும். இதற்கான கட்டணம் 5 ரூபாய். எந்தவோர் அஞ்சலகத்தில் விண்ணப்பித்தாலும் டெபாசிட் செய்த அஞ்சலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுவிடும். இதில் கவனிக்க வேண்டியது, அசல் பத்திரத்தை எந்த அஞ்சலகத்திலும் சமர்ப்பித்து முதிர்வுத் தொகை பெறலாம். நகல் பத்திரம் என்றால், எந்த அஞ்சலகத்தில் டெபாசிட் செய்தோமோ, அங்கு மட்டும்தான் பணம் பெற முடியும்.

டெபாசிட் செய்த அஞ்சலகமே பெஸ்ட்...

திரும்பப் பெற வேண்டிய மேற்கண்ட அஞ்சலக டெபாசிட்டுகள் எந்த அஞ்சலகத்தில் டெபாசிட் செய்யப்பட்டதோ, அதே அஞ்சலகத்தில்தான் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பது கிடையாது. டெபாசிட் செய்தவர்/ வாரிசுதாரர்/ நியமனதாரர் தற்போது வசிக்கும் ஊரில் உள்ள அஞ்சலகத்தில்கூட டெபாசிட்டை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பங்கள் டெபாசிட் செய்யப்பட்ட அஞ்சலகத்துக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என்றாலும், டெபாசிட் செய்த அஞ்சலகத்தை அணுகுவது விரைந்து பணம் பெற ஏதுவாக இருக்கும்.